வேலை கிடைப்பது, கிடைத்த வேலையை சிறப்பாகச் செய்வது, செய்யும் வேலையை மன நிறைவோடு செய்வது எனப் பல விஷயங்கள் பேசிவருகிறோம். வேலையைச் சிறு அங்கமாகப் பார்த்து அதைக் கையாள உபதேசங்கள் அளிக்காமல், வாழ்க்கையின் அங்கமாக வேலையைக் கருத்தில் கொண்டு, வாழ்வு சிறக்க, வேலையில் என்ன செய்யலாம் என்று பேசுவதில்தான் இந்தத் தொடர் வித்தியாசப்படுகிறது.
விழுங்கும் வேலை
வேலை ஒரு மனிதரின் விழித்திருக்கும் நேரத்தின் பெரும்பான்மையை விழுங்கிக் கொள்கிறது. சிலரின் வாழ்க்கையில் முழுமையையும் விழுங்கிக் கொள்கிறது. எனவே, ஒருவரின் வாழ்க்கையின் சகல கூறுகளையும் வேலை நிர்ணயிக்கிறது.
தனிப்பட்ட வாழ்க்கையின் சுக துக்கங்கள் வேலையைப் பாதிப்பதை விட வேலையின் சுக துக்கங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பது இதனால்தான். ஆகவேதான் வேலை தொடர்பான விஷயங்களை உளவியல் ரீதியாகப் பார்ப்பது முக்கியம்.
வேலையில் சிறக்கும் ஒவ்வொரு மனிதரும் வேலையைப் புரிந்து கொள்வதை விட தன்னைப் புரிந்துகொண்டவராகக் இருக்கிறார்.
தனக்கான வேலை எது என்று தீர்மானிப்பதில் சுய அறிதல் துவங்குகிறது. தன் பலங்கள், பலவீனங்கள், எதிர்பார்ப்புகள் என அனைத்தையும் எடை போட்டுத் தேர்வு செய்யும் போது ஏமாற்றங்கள் அதிகமிருக்காது. தன் இயல்பிற்கு ஏற்ற வேலையைச் செய்யும்பொழுது ஒருவரால் தன் சிறப்பான பங்களிப்பை எளிதாகத் தர இயல்கிறது.
மாறும் வேலைகள்
இருந்தும், மனிதர்களைப் போல வேலைகளும் காலத்திற்கேற்ப மாறுகின்றன. எண்பதுகளில் பணியாற்றிய வங்கி மேலாளர் வேலைக்கும் இன்றைய வங்கி மேலாளர் வேலைக்கும் தான் எத்தனை வேறுபாடு? அதனால் வேலையில் உள்ள மனிதர்கள் தங்கள் சுயத்தில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டு கொள்வதைப் போல வேலையில் ஏற்படும் மாறுதல்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
உலகம் மாற மாறத் தொழில்களும் வேலைகளும் மாறிப்போகின்றன. அதற்கேற்ப மனிதர்கள் மாறுவதில் தான் சிக்கல் இருக்கிறது.
நிகழ் காலம் போலவா எதிர்காலம்?
“நான் உயிரைக் கொடுத்து விற்கிறேன். அவன் ஆன்லைன்ல அள்ளிட்டுப் போறான்!” என்றார் ஒரு புத்தகக் கடைக்காரர்.
“லெக்சரர்னு பேர்.. கிளாஸ் எடுக்கறது மட்டுமில்லாம ஹாஸ்டல் முதல் ஹவுஸ்கீப்பிங் வரை பாக்கறேன் சார். இதெல்லாம் நான் செய்வேன்னு கனவுல கூட எதிர்பார்க்கலை!” என்றார் ஒரு தனியார் கல்லூரி ஆசிரியர்.
“பிராஞ்ச் மேனேஜரா 15 வருஷம் சர்வீஸ் சார் எனக்கு. இப்போ கிட்டத்திட்ட சேல்ஸ்மேன் மாதிரி வங்கியோட ப்ராடெக்ட்ஸ் விக்கறதுதான் வேலை. முன்ன என் கேபினுக்கு வந்து எல்லோரும் பல்ல இளிப்பாங்க. இப்ப எல்லோரையும் கேபினுக்கு கூப்பிட்டு நான் பல்ல இளிக்கறேன்!” என்றார் ஒரு வங்கி மேலாளர்.
“இந்த கம்ப்யூட்டர் எல்லாம் வந்த காலத்தில் எங்க டிபார்ட்மெண்டில் தான் முதல்ல வாங்கினோம். நமக்கெல்லாம் தேவைப்படாதுன்னு கடைசி வரைக்கும் கத்துக்கலை. இன்னிக்கு அது பெரிய குறையா இருக்கு!” என்றார் ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஒரு அதிகாரி.
“டிரான்ஸ்ஃபர் ஆகும்னே ப்ரொமோஷன் வேண்டாம்னு எழுதிக் கொடுத்தேன். குடும்பத்துக் காக தியாகம்னு நினைச்சு எல்லாம் பண்ணினேன். இன்னிக்கு குடும்பத்திலயும் மதிப்பில்லை. ஆஃபீஸ்லயும் மதிப்பில்லை. எப்ப தனியார் மயமாகும்னு தெரியலை. என் கூட வேலைக்கு சேந்தவங்க இன்னிக்கு நிறைய பேர் ஜி.எம்
ஆயிட்டாங்க. நான்தான் தோத்துப் போயிட்டேன்!” என்றார் ஒரு அரசுத் துறை ஊழியர்.
அடிப்படையில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? நிகழ் காலம் போலவே எதிர்காலம் இருக்கும் என நம்பியது தான்!
மாறும் உலகம்
யோசித்துப் பார்க்கையில் நாம் எல்லாருமே இதைச் செய்கிறோம். நம்மில் சிலர் உடனே விழித்துக் கொண்டு உலகம் மாறுவதை கண்டுகொள்கிறோம். சிலர் விழித்துப் பார்ப்பதற்குள் உலகம் அடையாளம் தெரியாத அளவு மாறிப் போய் விடுகிறது.
இதைச் சரியாக உணர வேண்டும் என்றால் நீங்கள் வாழ்ந்த ஊரை காலம் கடந்து சென்று பாருங்கள். அந்த வலியை உணர்வீர்கள்.
இன்றும் கோயமுத்தூர் செல்கையில் பீளமேட்டைத் தாண்டும் போது மனதில் 80- களின் பிம்பங்கள் வந்து சிதறடிக்கும்.
எங்கள் கல்லூரி எதிரில் சூரிய காந்தி தோட்டம் இருக்கும். விமான நிலையம் போகும் வழியில் ஒவ்வொரு கல்லும் அத்துப்படி. நிஷா பேக்கரியில் காரக்கடலை பிரபலம். சித்ராவி லிருந்து ஹாஸ்டல் செல்லும் வரை “சோலை புஷ்பங்களே...என் சோகம் சொல்லுங்களேன்” பாடல் விட்டு விட்டுக் கேட்கும்.
லுங்கி கட்டிய காளைகள் நாங்கள் ரோட்டில் குறுக்கும் நெடுக்கும் ஓடி விளையாடும் அளவு தான் சாலை போக்குவரத்து. காலேஜ் வாசல் ராஜு கடையில் எல்லா நேரமும் கூட்டம் இருக்கும்.
இன்று விமானத்திலிருந்து வெளியே வந்தால் டிவைடர், டிராஃபிக் சகிதம் அவினாசி சாலை மாறிப்போயிருக்கிறது. வழியெங்கும் கடைகள். சூரிய காந்தி பூக்கள் எல்லாம் காணாமல் போயிருந்தன.
ஆனால் அங்கே வசிக்கும் கோவைவாசிகளுக்கு என்னைப் போல அதிர்ச்சிகள் இருக்காது. மாறுதலை மெல்ல மெல்ல கவனித் தவர்கள் அவர்கள்.
இதே போலத் தான் வேலை மாற்றங்களும். காலம் கடந்து பார்த்தால் புரியாது. தொடர்ந்து கவனித்தால்தான் பிடிபடும்.
மாற்றங்களே வாய்ப்புகளாக
சரி, எப்படி தெரிந்து கொள்வது? உங்கள் தொழில் அல்லது துறை சார்ந்த செய்திகள் வந்தடைகிறதா? இல்லாவிட்டால் தேடிச் செல் கிறீர்களா? உங்கள் தொழில் அல்லது வேலை சார்ந்த வல்லுநர்கள் தொடர்பு உண்டா? உங்கள் வேலை அடுத்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் ஆகும் என கூகுள் செய்திருக்கிறீர்களா?
என் பயிலரங்குகளில் “உங்களுக்குத் துறை சார்ந்த வாசிப்பு இருக்கிறதா?” என்று கேட்டால் பெரும்பாலோர் உதட்டைச் சுளிப்பார்கள். உங்கள் வாசிப்பையும் தேடலையும் தொடர்புகளையும் உங்கள் வேலைக்கு உதவுவது போலவும் அமைத்துக்கொள்ளுதல் அவசியம்.
மாறுதல்கள் ஏமாற்றங்களாக இருக்க அவசியம் இல்லை. வாய்ப்புகளாகவும் இருக்கலாம்.
வருங்காலம் வருந்துங்காலம் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அக்கம் பக்கம் பாருங்கள். உலகம் மாறுவது தெரியும்.
கண்ணதாசனின் அமரத்துவம் நிறைந்த பாடல் இதை இன்னமும் அழுத்தமாகச் சொல்கிறது.
No comments:
Post a Comment