Wednesday, September 24, 2014

யோகா செய்யும்போது கடைபிடிக்க வேண்டியவை என்ன?

யோகா செய்யும்போது கடைபிடிக்க வேண்டியவை என்ன? 

யோகப் பயிற்சிகள் செய்ய வேண்டுமென்றால், உடலளவிலும், வெளிநிலையும் சில விதிமுறைகள் நாம் கடைபிடிக்க வேண்டியது மிக மிக முக்கியம். அந்த விதிமுறைகள் என்னென்ன என்பதை சத்குரு இதில் தெளிவுபடுத்துகிறார். காலி வயிறு நிலை யோகாசனங்கள் செய்யும்போது, நீங்கள் காலிவயிறு நிலையில் இருந்தால் மட்டும் போதாது, உங்கல் குடலும் காலியாக இருக்க வேண்டும். உங்கள் சக்தி மேல்நோக்கி நகர வேண்டுமென்றால், உடல் அல்லாத பொருட்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். யோகப் பயிற்சிகள் வெறும் உடற்பயிற்சிகள் அல்ல, உங்கள் உடலை மறு கட்டமைப்பு செய்து, உங்களை எப்படி வேண்டுமோ அப்படி உருவாக்கும் வழிமுறைகள். அப்படிப்பட்ட செயல் நடக்க வேண்டுமென்றால், உடல் அல்லாத வேறு எதுவும் அங்கே இருக்கக் கூடாது. உங்கள் செல்களின் கட்டமைப்பு சக்தியூட்டப்பட்டால், நீண்ட காலத்திற்கு அது இளமையாக இருக்கும். யோகா என்றால், படைத்தவருடன் ஒரு கூட்டு அமைக்க தொடங்குகிறீர்கள். இதை நீங்களாகவே செய்ய முடியாது, ஆனால் அவரைச் செய்வதற்கு ஒரு சூழ்நிலை நீங்கள் உருவாக்க முடியும். படைப்பின் மூலத்துடன் கூட்டமைப்பதென்பது, பெரும் அறிவாற்றலை உங்களுடன் இணைக்கும் செயல். உங்களால் நம்ப முடியாத அளவிளான அறிவாற்றல் அது. இந்த செயல் நடக்க வேண்டுமென்றால், அங்கே எந்த தடையும் இருக்கக் கூடாது – நீங்கள் உள்ளே அனுப்பிய உணவோ அல்லது நீங்கள் உருவாக்கிய கழிவோ, இவை இரண்டும் வெளியேற்றப்பட வேண்டும். குளிர்ந்த நீர் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்பு, அறையின் வெப்பநிலையைவிட 5லிருந்து 8 டிகிரீ சென்டிகிரேடு குறைந்த அளவில் உள்ள தண்ணீரில் குளிப்பது உகந்தது. இப்படி செய்வதன் மூலம், தோல் செல்களுக்கு இடையே உள்ள நுண்துளைகள் திறக்கப்படும். யோகப் பயிற்சி செய்வதற்கு இது மிகவும் உகந்தது, ஏனென்றால் உங்கள் செல்களின் கட்டமைப்பு வேறு ஒரு பரிமாணத்தில் சக்தியூட்டப்பட வேண்டும். ஏன் ஒருவர் மற்றவரைவிட மிக உயிரோட்டமாக காணப்படுகிறார் என்றால், இதனால்தான். உங்கள் செல்களின் கட்டமைப்பு சக்தியூட்டப்பட்டால், நீண்ட காலத்திற்கு அது இளமையாக இருக்கும். கண்கள் மூடி இருத்தல் ஒரு மனிதனுக்கு பார்வை அமைப்புதான் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றது. நீங்கள் கண்களை மூடும்போது, உலகம் மறைந்துவிடுகிறது. நம்முள்ளே நடக்கும் நிகழ்வுகளுக்கு, காட்சி அமைப்புகள் இயல்பாகவே மூடிக்கொள்ளும். ஏனென்றால், காட்சி அமைப்புகள் வெளியுலகிற்கு மட்டும்தான் நம்மை ஈடுபடுத்தும். அவைகளை மூடிவிட்டாலும் உங்களுக்கு நறுமணம், தொடு உணர்வு, கேட்பது எல்லாமும் நடக்கும், ஆனால் பாதி உலகம் மூடப்பட்டுவிடும். எனவே உள்நோக்குதல் என்பது உங்கள் கண்கள் மூடப்பட்டால்தான் திறம்பட நடக்கும். நீங்கள் ஆசனங்கள் செய்யும்போது அனைத்தையும் உள்முகமாக்க வேண்டும். கண்ணாடி பயன்படுத்துதல்/இசை கேட்டல் ஹடயோகப் பயிற்சி செய்யும்போது அங்கே கண்ணாடியோ இல்லை இசையோ இருக்கவே கூடாது. கண்ணாடியைப் பயன்படுத்தும் கலாச்சாரம், பாடி பில்டிங் மற்றும் ஜிம்னேஷியத்திலிருந்து வந்தது. ஏனென்றால் தங்கள் உடலை அவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அவைகளை வைத்துக் கொண்டார்கள். யோகாவில் இந்த அணுகுமுறை இருக்கக் கூடாது. பல யோகிகளின் உடல் கட்டமைப்பு தடகள வீரர்களைப்போல அல்லாமல் மிகச் சாதாரணமாகத்தான் இருக்கும். நிறைய பேருக்கு பானை வயிறும் கூட இருப்பதைப் பார்க்கமுடியும். ஏனென்றால், அவர்கள் கண்ணாடியைப் பார்ப்பதில்லை, அவர்களுடைய நோக்கமே தாங்கள் வளர வேண்டும் என்பது மட்டும்தான். இந்தப் படைப்பின் மூலத்துடன் நீங்கள் ஈடுபட வேண்டுமென்றால், உங்கள் உடல், மனம், சக்தி, உயிர் எல்லாமே முழுக்க முழுக்க ஈடுபட வேண்டும். இதே கண்ணாடியைப் பார்த்தால், மற்றவர்களைத் தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீகள். ஆசனப் பயிற்சிகள் செய்யும்போது, உங்கள் மனக்குவிப்பு மிகவும் முக்கியம். பேச்சு ஆசனம் என்பது தியானம் செய்ய ஒரு ஆற்றல்மிக்க வழிமுறை. உங்களால் ஸ்திரமாக உட்கார முடியாததால், தியான நிலையை அடைய வேறு ஒன்றைச் செய்கிறீர்கள். எது சௌகரியமகவும், நிலையாகவும் உள்ளதோ அதுதான் உங்கள் ஆசனம். உங்கள் உடல் மனம் சௌக்கியமாகவும், உங்கள் சக்தி சமநிலையுடனும் அதிர்வுடனும் இருந்து, பிறகு நீங்கள் ஒருவிதமாக உட்கார்ந்தால், இயல்பாகவே நீங்கள் தியான நிலையில் இருப்பீர்கள். அந்த இயற்கையான தியான நிலைக்கு நீங்கள் வர, ஆசனம் என்பது ஒரு தயார்படுத்தும் படிநிலை. எனவே, ஒருவிதத்தில் ஆசனம் என்பது தியானம் செய்ய ஆற்றல் மிக்க வழிமுறை. ஆசனம் செய்யும்போது நீங்கள் பேசினால், உங்கள் உடலளவில் மட்டுமல்ல, சக்திநிலையிலும் பல மாற்றம் ஏற்படும். எனவே ஆசனம் செய்யும்போது பேசக்கூடாது என்பது ஒரு கட்டாயம் மட்டுமில்லை, அது ஒரு விதிமுறையும் கூட. ஆசன நிலையில் நீங்கள் எப்போதும் பேசவே கூடாது, ஏனென்றால் உங்களின் சக்திநிலையில், கவனத்தில், சுவாசத்தில் நடப்பது எல்லமே மிக மிக முக்கியம், இல்லையென்றால் அது உங்கள் உடலில் தொந்தரவு ஏற்படும். நீங்கள் பேச வேண்டுமென்றால், ஆசனா செய்யத் தேவையில்லை, ஜாக்கிங் செய்துகொண்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாம்.


No comments:

Post a Comment