Friday, October 10, 2014

கண் இமைக்கும் நேரம் -

கண் இமைக்கும் நேரம்



மிகவும் மெனக்கெட்டு நிறைய நேரம் செலவளித்து, தகவல்கள் திரட்டி எடுக்கும் முடிவுகள் தவறாகப் போகிறது. சட்டென்று எடுக்கும் முடிவுகள் ஜெயிக்கிறது.
யோசித்துப் பாருங்களேன். உங்கள் வாழ்க்கையிலேயே கண் இமைக்கும் நேரத்தில் எடுக்கும் முடிவுகள் எல்லாம் பெரிய முடிவுகளாகத் தான் இருந்திருக்கும். ஆனாலும் இன்னமும் நாம் ‘நல்லா ஒரு தடவைக்கு பத்து தடவை யோசிச்சு முடிவு பண்ணுவோம்’ என்றுதான் மற்றவர்களுக்கு அறிவுரை செய்வோம்.
கம்பனியில் எல்லா எக்செல் பக்கங்களுமாய் தகவல் திரட்டி, நிறைய பேர் கூடி, பெரும் செலவு செய்து எடுக்கப்படும் முடிவுகள் பொய்த்துப் போகிறது. இதை “Analysis Paralysis” என்பார்கள். ஆனால் ஒரு பொறி தட்டுவது போல வரும் எண்ணம் சரியான வழியைக் காட்டும்.
தர்க்க சிந்தனையை உள்ளு ணர்வு வெல்லும் ஒரு அற்புத தருணம் அது.
மால்கம் கிளாட்வெல் எழுதிய Blink இதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. மதிப்புரை எழுதுவதற்காக மீண்டும் படித்தது சுக அனுபவம். உளவியலை அறிவியல் பூர்வமாகவும் கலா ரசனையுடனும் எழுதும் கிளாட்வெல் ஒரு அற்புதமான கதைசொல்லி. இதை படிக்கையில் ஒரு சினிமா பார்த்த அனுபவம் கிட்டும். சந்தேகமில்லை.
ஆரம்பமே அதிரடிதான். கலிபோர்னியாவில் உள்ள ‘ஜே. பால் கெட்டி மியூசியம்' பல அரிய கலைப் பொக்கிஷங்கள் கொண்டது. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அரிய சிலையை நல்ல நிலையில் உள்ளதாக விற்க வருகிறார் ஒருவர். பல்வேறு பௌதிக சோதனைகள் நடத்தி அந்த சிலையை வாங்க சம்மதிக்கின்றனர். பத்து மில்லியன் டாலர் விலை பேசப்படுகிறது. இதைப் பார்வையிட்ட பெடெரிகோ ஜெர்ரி எனும் இத்தாலிய கலை ஆர்வலர் இந்த சிலையை பார்த்தவுடன் ஏதோ ஒன்று சரியில்லை என்றார்.
ஜார்ஜ் டெஸ்பினிஸ் ஏதென்ஸ் அருங்காட்சியகத்தின் தலைவர். அவர் அழைக்கப்படுகிறார். பார்த்தவுடனேயே சொல்கிறார் இது போலி என்று. “எனக்கும் சிலைக்கும் இடையில் ஒரு திரை இருந்தது போலத் தோன்றியது!” என்றார். பின் விசாரணையில், இந்த சிலை விற்பனை ஒரு மிகப்பெரிய மோசடி என்று அம்பலமாகிறது.
மற்றவர்கள் மணிக்கணக்கில் பார்த்து கண்டுபிடிக்காததை இவர் எப்படி நொடியில் கண்டுபிடிக்கிறார்? இதுதான் புத்தகத்தின் Pitch !
அடுத்த கதை இன்னமும் சுவாரசியமானது. ஜான் காட்மென் எனும் திருமண சிகிச்சையாளர் பற்றி. திருமணத்தில் சிக்கல் உள்ளவர்களுக்கு Marital Therapy செய்வது இவர் வேலை. அத்தனை செஷன்களையும் வீடியோ பதிவுகள் செய்து ஆராய்ச்சி செய்கிறார்.
இந்த தம்பதி 15 வருடங்கள் கழித்து சேர்ந்து வாழ்வார்களா என்று கேட்டால் அதை முதல் சந்திப்பிலேயே சொல்லலாம் என்கிறார். (இவரிடம் 30 வருட கேஸ் ஹிஸ்டரிகள் உள்ளன.) வசனம் இல்லாமல் ஓட்டிக்காண்பித்து தங்கள் யூகங்களை சொல்லச் சொல்கிறார். முடிவில் சுவாரசியமான முடிவுகள் கிடைக்கிறது.
வசனமில்லாத குறும் படங் களில் சரியாக கணிக்க முடிகிறது. வீடியோவின் நீளம் அதிகமாகும் போதோ, வசனம் சேரும் போதெல்லாம் கணிப்புகள் தவறாகிறது. அதாவது தகவல்கள் அதிகம் கிடைக்க கிடைக்க நாம் குழம்பிப்போகிறோம்.
காட்மென் எப்படி கணிக்கிறார்? அவரைக் கேட்டால் ரொம்ப சுலபம் என்கிறார். விமர்சனம், தற்காப்பு, வெறுப்பு இவை தோன்றும் உடல் மொழியை இருவரில் ஒருவரிடம் தீவிரமாக தென்பட்டாலே போதும். கேஸ் பிழைப்பது கஷ்டம் என்று தெரிந்துவிடும் என்கிறார்.
தகவல்கள் அதிகம் கிடைக் கும்போது அது நம் தர்க்க சிந்தனையை பெருக்கிகொண்டே போகிறது. ஆனால் குறைந்த அளவு (நேரம், தகவல், வாய்ப்பு) உள்ள போது மனம் கூர்மைப்பட்டு சரியான முடிவுகள் எடுக்க வைக்கிறது என்று விளக்குகிறார். Thin Slicing என்கிறார் இதை.
ஓடும் ரயிலில் பழம் விற்பவருக்கு தன் வாடிக்கையாளர் யார் என்று சுலபமாக கண்டுகொள்ள முடிகிறது. ஒரு கூட்டத்தில் யார் யார் ஆட்டோ பிடிப்பார்கள் என்று டிரைவருக்கு தெரிகிறது. ஒரு கூச்சலான பார்ட்டியில் தனக்கான கம்பனி யார் என்பதை கணப்பொழுதில் கண்டுகொள்வார்கள் நம் ரோமியோக்கள். நம் ஆழ்மனக் கிடங்கில் தான் எல்லா வேலையும் நடக்கிறது. ஆழ்மனம் எல்லாவற்றையும் முழுமையாகப் பார்க்கும். புலன்கள் தரும் தகவல் கவனத்தை சிதறடிக்கும். அதனால் தான் குறைந்ததாகக் கிடைக்கும் எல்லாவற்றிலும் உள்ளுணர்வு செயல்பட்டு புத்தாக்கம் நிகழ்கிறது.
கண்களால் கேளுங்கள் என்கிறார் கிளாட்வெல். ஒற்றைப் பார்வை ஆயிரம் அர்த்தங்களை தெரிவிக்கும். பேசும் வார்த்தைகள் அனைத்தும் உங்கள் கவனத்தை சலனப்படுத்துபவை. வாய் பேசும் மொழியை விட உடல் பேசும் மொழி பொய் சொல்லாதது. அகத்தின் அழகும் அசிங்கமும் முகத்தில் தான் தெரியும்.
புத்தகம் முழுவதும் உளவியல் ஆய்வுகளை மேற்கோள்காட்டியே கருத்துக்களை நகர்த்திச் செல்கிறார்.
உங்கள் உள்ளுணர்வு சொல் வது எல்லாமே பலிக்குமா? யோசிக்காமல் முடிவு எடுத்தல் தான் சரியா என்று கேட்டால் சரியில்லை என்பதுதான் பதில். உங்கள் உள்ளுணர்வு புலன்களை வழி நடத்தும். எங்கு நோக்க வேண்டும் என்று கற்றுத்தரும். தேவையில்லாத இடத்திலிருந்து உங்களை தேவையான இடத்துக்கு அழைத்துச்செல்லும்.
நாம் தகவல் வெள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது நம்மை அயர்ச்சி கொள்ள வைக்கிறது. எது தேவை, எது தேவையில்லாதது என்று அறிய முடியாமல் அனைத் தையும் தலைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதனால்தான் துறை சார்ந்தவருக்குத் தெரியாத விஷயம் ஒரு சாமானியனுக்குத் தெரிகிறது. “ராகவன் இன்ஸ் டின்ட்ஸ்” ஞாபகம் இருக்கிறதா? அது நம் எல்லோ ருக்கும் சாத்தியம்.
“கண்டதும் காதல்”- Love at first sight என்பதும் இந்த வகையில் சேர்ந்ததுதான். யோசித்தால்தான் காதலே வந்திருக்காதே!

your happily
www.v4all.org 

No comments:

Post a Comment