திரிபுரம் முதல், தமிழகம் வரை பேசப்பட்ட மயன்
விஸ்வகர்மா, மயன் ஆகிய இருவரைப் பற்றியும்,
புராண, இதிஹாசங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.
இவர்களைப் பற்றிச் சொல்லும் விவரங்களை ஆராய்ந்தால்
இவர்களை முப்பரிமாணத்தில் உருவகப்படுத்தியுள்ளது தெரிய வரும்.
இந்த இருவரும்
· இந்த உலகையே செதுக்கின ஒரு இயற்கைச் சக்தியாகவும்,
· அப்படிச் செதுக்குதலை ஒரு கலையாகச் செய்து வந்த பரம்பரையாகவும்,
· தனி மனிதப் பிறவியாகவும்
என மூன்று நிலைகளில் சொல்லப்பட்டுள்ளார்கள்.
இயற்கைச் சக்தி என்னும் போது,
பூமியின் வட பகுதியைச் செதுக்கியவன் விஸ்வகர்மா,
தென்பகுதியைச் செதுக்கியவன் மயன் ஆவார்கள்.
விஸ்வகர்மாவின் ஒரு முகமே மயன் என்பது
வசிஷ்டபுராணத்தில் காணப்படும் கருத்து.
பிரபஞ்சம் முழுமைக்கும், தச்சனாக இருந்தவன் விஸ்வகர்மா.
இதை நமக்குப் புரியும்படிச் சொல்வதென்றால்,
நாமிருக்கும் சூரிய மண்டலத்தை உதாரணாமாகக் காட்டலாம்.
இன்றைக்கு நாம் பார்க்கும் சூரியன்,
ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறிய போது,
அதிலிருந்து உண்டானது.
அப்படி ஒரு வெடிப்புச் சிதறலில் சூரியன் தோன்றினாலும்,
அந்த சூரியனுக்கு ஒரு சூரிய மண்டலம் அமைந்து,
அதில் கோள்கள் அமைந்து,
அவற்றிடையே சரியான இடத்தில் ஒரு பூமியும் அமைந்து
அங்கு உயிர்களும் உண்டாக்க கூடிய அனைத்து அமைப்புகளும் அமைந்து இயங்கிட,
எந்தச் இயற்கைச் சக்தி காரணமாக இருந்த்தோ, அதுவே விஸ்வகர்மா.
ஒரு வெடிப்பிலிருந்து புதிதாகப் பிறந்த சூரியன்
தனது சக்தி, அமைப்பு ஆகியவற்றின் மூலமே
இப்படி ஒரு சூரிய மண்டலத்தைத் தனக்கு அமைத்துக் கொண்டதால்,
அந்த விஸ்வகர்மா என்னும் பெயர் சூரியனுக்கும் உரியதாயிற்று.
இந்த சூரிய மண்டலத்தில் இருக்கும் உலகில் உள்ள
நில அமைப்புகள், கடல் அமைப்புகள் போன்ற
எல்லா அமைப்புகளையும்
செதுக்கும் தேவ தச்சன் விஸ்வகர்மா ஆவான்.
இதைப் புரிந்துக் கொள்ள ஒரு உதாரணம் காட்டலாம்.
இன்றைக்கு ஜப்பான் நாட்டில் அடிக்கடி நில நடுக்கம் நிகழ்கிறது
என்பதைக் கண் கூடாகக் காண்கிறோம்.
உண்மையில் ஜப்பானை ஒட்டியுள்ள பசிஃபிக் கடலைச் சுற்றி
அனைத்து இடங்களிலுமே பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக
நிலநடுக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதைப் பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபய்ர் – பசிஃபிக்கின் நெருப்பு வளையம் என்கிறார்கள்.
இந்தப் படத்தில் பசிஃபிக் கடலைச் சுற்றி,
சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள புள்ளிகள்,
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இடங்கள் ஆகும்.
இதைப் பார்ப்பதற்கு,
உளியால் செதுக்கி அந்தப் பகுதியைப்
பிளந்து எடுப்பது போல இருக்கிறது.
பல லட்சம் வருடங்களில் இந்தப் பகுதி
மொத்தமாகவோ, அல்லது ஆங்காங்கோ பிளந்து மேலே தூக்கக் கூடும்.
அப்படி நிலப்பகுதி தூக்கும் போது அங்கே வராஹ அவதாரம் நடக்கிறது என்போம்.
செதுக்கி, உருவாக்கப்படுவதால், அது விஸ்வகர்மாவின் கை வண்ணம் என்போம்.
கடலுகுள்ளிலிருந்து நிலப்பகுதி உயர்வதால்,
கடல் நீர் இடம் பெயர்ந்து
அருகில் இருக்கும் நிலங்களை முழுகச் செய்யும்.
அதைப் பிரளயம் அல்லது ஊழி என்போம்.
அப்பொழுது தப்பித்த மக்கள், புது வாழ்வு தொடங்கும் போது,
மனு பிறக்கிறான் என்போம். (மனு என்றால் மனிதன் என்பது பொருள்)
இப்படி ஆங்காங்கே நடக்கும் செயல்களைப்
புராணக் கதைகளாகக் கூறியுள்ளார்கள்.
அப்படி சொல்லப்பட்ட ஒரு புராணக் கதையான
சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையில் முதன்முறையாக மயன் வருகிறான்.
அந்த மயன் அசுரன் என்றும், தானவன் என்றும் அழைக்கப்படுகிறான்.
அசுரன் என்பதால் அவன் உலகின் தென் பகுதியில் உண்டானவன் என்று தெரிகிறது.
மயன்.
பொதுவாக உலகின் வட கோடியில் வாழ்ந்தவர்கள் தேவர்கள் என்றும்,
தென் கோடியில் வாழ்ந்தவர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.
நாம் இருக்கும் பூமி வடக்கு நோக்கிச் சுழல்வதாலும்,
நாம் இருக்கும் பிரபஞ்சமும்
வடக்கு நோக்கி வளர்ந்து கொண்டிருப்பதாலும்
(இன்றைய விஞ்ஞானம் இதை உறுதிபடுத்துகிறது).
அந்த வடக்கில் விஸ்வகர்மனின் கை வண்ணம் இருக்கும்.
வடபகுதியுடன் சொல்லப்படுவதால் விஸ்வகர்மா, தேவ தச்சன் என்று சொல்லப்பட்டான்.
மயனைப் பற்றி வரும் வர்ணனைகளில் அசுர-தச்சன் என்று சொல்லாமல்,
மய-தானவன் என்னும் விஸ்வகர்மா என்றே சொல்லப்படுகிறான்.
இதனால் தென் பகுதித் தொடர்பால் மட்டுமே அவன் அசுரன் ஆகிறான் என்றும்,
விஸ்வகர்மாவுக்கு இணையான செயலாற்றல் கொண்டவன் என்றும் தெரிகிறது.
பூமியின் தெற்குப் பகுதியை ஆராயும் போது,
வடக்குக்கு நேர்மாறாகத் தெற்கு அமைவதால்
அது அசுரர்கள் வாழுமிடம் எனப்படுகிறது.
அசுரர்கள் என்றாலே ராட்சத உருவம் கொண்டவர்கள் என்றும் வர்ணனைகள் உள்ளன.
ராவணன் அப்படிப்பட்ட உருவம் கொண்டவன்.
அவன் தாய் ஒரு அசுரப் பெண் என்பதால்,
அவனுக்கு அசுர உருவம் இருந்திருக்கிறது,
அசுர குணமும் கொண்டவனாக அவன் இருந்திருக்கிறான்.
(தேவமும், அசுரமும், குணங்கள் ஆகும் – பகுதி 31)
தென் கோடியில் வாழ்பவர்களுக்கு இயல்பிலேயே
பெருத்த உருவம் அமையும் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம்,
பூமியின் தென் துருவத்துக்கு அருகில் உள்ள அண்டார்டிகா கடலில்
சில அபூர்வ ஜீவராசிகள் ராட்சத உருவில் தென்படுகின்றன
அண்டார்ட்டிகா ஆழ்கடலில் காணப்படும் ராட்சதப் புழு!
தென் துருவத்தை ஆதாரமாகக் கொண்டு பூமி சுழல்வதாலும்,
அதனால் ஏற்படக்கூடிய காந்த சக்தி போன்ற சக்திகளின் தாக்கம்
அந்தப் பகுதியில் வேறு விதமாக இருக்கலாம் என்பதால்,
அங்கு உண்டாகும் உயிர்கள் அளவில் பெரிதாக இருக்கலாம்.
இது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்றால், பல புதிர்களுக்கு விடைகள் கிடைக்கும்.
பூமியின் சாய்மானத்தில் மாறி மாறி வரும் தட்பவெப்பத்தால்,
ஒரு சமயம் பூமியின் தென் துருவத்தில்
மக்கள் இனம் வாழ ஏதுவாக இருந்திருக்கிறது.
(பார்க்க மிலன்கோவிட்ச் கோட்பாடு – பகுதி 35)
அப்பொழுது அங்கு வாழ்ந்த மக்கள்
உருவில் பெரிதாக இருந்ததால் அசுரர்கள் எனப்பட்டனர்.
இவர்களைத் தவிர வேறு மக்களும் உலகின் தென்பாகத்தில் குடியிருந்தனர்.
அவர்கள் தானவன், தைத்தியன் என்பவர்கள்.
தைத்தியன் என்றால் திதியின் மகன் என்று பொருள்.
தானவன் என்றால் தனுவின் மகன் என்று பொருள்.
இந்தப் பெயர்கள் உண்மையில், மக்கள் உற்பத்தியைப் பற்றிய
சில மகத்தான உண்மைகளையும், ரகசியங்களையும் தம்முள் கொண்டுள்ளன.
அவற்றைப் பற்றிய விவரங்கள்
இந்த்த் தொடரின் பிறிதொரு இடத்தில் வருவதால்,
இங்கு ஒரு அறிமுக விவரத்தைக் காண்போம்.
உலகத்தில் காணப்படும் பலதரப்பட்ட மக்களிடையே, இன வேறுபாடுகள் உள்ளனவா
என்று அறிய மரபணு ஆராய்ச்ச்சிகள் நடந்து வருகின்றன.
அவற்றின் மூலம், உலகின் அனைத்து மக்களும்
ஒரு பெண்ணிலிருந்து உருவானவர்கள் என்பதே
இன்று வரை கண்டுபிடித்துள்ள விவரமாகும்.
அந்த மூலப்பெண்ணிலிருந்து பிறந்த, பிற பெண்கள் மூலமாக
ஒவ்வொரு விதமான மனித இனம் உண்டாகியிருக்கிறது.
இன்றைய விஞ்ஞானம் சொல்லும் இதே விவரத்தை,
பல புராணங்களும் மஹாபாரதமும் சொல்கின்றன.
புராணங்கள் சொல்லும் அந்தப் பெண்களது பெயரில் சில மாறுபாடுகள் இருந்தாலும்,
மாறுபடுகிற இடங்கள் ஏதோ ஒரு காலக் கட்டத்தை மட்டுமே சொல்கின்றன
என்று தெரிகிறது. இவற்றைப் பற்றிப் பிறகு பேசுவோம்.
இங்கு நாம் சொல்லவருவது,
ஆதியான பெண்களில் ஒருத்தி தனு என்பவள்,
மற்றொருத்தி திதி என்பவள்.
இருவரும் ஒரே தாய்க்குப் பிறந்தவரே.
இவர்களுள் தனுவுக்குப் பிறந்த மக்கள் வழியில் வந்தவன் மயன்.
அதனால் அவன் தானவன் எனப்பட்டான்.
தென்பகுதியில் பிறந்ததால் அசுரன் என்ற பெயரும்,
தனுவின் பரம்பரை என்பதால் தானவன் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறான்.
தானவன் என்ற அடையாளம் இருப்பதால்
அவனுக்கு அசுர உருவம் இல்லை என்றும் தெரிகிறது.
மயனைப் போன்ற பிரபலமான தானவர்களும் இருக்கிறார்கள்.
நரசிம்ம அவதாரத்தில் கொல்லப்பட்ட ஹிரண்யன்,
அவன் மகன் பிரஹல்லாதன்,
வாமன அவதாரத்தில் வரும் மஹாபலி,
அவன் வழி வந்த பாணாசுரன் போன்றோர் தானவர்களே.
இவர்களை விட முக்கியமான தானவர்கள் இருவர் இருந்தார்கள்.
அவர்கள் புலோமன், விருஷபர்வன் என்பவர்கள்.
புலோமனை இந்திரன் வென்று, அவன் மகள் சசியை மணக்கிறான்.
சசியே இந்திராணி எனப்பட்டாள்.
இந்திராணி
அதாவது தேவேந்திரனது மாமனார் ஒரு அசுரன் / தானவன் ஆவார்.
இதன் மூலம் உலகின் வட, தென் பகுதிகளில் வாழ்ந்த மக்களிடையே
கலப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
இன்னொரு முக்கியக் கலப்பு,
இன்னொரு தானவனான விருஷபர்வன் மூலம் ஏற்பட்டிருக்கிறது.
ஆரிய –தஸ்யு போராட்டம் என்று பார்த்தோமே,
ஐந்து மகன்களிடையே நடந்த சண்டை -
அந்த ஐந்து பேருடைய தந்தையான யயாதியின் மாமனார்,
விருஷபர்வன் என்னும் தானவன் ஆவான்.
அந்தப் போரில் தோற்று,
மிலேச்சர்கள் என பாரதத்திலிருந்து வெளியேற்றப்பட்ட
துர்வஸு, அநு ஆகியோருடைய தாயான சர்மிஷ்டை என்பவள்,
ஒரு தானவப் பெண்!
அவளுடைய மற்றொரு மகனான புரு, சரஸ்வதி தீரத்திலேயே தங்கி விடுகிறான்.
சர்மிஷ்டைக்கும் யயாதிக்கும் இடையே ஏற்பட்ட திருமண உறவு,
தானவனுக்கும், மனிதனுக்கும் இடையே ஏற்பட்ட கலப்பைக் காட்டுகிறது.
துர்வஸுவும், அநுவும் ஈரான், ஈராக் உள்ளிட்ட மேற்காசியா.
மற்றும் மத்திய ஐரோப்பா ஆகிய பகுதிகளில் பரவினார்கள்.
மேற்காசிய மக்களுக்கும், மத்திய ஐரோப்பிய மக்களுக்கும்,
வடமேற்கு இந்திய மக்களுக்கும்
(சர்மிஷ்டையின் மூன்றாவது மகனான புரு இருந்த பகுதி),
உருவத்திலும், மரபணு அமைப்பிலும் ஒப்புமை இருப்பதற்கு,
இது ஒரு ஆரம்பக் காரணம் ஆகும்.
சர்மிஷ்டையின் தந்தையான விருஷபர்வன் சரஸ்வதி தீரத்துக்கு வடமேற்கே,
தன் பேரன்களுக்கு உறுதுணையாகத் தங்கி இருக்க வேண்டும்.
ஏனெனில் அந்த இடத்தில்,
தானவனான விருஷபர்வனது நாட்டில்
மய தானவனும் தங்கி இருக்கிறான் என்ற குறிப்புகள் மஹாபாரதத்தில் இருக்கின்றன.
இந்த விவரங்கள் மூலம் தானவர்களுக்கும், மக்களுக்கும்,
தானவர்களுக்கும் தேவர்களுக்கும், கலப்பு இருந்திருக்கிறது என்றும்,
தானவர்கள் என்பதால் அவர்கள் தென் பகுதிக் கோளத்தில் மட்டுமே இல்லாமல்,
வடக்குப் பகுதியிலும் சஞ்சரித்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.
இங்கு நம் தமிழ் மக்களுக்கு நாம் யார் என்று அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கும்.
நாம் மானவர்கள் எனப்படும் மனிதர்கள்.
மனுவின் வழி வந்தவர்கள் மானவர்கள் எனப்பட்டார்கள்.
நம்மை மனிதர்களில்தான் சேர்த்துள்ளார்கள்.
அசுரனாகவோ, தானவனாகவோ, தேவனாகவோ அல்ல.
வைவஸ்வத மனுவிலிருந்துதான் அனைத்து பாரத மக்களும் தோன்றினார்களா என்றால்,
அதற்குச் சரியான பதில்,
வைவஸ்வத மனுவிலிருந்தும்,
அந்த மனுவுக்கும் மூலமான தக்ஷ பிரஜாபதியிலிருந்தும் தோன்றியவர்களே
இன்று பாரதம் முழுவதும் இருக்கின்றனர்.
இதையே
ஒரே மூலத்திலிருந்து உண்டான மகனும், பேரனுமாக
இரண்டு வகை மனிதர்கள் பாரதத்தில் இருக்கிறார்கள் எனலாம்.
இதை மெய்ப்பிக்கும் மரபணு ஆராய்ச்சிகளைப் பிறிதொரு இடத்தில் ஆராய்வோம்.
சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த
இந்திய விண்வெளி வல்லுனர் பாஸ்கரரும்
தான் எழுதிய ‘சிந்தாந்த சிரோமணி’ என்னும் நூலில்.
உலகில் உள்ள மக்கள் இனத்தைத்
தேவன், மனிதன், அசுரன், தானவன் என்றே பிரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றுக்குப் பின்னால் இருக்கும் விளக்கங்கள் இன்று மறைந்து விட்டன.
திரிபுரம் அமைத்த மயன்.
மயனைப் பற்றின ஆரம்பக் குறிப்பு திரிபுர சம்ஹாரத்தில் வருகிறது.
மூன்று அசுரர்களுக்காக திரிபுரம் என்னும் மூன்று நகரங்களை மயன் அமைத்தான் என்றும்,
அவை ஒன்றன் மேல் ஒன்றாக இரும்பு, வெள்ளி, தங்கத்தால் அமைக்கப்பட்டவை என்றும்,
அவை ஓரிடத்தில் நில்லாமல் சுழன்று கொண்டே இருந்தன என்றும்
குறிப்புகள் இருக்கின்றன.
அங்கிருந்த மூன்று அசுரர்களது அட்டகாசம் எல்லை மீறியது.
அவர்களைச் சிவபெருமான் அழித்து அடக்கினார்.
அதன் காரணமாக எங்கும் நெருப்பு சூழ்ந்தது.
மயன் சிவ பக்தன் என்பதால்,
அந்த நெருப்பில் மாட்டிக் கொள்ள இருந்த மயனை,
சிவன் காப்பாற்றினார்.
இந்தப் புராணக் கதையைச் சுற்றியுள்ள விவரங்கள்,
இன்றைக்கு இருக்கும் இந்தோனேசியா பகுதிகளில்
70,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை ஒத்திருக்கிறது.
அந்த எரிமலை வெடித்த போது,
அந்தப் பகுதியிலும்,
இந்தியக் கடல் பகுதிகளிலும்
மக்கள் இருந்தார்கள் என்று
மரபணு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய மக்கள்,
இந்தியப் பகுதிகள், இலங்கைப் பகுதிகளைக் கடந்து,
கிழக்கு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த நேரம் அது.
அவர்கள் பரவியிருந்த இந்தோனேசியப் பகுதிகளில்,
பூமிக்கடியில் பூமிக் குழம்புகள் சுழன்று கொண்டிருந்தன.
(இன்றும் அங்கு பூமி அமைதியாக இல்லை.)
மூன்று நகரங்கள் என்று சொன்னது,
இரும்புக் கனிமம் இருக்கும் பூமியின் உள் மையப் பகுதியும்,
அதற்கு மேல் வெள்ளிக் கனிமங்களைக் கொண்ட பூமிக் குழம்புகளும்,
அதற்கும் மேல், தங்கக் கனிமங்களைக் கொண்ட பூமிக் குழம்புகளும் ஆகும்.
அவை நிலையில்லாமல் கனன்று கொண்டிருந்தமையால்,
அடிக்கடி நில நடுக்கங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
அந்த வர்ணனையை,
இந்த நகரங்கள் ஓரிடத்தில் நில்லாமல்
சுற்றிக் கொண்டிருந்தன என்று சொல்லியிருக்கிறார்கள்.
இப்படி இயற்கையில் அமைந்த அமைப்பு,
தென் கோளத்தின் தச்சனான மயன் செய்தது என்பது,
மேலே பசிஃபிக் நெருப்பு வளையத்திற்கு நாம் சொன்னது போன்ற
ஒரு உருவகமே.
உள்ளுக்குளே நிலையாக இல்லாமலிருந்த அந்தப் பகுதியில்
ஒரு நாள் தோபா எரிமலை வெடித்துச் சிதறியது.
சுமத்திரா பகுதியில் தோபா எரிமலை இருந்த இடம்.
அந்த வெடிப்பின் காரணமாக, 10 பில்லியன் டன் எரிமலைச் சாம்பல் வெளியேறியது.
அவை நாமிருக்கும் பாரத நாட்டுப் பக்கம் பரவியிருக்கிறது.
அப்பொழுது காற்றின் திசை, எரிமலைப் புகையையும், சாம்பலையும்
பாரதத்தை நோக்கித் தள்ளியிருக்கிறது என்று தெரிகிறது.
முப்புரமும் எரிந்தது என்று சொன்னதற்கு ஒப்பாக, கிழக்குத் திசை தவிர,
பிற திசைகளில் இந்த எரிமலையின் தாக்கம் இருந்திருக்கிறது.
இந்தப் படத்தில் சிவப்புப் புள்ளி இருக்குமிடம், தோபா எரிமலை.
நீலப் புள்ளிகள் இருக்குமிடம், ‘எரிமலை சாம்பல் மூடிய பகுதிகள்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், கர்னூல் மாவட்டத்தில்,
ஜ்வாலாபுரம் என்னுமிடத்தில் மக்கள் குடியிருப்புகள் மீது,
அந்த எரிமலையின் சாம்பல் மூடிக் கொண்டது
என்று அகழ்வாராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.
ஜ்வாலாபுரத்தில் அகழ்வாராய்ச்சி.
எரிமலைச் சாம்பல் மூடியதால் மண்ணுக்குள் புதையுண்ட இந்தப் பகுதி,
70,000 வருடங்களுக்கு முன்பே பாரதத்தில்,
அதிலும் தென்னிந்தியாவில் மக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு
ஒரு சாட்சியாகவும் இருக்கிறது.
இந்த எரிமலை வெடிப்பே திரிபுர சம்ஹாரம் எனப்பட்டிருக்க வேண்டும்,
அந்த எரிமலை வெடிப்பில் நிலப்பகுதிகள் உயர்ந்திருக்கின்றன.
இதனால் மூன்று தீவுகளாக இருந்த அமைப்புகள் ஒன்று கூடி இருக்கின்றன.
இன்றைக்கு 28,000 ஆண்டுகளுக்கு முன் வரை அந்தப் பகுதி மேடாக,
ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கிறது.
சிவப்பு நிறப்புள்ளியாக தோபா எரிமலைப் பகுதி.
அந்த இடம் குளிர்ந்தவுடன் மக்கள் மீண்டும் அங்கு குடியேறி இருக்கின்றனர்.
எரிமலை வெடிப்பினால் அங்கு உண்டான பள்ளத்தில்
நாளடைவில் தண்ணீர் நிரம்பி, இன்றும் அது ஒரு பெரும் ஏரியாக இருக்கிறது.
திரிபுரத்தை அமைத்த்து மயனது கைவண்ணம் என்றால்,
இந்த ஏரியை அமைத்தது உலக்ச் சிற்பியான விஸ்வகர்மாவின் கைவண்ணம் எனலாம்.
இங்கு விஸ்வகர்மா என்றது சிவனது உருவகம் ஆகும்,
சிவபெருமானே, அந்தகாசுரன் (இருட்டுக்கு உருவகம்) என்னும் அசுரனை அடித்து,
அவனைப் பூமியின் மீது குப்புற விழுமாறு செய்கிறான்.
அப்படி விழுந்த அவனே வாஸ்து புருஷன் எனப்பட்டான்
என்பது புராணம் சொல்லும் விவரம் ஆகும்.
பூமியின் மீது முதன் முதலாக
சூரிய ஒளி விழ ஆரம்பித்த காலத்தை இப்படிச் சொல்லியுள்ளார்கள்.
தோபா எரிமலை வெடித்த சம்பவமே திரிபுர சம்ஹாரம்
என்று நாம் சொல்வதை ஒட்டியே
திரிபுர சம்ஹார மூர்த்தியான சிவனது வடிவம் அமைந்துள்ளது.
திரிபுர தாண்டவம்.
கீழ் நோக்கி இருந்த காலைத் தூக்கி, விண்ணை நோக்கிக் காட்டியது,
பூமியிலிருந்து விண்ணை நோக்கிச் சிதறிய எரிமலையையும்,
உயர்த்திய கரத்தில் இருக்கும் அக்கினி,
அந்த எரிமலையும், திரிபுரமும் எரிந்தமையையும் காட்டுகிறது.
இன்றைக்கும் அந்தப் பகுதிகளின் பெயர்கள்,
திரிபுரபுராணப் பெய்ரகளையும்,
தானவர்களது பெயர்களையும் ஒத்திருப்பது
ஆச்சரியமாக இருக்கிறது.
இந்திரனது மாமனாரான புலோமன் ஒரு தானவன்.
‘புலோ’ என்று ஆரம்பிக்கும், பல இடங்கள் சுமத்ராவில் இருக்கின்றன.
படத்தைக் க்ளிக் செய்து பெரிதாக்கைப் பார்க்கவும்.
இந்திரமயூ என்னும் இடம் மேற்கு ஜாவாவில் இருக்கிறது.
பலி என்னும் மஹாபலியும் தானவனே.
பாலி என்னும் பெயரில் இருக்கும் தீவு பலியை நினைவுபடுத்துகிறது.
தோபா எரிமலைக்கு நேர்க் கிழக்கில் தாரகன் என்னும் இடம் இருக்கிறது.
மேற்குக் காளிமந்தன் என்னுமிடத்தில் மய கரிமதம் என்னுமிடம் இருக்கிறது.
மயோ தீவு என்னும் தீவும் அந்தப் பகுதியில் இருக்கிறது.
இவை தவிர பல பெயர்கள், திரிபுர சம்ஹாரத்துடன்
தொடர்பு கொண்ட பெயர்களாகத் தெரிகின்றன.
அங்கு வாழும் தமிழர்கள் இவற்றை ஆராயலாம்.
70,000 ஆண்டுகளுக்கு முன் அந்த இடத்தில் எரிமலை வெடித்தாலும்,
எரிமலைக் குழம்புகள் வெளியேறி, குளிர்ந்து நில பாகமாக,
மூன்று பகுதிகளையும் இணைத்த பகுதியாக ஆகி இருக்கிறது.
அதற்குப் பிறகு அங்கு குடியேறிய மக்கள்,
திரிபுர சம்ஹாரமாக அதை வர்ணித்திருப்பார்கள்.
இயற்கையில் அமையும் அப்படிப்பட்ட அமைப்புகளை,
மயன் பெயருடன் இணைத்திருப்பார்கள்.
அங்கு சொல்லப்பட்ட மயன், உருவமுள்ள ஒருவன் அல்லன்.
அவன் ஒரு உருவகம்.
அல்லது மய தானவ வம்சத்தினர் அங்கு இருந்து,
அவர்கள் உயிர் தப்பினார்கள் என்பதை,
சிவன் மயனைக் காப்பாற்றினான் என்று சொன்னதன் அர்த்தமாகக் கொள்ளலாம்.
மயனைப் போல புலோம வம்சத்தினரும் அங்கு இருந்திருக்கலாம்.
அந்தப் பகுதியில் மதுரா, யம தேனா என்னும் இடங்கள் இருக்கின்றன.
மதுரா மக்கள் உப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுடைய முக்கியமான பொழுது போக்கு, மாட்டுப் பந்தயம் ஆகும்.
இந்த விவரங்கள், இந்த மதுரா என்பது தென் மதுரையாக இருக்கலாம்
என்ற ஊகத்தை எழுப்புகிறது.
ஆனால் அது சரியல்ல.
தென்னன் தேசம் என்பது கவாடபுரத்தில் ஆரம்பித்து,
700 காவதம் (7640 கீ.மீ) வரை பரவியிருந்தது என்று சொல்லப்படுகிறது.
இந்த மதுரா பகுதி,
அதற்குக் குறைவான தூரத்தில் (சுமார் 4000 கி.மீ) இருக்கிறது.
மேலும் தென்னன் தேசமானது தீயினாலும், எரிமலையினாலும் அழியவில்லை.
அது கடல் கோளினால் அழிவைச் சந்தித்தது,.
முதல் ஊழியில், தென் மதுரை அழிந்தபோது, அங்கிருந்து தப்பிய ஒரு பகுதி மக்கள்,
அந்த இடத்துக்கு அருகாமையில் இருந்த இந்தோனேசியப் பகுதியில்
கரை ஏறியிருக்கக்கூடும்.
கரையேறின பகுதிக்குத் தங்கள் பூர்வீக நகரமான மதுரையின் பெயரை
இட்டிருக்க வேண்டும்,
இந்தக் கருத்துக்கு வலுவூட்டும் விதமாக
இந்த இடத்துக்கு அருகே யமதேனா என்னுமிடம் இருக்கிறது.
அங்கு கல்லாலான ஒரு படகு இருக்கிறது.
அதில் இறந்தவர்களுக்கான வருடாந்திரக் கிரியை செய்கிறார்கள்.
பாதி உடைந்த நிலையில் கல் படகு.
தென்னன் தேசத்தைக் கடல் கோள் தாக்கிய போது,
பாண்டியனும், அவனது மக்களும்,
கபாடபுரத்துக்கு வந்தனர்.
அந்தக் கடல் கோளிலிருந்து படகில் தப்பிய மக்கள்
பல திசைகளிலும் சென்றிருக்ககூடும்.
அவர்களுள் ஒரு பிரிவு மக்கள்,
கரை ஒதுங்கின பகுதியாக யமதேனா இருக்க வேண்டும்.
பல படகுகளில் அவர்கள் வந்திருக்கலாம்.
அவற்றில் இருந்த பலரும் கடல் வெள்ளத்துக்குப் பலியாகி இருக்கலாம்.
ஆனால் தப்பியவர்கள்,
தாங்கள் வந்த படகு,
கல் போல வலிமையாக இருந்து காப்பாற்றி இருக்கவே
கல்-படகு செய்து வைத்திருக்கலாம்.
அந்த வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு வழிபாடு செய்யும் முறையை ஆரம்பித்திருக்கலாம்.
மரபணு ஆராய்ச்சியாளர்கள்,
மதுரா, யமதேனா மக்கள்,
மற்றும் பிற இந்தோனேசிய மக்களது மரபணுக்களைப் பரிசோதித்து,
தென்னிந்தியக் கோடியில் உள்ள
தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியா குமரி பகுதி வாழ் மீனவர்கள்,
மற்றும்,
கேரளாவின் கொல்லம் பகுதி வாழ் மீனவர்கள்
ஆகியோரது மரபணுக்களுடன் ஒப்பீடு செய்து பார்த்தால்,
பல புதிர்கள் விடுபடலாம்.
No comments:
Post a Comment