சூரிய ஒளியில் சமைக்கும் உணவுகளும், வேகவைக்காமல் பச்சையாக உண்ணக்கூடியதும் இயற்கை உணவுகள் ஆகும் . நோயைப் போக்க, மருந்தைவிடவும் உணவே முதன்மை பெறுகிறது. மனித உணவில் மிக முக்கியப் பகுதி கீரைகள். இறைச்சி மற்றும் பால் பொருள்கள் செரிமானம் ஆகும்போது, சில அமிலப் பொருள்கள் உண்டாகும். அவற்றை நடுநிலைப்படுத்துவதற்கு கீரைகள் உதவுகின்றன.
கீரைகள், மூளை வளர்ச்சிக்கும், கண்களை ஒளியூட்டுவதற்கும், நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்கவும் உதவுகின்றன. சில கீரைகள் கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. நன்றாகச் செரிமானம் ஆவதற்கு நார்ப் பொருள்கள் வேண்டும். இது, மலச்சிக்கலைப் போக்கும். வேகவைத்த பொருள்கள் விரைவில் செரிமானமாகும். ஆனால், கலோரிகள் குறையும்.
பீட்ரூட், கேரட்போன்ற காய்களை பச்சையாக உண்பதால், அதில் உள்ள வைட்டமின் சத்துக்கள் நூறு சதவீதம் கிடைத்துவிடும். வைட்டமின்கள், மினரல்கள், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக் கின்றன. காய்களில் நீர்ச் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், உடல் வெப்பத்தைக் குறைக்கும். இவற்றில் உள்ள கரோட்டின், முடிக்கு கருமை நிறத்தைக் கொடுக்கும். குளிர் காலத்தில் திராட்சை, முந்திரி போன்ற உணவுகளை உண்ணலாம்.
பழங்களைச் சாறாக்கிக் குடிப்பதைவிட மென்று, சுவைத்துச் சாப்பிடுவதே நிறைந்த பயன் தரும். காரணம், உணவை மெல்லுவதால், உமிழ்நீர் தொடங்கி செரிமான நீர் சுரப்பது வரையான செயல்பாடுகள் சரியாக நடைபெறும். பழச் சாறுகள் உமிழ்நீர் கலக்காமல் நேராக வயிற்றுக்குள் செல்வதால், என்ஸைம்கள் சுரப்பதின் இயல்பு பாதிக்கப்படும்.
முட்டைக்கோஸ், மணத்தக்காளி போன்றவை வாய்ப் புண், வயிற்றுப் புண்களைப் போக்கும். நிலக்கடலையில் உள்ள ஈ வைட்டமின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதயத்துக்கு நல்லது. குழந்தைகளுக்கு ஒரு பொருள் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அதோடு விட்டுவிடாமல், அதை மறுமுறை வேறொரு பொருளோடு சேர்த்துக் கொடுக்கலாம். பிறகு, நிச்சயமாய் ஏற்றுக்கொள்ளும்.
தூதுவளை, முசுமுசுக்கை, முடக்கத்தான் பொன்ற கீரைகளை தோசை மாவில் கலந்து தோசை ஊற்றிக்கொடுக்கலாம். ஆஸ்துமா,சளி நீங்கும்.
ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை,அன்னாசி ஆகியவற்றில் சி வைட்டமின் உள்ளது. இது, பல், ஈறு நோய்களைக் குணமாக்கும். மாம்பழத்தில் உள்ள ஏ வைட்டமின், தோலுக்கு நிறத்தைக்கொடுக்கும். பழங்கள் காய்கறிகளை தண்ணீரில் நன்கு கழுவிய பின்பே உண்ண வேண்டும் அல்லது நன்றாகக் கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து உண்ண வேண்டும்.
இரும்புச் சத்து, உடல் இயல்பாக இயங்குவதற்கு உதவுகிறது. இது, முருங்கைக் கீரை, பேரீச்சம் பழம், சூப், கேழ்வரகு, சிறு பயறு, அவல், கடலைப் பருப்பு ஆகியவற்றில் உள்ளது. போதிய இரும்புச்சத்து இல்லை என்றால், ரத்த சோகை உண்டாகும். இதனால் கோபம் வரும். தலை வலி, எதிலும் அலட்சியம், விளையாட்டில், படிப்பில் ஆர்வம் குறையும்.
மனிதனுக்குத் தேவையான உப்புச் சத்து ஒரு சதவீதமே, அது நாம் உண்ணும் பச்சைக் காய்களில் உள்ளது. உப்பு அதிகமானால், உடலில் அமிலம் அதிகமாகிவிடும். வேறு நோயை உண்டாக்கும்.
இயற்கை உணவுகள் சத்தானது என்பதற்காக அதிகமாக சாப்பிடவும் கூடாது. நாம், நமக்கு வரும் நோய்களை வேறு எங்கிருந்தும் பெறுவதில்லை. நம்ம வீட்டு அடுப்படியில் இருந்தே பெறுகிறோம். எனவே, உணவை கூடுமானவரை மென்று சாப்பிட வேண்டும். பச்சைக் காய்கள், பழங்களை உட்கொள்ள நம்மைத் தயார்படுத்திக்கொண்டால், மருத்துவ செலவுகள் இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாய் வாழ்வார்கள்.
No comments:
Post a Comment