Tuesday, November 18, 2014

உலகமே வியந்து பார்க்கும் சில சாதனையாளர்களின் ஆசிரியர்களைப் பற்றி ஓரிரு வரிகள்...

மாதா, பிதா, குரு என்று சரியாகவே சொல்லி இருக்கி றார்கள். உலகமே வியந்து பார்க்கும் பல சாதனையாளர் உருவாவதில் தாய்-தந்தைக்கு அடுத்து, அதிகம் பங்கெடுப் பவர்கள் ஆசிரியர்களே! அப்படிப்பட்ட சில சாதனையாளர்களின் ஆசிரியர்களைப் பற்றி ஓரிரு வரிகள்...
விரல்விட்டு எண்ணிவிடுகிற அளவுக்கு மிகக் குறைந்த படங்களே நடித்தாலும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர், குங்ஃபூ மன்னன் புரூஸ் லீ. அவருக்கு குங்ஃபூ கலையை கற்றுத்தந்த ஆசிரியர் யிப் மேன் (yip man)இரண்டாம் உலகப் போரின்போது, சீனாவை ஜப்பான் தனது ஆதிக்கத்தில் வைத்திருந்தது. அப்போது, ஒரு சுரங்கத்தில் வேலை செய்தவாறு பலருக்கும் குங்ஃபூ கலையைக் கற்றுத்தந்தார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து, 'தி ரியல் பைட்டர்' திரைப்படம் வெளியாகி உள்ளது.
புரூஸ் லீ அதிரடி மன்னன் என்றால், அகிம்சையால் உலகையே வியக்க வைத்த மகாத்மா காந்தி, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது தலைமை ஆசிரியராக இருந்தவர் தோராப்ஜி எதுல்ஜி ஜிமி. மாணவர்களுக்கு படிப்புடன் உடல் நலம் பேணுதலும் முக்கியம் என்றவர், தேகப் பயிற்சி மற்றும் விளையாட்டுகளை சொல்லித் தந்தார். தவிர, காந்தி தமது மானசீக குருவாக குறிப்பிடுவது கோபால கிருஷ்ண கோகலே.
காந்தியின் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து போராடிய ஜவஹர்லால் நேருவுக்கு, வீட்டுக்கே வந்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். அவர்களில் ஒருவர், பெர்டினாண்ட் டி புரூக்ஸ் என்ற ஐரோப்பியர். பாடப் புத்தகங்களோடு உலகப் புத்தகங்களையும் கொடுத்தார். 'அற்புத உலகில் ஆலிஸ்' உட்பட உலக இலக்கியங்கள் பலவற்றையும் படிக்க வைத்தார்.
நேருவின் மதிப்பிற்குரிய தமிழகத் தலைவர் காமராஜர். இவரை படிக்காத மேதை என்பர். ஆனால், முதலில் ஒரு திண்ணைப் பள்ளிக்குச் சென்றார். அதன் ஆசிரியர் வேலாயுதம். அவருக்கு கால் சற்று ஊனம் என்பதால் நொண்டி வாத்தியார் என்பார்கள். பிறகு, ஏனாதி நாயனார் வித்யா கலாசாலாவில் சேர்ந்தார். அங்கு முருகையா என்ற ஆசிரியர், 'ஆனா ஆவன்னா' கற்றுத் தந்தார். 12 வயதி லேயே படிப்பை நிறுத்திவிட்டார் காமராஜர்.
நவீன அறிவியலின் தந்தை எனப்படும் கலிலியோ, இத்தாலியில் உள்ள பைசா பல்கலைக்கழகத்தில் படித்தபோது, அவரது திறமையை ஊக்கப்படுத்தியவர், ஆஸ்டிலோ ரிக்கி (ostilio ricci) என்ற கணித மேதை. வானவியல் பற்றி தத்துவ மேதை அரிஸ்டாட்டில் சொன்ன பல கருத்துகளைத் தவறு என்று நிரூபித்தவர் கலிலியோ. அந்த தத்துவமேதை அரிஸ்டாட்டிலின் ஆசிரியர், பிளாட்டோ. அந்த பிளாட்டோவின் ஆசிரியர், சாக்ரடீஸ்.
அப்துல் கலாம் போலவே வித்தியாசமான தலைமுடி, கவர்ந்திழுக்கும் தோற்றம் கொண்டவர் ஐன்ஸ்டீன். குறும்பும் புத்திசாலித்தனமும் நிரம்பிய இவரின் கேள்விகளுக்கு, பதில் சொல்ல முடியாமல் பல ஆசிரியர்கள் திணறியதுண்டு. இவருக்கு விஞ்ஞானத்திலும் தத்துவத்திலும் தூண்டுகோலாக இருந்த ஆசிரியர், மாக்ஸ் டல்மத் (max talmud) என்பவர்.
விஞ்ஞானி என்றதும் உடனே நமது நினைவுக்கு வருபவர் அப்துல் கலாம். 'கனவு காணுங்கள்' என்று சொல்லி, எல்லோரின் நினைவிலும் இடம் பிடித்திருப்பவர். இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் படித்தபோது...இவரால் மறக்க முடியாத ஆசிரியர் பெயர் அய்யாதுரை சாலமன்.
தாழ்த்தப்பட்ட இனம் என்று சொல்லி, பல்வேறு அவமானங்களை சந்தித்தவர் சட்டமேதை அம்பேத்கர். படிப்பின் மூலம் உயர்ந்து, ஜெயிக்கும் லட்சியத்துடன் வில்சன் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது அவரை ஊக்கப்படுத்தியவர், தலைமை ஆசிரியர் கிருஷ்ண அர்ச்சுன ராவ் கெலுஸ்கர்.
கிரிக்கெட்டின் மறுபெயர் சச்சின் என்றால் அது மிகையல்ல. அந்த மாஸ்டர் பிளாஸ்டரை உருவாக்கிய ஆசிரியர், ராமாகாந்த் அச்ரேகர். இவரிடம் பயிற்சி பெறுவதே பெருமையான விஷயம் என்று பலரும் நினைப்பார்கள். சச்சினுக்கு இன்னொரு ஆசிரியரும் உண்டு. ''மூன்று வயதில் என் வீட்டில் லஷ்மி பாய் என்ற தாதி (வேலைக்கார பாட்டி) என்னோடு சேர்ந்து விளையாடுவார். எனக்கு பந்து வீசுவார். என்னைப் பொறுத்தவரை அவரே கிரிக்கெட்டில் என் முதல் ஆசிரியர்'' என்பார் சச்சின்.
சச்சினுக்கு அடுத்து, கிரிக்கெட்டில் இன்று எல்லோர் மனதிலும் இடம்பிடித்து இருப்பவர் டோனி. பள்ளி நாட்களில் கால் பந்தாட்டத்தில் கோல் கீப்பராக இருந்த இவரை, முதல் முதலாக கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராகக் கொண்டு வந்தவர், கே.ஆர்.பானர்ஜி என்ற உடற்பயிற்சி ஆசிரியர். தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவும் ஊக்கப்படுத்தினார்.
சில பிரபலங்களுக்கு அவர்களது தாயும் தந்தையுமே ஆசிரியர் நிலையில் இருந்ததுண்டு. அவர் களில் ஒருவர், உலகம் வணங்கும் மனித தெய்வம் அன்னை தெரசா. ஆரம்பத்தில் வசதியாக இருந்த குடும்பம். தந்தை திடீரென மறைய, வறுமை சூழ்ந்தது. வசதியாக இருந்த போதும் சரி, வறுமையில் இருந்தபோதும் சரி, தெரசாவின் தாய் ட்ரானா ஃபைல் பெர்னாய், பசி, துயரம் என்று வந்தவர்களுக்கு தவறாமல் உதவி களைச் செய்வார். தன் குழந்தை இடமும் சேவையின் மகத்துவத்தைப் போதித்த ஆசிரியர்.
சிரிப்பு என்றால் சார்லி சாப்ளின். இவரது தாய் ஹென்னா சிறந்த மேடைப் பாடகி. கணவரை விட்டுப் பிரிந்து, வறுமையில் மகனை வளர்த்தார். பாடல்கள், கதைகளை சாப்ளினுக்கு சொல்வார். சிறுவயதில் தாய் சொன்ன கதைகளே... பிறகு சில மாற்றங்களுடன் 'தி கிட், மாடர்ன் டைம்ஸ், சிட்டி லைட்ஸ்' போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களாக வந்தன. அதனால், ஹென்னாவை கதைகளின் ஆசிரியர் எனலாம்.
சுதந்திரப் போராட்டத்தில் காந்தி மிதவாதி என்றால், பாலகங்காதர திலகர் தீவிரவாதி. இவரது தந்தை கங்காதர ராமச்சந்திர திலகர். இவர், மகனுக்கு வடமொழி மற்றும் மராத்திப் புத்தகங்களை வாசித்துக் காட்டுவார். தினமும் ஒரு சுலோகம் கற்றுத் தருவார். அடுத்த நாள் அதை தவறின்றிச் சொன்னால், ஒரு காசு பரிசாகத் தருவார். 11 வயதில் திலகர் பள்ளிக்குச் செல்வ தற்குள் நிறைய கற்றிருந்தார்.
வடக்கே ஒரு ராமச்சந்திர திலகர் என்றால், தெற்கே ஒரு சின்னசாமி. இவரும் தனது மகனை 11 வயதில் தான் பள்ளியில் சேர்த்தார். அதற்கு முன்பே கம்பர், தாயுமானவர், திருவள்ளுவரின் புத்தகங் களை மகனுக்குக் கற்றுத் தந்தார். அதன் மூலம் உருவானார் ஒரு புதுமைக் கவிஞர்... நவயுகக் கவிஞர். அவர்தான் சுப்ரமணிய பாரதியார்!

No comments:

Post a Comment