2002 ம் ஆண்டு. அகழ் வாராய்ச்சி நிபுணர்கள் சீனாவின் மஞ்சள் நதிக் கரையில் ஒரு மண் பாத்திரத்தைக் கண்டுபிடித்தார்கள். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட பாத்திரம். அதில், தினைமாவால் செய்யப்பட்ட நூடில்ஸ் இருந்தது.

சீன நூடில்ஸை, உலக உணவாக்கியவர்கள் நெஸ்லே நிறுவனத்தினர். இவர்களுடைய மாகி நூடில்ஸ்அதிக விற்பனையாவது எந்த நாட்டில் தெரியுமா? இந்தியாவில்! இட்லி, தோசை, பொங்கல், ரொட்டி, பரோட்டா சாப்பிடும் நாம் நூடில்ஸ் ரசிகர்களானது எப்படி?

வரலாறு

இதற்கு நாம் மாகி நூடில்ஸ் வரலாறு தெரிந்துகொள்ளவேண்டும், பல வருடங்கள் பின்னோக்கிப் போகவேண்டும். 1872. ஸ்விட்சர்லாந்து நாட்டில் தொழிற்புரட்சி வந்தது. தொழிலாளிகள் தட்டுப்பாடு. அதுவரை, குடும்பத் தலைவிகளாக மட்டுமே இருந்த ஏராளமான பெண்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வந்தார்கள். இவர்களுக்குச் சமையல் செய்ய நேரம் கிடைக்கவில்லை. ஆரோக்கியமான உணவு இல்லாததால், இந்தப் பெண்கள், இவர்கள் குடும்பம் ஆகியோரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.
டாக்டர்ஷூலர் (Doctor Schuler) என்னும் சமூக ஆர்வலர் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தார். புரதம் கலந்த உணவுகள் மக்களுக்குப் பயன்தரும் என்று கண்டுபிடித்தார். அசைவ உணவுகள் செரிப்பது சிரமம். ஆகவே, சைவப் புரத உணவுப் பொருட்களில் கவனம் காட்டினார். பட்டாணி, அவரை ஆகிய காய்கறிகளை உலரவைத்துச் சாப்பிட்டால், தேவையான புரத சக்தி கிடைக்கும் என்று கண்டுபிடித்தார்.
ஜூலியஸ் மாகி ஸ்விட்சர்லாந்தில் மாவரைக்கும் தொழிற்சாலை நடத்திவந்தார். இவர், டாக்டர் ஷூலரின் கண்டுபிடிப்பின் அடிப்படையில், பட்டாணி, அவரைக் காய்களை உலரவைத்து மாவாக்கும் எந்திரங்களை வடிவமைத்தார். அது சரி, வேலை பார்க்கும் பெண்களுக்கு இந்த மாவினால் ரொட்டி போன்ற உணவுகள் சமைப்பதற்கான நேரம் இல்லையே? என்ன செய்யலாம்? ஜூலியஸ் மாகி இந்த மாவினால், நூடில்ஸ் தயாரித்தார். இவற்றைப் பாக்கெட்டிலிருந்து வெளியே எடுக்கவேண்டும், வெந்நீரில் இரண்டு நிமிடங்கள் போடவேண்டும். சாப்பாடு தயார். அதிவேகமாக ரெடியாகும் ஆரோக்கிய உணவு. மாகி நூடில்ஸ் என்று ஜூலியஸ் மாகி தன் பெயரையே வைத்தார்.

ஆசிய நாடுகளில் பிரபலம்

மாகி நூடில்ஸ் விரைவில் பிரபல உணவானது. 1947 இல் நெஸ்லே கம்பெனி, ஜுலியஸ் மாகியின் கம்பெனியை விலைக்கு வாங்கியது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் மாகி அன்றாட உணவானது.
1980 காலகட்டத்தில், இந்தியாவிலும், ஏராளமான பெண்கள் வேலைக்கு வரத் தொடங்கினார்கள். கூட்டுக் குடும்பங்கள் என்ற நிலை மாறி தனிக் குடித்தனங்கள் தொடங்கின. பெண்களுக்குச் சமையல், வீட்டுப் பராமரிப்பு ஆகியவற்றுக்குத் தேவையான நேரம் கிடைக்கவில்லை.
1872 இல் ஸ்விட்சர்லாந்தில் இருந்த அதே சூழ்நிலை இந்தியாவில். 1982 இல். இந்தியாவிலும் மாகி நூடில்ஸ் அறிமுகம் செய்ய நெஸ்லே முடிவு செய்தார்கள். ஆனால், இந்தியாவில் சில விசேஷப் பிரச்சனைகள். உணவு விஷயங்களில், நாம் சோதனைகள் செய்துபார்க்க விரும்பாதவர்கள்.
நம் உணவுப் பழக்கங்கள் என்ன?
தென்னிந்தியாவில், காலை உணவு இட்லி, வடை, தோசை, பொங்கல். ஒரு சில வீடுகளில் பிரெட். மதியமும், இரவும் ரசம், சாம்பார், பொரியல் அல்லது கூட்டு, மோர், அரிசிச் சாதம். மாலை நேரத்தில் முறுக்கு, பக்கோடா, பிஸ்கெட் போன்ற சிற்றுண்டிகள். (அசைவம் சாப்பிடுவோர், காய்கறிகளுக்குப் பதிலாக மீன், சிக்கன், மட்டன் கறிகள்.)
வட இந்தியாவில், காலை உணவு அவல் உப்புமா, பரோட்டா. ஒரு சில வீடுகளில் பிரெட். மதியமும், இரவும், சப்பாத்தி / ரொட்டி / பரோட்டா, காய்கறி அல்லது அசைவக் கறி. மாலை நேரத்தில் சமோஸா, பிஸ்கெட் போன்ற சிற்றுண்டிகள்.

இந்தியாவில் மாலை டிபன்

பிற நாடுகளில் நூடில்ஸ் மதிய அல்லது இரவு உணவாக இருந்தது. ஆனால், அரிசிச் சாதமும், சப்பாத்தியும் சாப்பிட்டுப் பழகிய இந்திய மக்கள் நூடில்ஸை மதிய அல்லது இரவு உணவாக ஏற்கத் தயங்குவார்கள் என்று நெஸ்லே மார்க்கெட்டிங் நிபுணர்கள் கணித்தார்கள். மாலை நேரச் சிற்றுண்டியாகப் பொசிஷனிங் செய்ய முடிவெடுத்தார்கள்.
வடை, போண்டா, பஜ்ஜி, சமோஸா, பிஸ்கெட் போன்ற ஐட்டங்கள் மாலைநேரச் சிற்றுண்டிகளாக இருந்தன. முதல் நான்கும் எண்ணெயில் செய்த பதார்த்தங்கள். இவை ஆரோக்கியமானவையல்ல என்னும் கருத்து மக்களுக்கு இருந்தது. இவற்றைத் தயாரிக்கவும் நேரம் பிடிக்கும். பிஸ்கெட் ஆரோக்கியமானது. ஆனால், தினமும் கடையிலிருந்து பிஸ்கெட் வாங்கிச் சாப்பிடுவதிலும், குடும்பத்தாருக்குத் தருவதிலும், தாய்மார்களுக்கு ஒரு குற்ற உணர்வு இருந்தது.
குடும்பத்துக்கும், குறிப்பாகக் குழந்தைகளுக்கும் உணவு தயாரித்துக் கொடுப்பது அம்மாவின் கடமை. அடிக்கடி பிஸ்கெட் மட்டுமே தந்தால், அந்தக் கடமையிலிருந்து தவறுவதாக நினைத்தார்கள்.
இதற்கு என்ன செய்யலாம்? நெஸ்லே கம்பெனி, தக்காளி, மசாலா, சிக்கன் ஆகிய சுவை தரும் பொருட்களை நூடில்ஸோடு தனிப் பாக்கெட்களில் போட்டார்கள். இவற்றோடு, தாய்மார்கள் தாங்கள் விரும்பும் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளலாம். குறைந்த நேரத்தில் (இரண்டே நிமிடங்களில்) பெண்கள் அவர்களே தயாரிக்கும் சிற்றுண்டி, என்னும் கருத்தை வலியுறுத்த, மாகி டூ மினிட் நூடில்ஸ் என்னும் பெயர் வைக்கப்பட்டது.
அதாவது, அம்மாக்கள் கண்ணோட்டத்தில் இப்போது மாகி நூடில்ஸ் ரெடிமேட் உணவல்ல, நூடில்ஸை வெந்நீரில் போட்டு, தேவையான அளவு சுவைப் பொருளும், காய்கறிகளும் சேர்த்து, அவர்கள் தயாரிக்கும் உணவு. அதாவது, குற்ற உணர்வு போச்!

குழந்தைகளுக்கு பிடித்தது

இப்போது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. பெண்களைவிட அதிகமாக, குழந்தைகளுக்கு நூடில்ஸ் சுவை பிடித்திருந்தது. ஸ்பூன் அல்லது போர்க்கில் நூடுல்ஸ் இழைகளைக் குத்தி எடுத்து வாயால் உறிஞ்சிச் சாப்பிடும் அனுபவம் அவர்களுக்கு ஒரு விளையாட்டு ஆனது. சின்னக் குழந்தைகளைச் சாப்பிடவைப்பது சிரமமான காரியம். அம்மாக்களின் இந்தச் சிரமத்தை மாகி நூடில்ஸ் கணிசமாகக் குறைத்தது.
குழந்தைகள் தந்த அமோக வரவேற்பைப் பார்த்த நெஸ்லே, தன் பொசிஷனிங்கை மாற்றினார்கள். இப்போது முக்கிய குறி, குழந்தைகள், அடுத்து அவர்களின் அம்மாக்கள். இரு சாராரையும் கவரும்படி விளம்பரங்கள் வரத் தொடங்கின.
உதாரணமாக அந்த நாள் டி.வி. விளம்பரம் ஒன்று:
இரண்டு குழந்தைகள் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வருகிறார்கள்.
“அம்மா, பசிக்கிறது.”
அம்மா சொல்கிறார், ”இரண்டே நிமிஷம்.”
மாகி நூடில்ஸ் வருகிறது. குழந்தைகள் சந்தோஷமாக ரசித்துச் சாப்பிடுகிறார்கள், விளையாடப் போகிறார்கள்.
Fast to cook. Good to eat (வேகமாய்ச் சமைக்க, சுவையாகச் சாப்பிட) என்னும் வரிகள் ஓடுகின்றன. குழந்தைகள், அம்மாக்கள் ஆகிய இருவர் மனங்களிலும், “நச்” என்று பதிகிறது.
Maggie Noodles Old Indian Ads அல்லது Old TV Ad India - Maggie Noodles என்று You Tube இல் click செய்யுங்கள். அற்புதமான விளம்பரங்களைப் பார்க்கலாம். இவை பார்க்க சுவாரஸ்யம் மட்டுமல்ல, பொசிஷனிங் பற்றித் தெரிந்துகொள்ள அற்புதப் பாடம். சுவையும், ஆரோக்கியமும் தருவது மாகி நூடில்ஸ் என்று கோஷமிட்டபோதிலும், மாகி ஆரோக்கியம் தரும் உணவாக இருக்கவில்லை. ஆரம்ப காலங்களில், உடல் நலத்துக்கு நன்மை தராத மைதா மாவில் தயாரிக்கப்பட்டது.
இப்போது, அதிலும் மாற்றம் செய்துவிட்டார்கள். அரிசி சாப்பிடும் தென்னிந்தியாவிலும், வங்காளத்திலும் அரிசி நூடில்ஸ், வட மாநிலங்களில் கோதுமை மாவு நூடில்ஸ் என உள்ளூர் உணவுப் பழக்கங்களுக்கு ஏற்றபடி, மாகி தயாரிக்கிறார்கள். அப்புறம், ஆரோக்கியக் கண்ணோட்டத்தில், ஓட்ஸ், குறைவான உப்பு எனப் பல தினுசு நூடில்கள்.

நூடில்ஸ் என்றாலே நம் நினைவுக்கு வருவது மாகிதான். இது, குழந்தைகள், அம்மாக்கள் ஆகிய இருவர் மனங்களிலும் இடம் பிடித்த வெற்றி!