பேச்சு’ இறைவன் மனிதனுக்களித்த அரிய பரிசு. விலங்குகளிடமிருந்து மனிதனை வேறு படுத்திக் காட்டுவது பேச்சுதான். மனிதர்கள் பேசினால்தான் வாழ முடியும். நாக்கும் அதிலிருந்து வெளிப்படும் வாக்கும் இருபெரும் செல்வங்கள்.
சமுதாய வாழ்க்கையின் அஸ்திவாரம் பேச்சு. மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு பேச்சுதான் வடிவம் கொடுக்கிறது.
பேச்சு என்பது ஒரு மாபெரும் கலை. வாழ்விற்கு வேண்டிய அடிப்படையான அரிய கலை. படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் செய்கின்ற வல்லமை பேச்சுக்கலைக்கு உண்டு. இது கல்லாதவரையும் கற்றவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு ஈர்ப்புக் கலை.
பேச்சுக்குப் பேராற்றல் உண்டு. அந்த பேராற்றலால் அகிலத்தையே புரட்டிப் போட்ட வரலாற்று நிகழ்வுகள் ஏராளம். சிறந்த பேச்சு கோழையையும் வீரனாக்கும். நயவஞ்சகர் களையும் நல்லவர்களாக்கும், தேசவிரோதி களையும் தேசபக்தர்களாக்கும்.
சிறந்த பேச்சாற்றலுக்கு வழிமுறை
1.பேசவிருக்கும் இடத்திற்கு பழக்கப் பட்டவர்களாக மாறவேண்டும். அதாவது கூட்டம் நடைபெற உள்ள அரங்கிற்கு முன்னதாகச் சென்று அந்த அரங்கையும், ஒலிபெருக்கி உள்ள இடத்தையும், கூட்டத்தினர் அமரும் இடத்தையும் ஒருமுறை நேரில் பார்த்து அந்த இடத்திற்கு பரிச்சயமாவது நல்லது.
2.கூட்டத்திற்கு தெரிந்தவர்கள் வந்திருந்தால் அவர்களோடு சற்று நேரம் உரையாடலாம். காரணம் முற்றிலும் அறிமுகமே இல்லாதவர்கள் மத்தியில் பேசுவதை விட தெரிந்தவர்கள் மத்தியில் பேசுவது எளிதாக இருக்கும்.
3.எந்த தலைப்பில் பேசவிருக்கிறோம் என்பது பற்றி சரியாக அறிந்து கொள்ள வேண்டும், ஓரளவு பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
4.பேச்சை எப்படி தொடங்குவது என்று முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பேச்சை ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களிலேயே பேச்சாளரைப் பற்றி கூட்டத்தினர் ஒரு முடிவுக்கு வந்து விடுவர்.
5.பேசும்போது நடுக்கம் இருந்தாலும் ‘நடுக்க மாக இருக்கிறது’ என்று வெளிப்படையாகச் சொல்லக்கூடாது. பல நேரங்களில் உங்கள் நடுக்கம் உங்களுக்கு பெரிதாக தெரியும், கூட்டத்தினர் உங்கள் அளவிற்கு அதனை உணர வாய்ப்பில்லை.
ஒவ்வொரு முறை பேசும் போதும் கிடைக்கும் அனுபவத்தின் காரணமாக அடுத்தடுத்த முறை தைரியமாக பேசவும், சிறப்பாக பேசவும் முடியும்.
குறிப்பெடுக்க கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும். யார் ஒருவர் தயாரிப்பதில் தோல்வி அடைகிறாரோ அவர் தோல்விக்கு தயாராகிறார் என்று பொருள்.
6.பேச்சினூடே எழும் தேவையற்ற ஓசைகள் (அதாவது அடிக்கடி இருமுவது, கணைப்பது, எச்சில் சத்தம்) கேட்போரை முகம் சுளிக்க வைக்கும். இதனை தவிர்க்க வேண்டும்.
7.மனப்பாடம் செய்து பேசக்கூடாது. அப்படிச் செய்தால் மனப்பாடம் செய்த வார்த்தைகளை நினைவுக்குக் கொண்டு வருவதில்தான் கவனம் இருக்குமே ஒழிய கருத்துக்களை கொண்டு வர இயலாது. இம்முறையில் ஆங்காங்கே தடைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
8.உரையை அப்படியே வாசிக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. இயல்பாகப் பேசினால் உரிய இடத்தில் தானாகவே நிறுத்தம் ஏற்பட்டு விடும். படிக்க ஆரம்பித்தால் வேண்டிய இடத்தில் நிறுத்தம் இல்லாமல் உரை ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் உதிரிப்பூக்களாக வெளிப்படும்.
9.உரையை வாசிப்பது வேறு, அதை பேசுவது வேறு. வாசிக்கப்படும் உரையில் மிகவும் சம்பிரதாயமான வார்த்தைகள் பயன்படுத்தப் படும். அத்தகைய பேச்சு அந்நியப்பட்டு இருக்கும். பேச்சாளர் கூட்டத்தினரை பார்த்துப் பேசாத போது செய்தி அவர்களை சென்றடை யாது. பார்த்து படிக்கும்போது கூட்டத்தினரை பார்க்க முடியாது. பார்வை முழுக்க எழுதி வைத்த உரையில்தான் இருக்கும். கூட்டத்தினரை பார்த்துக் கொண்டே படிப்பதற்கு மிகுந்த பயிற்சி தேவை.
10.ஒருவரின் உடை, தோற்றம் போன்றவற்றை விடவும் அவரது வார்த்தைதான் அவரது மதிப்பை உயர்த்தும். அடுத்தவர் இதயத்தை வெல்ல வேண்டுமானால் பேசும் வார்த்தைகள் இதயத்திலிருந்து வர வேண்டும். நன்றாகப் பேசுவதற்கு நமக்கு பரந்த அறிவு தேவை. பலவற்றைப் பற்றி கொஞ்சமாவது அறிந்திருப்பதும், நமது துறையில் சிறப்பான திறன் பெற்றிருப்பதும் மிக மிக முக்கியம்.
11.வெறும் அறிவும் ஞானமும் இருந்தால் மட்டும் போதாது. பேசிப் பேசி நல்ல பயிற்சி இருந்தால்தான் அறிந்தவற்றைபேசவும் முடியும். யோசிக்காமல் பேசக்கூடாது. எதைப் பேச வேண்டுமோ அதில் தெளிவான கருத்துகளும், எளிமையான நடையும் துல்லியமான விசயங்களும் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரியவை பற்றி பேசுவதை எப்போதுமே தவிர்த்து விட வேண்டும். பொறுமையும் மற்றவர் பேசுவதை கவனிப்பதும் நாம் சிறப்பாகப் பேச உதவும்.
12.குரலும், தொனியும் இயல்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உரையை மேடையில் வாசிப்பதற்கு முன்பாக தனிமையில் ஒருமுறை உரக்க வாசித்துப் பார்க்க வேண்டும். எழுதும் போது எளிதாக உள்ள சொற்கள் பேசும் போது நம்மை தடுமாறவைத்து விடும்.
13.உரையை வாசிக்கையில் அங்க அசைவு களை சிறைபடுத்தப்படுவதால் உடல் பேசும் மொழி இல்லாமல் வாய் பேச்சின் மூலமாக மட்டும் புரியவைப்பது கடினம். மொழித் திறனைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் கடினமான அரிய வார்த்தைகளைக் கையாளக் கூடாது. எவ்வளவு முக்கியமோ அவ்வளவு எளிமையாக இருக்க வேண்டும். பதில் சொல்லத் தேவையில்லாத நிலையில் ஒதுங்கி இருத்தலே நல்லது.
14.என்ன சொல்லப் போகிறோம் என்று முதலில் சொல்லுங்கள். அதனைத் தொடர்ந்து சொல்ல வேண்டியதைச் சொல்லுங்கள். கடைசியில் என்ன சொன்னீர்கள் என்பதை சுருக்கிச் சொல்லுங்கள்
சிறப்பாகப் பேசுவோர் பிறரைக் காட்டிலும் வெற்றிப் படிகளில் வேகமாக ஏறிச் செல்கின்றனர்’. வெற்றி பெற விரும்பினால் பேசுவதை கலையாகக் கொள்ள வேண்டும். உரிய நேரத்தில் சரியான முறையில் பேசாததன் காரணமாக தேடி வந்த வாய்ப்புகளை நழுவ விட்டு வாழ்வைத் தொலைத்தோர் ஏராளம்.
பயனில்லாத சொற்களை சொல்லக் கூடாது. “சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல்” என்கிறார் வள்ளுவர்.
Yours Happily
Dr.Jc.Star Anand ram
Www.moneyattraction.in
.
No comments:
Post a Comment