அஸ்திவாரத்தில் அலட்சியமாக இருந்துவிட்டு ஆடம்பரமாக கட்டிடம் எழுப்பினால் எப்படி? தங்கள் ஊழியர்கள் வேறு பல விஷயங்களில் குறைபாடு கொண்டவர்களாக இருந்தால் அவற்றைப் பயிற்சியின் மூலம் சரி செய்துகொள்ளலாம் என நினைக்கும் நிறுவனங்கள் சில அடிப்படை விஷயங்களில் மட்டும் மிகவும் கண்டிப்பாக இருக்க வாய்ப்பு உண்டு.
அடிப்படை விஷயம் என்றால் என்ன? இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடலாம். என்றாலும் இதை விளக்க சைகோமெட்ரிக் தேர்வில் கேட்கப்பட வாய்ப்புள்ள ஒரு கேள்வியை மனிதவளப் பயிற்சி வகுப்பு ஒன்றில் முன்வைத்தேன்.
நடத்தை
“நீங்கள் ஒரு லீடர். உங்களின் கீழ் பணிபுரியும் ஒருவர் சிறப்பாக வேலை செய்யக் கூடியவர். இப்போது தன் பணியைச் சரியாகவே செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடத்தை சரியில்லை என்று உங்கள் டீமிலுள்ள பலரும் உங்களிடம் புகார் கூறுகிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்?’’.
இப்படி ஒரு கேள்வி கேட்ட அடுத்த நிமிடமே பயிற்சி பெற வந்திருந்த பலவித டீம் லீடர்களுக்கிடையே பலவித பதில்கள் வந்தன.
‘’அந்த ஊழியரைக் கூப்பிட்டுக் கடுமையாக எச்சரிப்பேன்’’ என்றார் ஒருவர்.
‘’கடுமை கூடாது. இதமாக எடுத்துச் சொல்வேன். டீமில் பிறர் நடத்தை சரியில்லை என்றால், அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்பேன். மனம் திருந்துவார்’’ என்றார் அடுத்தவர்.
‘’இதெல்லாம் வேலைக்கு ஆகாது. பிறருடன் கலந்து பழகத் தேவையில்லாதபடி தனி ஒருவராகவே செய்யக்கூடிய வேலையை அவருக்கு அளித்து விடுவேன். அப்போது அவர் மீதிப் பேருடன் கலந்து பழக அவசியமிருக்காது’’ என்றார் இன்னொருவர்.
நான்காமவர் அதற்கு நேரெதிரான ஒரு கருத்தைக் கூறினார். ‘’பிறருடன் சேர்ந்துதான் செய்ய முடியும் எனும் படியான வேலையை அவருக்குக் கொடுக்கலாம். அப்போது தன் வேலையை முடிக்க வேண்டுமென்றால் அவர் பிறரிடம் ஒழுங்காகப் பழக வேண்டும் என்ற அவசியம் தோன்றிவிடும்’’ என்றார்.
‘’இதையெல்லாம் விடுங்க சார். உங்க பயிற்சி வகுப்புக்கு அவரை அனுப்பினாலே போதும். தானாக மாறிடுவார்’’ என்று என்னைக் குளிர்விக்க முயன்றார் வேறொருவர்.
‘’வேலைகூட அப்புறம்தான் சார். நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நடத்தைதான் முக்கியம்’’ என்று திருவாய் மலர்ந்தார் இன்னொருவர்.
அப்ஜெக்டிவாக
எல்லாமே சிறந்த யோசனைகள்தான் என்பதைக் கூறிவிட்டு, நான் அவர்களை ஒரு கேள்வி கேட்டேன்.
‘’இவை எல்லாவற்றுக்கும் முன்பாக அந்த ஊழியர் மீது மற்றவர்கள் சுமத்தும் புகார் உண்மையானதுதானா என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டாமா?’’.
இப்படி நான் கேட்டதும் ‘அட ஆமாம்’ என்பதுபோல் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர் பயிற்சியாளர்கள்.
ஒரு பிரச்சினையை அப்ஜெக்டிவாகவும் அணுக வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது இந்தச் சம்பவம்.
அப்ஜெக்டிவாக அணுகுவது என்றால் என்ன? சப்ஜெக்டிவாக அணுகுவது என்றால் என்ன? பார்ப்போம்.
அப்ஜெக்டிவ் வகைக் கேள்விகள் உங்களுக்குத் தெரியும். ஒரு கேள்விக்கு மூன்று, நான்கு பதில்களை அளித்திருப்பார்கள். சரியான பதிலைத் தேர்ந்தெடுத்தால் அந்தக் கேள்விக்கான முழு மதிப்பெண் கிடைக்கும். இல்லையேல் பூஜ்ஜியம்தான்.
இருகோணங்களிலுமே
நான் ஒரு கட்டுரையை எழுதி மூன்று பேரிடம் மதிப்பிடச் சொன்னால் ஒவ்வொருவரும் வெவ்வேறான மதிப்பெண்ணைத்தான் அளிப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களுடைய சப்ஜெக்டிவ் அணுகுமுறை. அதாவது அவர்களது கடந்த கால அனுபவம், எதிர்பார்ப்பு, கட்டுரையின் மையப் பொருள் குறித்த அவர்களது தீர்மானம் போன்றவை மாறுபடுகின்றன.
வாழ்க்கையில் சிலவற்றை அப்ஜெக்டிவாகவும், சிலவற்றை சப்ஜெக்டிவாகவும் அணுக வேண்டும். சைகோமெட்ரிக் தேர்வுகளில் இருகோணங்களிலுமே யோசித்துவிட்டுதான் விடை அளிக்க வேண்டும். அதற்கு உதவத்தான் இந்தத் தொடர்.
“உங்கள் சிறப்புகள் அல்லது பலங்கள் என்ன?’’.
இப்படி ஒரு கேள்வி சைகோமெட்ரிக் தேர்வுகளிலும் இடம்பெறலாம். நேர்முகத் தேர்விலும் கேட்கப்படலாம். இந்தக் கேள்விக்கு நீங்கள் உடனடியாக ஒரு சிறு பட்டியலையே அளிக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் ‘’உங்கள் பலவீனங்கள் என்ன?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டால் நீங்கள் திகைக்கக் கூடாது.
பாதிக்காத பலவீனம்
நம் நடவடிக்கைகளைச் சிறப்பானதாக மாற்றும் நான்கு கட்டங்கள் உண்டு. ஒன்று, குறைகளை அறியாதிருத்தல். இரண்டு, குறைகளை அறிந்தும் அவற்றைச் சரிசெய்யாதிருத்தல். மூன்று, முயற்சிகளின் மூலம் குறைகளைச் சரிசெய்தல். நான்கு, முயற்சிகள் இன்றியே குறைகளின்றி இருத்தல்.
யாருக்குமே சில குறை பாடுகள் இருக்கும். அவற்றை உணர்ந்து கொள்ளவில்லை என்றால், இரண்டாவது கட்டத்தையே அடைய முடியாது. நாம் செய்வதுதான் சரி என்ற அசட்டு எண்ணத்தில் இருப்போம். குறைந்தபட்சம் நம் குறைகளை அறிந்து கொண்டால்தான் அவற்றைக் களைய ஓரளவாவது முயற்சி எடுப்போம்.
எனவே, தனது ஊழியர்கள் தங்கள் குறைபாடுகளை, பலவீனங்களை அறிந்திருக்க வேண்டும் என்றுதான் நிறுவனங்கள் எதிர்பார்க்கும். எனவே, பலவீனங்களை சைகோமெட்ரிக் தேர்வுகளில் தெரியப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை மறக்கக் கூடாது. எந்தப் பதவியை அடைய நீங்கள் தேர்வு எழுதுகிறீர்களோ, அந்தப் பதவியில் பணிபுரிய உங்கள் பலவீனம் மிகப் பெரும் தடங்கலாக இருந்துவிடக் கூடாது. அப்படி இருந்தால் அதைக் குறிப்பிட்டால் உங்கள் வேலைவாய்ப்பை அது பாதிக்கும்.
வாடிக்கையாளர்களை அடிக்கடி சந்திக்க வேண்டிய ஒரு பதவி என்றால் ’’எனக்கு எதையுமே குறிப்பிட்ட நேரத்தில் செய்து பழக்கமில்லை’’ என்று உங்கள் பலவீனத்தைக் குறிப்பிட்டால் எப்படி? ‘’நினைத் ததை என்னால தெளிவான வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது’’ என்பது உங்கள் பலவீனமானால் விற்பனை அதிகாரியாக உங்களை
எப்படித் தேர்ந்தெடுப்பார்கள்? ‘’எளிதில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் ஊசலாடுபவன் நான்’’ என்று தங்கள் பலவீனத்தை ஒத்துக் கொள்பவர்களை உயரதிகாரியாகத் தேர்ந்தெடுக்க நிறுவனங்கள் யோசிக்குமா, இல்லையா?
எனவே, தவறான இடத்தில் பலவீனத்தை வெளிக்காட்டுவதே உங்கள் பெரிய பலவீனமாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பிசினஸ் வளர்சிக்கு அணுகவும் - 9790044225
No comments:
Post a Comment