Sunday, August 10, 2014

நம்மை நாம் நம்ப வேண்டும்

நம்மை நாம் நம்ப வேண்டும் 

ஒரு காலத்தில் சிந்தனை செய்வதே பாவம் என்று கருதப்பட்டது. அன்று சிந்தனை செய்வோர்களுக்கு வழங்கப்பட்டது வெள்ளிப் பேழையுமல்ல! வெண் சாமரமும் அல்ல!



நஞ்சுக் கோப்பைகளை ஏற்றார்கள். நாடு கடத்தப்பட்டார்கள். ஆனால் காலம் முன்னேற முன்னேற சிந்தனை செய்யும் திறன் வளர்ந்தது. அறியாமை அழிந்தது. தெரியாமை தெளித்தோடியது. புரியாமை விடை பெற்றது.
ஆக்கப்பூர்வமான சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் நடக்காது என்று சொல்லி எடுத்த எடுப்பிலேயே ஒதுக்கிவிடுவது சுலபம். அதனை ஆக்கபூர்வமான செயலுக்குரிய தன்மையாக மாற்ற சிந்தனை செய்வது தான் கடினம்.

ஒரு செயலைத் தொடங்கம் போது இது கட்டாயம் நடக்கும் என்ற சிந்தனையுடனேயே முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். சிந்தனை இருந்தால் தான் முயற்சி செய்வதற்கான ஊக்கம் கிடைக்கும். செயல்படுவதற்கான மன உறுதி தோன்றும். தளர்ச்சி தள்ளிப் போகும்.

முயற்சி முன்னேற்றத்தைக் காணும். மனிதனாக பிறப்பது ஒரு நிகழ்ச்சி. பெரிய மனிதனாக இறப்பது ஒரு முயற்சி. தம்மை தாமே உயர்த்திக் கொள்பவரே பெருமையும், வலிமையும் எய்தியுள்ளார்கள். இது வரலாற்று உண்மை.

கூடுமானவரை நம்முடைய தகுதிக்கு ஏற்ப நம்மை நாமே உயர்த்திக் கொள்வது முன்னேற்றத்திற்கு முதல் படியாக அமையும். நமக்கு என்று சில அடிப்படையான தகுதிகள் உண்டு. தகுதி இல்லாத மனிதனே கிடையாது. அந்த தகுதி என்ன என்பதைக் கண்டறிந்து முயற்சி செய்ய வேண்டும்.

நம்முடைய காலத்திலே வாழ்ந்து மறைந்தவர்களும், வாழ்பவர்களும் ஒவ்வொரு விதமான தகுதிகளைப் பெற்று இருந்த படியினால் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எட்டையபுர அரசரைப் பார்க்க பாரதியார் சென்றபோது, அவர் பாரதியாருக்கு உட்கார சரியாசனம் கொடுக்கவிலலை. அதைக் கண்டதும் பாரதியார் கூனிக்குறுகிவிடவில்லை.

எட்டையபுர அரசரைப் பார்த்து, “நீர் ஊருக்கு வேந்தர். நானோ பாட்டுக்கு வேந்தன். நமக்குள் உயர்வு தாழ்வுக்கு இடம் ஏது? என்று கூறிவிட்டு அவருக்கு இணையாக ஒரு ஆசனத்தில் பாரதியார் அமர்ந்தார்.


பாரதியார் வறுமையில் வாடினாரே தவிர தன்னைப் பற்றி ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளவில்லை. அரசருக்கு இணையாக உட்கார்ந்த அவருடைய துணிவைப் பாராட்டமால் இருக்க முடியாது.

urs

Dr.Star Anand Ram
www.v4all.org 

No comments:

Post a Comment