Friday, November 7, 2014

நேர்படப் பேசு

நேர்படப் பேசு



“முகத்துக்கு நேரே எப்படி சார் இல்லைன்னு சொல்லுறது?” என்ற உரையாடல் பின்னால் கேட்டது. இது இந்தியனின் ஆதார குணம். வடக்கை விட தெற்கிற்கு கச்சிதமாகப் பொருந்தும்.
மனம் திறந்து உள்ளதைப் பேசுவதில் நமக்கு பெரிய சிக்கல் உள்ளது. குறிப்பாத மனம் ஒவ்வாத விஷயங்களை நேரடியாக வெளிப்படுத்துவது எப்போதும் சங்கடம் தான். சின்ன பொய்கள். சால்ஜாப்புகள். மழுப்பல்கள். அல்லது பல்லை கடித்துக் கொண்டு பிடிக்காததை செய்தல். இன்னொரு புறம் சின்ன விஷயத்துக்கு கூட எரிமலையாக வெடிப்பது. இப்படி நாம் உணர்ச்சிகளை வைத்து உறவுகளில் கபடி விளையாடிக்கொண்டிருக்கிறோம்.
இதற்கு என்னதான் தீர்வு என்றால், எனக்கு உதவிய The Assertiveness Book உங்களுக்கும் உதவும் என்றுதான் பதில் சொல்ல முடியும். Randy J Paterson என்ற ஒரு மருத்துவ உளவியலாளர் எழுதியிருக்கிறார். 1,200 சிகிச்சையாளர்களுக்கு அசெர்டிவ்னஸ் பயிற்சி அளித்திருக்கிறார். அதன் புத்தக வடிவம்தான் இந்த புத்தகம்.
உளவியல் பின்னணியே இல்லாமல் ஒருவர் படித்தாலும் புரிகிற மொழி, ஒரு workbook போல “எப்படிச் செய்ய?” என்று விளக்கங்கள், எளிமையான உதாரணங்கள் என முன் அட்டை முதல் பின் அட்டை வரை படிக்கத்தக்க புத்தகம்.
எல்லா மனிதர்களும் அன்பிற்கு ஏங்குகிறார்கள். உங்கள் கருத்துக்கு உண்மையாகப் பேசி உறவுகளை பலப்படுத்தும் திறன்கள் கற்றுக்கொள்ளக் கூடியவை என்கிறார்.
புத்தகத்தின் சாரம் இதுதான். நெருக்கடி வரும் வரையில் அனைவரும் நன்றாகத்தான் நடந்து கொள்கிறார்கள். நெருக்கடிதான் ஒரு மனிதனின் நடத்தையைக் காட்டிக் கொடுக்கிறது.
இவற்றை நான்கு வழிகளில் உளவியலாளர்கள் பிரித்துள்ளனர்.
முதலாவது, Passive வகையினர். வாயில்லா பூச்சிகள் இவர்கள். எதிராளியிடம் “இல்லை மாட்டேன்” என்று சொல்ல வாய் வராது. பிறருக்காகவே தன் நிலையை தியாகம் செய்வர். நாலு பேர் என்ன சொல்வார்கள் என்பது ரொம்ப முக்கியம். “ரொம்ப நல்லவன்” என பெயர் எடுக்க எவ்வளவு வேண்டுமானாலும் மொத்து வாங்குவர். ஊமை கோபம் நிறைய இருக்கும். ஆனால் வெளியே வராது. வாழ்க்கையை அதிகம் நொந்து கொள்வதும் இவர்கள்தான்.
அடுத்தது Aggressive வகையினர். எதிராளி குரலை உயர்த்துவதற்குள் கையை உயர்த்துபவர்கள் இவர்கள். ஈயைக் கொல்ல ரிவால்வரை எடுப்பவர்கள். ‘எது என்ன ஆனாலும் நான்தான் ஜெயிக்கணும்’ என்பதில் குறியாக இருப்பார்கள். அதற்கு எந்த இழப்பு வந்தாலும் சரி. எதிராளியின் கருத்துக்கெல்லாம் மதிப்பு கிடையாது. எந்த கடுமையான வழியாக இருந்தாலும் சரி, கடைசியில் எதிராளியை ஜெயிக்கணும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
மூன்றாவது, Passive- Aggressive வகையினர். பார்க்கப் படு சாது. ஆனால் செய்வதெல்லாம் மூர்க்கத்தனம். ஆனால் வெளியே தெரியாது. தன் நிலையை தெரிவிக்காமல் இருப்பது, இல்லை என்பதை செயலில் காட்டுவது, மூர்க்கத்தனத்தை சாமர்த்தியமாக அரசியல் பண்ணப் பயன்படுத்துவது என இவர்கள் ஜகஜால மன்னர்கள். இவர்களை இனம் கண்டு கொள்ள நேரமும் அறிவும் தேவை. சூழ்ச்சிதான் முழு நேர வேலைப்பாடு இவர்களுக்கு. நேரடித் தாக்குதல் கிடையாது. ஆனால் நடக்கும் தாக்குதலுக்கு தன் பங்கை மறைமுகமாகச் செய்வர்.
நான்காவது Assertive வகையினர். நெருக்கடியை நேரடியாகவும், உண்மையாகவும் கையாள்வர். இல்லை என்பதை தெளிவாக- ஆனால் எதிராளி காயப்படாமல் சொல்வர். கேட்பது உன் உரிமை. மறுப்பது என் உரிமை. இதனால் நம் நட்பு கெட வேண்டாம் என்று அன்பு பாராட்டுவர். நெருக்கடியில் ஒருவர் தோற்று ஒருவர் ஜெயிக்கத் தேவையில்லை. இருவரும் ஜெயிக்கலாம் என்பதை உணர்ந்தவர்கள். நிஜ உணர்வுகளையும், எண்ணங்களையும் பிறர் புண்படா வண்ணம் பேசுவது இவர்கள் கலை.
அனைத்திலும் சிறந்த தேர்வு அசெர்டிவ் முறை என்று சொல்லத் தேவையில்லை.
அசெர்டிவ்னஸ்ஸிற்கு நேரடி தமிழ்ச் சொல் எனக்குத் தெரியவில்லை. பாரதியின் ‘நேர்படப் பேசு’ எனபது தான் அசெர்டிவ்னஸோ என்று தோன்றும்! எண்பதுகளில் நிம்ஹான்ஸில் படிக்கையில் அசெர்டிவ் தெரபி என்று படித்திருக்கிறேன். மன அழுத்தத்துக்கு, திருமண சிகிச்சைக்கு, உறவுச் சிக்கல்களுக்கு என பலருக்கு அளித்திருக்கிறோம். காக்னிடிவ் பிஹேவியர் தெரபி பிரபலமாக ஆரம்பித்த நாட்கள் அவை. இன்று 25 வருடங்கள் கழித்துப் பார்த்தால் இது அனைவருக்கும் தேவையான திறன்; இதை பள்ளி பாடத்திலேயே வைக்கலாம் என்று தோன்றுகிறது.
சமூகக் காரணங்கள் பற்றி ஆசிரியர் கூறும் போது நம் தமிழ் சமூகத்துக்கு அது சற்று அதிகமாகவே பொருந்துகிறது.
நம் கோபத்தை கண்ணியமாக, நேர்மையாக, நேரடியாகக் காட்டத் தெரியாமல்தான் நாம் பல அனல் பறக்கும் ஆக்சன் ஹீரோக்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். நம் நெருக்கடி களுக்கு ஒரு நாயகர் சினிமாவிலோ, அரசி யலிலோ, பொது வாழ்க்கையிலோ தோன்ற கனவு காண்கிறோம். நம் பிரச்சினைகளை நேரடியாக உட்கார்ந்து, மனம் விட்டுப் பேசி, தனக்கும் எதிராளிக்கும் பலனளிக்கும் முடிவுகள் என்ன என்று யோசிக்கையில் நம் உறவுகள் அடுத்த நிலைக்கு செல்கிறது என்கிறார்.
புத்தகம் படித்து முடித்தவுடன் கண்டிப்பாக ஒரு தெளிவு வரும். “ஓகேவா?” என்று யார் எதற்கு கேட்டாலும் யோசிக்காமல் “எஸ்” என்று சொல்ல மாட்டீர்கள். நோகாமல், நோகடிக்காமல் “நோ” சொல்வீர்கள்!


No comments:

Post a Comment