Sunday, November 2, 2014

தகுதிகளை வளர்த்துக்கொண்டால்... நீங்களும் வெற்றிகரமான தொழில்முனைவோர்தான்!

தகுதிகளை வளர்த்துக்கொண்டால்...
நீங்களும் வெற்றிகரமான தொழில்முனைவோர்தான்!


இன்றைய இளைஞர்களில் பலர் சுயமாகத் தொழில் தொடங்கி சொந்த உழைப்பால் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகத்துடன் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். இந்த உத்வேகம் மட்டுமே ஒருவருக்கு தொழிலில் ஜெயிப்பதற்கான தகுதி என்று சொல்லிவிட முடியாது. வேறு சில தகுதிகளும் இருக்கவே செய்கின்றன. இந்தத் தகுதிகள் ஒரு தொழில்முனை வோருக்கு இருக்கும்பட்சத்தில், பிசினஸில் நிரந்தரமாக வெற்றிப் பெற முடியும்.
வெற்றி பெறும் தொழில்முனை வோராக ஒருவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், அந்தத் தகுதிகள் இயற்கையாக இல்லை எனில், அதை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார் கேப்பிட்டல் மார்க்கெட் நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குநர் எஸ்.சிவக்குமார். அவர் சொன்ன விஷயங்கள் இங்கே உங்களுக்காக...
“இன்றைய இளைஞர்கள் மனதில் நாமும் தொழில்முனைவோராக வேண்டும் என்கிற எண்ணம் இருப்பதை நான் காண்கிறேன்.
முக்கியமாக, ஈரோடு, நாமக்கல், கோவை, திருச்சி, மதுரை போன்ற தமிழக மாவட்டங்களில் வாழும் பெரும்பாலான இளைஞர்கள் புதுப்புது முயற்சிகளில் தொழில்களைத் தொடங்கி முன்னேற்றத்தைக் கண்டு வருகிறார்கள்.
ஆனாலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் தகுதிக் குறைவால் சில சமயம் தடுமாறவே செய்கிறார்கள். தொழில் தொடங்க நினைப்பவர்கள், மூலதனம் (Capital), திறன் (Capability), நடத்தை (Character) ஆகிய மூன்று தகுதிகளையும் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்!
தொழில்முனைவோர்களுக்கான திறன் என்பது அறிவு, கல்வி, தொழில் மீதான விருப்பம் ஆகிய மூன்றும் சேர்ந்ததாக இருக்க வேண்டும். என்ன தொழில் செய்ய நினைக்கிறோமோ, அந்தத் தொழில் சார்ந்த அறிவும், டெக்னிக்கல் தொழில்நுட்பங்களைத் கையாள்வதற்கானக் கல்வியும், ஆரம்பிக்கும் தொழிலின் மீது ஈடுபாடும் இருப்பது மிக முக்கியம்.
மூலதனம்!
தொழில்முனைவோர்களுக்கு மூலதனம் மிகவும் முக்கியமானது. அறிவு, அனுபவம், கல்வி ஆகிய விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு மூலதனம் இல்லாமல் போனாலோ அல்லது மூலதனத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அறிவு, கல்வி போன்ற விஷயங்கள் இல்லாமல் போனாலோ சுயமாகத் தொழிலை தொடங்க முடியாது.
தொழில் ஆரம்பிப்பவர்களிடம் தொழில் ஆரம்பிப்பதற்கான மொத்த மூலதனம் இல்லை என்றாலும் தங்களின் குறைந்தபட்ச முதலீடாக 15-20% மூலதனம் இருக்க வேண்டும். இந்த முதலீடு இல்லாமல் வங்கியில் யாரும் கடன் பெற முடியாது.
எங்களிடம் குறைந்தபட்ச முதலீடுகூட இல்லை. ஆனால், மற்ற அனைத்துத் தகுதிகளும் இருக்கிறது என்பவர்கள் வெஞ்சர் கேப்பிட்டல் போன்ற நிறுவனங்களிடம் குறைந்தபட்ச முதலீட்டை அவர்களின் தொழில் மீதான முதலீடாகப் பெறலாம்.
இந்த முதலீடு கேட்டவுடன் கிடைத்துவிடாது. வெஞ்சர் கேப்பிட்டல் முதலீட்டாளர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லி, அவர்கள் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே இந்த முதலீடு கிடைக்கும். இந்த முதலீட்டாளர்கள் முதலீட்டுடன் அருமையான பிசினஸ் யோசனை களையும் சொல்வார்கள். இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அவசியம் இருக்க வேண்டும்.
புதுமை அவசியம்!
செய்யும் தொழிலில் புதுமை, படைப்புத் திறன், கற்பனைத் திறன் ஆகிய மூன்றும் தொழில் தொடங்கு பவர்களுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேபோல, ஆரம்பிக்கப் பட்ட தொழிலில் ஓரளவு வளர்ச்சி கண்டபிறகு அதை இன்னும் பல மடங்காகப் பெருக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். இதையே ஆங்கிலத்தில் ‘Scaling Up’ என்பார்கள். இதற்குத் தொழில் முனைவோரிடம் கடின உழைப்பு இருக்க வேண்டும்.
கடன் பெறும் தகுதிகள்!
சுயமாகத் தொழில் செய்ய நினைப்பவர்கள் வங்கியை அணுகும் போது அங்குக் கேட்கப்படும் கேள்வி களுக்குச் சரியான பதிலை சொல்லும்படி யாக இருப்பது அவசியம். தொழில் திட்டம் சரியாக இருந்து, அதை முறை யாக நீங்கள் முன்வைத்தாலே போதும், உங்கள் மீது வங்கி அதிகாரிகளுக்கு நம்பிக்கை பிறந்துவிடும். இதன்பிறகு உங்கள் தொழிலுக்கான கடனை எளிதாகப் பெறமுடியும்.
மார்க்கெட்டிங்!
தொழில்முனைவோருக்குத் தேவையான தகுதிகளில் மிக முக்கியமான ஒன்று, மார்க்கெட்டிங் திறன். தான் உற்பத்தி செய்யும் பொருட்களை எங்கே, எப்படி, யாரிடம் மார்க்கெட்டிங் செய்வது என்ற விஷயங்களில் தொழில்முனைவோர் தெளிவுடன் இருக்க வேண்டும்.

எந்தவிதமான தொழிலில் இறங்கப் போகிறோம், அதற்கான மார்க்கெட்டிங் உத்திகள் என்னென்ன, நமக்குள்ள போட்டியாளர்கள் யார், நமது போட்டியாளர்களை நாம் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற கேள்விகளுக்கு சந்தை ஆய்வு மூலம் விடை கண்டுபிடித்து அதற்குத் தேவையான தகுதிகளைத் தொழில் முனைவோர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவரங்களை தெளிவாக அறிந்துகொண்டபின் தொழிலில் இறங்கும்போது நிச்சயம் வெற்றியைப் பெற முடியும்.




நடத்தை (Character)!
தொழில்முனைவோர்களின் நடவடிக்கைகள் நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும். கடன் வாங்கும் வங்கிகளில் மட்டும் நேர்மையாக நடந்துகொண்டால் போதும் என்று நினைக்காமல், வாங்கிய கடன்களை முறையாகப் பயன்படுத்துவதிலும், அந்தக் கடன்களை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தாமல் இருப்பதிலும் உண்மைத்தன்மை யுடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும் உற்பத்தி, விற்பனை போன்ற நடவடிக்கைகளிலும் தரத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது முக்கிய தகுதியாகும். மொத்தத்தில் நம்மை மற்றவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாகக் காட்டும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆக, ஒரு தொழிலை ஆரம்பிக்க கடன் வாங்குவதென்பது 20%, மார்க்கெட்டிங் சார்ந்த விஷயங்கள் 30%, மீதி இருக்கும் 50 சதவிகிதத்தில்தான் டெக்னிக்கல், உற்பத்தி செலவுகள், உற்பத்தித் திறன் போன்ற பல விஷயங்கள் அடங்குகிறது. இந்தத் தகுதிகள் அனைத்தையும் ஒரு தொழில்முனைவோர் கொண்டிருப்பார் எனில், அவர் ஆரம்பிக்கக் கூடிய தொழிலில் நிச்சயம் பெரிய அளவிலான வெற்றி கிடைக்கும்'' என்று முடித்தார் சிவக்குமார்.
புதிய தொழில்முனைவோர்கள் இதைக் கவனிக்கலாமே!



No comments:

Post a Comment