Friday, July 25, 2014

மக்களின் கூட்டுப்பிரார்த்தனை எதிலும் வெற்றியளிக்கும்

மக்களின் கூட்டுப்பிரார்த்தனை எதிலும் வெற்றியளிக்கும்

        "நற்பண்புகளும், இறை நினைப்பும், மந்திரம் கூறுதலும், கூட்டுப்பிரார்த்தனையும் நரகத்தைகூட சொர்க்கமாக்கி விடும்." "பகவான் கூட்டுப்பிராத்தனைக்குச் செவி சாய்ப்பார்" "மனிதர்களின் வெற்றி அவரவர் பகவான் மேல் வைத்திருக்கும் பக்தி, சரணாகதி, தியாகம் மற்றும் ஆன்மீகச் சேவைகளில் இருக்கிறது. ஆத்மாவின் உயர்வு மனிதனின் பரிபக்குவமான மனதினில் இருக்கிறது."
        தன் மனதை அன்பு செலுத்துவதற்கும், உடலை கடமை செய்வதற்கும் பயன்படுத்துவதே மனித தத்துவமாகும். நற்பண்புகள் நிறைந்தவர்களே நல்ல மனிதர்கள். இத்துடன் இறை நினைப்பும், இறைமந்திரமும் இருந்துவிட்டால் இவர்கள் யோகிகளாக மாறிவிடுகின்றனர். ஒரு குடும்பமோ அல்லது பல குடும்பங்களோ ஒன்று சேர்ந்து,
       "ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க!
        ஓம் சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க!
        ஓம் சற்குருநாதர் வாழ்க! வாழ்க!"
        என்று மந்திரம் கூறி கூட்டுப்பிரார்த்தனை செய்கின்றபோது எடுத்த் காரியம் அமோகமாக வெற்றியாகும்.
        கூட்டுப்பிரார்த்தனையால் ஒவ்வொருவரும் மானசீகமாக பிடித்த கோயிலை மனதினில் நிலை நிறுத்த வேண்டும். ஒருவர் மந்திரம் சொல்ல அதை மற்றவர்கள் பின் தொடர்ந்து சொல்லி வருவது நல்லது. அந்த மானசீகக் கோயிலில் மந்திரம் கூறிக்கொண்டே எண்ணத்தால் 108 முறை பிரகாரம் சுற்றி வர வேண்டும். அப்படி முடியாவிட்டால் 3 முறையாவது சுற்றி வரவேண்டும். அடுத்தபடியாக மனக்கோயிலில் மூலஸ்தானத்தில் குருக்கள் போல மந்திரம் கூறிக்கொண்டே பூப்போட்டு, அர்ச்சனை செய்து, தீப ஆர்த்தி எடுக்க வேண்டும். இவ்வாறு மானசீகக்கோயிலில் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது பூஜை செய்து வந்தால் கூட்டுப்பிரார்த்தனை வெற்றியாகும். மனதினில் தெளிவும், தெம்பும் பிறக்கும்.
        நாம் உயர்வடைய அதிகாலையில் எழுந்திருக்கும் போதே 'இறைவா! இன்றைய நாள் உங்களை இடைவிடாது நினைக்கும் நாளாக இருக்க அருள் செய்யுங்கள்' என்று கேட்க வேண்டும். பிறகு பல்துலக்கி தன்னை சுறுசுறுப்பாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக மந்திரம் கூறுவதை வேகப்படுத்த வேண்டும். பகவானின் நினைப்பு, மந்திரம் கூறுதல் போன்றவை உள்ளத்தில் ஓடிக்கொண்டே இருக்கப் பழக வேண்டும். இதுவே தியானம் ஆகும். நமது மதத்தில் ஆறுகால பூஜையைப் பற்றி சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. நமது திருமூலர் கூறியது போல் நமது உள்ளமாகிய பெருங்கோயிலில் ஆறுகால பூஜையை மானசீகமாக செய்து வந்தால் ஒவ்வொரு இந்துக்களும் உயர்வு பெறுவது என்பது உறுதி.
முதல் பூஜைஅதிகாலை 4 to 5
இரண்டாவது பூஜைகாலை 8 to 9
மூன்றாவது பூஜைமதியம் 12 to 1
நான்காவது பூஜைமாலை 4 to 5
ஐந்தாவது பூஜைஇரவு 6 to 7
ஆறாவது பூஜைஇரவு 8 to 9

        மேற்குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் பூஜையை முடிக்க வேண்டும். அப்படி முடியாவிட்டால் பகவானிடம் மன்னிப்பு கேட்டு நேரத்தை மாற்றியமைத்துக் கொண்டு பூஜையை முடிக்க வேண்டும்.
        இயற்கையின் பரிபூரண நிலைக்கு செழுமை என்று பெயர். மனிதனின் பிறப்பே பகவானாகிய பிரம்மத்தை பரிபூரணமாக அடைவதற்கே. அப்படி அடைந்தவர்கள் ஞானச் செழிப்புடன் வாழ்வார்கள்.
        ஒருவரின் ஆத்ம வளர்ச்சி அவரது ஆன்மீக சேவையில் தெரியும். ஒருவருடைய மனதின் தன்மையை அவரது கண்களும், முகமும் காட்டிக் கொடுத்துவிடும். அதிகம் ஆசைப்படும் மனிதர்களிடம் பக்தி தங்காது.
        கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், "எப்பொழுதும் என்னையே நினைத்து அன்புடன் பக்தி செய்பவர்களுக்கு என்னிடம் வருகின்ற வழியை நானே அளிக்கின்றேன்! அவர்கள் இதயத்தில் நான் இருந்து கொண்டு அவர்கள் என்மீது கொண்டுள்ள பக்திக்கு ஈடாக அறியாமை என்ற அவஸ்தையிலிருந்து அவர்களை அறிவு என்ற வெளிச்சத்திற்கு என் கருணையால் கொண்டு வருகிறேன்." என்று அன்புடன் கூறுகிறார்.
       "பகவானை உணர்ந்து நினைப்பவர் புத்திசாலி
        பகவானை உணராது இருப்பவர் ஏமாளி"

urs

www.v4all.org 

No comments:

Post a Comment