ஆசிரியர்களும் அம்மாதான்
குழந்தைகளே... செப்டம்பர் 5-ம்தேதி என்ன தினம்னு உங்களுக்குத் தெரியும்தானே? ஆசிரியர் தினமான அன்னைக்கு உங்களுக்குப் பிடிச்ச ஆசிரியர்களுக்கு ரோஜாப்பூ கொடுப்பீங்க, பரிசு கொடுப்பீங்க, டான்ஸ் ஆடி அவங்களை மகிழ்விப்பீங்க.
ஆசிரியர் தினம் ஏன் கொண்டாடுறாங்கன்னு உங்களுக்குத் தெரியுமில்லையா? செப்டம்பர் 5-ம் தேதிதான் நம்மளோட முன்னள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தாரு. அவரோட பிறந்த தினத்தைத்தான் ஆசிரியர் தினமா கொண்டாடுறோம். இவரு இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரா இருந்தவரு. சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசுத் துணைத் தலைவரும்கூட.
இவரு குடியரசுத் தலைவரா இருந்தப்ப, சில மாணவர்களும் நண்பர்களும் அவரிடம் போய் அவரோட பிறந்த தினத்தைக் கொண்டாட அனுமதி கேட்டாங்க. அப்போ அவரு என்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதுக்கு பதிலா ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தற மாதிரி அன்றைய தினத்தை ஆசிரியர் தினமா கொண்டாடுங்கன்னு கேட்டுக்கிட்டாரு. அதனால 1962-ம் ஆண்டுல இருந்து இந்தத் தினத்தை ஆசிரியர் தினமா கொண்டாடுறோம்.
டாக்டர் ராதாகிருஷ்ணன், ஸ்கூல் டீச்சரா இருந்ததில்லை. கல்லூரி பேராசிரியராக இருந்தவரு. இருந்தாலும் ஸ்கூல், கல்லூரின்னு பேதம் இல்லாமல் ஆசிரியர் தினத்தை எல்லோருமே கொண்டாடுறாங்க.
மாதா, பிதா, குரு, தெய்வம்னு சொல்லுவாங்க இல்லையா? அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடத்துல இருக்கறது டீச்சர்ஸ்தான். வீட்டுல அம்மா நம்மளை எப்படி பாத்துக்குறாங்களோ, அதுபோல ஸ்கூல்ல டீச்சர்தான் அம்மா மாதிரி.
ஏற்றிவிடும் ஏணிகள்
புதுசா ஸ்கூலுக்குப் போகும் குழந்தைங்க அம்மாகிட்டே போகணும், அம்மாகிட்டே போகணும்னு அழுதுகிட்டே இருப்பாங்க. அப்போ அவங்களை சமாதானப்படுத்தி, சாக்லெட் எல்லாம் கொடுத்து, விளையாட்டு காட்டி அந்தக் குழந்தைகளுக்கு ஸ்கூல் மேலே இருக்குற பயத்தைப் போக்குறது யாரு? டீச்சர்ஸ் தானே?
அதே டீச்சர்ஸ் தான் அ, ஆ எப்படி எழுதணும்னு நம்ம கையைப் பிடிச்சு எழுதி காட்டுவாங்க. ஏ, பி, சி, டி சொல்லிக் கொடுத்து, ரைம்ஸ் பாட வைச்சு எல்லாமே கத்துக் கொடுப்பாங்க. ஒவ்வொரு வகுப்பிலும் நமக்கு புதுப்புது விஷயங்களைக் சொல்லிக்கொடுத்து நம்மை முன்னேத்துவாங்க. நாம படிச்சு முடிச்சு அடுத்தடுத்த வகுப்புகளுக்குப் போவோம். ஆனா நமக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சருங்க மட்டும் அதே வகுப்புல வேற மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துட்டு இருப்பாங்க.
அதனாலதான் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்னும், ‘ஏற்றி விடும் ஏணி’ன்னும் பெருமையா சொல்லியிருக்காங்க. அம்மா, அப்பாவுக்கு அடுத்ததா நம்ம வாழ்க்கையை முன்னேற்றும் ஆசிரியர்களையும் நாம் எப்போதும் மறக்கவே கூடாது. இவ்வளவு செய்யும் ஆசிரியர்களுக்கு நாம செய்யும் கைமாறு என்னத் தெரியுமா? படிச்ச முடிச்சு பல ஆண்டுகள் கழிச்சு உங்க டீச்சரை நீங்க பார்க்குறீங்கன்னு வச்சுக்குங்க. அப்போ நீங்க பெயர் சொல்லுற அளவுக்கு பெரிய ஆளா இருந்தா, ‘என்னோட ஸ்டூடண்ட்’னு பெருமையா சொல்லுவாங்க பாருங்க. அது மட்டும்தான் ஆசிரியர்களுக்கு நம்மால் கிடைக்கிற ஒரே சந்தோஷம். அவங்க சொல்லிக் கொடுத்த நற்பண்புகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிச்சு, நல்ல குடிமகனா வாழறதும் அவங்களுக்கு நாம செலுத்தற நன்றிக்கடன்தான்.
No comments:
Post a Comment