HAPPY SLEEPING
அது ஒரு காலம். 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம் என்று வாழ்க்கைக்குரிய குறைந்தபட்ச அர்த்தத்துடன் வாழ்ந்து வந்தார்கள் நம் முன்னோர். எதையாவது துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் இன்றைய வாழ்க்கையில் தூக்கம் 6 மணி நேரம், வேலை 16 மணி நேரம் என்று மனிதர்கள் தலைகீழாக மாறிவிட்டார்கள். போதாக் குறைக்கு, 24 மணி நேரமும் ஓடுகிற தொலைக்காட்சி, போர்வைக்குள் புகுந்துகொண்ட பிறகும் கைப்பேசியில் முகநூல் மேய்ச்சல் என்று நம்மைத் தூங்கவிடாத விஷயங்கள் பெருகிவிட்டன.
தூங்காத கண்கள்
எல்லாவற்றையும் விரல் நுனியில் செய்து முடித்துவிட முடியும் என்கிற நிலை இருக்கிறபோதும்கூட, நம்மில் பலருக்கும் முந்தைய நாள் தூக்கம் கண்களை அழுத்திக்கொண்டேதான் இருக்கிறது, இல்லையா?
இதற்கு என்ன காரணம்? தூக்கத்தை இழப்பதால் என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப் போகிறது?
"நமக்கு நாமே புத்துணர்வு ஏற்படுத்திக் கொள்வதற்குத் தூக்கம் மிகமிக அவசியமான ஒன்று" என்கிறார் சென்னையைச் சேர்ந்த நித்ரா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்லீப் சயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநரும் டாக்டருமான என்.ராமகிருஷ்ணன்.
யாருக்குப் பாதிப்பு?
"வளர்ந்த மனிதர்கள் அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்குத் தூக்கத்தின் நேரம் கூடும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் தூங்குகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் (நான்கு வயது வரை) 10 மணி நேரம் தூங்குவார்கள். வளரிளம் பருவத்தினருக்கோ 8 மணி முதல் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், போட்டியை மையமாகக் கொண்ட கல்வியமைப்பு மற்றும் நண்பர்களின் அழுத்தம் போன்ற காரணங்களால் அவர்கள் சரியாகத் தூங்குவதில்லை. இப்போதெல்லாம் தூக்கமின்மை பிரச்சினை சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது" என்கிறார்.
முதியவர்கள்
இவர்களைத் தவிர, தூக்கமின்மையால் அதிக அவதிக்குள்ளாகும் மற்றொரு பிரிவினர் முதுமையடைந்தவர்கள். பகலில் தூங்குவது, முறையான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவற்றால் இவர்களுடைய இரவுத் தூக்கம் பாதிக்கப்படுகிறது.
"இதுபோன்ற பிரச்சினை உள்ள முதியவர்கள் சீக்கிரம் தூங்கி (இரவு 9 மணிக்குள்), சீக்கிரம் விழித்துக்கொள்வார்கள் (அதிகாலை 3 அல்லது 4 மணி). சிலருக்கு 6 மணி நேரத் தூக்கம் சரியாக வரும். இன்னும் சிலருக்கு 8 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தூக்கம் தேவைப்படும்" என்கிறார் என்.ராமகிருஷ்ணன்.
பாதிப்புகள்
முறையான தூக்கம் இல்லையென்றால் கவலை, மனஅழுத்தம், அதிகம் கோபப்படுதல், ஞாபக மறதி மற்றும் சக மனிதர்களுட னான தகவல் தொடர்புப் பரிமாற்றத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.
"மொத்தத்தில் உங்களுடைய செயல்பாட்டு திறன் பாதிக்கப்படும். அத்துடன் உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு" என்கிறார் ராமகிருஷ்ணன்.
அறிகுறிகளும் தீர்வும்
குறட்டை விடுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வது, காலை நேரத் தலைவலி, ஞாபகமறதி, கவனமின்மை, அதிகம் கோபப்படுதல், மனஅழுத்தம் மற்றும் அடிக்கடி மனநிலை மாறிக்கொண்டே இருப்பது போன்றவை சரியான தூக்கமின்மையின் அறிகுறிகள். தங்களுக்குக் குறட்டைவிடும் பழக்கம் இருக்கிறது என்பதை, கூச்சம் காரணமாகப் பலரும் மருத்துவர்களிடம் தெரிவிப்பதில்லை.
தூக்கமின்மையைப் போக்க
1. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளப் பழக வேண்டும்.
2. தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.
3. காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல தூக்கத்துக்குக் கைகொடுக்கும்.
4. ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு வாழைப்பழம் நல்ல தூக்கத்தைத் தரும்.
5. தூங்குவதற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
பயமுறுத்தும் புள்ளிவிவரம்
நாட்டில் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள். அதில் 58 சதவீதம் பேர், சரியான தூக்கம் இல்லாததால் தங்களுடைய வேலைகள் பாதிக்கப்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.
நாட்டில் சுமார் 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட 25 நகரங்களில் 35 முதல் 65 வயது வரையுள்ள 5,600 பேரைத் தேர்வு செய்து, அவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வைப் பிலிப்ஸ் இந்தியா ஹோம் கேர் நிறுவனம் ‘பிலிப்ஸ் ஸ்லீப் சர்வே' என்ற தலைப்பில் மேற்கொண்டது.
இதில் சுமார் 11 சதவீதம் பேர் தூங்குவதற்காக அலுவலகங்களில் இருந்து விடுமுறை எடுத்துக்கொள்வதாகவும், அதே அளவுகொண்டோர் அலுவலகங்களில் பணியாற்றும்போது தூங்கிவிடுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
மேலும், 72 சதவீதம் பேர் தங்களுடைய இரவுத் தூக்கத்தின்போது ஒன்றிலிருந்து மூன்று முறையாவது விழித்துக்கொள்வதாகவும், சரியான தூக்கம் இல்லாதது தங்களுடைய ஆரோக்கியத்தைப் பாதித்திருக்கிறது என்று 87 சதவீதம் பேர் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Urs Happily
Dr.Star Anand Ram
www.v4all.org
Urs Happily
Dr.Star Anand Ram
www.v4all.org
No comments:
Post a Comment