Monday, November 17, 2014

டார்வினின் பரிணாமக் கொள்கையும் தசாவதாரமும்

டார்வினின் பரிணாமக் கொள்கையும் தசாவதாரமும்
தசவதாரம் -
உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுக்கிறார். எண்ணற்ற அவதாரங்களை திருமால் எடுத்திருந்தாலும் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என்ற பத்து அவதாரங்கள் மட்டும் தசவதாரங்கள் என்று பெருமையாக அழைக்கப்படுகின்றன இந்த அவதாரங்களை சற்று உற்றுநோக்கும் போது, இதில் ஒளிந்திருக்கும் பரிணாமக் கொள்கையை அறிய இயலும். டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை உயிரிகளிலிருந்து மனிதன் தோன்றியதோடு நின்றுவிடுகிறது. அதன் பிறகு மனிதனின் பரிணாமம் துவங்குகிறது. தசவதாரத்தின் முதல் ஐந்து அவதாரங்கள் உயிர்களிலிருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை விவரிக்கின்றன. அடுத்த ஐந்து அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன.

மச்ச அவதாரம் – (மீன்- நீர் வாழ்வன)
பிரளய காலத்தில் மீனாக திருமால் அவதாரம் எடுத்து உலகை காப்பாற்றியதாக புராணம் கூறுகிறது. இது தசவதாரத்தில் முதல் அவதாரமாகும். பரிமாணவியல் கொள்கைபடி நீரில்வாழும் உயிரமான மீனிலிருந்தே உயிரங்களின் தோற்றம் ஆரமித்ததை குறிக்கிறது.
கூர்ம அவதாரம் – (ஆமை- நீர் நில வாழ்வன)
திருமாலின் இரண்டாவது அவதாரம் கூர்மம். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் போது, மேரு மலையை தாங்கிபிடிக்க திருமால் ஆமை ரூபத்தில் அவதாரம் எடுத்ததாக புராணம் கூறுகிறது. பரிணாமக் கொள்கையைப்படி நீர் வாழும் உயிர் நீர்நில வாழும் உயிராக மாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.
வராக அவதாரம் – (பன்றி- நிலத்தில் வாழும் பாலூட்டி)
தசவதாரத்தின் மூன்றாவது அவதாரம் வராகம். இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த அவதாரம் என்று புராணம் கூறுகிறது. பரிணாமிவியல் கொள்கைபடி, நீர்நில வாழ்பவையாக இருந்தவை நில வாழ்பவையாக மாறியதை குறிக்கிறது.
நரசிம்ம அவதாரம் – (மிருகமாக இருந்து மனிதனாக மாறும் தன்மை)
தசவதாரத்தின் நான்காவது அவதாரம் நரசிம்மம். நரன் என்பது மனிதனைக் குறிக்கும் சொல். மனிதன் பாதியாகவும், மிருகம் பாதியாகவும் இருக்கின்ற திருமாலின் அவதாரம் இரணியனை கொல்ல எடுக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. நிலவாழ்பவைகளாக இருந்த மிருகம் சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி, மிருகம் பாதியாக இருந்த தொடக்க நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது.
வாமண அவதாரம் – (மனித தோற்றம்)
தசவதாரத்தின் ஐந்தாவது அவதாரமான வாமண அவதாரமே முழுமனிதனாக திருமால் எடுத்த அவதாரமென புராணங்கள் கூறுகின்றன. பரிணாமக் கொள்கைபடி முழு மனிதனை இந்த அவதாரம் குறிக்கிறது.
பரசுராம அவதாரம் – (மூர்கமாக வேட்டையாடும் மனிதன்)
தசவதாரத்தின் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம். மிகவும் மூர்க்க மனிதராக இந்த அவதாரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனிதராக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். மனிதனாக மாற்றம் அடைந்த பின்பு, மிருகங்களை மூர்க்கதனமாக வேட்டையாடியதை இந்த அவதாரம் குறிக்கிறது.
ராம அவதாரம் – (குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்தல்)
தசவதாரத்தின் ஏழாவது அவதாரமான ராம அவதாரம் இராவணனை அழிப்பதற்காக திருமாலால் எடுக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. மனிதன் குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்து வாழ்ந்தமையை ராம அவதாரம் குறிக்கிறது.
பலராம அவதாரம் –(விவசாயம் செய்யும் மனிதன்)
தசவதாரத்தின் எட்டாவது அவதாரம் பலராமர். கிருஷ்ணனின் அண்ணனாக திருமால் அவதரித்தாக புராணம் கூறுகிறது. பலராமர் கைகளில் ஏர் கலப்பை விவசாயம் செய்யும் மனிதனை குறிக்கிறது.
கிருஷ்ண அவதாரம் – (கால்நடைகளை மேய்க்கும் மனிதன்)
தசவதாரத்தின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். கிருஷ்ணன் கம்சன் எனும் அரக்கனை அழிக்க அவதரி்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணன் ஆடுகளையும், மாடுகளையும் மேய்க்கும் சிறுவனாக இருந்தது கால்நடைகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட மனிதர்களின் பரிணாமத்தினை குறிக்கிறது.
கல்கி அவதாரம் -
தசவதாரத்தின் இறுதி அவதாரம் கல்கியவதாரமாகும். கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரமாக புராணம் கூறுகிறது. ஆயுதங்களும், வாகனமும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருக்கும் மனிதன் மகாசக்தியாக மாறுவதை குறிப்பதாகும்.
மேலைநாட்டு அறிஞர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆய்வு செய்து அறிந்து கொண்ட பரிணாமவியல் கொள்கை இந்து மதத்தின் தசவதாரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெளிவுற எடுத்துரைக்கப்பட்டுள்ளமை வியப்பானதல்லவா?

No comments:

Post a Comment