அஷ்ட கர்மாக்களை என்னெவென்று பார்க்கு முன் அதனைப் பற்றிய முழுவிளக்கம்
அவசியமாகின்றது , காரணம் ஒரு பயிற்சியின் அல்லது படிப்பின் அவசியமும் ,
காரணமும் , வரலாறும் தெரிந்தால் அதனை கற்றுக்கொள்ள ஆர்வமும் , கற்றுக் கொண்டே
தீரவேண்டும் என்கிற உத்வேகமும் நம்முள் இயல்பாக உருவாகும்.
இப்போது கர்மாக்களை தெரிந்துகொள்ள துவங்குவோம் .
ஒன்று என்பது பிரதமை என்றும்
இரண்டு என்பது துதியை என்றும்
மூன்று என்பது திரிதியை என்றும்
நான்கு என்பது சதுர்த்தி என்றும்
ஐந்து என்பது பஞ்சமி என்றும்
ஆறு என்பது சஷ்டி என்றும்
ஏழு என்பது சப்தமி என்றும்
எட்டு என்பது அஷ்டமி என்றும்
ஒன்பது என்பது நவமி என்றும்
பத்து என்பது தசமி என்றும்
பதினொன்று என்பது ஏகாதசி என்றும்
பனிரெண்டு என்பது துவாதசி என்றும்
பதிமூன்று என்பது திரயோதசி என்றும்
பதினான்கு என்பது சதுர்த்தசி என்றும்
பதினைந்து என்பது அமாவாசை அல்லது பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகின்றது.
பொதுவாகவே அமாவாசை ஆண்களையும் , பௌர்ணமி பெண்களையும் அதிகம் தொடர்பு கொண்டுள்ளதாக அறிகிறோம்.
பௌர்ணமியில் நீர்நிலைகளில் பௌர்ணமியின் (குளுமை)ஆதிக்கம் அதிகம் இருப்பதை எல்லோரும் சாதாரணமாக காணலாம் .
அமாவாசை காலங்களில் பெரும்பாலும் மனஅமைதியற்ற(இறுக்கமான)சூழல் காணப்படுவதுண்டு.
ஆனால் ஒரு சில பூஜைக்குரிய துவக்கத்தினை சிலர் இந்நாளில் (அமாவாசையில்) துவக்குவதுண்டு .
இந்த யோகம் தனை ஆண் பெண் என பாகுபாடின்றி யாரும் பயில முடியும் , இதில் ஆணிலும் விட பெண்கள் மிக விரைவாக முன்னேற்றமும் உயர்நிலையை அடைகின்றார்கள் என்பது அனுபவ உண்மை.
காரணம் பெண்கள் இயல்பாகவே பிராண சக்தியின் வடிவமாக உள்ளதுதான். அதனால் அவர்கள் முயன்றால் போதும், அந்த உயர்நிலை அவர்களை தேடி வந்து அடைந்து விடுகிறது .
சரி கர்மாகளுக்கு வருவோம் .
இந்த கர்மாக்கள் எட்டு என்கிற எண்ணிக்கையில் இருப்பதால் இதனை அஷ்ட கர்மா (எட்டு தொழில்) என்றழைக்கிறோம்.
இவைகள் முழுக்க மனித மனநிலை மேன்மை பெறவே உருவாக்கப்பட்டது . இந்த கர்மாக்களை மிகவும் சிரத்தையாகவும் உள்ளார்ந்த உத்வேகத்தோடும் பயிலுவோர் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்கும் நிலையினை அடைகிறார்கள் என்கிறார் இறைவனார் .
இவ்வளவு சிறப்பினையும் ஒருங்கே பெற்ற இந்த அஷ்டமா சக்திகளின் ஒரு பகுதியான அஷ்ட கர்மாக்கள் என்பது முறையே ,
1. வசியம்
2. மோகனம்
3. உச்சாடனம்
4. ஸ்தம்பனம்
5. ஆகர்ஷனம்
6. வித்துவேடனம்
7. பேதனம்
8. மாரணம் என்பது ஆகும்
இந்த அஷ்ட கர்மாக்களின் சக்தி மிகுந்த செயல்பாடுகள் என்னென்று பார்ப்போம் .
1. வசியம் என்றால், ஆகர்ஷனம் , மோகனம் , வசியம் மூன்றும் ஒன்றுபோல தோன்றும். ஆனால் வேறு வேறாகும்.
ஆகர்ஷனம் தன்னை நோக்கி இழுப்பது, மோகனம் மயங்கச் செய்வது, வசியம் தனது வசீகரத்தன்மையில் , தான் சொன்னதை சொல்லி, செய்ததை செய்யும் தன்மையுள்ளவர்களாக மற்றவர்களை மாற்றுகிறது – மேலும் வசியம் செய்தவரின் எண்ணத்தை மீறி வசியம் செய்யப்பட்டவர் எதுவுமே செய்ய முடியாமல் போகின்றது.
2. மோகனம் என்றால், மயக்குவது . தன்னிடம் மயங்கச் செய்வது , தான் சொல்வதை மற்றவர்களை கேட்க செய்வது.
3. உச்சாடனம் என்றால், தனது மந்த்ர சக்தியால் தன்னுடைய நோய் , கடன் , பேய், பிசாசு , பூதம் , எதிரிகள் போன்ற தீய சக்திகளை மிரட்டி தன்னிடம் நெருங்க விடாமல் துரத்துவதாகும் .
4. ஸ்தம்பனம் என்றால், ஒன்றைக் கட்டுப்படுத்தி நிற்கச் செய்து இதில் பாய்ந்து வரும் அம்பைக்கூட அப்படியே நிறுத்தலாம் என்கிறார். காற்றை , நீரை , ஸ்தம்பிக்க செய்து அதன் மீது அமரலாம் , நீர்த்தன்மை உடைய பொருட்களை கட்டியாக கூட உறையச் செய்யலாமாம்.
5. ஆகர்ஷனம் என்றால், தன்னை நோக்கி இழுத்துக் கொள்ளுதல். மனிதர்கள் , மிருகங்கள், பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் தன்பால் இழுக்கலாம். ஒருவர் சாதகனுக்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் எந்தவிதமான பொருள்களையும் , அவரிடம் அகப்படாமல் தன்னை நோக்கி வரச் செய்து தன்னை காத்துக்கொள்ளலாம்.
6. வித்துவேடனம் என்றால், ஒருவரை ஒருவர் வெறுக்கச் செய்வது , பகைமை உண்டாக்குவது , எது தனக்கு வேண்டாததோ அதனை , தன்னை விட்டு விலகி ஓடச் செய்வது. ( தன்னிடமுள்ள தீய எண்ணங்கள் , தீய பழக்கங்கள் போன்றவை )
7. பேதனம் என்றால், வேறுபடுத்துவது , பிரிப்பது . (நண்பர்கள் , கணவன் மனைவி , தாய் குழந்தையைப் பிரிப்பது போன்ற பாதகமான செயல்கள் நம்மை இம்மையிலும் , மறுமையிலும் தீராத பாபம் தரும்.) நம்முடைய அறியாமை, நோய், மற்றவர்களுக்கு உள்ள நோய் முதலியவைகளை வேறுபடுத்தவும், ஊரை மிரட்டும் கொள்ளையர்கள் போன்ற கூட்டத்தினரை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.
8. மாரணம் என்றால், அழிப்பது, கொல்வது . மனிதர்கள் , தனக்குள்ளும் , வெளியிலும் இருக்கும் தீய சக்திகளை அழிப்பதற்காகவே ஏற்ப்பட்டது .
அஷ்டகர்மாக்களை ஒருவர் தனக்காகவும் , பிறருக்காகவும் செய்வதால் இவைகள் கர்மா அதாவது தொழில் எனப்படுகிறது.
இவைகளால் யாருக்கு என்ன லாபம் ? என்று கேட்போர் உண்டு .
இதில் லாபம் இல்லாமல் இல்லை . ஆனால் இந்த லாபம் என்பது பணம் தரும் லாபமல்ல , மன அமைதி , மன விகாரம் நீக்கல், ஆழ் மன நிம்மதி போன்ற உண்மை நிலை உணர்தல் தொடர்பான லாபங்கள்.
எத்தனை கோடிகள் கொடுத்தாலும் கிடைக்க முடியாத உன்னத நிலை .
யோசித்துப் பாருங்கள்.
வெற்று உடம்பாக , கையில் சல்லிக் காசின்றி , ஒரு அனாதையைபோல் பிறந்த மனிதன்,
ஒருநாள் ஒரு உடை என்று அணிந்து கொண்டே வந்தால் முதலில் அணிந்த உடையை மீண்டும் அணிய மூன்றாண்டாகும் என்ற நிலை கண்ட போதும் ,
சல்லிகாசின்றி பூமிக்கு வந்த மனிதன் தனது கொள்ளுப் பேரனின் கொள்ளுப்பேரன் வரைக்கும் காசு ,பணம் ,சொத்து சேர்த்த நிலை கண்டபோதும் ,
தன்னந் தனியாளாக பிறந்தவன் மகா பெரிய குடும்பஸ்தனாக மாறி வாழ்வில் பல விதத்திலும் செல்வாக்கு , சொல்வாக்கு , ஆள் அம்பு சேனை என பெரு வாழ்வு கண்டபோதும் –
- சுத்தமாக நிம்மதியை தொலைத்தவனாக , அமைதியை ஆழக்குழியில் தானே புதைத்தவனாக , மாபெரும் குடும்பத்தில் சுற்றங்கள் புடைசூழ தான் நின்ற போதும் தனி ஆளாக , தனி மரமாக , தனிமைபடுத்தப்பட்டு நிற்பது போன்ற மன நிலைப்பாடு கொண்டவர்களை எங்கும் பார்க்கும் நிலை இன்று வந்து விட்டது .
யாரைப் பார்த்தாலும் அவர்களுக்கு ஒன்று அல்லது பலவான மனக்குறைகளும் நிவர்த்தி செய்யமுடியுமா , முடியாதா என்ற பயத்தோடும் கூடிய வாழ்வினை தன்னகத்தே கொண்டே உலா வருகின்றார்கள்.
என்னவென்றே குறிப்பிட முடியாத இறுக்கமான முகத்தோடு வாழவேண்டுமே என்கிற காரணத்திற்காகவெ வாழ்பவர்கள் போல இன்றைய தலைமுறையினர் வாழ்கின்றனரே இது என்ன அவலமான நிலை ?
வாழ்வென்பது ஆனந்த மயமானதல்லவா ! அழுது வடிவதல்லவே !!
கிடைததற்கறிய மனிதப் பிறவியப்பா இது என்று சொன்னால் “ அய்யா என் நிலைமை உங்களுக்கில்ல, அதனால சொல்றீங்க “ என்று வாழ்வை ஏதோ ஒரு வழியில் தொலைத்தவர்கள் புலம்புவதை தினமும் காண்கிறோம்.
இதே வாழ்வை நமது மூதாதையர் வாழ்ந்த போது இப்படி இருந்ததில்லையே – ஏன் நமது தந்தையே நம்மைப் போல இப்படி மந்திரித்த ஆடு போல இருக்கவில்லையே!
நாம் மட்டும் ஏன் இப்படி ஆனோம் ?
ஏதோ மந்திரத்தில் கட்டுண்டவர்களாகவே இன்றைய மனிதர்களின் அன்றாட வாழ்வு இயந்திரத்தனமாக அமைந்துள்ளதை எல்லோரும் உணர்கிறோம் .
அதற்கு இன்று முகநூலிலும் , தனித்தனி பிளாக்கிலும் வெளியாகும் மனக் குமுறல்களும், ஒன்றுமில்லாத மிக சாதாரண விஷயத்திற்கு ஏகப்பட்ட Likes வருவதும் சாட்சியாகும்.
உதாரணமாக : ஒரு கடிதமும் அதற்கு like ம் பாருங்கள்
Working on two important works. So for the next 4,5 days i would'nt be in touch with you all. Sorry. Shall come back very soon. Bye for now. Will miss u all.
Like · · Share · 21 hours ago ·
- 103 people like this.
ஒரு நான்கு ஐந்து நாள் நான் வரமாட்டேன் என்கிற சாதாரண கடிதத்திற்கு 103 like .,
இப்படித்தான் போகின்றது Face Book
மேலும் பல புத்தகங்களில் உள்ளதை அப்படியே முகநூலில் காப்பி செய்து விடுவதும் நடக்கின்றது .
எதை எதையோ படித்து தனக்கே எல்லாமும் தெரியும் என்கிற மனோபாவமும் இன்று மலையென வளர்ந்துள்ளதும் காரணமாகும்.
ஒருமனிதன் , தனது வாழ்வின் அல்லது பொதுவாக மனித வாழ்வின் உண்மையான அதிசூட்சுமத்தினை உணர்ந்திருந்தால் மனம் வேண்டாத கவலையை தன்னுள் வைத்திருக்காது.
யோகம் பயின்று இங்கே மறைந்து எங்கோ எழுவது போன்ற சித்து விளையாட்டு எல்லாம் வேண்டாம் , ஆனால் மன நிம்மதியை , வாழ்வின் உண்மையை ஒவ்வொருவரும் புரிந்து கொண்டாலே போதும் ,
அதற்கான சரியான வழி யோகம் பயில்வதுதான்.
ஒரு வீட்டில் ஒருவர் அல்லது இருவர் யோகம் தெரிந்திருந்தால் கூட அந்த வீட்டில் கண்டிப்பாக அமைதியும் , ஆனந்தமும் நியாயமான முறையில் கிடைத்துவிடும் .
நியாயமற்ற வழியில் வரும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிலைப்பதில்லை , நியாயமற்ற முறையில் வருகின்ற பணமும் , வைத்திய செலவுக்குத் தான் போகும் .
எந்த விதத்தில் பணம் போனாலும் அது ஏதாவது ஒரு வழியில் திரும்ப கிடைக்கும் , ஆனால் வைத்தியசெலவு செய்த பணம் எந்நாளும் திரும்பாது அல்லவா?
எல்லோரும் யோகம் பயிலத் துவங்கினால் வாழ்வில் நாம் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டோம் , நமக்கும் யாரும் தீங்கெண்ணமாட்டார்கள்.
சரியாக விதியை நாமே வகுத்து வாழலாம் . நமது சந்ததியினர் நலமும் வளமும் நிரந்தரமாக பெறுவார்கள் , செழிப்படைவார்கள் .
அஷ்டகர்மாக்களில் ஏதேனும் ஒன்றை கை வரப் பெற்றாலே போதும். நமது வாழ்வின் நிலை மிக அருமையாக அமைந்து விடும்.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தை துல்லியமாக ஆய்வதன் மூலம் அவருக்கு இப்பிறப்பில் அஷ்ட கர்மாக்கள் கைகூடி வருமா, வரும் அஷ்ட கர்மாக்களால் அவருக்கு நன்மைகள் உண்டாகுமா , உண்டாகாதா எனவும் அறியலாம்.
இவைகள் எல்லாம் உலக மக்களின் நன்மைக்காகவே உருவாக்கி அருளப்பட்டவை யாகும், மதங்களுக்கப்பாற்பட்டதாகும் , எல்லா மதங்களும் மனிதன் தனக்காக தோற்றுவித்தவைதான். தானே எந்த மதமும் தோன்றியதில்லை , நாம் தோற்றுவித்த ஒரு மதத்திற்கு நாமே அடிமையாகும் நிலையை நாம் யோசிப்பதே இல்லையே?ஏன் ?
பரந்து இருக்கும் இந்த உலகின் ஒவ்வொரு மனிதனுக்கும் வேதம் என்பது முழு உரிமையானதாகும் . இந்த வேதம் , யோகம் , த்யானம் , தவம் , மந்த்ரங்கள் எவற்றிற்கும் தனியான ஒரு மதம் உரிமை கொண்டாட முடியாததாகும் . அது எந்த மதமாக இருந்தாலும் சரியே.
வேதம் என்பதே உலக பொது மறையாகும் உலக பொதுமறை என்றால் உலகமக்கள் அனைவருக்கும் உரிமையானது என்று பொருள்.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்போம் , ஆனால் சிவபெருமானையே இந்து கடவுளாகத்தான் பார்க்கின்றோம். எந்நாட்டவர்க்கும் இறைவன் இந்துக்களாகிய நமக்கு மட்டும் உரிமையானவராக எப்படி ஆக முடியும் ?
நாம் மனிதர்கள் அவ்வளவுதான் . அதற்கு மேல் மதம் , ஜாதி என்பதெல்லாம் ஒரு மாயப் போர்வை , இதனை உணர்ந்தாலே போதும் .
நான் ஒன்றை உண்டு சொல்வதால் ஒன்று உண்டு என்றோ – நான் ஒன்றை இல்லையென்றால் அந்த ஒன்று இல்லாமல் போவதோ இல்லை , யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்டென்பது என்றும் உண்டு.
உதாரணமாக ஒரு வஸ்து (பொருள்) இருக்கின்றது என்றால் அதனை உருவாக்கியவர் ஒருவர் உண்டு தானே , அவர் எனது கண்களுக்கு எதிரே தெரியவில்லை என்பதனால் அதனை உருவாக்கியவர் இல்லை என்றாகி விடுமா ?
ஒவ்வொன்றையும் உருவாக்கியரை பார்த்தால்தான் ஒப்புக்கொள்வேன் என்பது எந்த விதமான ஞானம் ?
மனிதன் உருவாக்கிடும் பொருள்களுக்கு முடிவு தேதி (Expiri Date) உண்டு அல்லவா , அதுபோலவே இறைவன் அல்லது (இயற்கை) உருவாக்கிய பொருட்களுக்கும், முடிவு தேதி உண்டு , ஆனால் எப்போது முடிவு என்பது தெரியாது ( ரகசியம் ஒன்றுமில்லை தெரிந்தால் அதற்கு முன்னரே மனிதனுக்கு முடிவு வந்துவிடும் )
அப்படி உருவாக்கிய அந்த சிருஷ்டி கர்த்தாவை நான் சிவன் என்கிறேன் , மற்றவர்கள் வேறு பெயரில் அழைக்கிறார்கள் அவ்வளவுதான் .
நான் சிவன் என்றழைக்க தெரிந்து கொண்டதுபோல் , அவர்கள் வேறு பெயரில் அழைக்க தெரிந்திருக்கின்றார்கள் . உருவாக்கியவரை எண்ணிக் கொண்டு எப்படி அழைத்தாலும் அது அந்த உருவாக்கியவரை போய்ச் சேரும் என்பதுதானே உண்மை.
நமது குழந்தைக்கு நாம் ஒரு பெயர் வைத்திருப்போம் , ஆனால் நமது நண்பர் மனதில் யாரோ ஏற்படுத்திய அன்பு அலைகளின் காரணத்தினால் அவர், அவரது நண்பரின் பெயரை நமது குழந்தைக்கு சூட்டி அழைப்பார் , அதில் அவருக்கு திருப்தி, சந்தோஷம்.
அவர் அப்படி அழைப்பதால் நமது குழந்தையின் பெயர் மாறிவிடுமா என்ன ?
உலக மக்கள் அனைவருக்கும் ஒருவரே காரணமும் , கதியும் ஆனவர்.
அந்த ஒருவர் யாராக இருந்ருந்தால் என்ன ? நமக்கு தேவை, நாம் நம்மை சரணடைய செய்ய திருவடிகள் வேண்டும் , அதற்கு எந்த திருநாமம் இருந்தால் என்ன ?
யாரோ ஏதோ சொன்னால் சொல்லட்டுமே ! அவர்கள் உண்மையை உணரும் போது அவர்களுக்கே தெரியும், என்பதே சரியான பதில் .
ஆனால் இதே பதிலை மற்றவர்கள் நம்மைப் பார்த்து சொன்னால் நமக்கு கோபம் வருகிறது. ஏன் ?
அதற்காக நாம் ஏன் கோபம் வருத்தம் கொள்ள வேண்டும் ? நாம் இதனை நம்புகிறோம் அவர்கள் அதனை நம்புகின்றார்கள் , நாம் எந்த அளவுக்கு இதனை முழுமனதாக நம்புகிறோமோ , அப்படித்தான் மற்றவர்களும் அதனை நம்புகிறார்கள் அவ்வளவுதான்.
இந்த நியாயமான , உண்மையான , சத்யமான , வாழ்வின் பேருண்மையை தெளிவாக உணர மனிதர்கள் யோகம் பயில்வது அவசிய தேவையாகின்றது – யோகப்பயிற்சி நம்மை சேதப்படுத்தாமல் நம்முள் ஒளி ஏற்றும் , அற்புத உயர்நிலையை நம்முள் ஏற்படுத்தி நமக்கு என்றும் துணை நிற்கும் .
இந்த அஷ்ட கர்மாவுக்கும் உரிய மூலிகைகள் என்னவென்று அகஸ்தியர் கூறுவதை அடுத்த பதிவினில் பார்ப்போம்.
யோகம் பயில்வோம் , யோகமாக வாழ்வோம் .
வாழுங்கள் வளமோடு , வாழும் நாளெல்லாம்.
No comments:
Post a Comment