மாலை மணி ஐந்து. கடிகாரத்தை பார்த்து மோகன் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் இவ்வளவு இருக்கின்றதே என்ற மலைப்பில் அன்றைய தினமும் தாமதமாக தான் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றான். வேலை நேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டிய பணிகள் எவ்வாறு வேலை நேரத்தையும் தாண்டி முடிக்கப்படாமல் மீதம் இருக்கின்றன என்ற ஐயம் மோகன் மனதில் மலைப்பை ஏற்படுத்தியது.
பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் கூறியதை போல நேரத்தை வீணாக்கினால் வாழ்க்கைக்கு அர்த்த மில்லை, வாழ்வின் அடிப்படையே நேரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றது என்ற சொற்கள் மனதில் அலைமோதியது. இருப்பதோ 24 மணி நேரம்.
இதில் எதை செய்வது? எதை விடுவது? இருக்கும் 24 மணி நேரத்தில் வேலைகளை தள்ளிப் போட்டாலோ, முன்னுரிமைகளை மாற்றி வேலைகளை செய்தாலோ நிகழ்வது என்னவோ நேரமின்மை.
ஆக நேரத்தை எங்கே தேடுவது. வீணாக செலவழிக்காத நேரம் சேமித்த நேரத்துக்கு சமம். அதைக் காட்டிலும் சரியான முறையில் செலவழித்த நேரம் பல மடங்கு சேமித்த நேரத்துக்கு சமம். நேரமும் கல்வியும் ஏறக்குறைய ஒன்றுதான். வெள்ளத்தால் போகாது. வெந்தணலால் வேகாது. வேந்தராலும் கொள்ளத்தான் இயலாது. நம்மிடம் இருக்கும் நேரத்தை நாம் எவ்வளவு அறிவுபூர்வமாக சிந்திக்கின்றோமோ அந்தளவுக்கு நாம் சேமிக்கலாம்.
நட்சத்திரங்களையும் கோள்களையும் கொண்டு நேரத்தை கணிப்பதில் எகிப்தியர்களின் பங்களிப்பு பெரும் பங்கு வகித்தது. மாயன் பிரிவை சேர்ந்தவர்கள் வெகு துல்லியமாக நாட்களையும் ஆண்டுகளையும் கணித்து விவசாயத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், தினசரி வேலைகளை சிறப்பாக செய்யவும் வழிகாட்டினார்கள். ஒரு நாளின் பகல் நேரத்தையும் இரவு நேரத்தையும் இணைத்து அதனுள் வேலைகளை திணித்தார்கள்.
கடிகாரங்களை இயந்திரமயமாக்குதல் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி காலத்துக்கு பின்பு ஏற்பட்டது.
15-ம் நூற்றாண்டு வரை மணியை மட்டும் குறித்தார்கள் அதற்கு பிறகு மணியையும் நிமிடங்களையும் குறிக்க ஆரம்பித்தார்கள். டிஜிட்டல் முறையில் காலங்களை திட்டமிடும் பழக்கம் வந்த பிறகு வினாடிகளும் வினாடிகளின் பகுப்புகளும் நடைமுறைக்கு வந்தன.
இதை பற்றி விபரங்களை ‘Faster: The Acceleration of Just Above Everything’ என்ற புத்தகத்தில் ஜேம்ஸ் கிளியிக் என்பவர் நேரபகுப்புகளையும், நேரத்தை சேமிப்பதையும் குறித்தும் எடுத்து கூறினார்.
ஆக நேரம் மற்றும் காலம் பற்றி நம் முன்னோர் சரிவர அறிந்து செயலாற்றியதால் வியக்கத்தகு முன்னேற் றங்களை அடைந்தோம். ஆனால் இன்றைய சூழலில் நேரத்தை விரயம் ஆக்குவதால் இலக்குகளை அடைய முடிவதில்லை.
எந்த வேலைக்கு முன்னுரிமை அளிப்பது எந்த வேலையை தள்ளி வைப்பது என்ற மதிப்பீடு இல்லாத காரணத்தால் தனிமனிதனும் நிறுவனங்களும் வெற்றி பெற இயலுவதில்லை. அவ்வாறு வெற்றி பெற வேண்டுமானால் நூல் ஆசிரியரின் அணுகுமுறை பெரிதும் உதவும்.
தாமதமும் ஒத்தி வைக்கும் மனப்பாங்கும் கால விரயத்துக்கு வழிகோலும். அவை ஏற்படுவதற்கு கீழ்கண்டவை காரணமாகும்.
விரும்பத்தகாத அல்லது விருப்பம் இல்லாத வேலைகள், தோற்று விடுவோமோ என்ற பயம், எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பம் (Starting Trouble) இது தவிர அடுத்தவரின் பிரச்சினையில் மூக்கை நுழைப்பது, தேவையில்லாத பிரயாணங்களை மேற்கொள்ளுதல், மின்னஞ்சலை நீட்டி முழக்குதல் போன்றவைகளை தவிர்த்தால் நேரத்தை சேமிக்கலாம்.
அதே போல கூட்டங்கள் ஏற்பாடு செய்யும் பொழுது, தேவையான செய்திகள், நிகழ்ச்சி நிரல், வதந்தி பேச்சுகளை தவிர்த்தல், ஒன்று இரண்டு நபர்களின் ஆதிக்கம் தவிர்த்தல் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கூட்டம் நடத்துதல், தீர்மானமான முடிவுகளை எடுக்காமல் ஒத்தி போடுதல் மற்றும் ஒதுக்கப்பட்ட பணிகளை சரியாக செய்தது குறித்த ஆய்வின்மை போன்றவைகளை தவிர்த்தால் அவை நேரத்தை சேமிப்பது மட்டுமின்றி செயல்களில் தெளிவும், உற்சாகமும் ஏற்பட உதவும்.
நம்மில் பெரும்பான்மையானவர் களுக்கு மற்றவர்களிடம் பணிகளை ஒப்படைக்கும் மனம் இல்லை. தானே அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சில நேரம் எதையும் செய்யாமல் போகின்றார்கள்.
மற்றவர்களிடம் பணிகளை மேற்கொள்ள ஒப்படைக்கும் பொழுது தெளிவான சிந்தனை, வழிகாட்டும் திறன் முன்னேற் றத்தை கணிக்கும் திறமை ஆகியவை வெளிப்படுகிறது. அதே நேரம் எந்த ஒரு வேலையையும் முழுமையாக அதிகமாக ஒருவரிடமே கொடுப்பதன் மூலம் பணிகளை மற்றவர்களிடம் பகிர்ந்தளிக்கும் மகத்தான உத்தி வீணாகிவிடும்.
சக பணியாளர்களிடம் தெளிவான வழிகாட்டுதலை கொடுக்க முடியாதவர்கள் கால விரயத்திற்கு துணை போகிறவர்கள் ஆவார்கள். ஒரு நல்ல தலைவர் கூட்டங்களில் அதிகமாகவோ, அக்கறையின்றியோ, சுயபுராணம் பேசுவதிலோ நேரத்தை வீணடிக்க கூடாது. ஒரே கருத்தை திரும்ப திரும்பப் பேசுவது உத்தியல்ல, அது குயுக்தி. எதையும் தெரிந்தவராக காட்டிக்கொள்ளும் பொழுது மற்றவர்களிடம் இணக்கம் ஏற்படுவது தாமதமாகிறது. இதன் விளைவாக தாமதமாக ஏற்படும் இணக்கம் கால விரயத்தை அதிகப்படுத்துகிறது.
எந்த ஒரு கூட்டத்திலும் தெளிவான வழிகாட்டுதலை ஏற்படுத்த வேண்டும். கூட்டத்தை நடத்துவதற்கு தலைமை பண்புகள் இருந்தால் நேரம் சேமிக்கப்படும். அவ்வாறு இல்லாதவர்கள் ஒவ்வொருவரும் குறுக்கு நெடுக்காக பேசுவதால் பேச வேண்டிய விசயத்தை தவிர்த்து கூட்டத்தின் கால அளவை நீட்டித்துக்கொண்டே போகிறார்கள்.
நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு காணொலி காட்சி மூலமும், வலைதளங்கள் மூலமும் கூடி ஆலோசனை செய்தலை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் பயணங்கள் தவிர்க்கப்படுவதன் மூலம் பணமும் மிச்சமாகிறது.
மேலும் திட்டங்களை சமர்ப்பிக்கும் பொழுது அதிக சிரத்தையோடு தேவையில்லாத வண்ண அமைப்புகளை கொண்டு பேசுவதை காட்டிலும் எளிதான எவருக்கும் புரியும் வகையில் slideகளை தயாரிக்க ஊக்குவிக்க வேண்டும்.
நிறுவன ஊழியர்களுக்கு வாழ்க்கை / வேலை சமநிலை பற்றிய கருத்துகளை தெளிவாக எடுத்து கூறுதல் அவசியம். நீண்ட வேலை நாட்களில் வேலை விரயத்தை தவிர்ப்பது குறித்து அறிவுறுத்துதல் அவசியம்.
அலுவலக வேலைகளை வீடு களுக்கு எடுத்து செல்லுவதன் சாதக, பாதகங்களையும் அதனால் ஏற்படும் கால விரயங்களையும் எடுத்து கூறுதல் வேண்டும். பிரயாணம் மேற்கொள்ளும் பொழுது நேரத்தை சேமிப்பது அலுவலகத்தில் திறமையாக பணியாற்றுவதற்கு ஒப்பாகும்.
நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நேர மேலாண்மை மற்றும் கால விரயம் பற்றி எடுத்து கூறுவதன் மூலம் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு காலத் தின் மேன்மை குறித்து அறிவுறுத்த முடியும்.
அவரவர்களாக உணர்ந்து நேரத்தின் மேன்மையை அறிந்து நேரக்கட்டுப்பாடு, நேர சேமிப்பு ஆகியவை இல்லாத வரையில் இரண்டு மணி நேர கருத்தரங்குகளிலும், பயிலரங்குகளிலும் கால விரயம் தேவையில்லாதது.
நேரத்தை சேமிப்பது மட்டுமில்லாமல் நம்மை எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நூலாசிரியரின் கருத்து சிறப்பானதாகவும், சிக்கனமானதாகவும் சிந்தனையை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.
தனிமனித நேர முதலீடு, தனி மனித உற்பத்தி திறன்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவைகளை அடைவதற்கான பல்வேறு உத்திகளும் இந்த புத்தகத்தில் 3 தனித் தனி இணைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. காலத்தையும் நேரத்தையும் அறியவும் உணரவும் சேமிக்கவும் சிறப்பாக செயல்படவும் எண்ணுபவர்கள் இந்த புத்தகத்தை நாடலாம்.