Monday, November 3, 2014

கடன் எப்படி, ஏன்? கடன் தீர யோசனை - பரிகாரம்

கடன் எப்படி, ஏன்? கடன் தீர யோசனை - பரிகாரம்

ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போது ‘ஜெனனி ஜென்ம, சௌக்யானாம்’ என்ற செய்யுளை எழுதுவார்கள். இதில் ‘பதவி பூர்வ புண்ணியானாம்’ என்ற சொற்றொடர் வரும். இதன் பொருள் என்னவென்றால் இந்த ஜாதகத்தில் கிரக சேர்க்கைகள், பார்வைகள், சுபபலம், அசுபபலம் என்று எது இருந்தாலும் அதற்கும் மேலே கர்மபலன் என்று ஒன்று உண்டு. அதாவது அவரவர் பிராப்தப்படி எதற்காக இந்த பிறவி எடுத்து இருக்கிறோமோ, அதற்கேற்ப அவரவர் பூர்வபுண்ணியத்தை பொறுத்தே எல்லாம் அமையும் என்பதாகும். ஆகையால்தான் ஜோதிடம் பார்க்கும்போது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை முக்கியமாக பார்ப்பார்கள்.

ருண, ரோக, சத்ரு ஸ்தானம்...

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு ஸ்தானத்தை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள். ஜாதகத்தில் லக்னம் என்பது மிக முக்கியமானதாகும். இந்த இடத்தில் இருந்துதான் மற்ற வீடுகளை கணக்கிடுகிறோம். லக்னம் ஒன்றாம் இடம். இதற்கு அடுத்த வீடு, தனஸ்தானம் எனும் இரண்டாம் இடம். இந்த வரிசையில் ஆறாம் இடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். ருணம் என்றால் கடன். ரோகம் என்றால் வியாதி. சத்ரு என்றால் எதிரி. இந்த ஆறாம் இடமும், ஆறாம் அதிபதியும், அவருடன் சேர்ந்த கிரகங்களும், பார்க்கும் கிரகங்களும், ஒருவருக்கு கடன் தொல்லைகளை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

கடன் எப்படி, ஏன்?

கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன்பட்டவர்களின் மன வேதனையைப் பற்றி முன்பெல்லாம் சொல்வார்கள். ஆனால் தற்காலத்தில் எங்கும் கடன், எதற்கும் கடன் என்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒரு குறிப்பிட்ட சதவிதிதத்தினருடன், சில மகா பாக்யவான்களை தவிர மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது. இதில் சுப விரயமும் அசுப விரயமும் அடக்கம். ஒரு சிலர் வருமானத்திற்கு ஏற்ற வகையில் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற அடிப்படையில் வாழ்க்கை நடத்துவார்கள். சிலர் வருவது வரட்டும் என்று நினைப்பார்கள். சுப விரயம் என்ற வகையில் முதலில் மகன், மகள் திருமணம், வளைகாப்பு, பிரசவம், கல்வி செலவு, வீடு கட்ட நிலம் வாங்க, தொழில் தொடங்க, ஆடம்பர வாழ்க்கை என்ற வகையில் கடன் ஏற்படுகிறது. 

அசுப விரயம் என்ற வகையில் மருத்துவ செலவுகள், வழக்குகள், வீண் டாம்பீகம், தொழில் முடக்கம், விபத்துகள் என பல விஷயங்கள் நம்மை கடனாளி ஆக்குகிறது. ஜாதக பலம் உள்ளவர்கள் ஏதாவது ஒரு வகையில் கடனில் இருந்து மீண்டு வந்து விடுகிறார்கள். பலருக்கு கடைசிவரை ஏதாவது உருட்டல்-மிரட்டல் இருந்து கொண்டே இருக்கும். சிலர் அகலக்கால் வைத்து கடன் தொல்லையில் தவறான முடிவுகளுக்கு சென்று விடுகிறார்கள். வீடு, வாசல், சொத்துகளை இழந்து தெருவுக்கு வரும் அளவுக்கு கிரகங்கள் ஆட்டிப் படைக்கின்றன. 

கிரகங்களால் உண்டாகும் கடன் சுமைகள்

பொதுவாக ஜாதக கட்டத்தில் கிரக சேர்க்கைகள் காரணமாகவே கடன் சுமை உண்டாகிறது. இரண்டாம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பதினொராம் இடம் ஆகியவை பலம் பெற்று இருந்தால் கடன் சுமை வராது. வந்தாலும் பாதிக்காது. ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து, கடன் அடையும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் நீச்ச கிரகம் இருந்தாலும் 6, 8, 12ம் இட கிரகங்கள் இருந்தாலும் கடன் ஏற்படும். குரு நீச்சம் அடைந்து அல்லது 6, 8, 12 ல் மறைந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும். சனி, செவ்வாய் சேர்க்கை அல்லது சனி, கேது சேர்க்கை உள்ள ஜாதகங்கள் கடனால் அவதிப்பட நேரிடும். பெரும்பாலும் சுமுகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீர் வீழ்ச்சி, பண நஷ்டம், சொத்து இழப்பு ஏற்படுவதற்கு அந்தந்த கால கட்டங்களில் வரும் தசாபுக்திகளே காரணம். 

6, 8, 12ம் இட சம்பந்தப்பட்ட தசாபுத்திகளில் கடன் தொல்லைகள் கூடும். ஆறாம் அதிபதி லக்னாதிபதி, லக்னத்துடன் சம்பந்தப்படும்போது வீண் விரயங்கள், உடல் கோளாறுகள் மற்றும் தவறான அணுகுமுறையாலும் கடன் உண்டாகும். இரண்டாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுப செலவு, குடும்ப செலவு, கண் சம்பந்தமான மருத்துவ செலவுகள் ஏற்படும். மூன்றாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சொந்தபந்தம், சகோதரர்களால் வீண் செலவு, கடன் வரும். நான்காம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது நிலம், வீடு, விவசாயம், தாயாரால், கல்வியினால் கடன்பட நேரிடும். ஐந்தாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுப செலவுகளுக்காக கடன் ஏற்படலாம். 

ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது வழக்குகள், விபத்துகள், நண்பர்கள் மற்றும் மனைவியினால் கடன் ஏற்படும். எட்டாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் எதிர்பாராத செலவுகள் கடன்பட வைக்கும். ஒன்பதாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் பூர்வீக சொத்துகளை விற்க நேரிடும். பத்தாம்  அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் தொழில், வியாபாரம் காரணமாக கடன் சுமை கூடும்.

கடன் தீர யோசனை - பரிகாரம்

கடன் தீர சாஸ்திரத்தில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும். ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும். மைத்ர முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது, இது ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு வரும். 

அதாவது அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும்போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போது யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒரு சிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாக குறையும்; அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.

ஓம் ஸ்ரீம் கம் ஸௌம்யாய கணபதியே வர வரத சர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா
ஹிருயாதி ந்யாஸ நிக்விமோக


-என்ற இந்த மந்திரத்தை தினசரி 108 முறை நம்பிக்கையுடன் மனத்துள் ஜெபித்து வந்தால் ருண 
தோஷம் நீங்கும்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

No comments:

Post a Comment