Wednesday, August 31, 2016

வீரத்தை வென்ற விவேகம்!

வீரத்தை வென்ற விவேகம்!

மதனபுரி என்ற நாட்டை மகேந்திரவர்மர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்குத் தன் நாட்டிலுள்ள தலைசிறந்த துணிச்சல்காரன் யார் என்பதை அறிய ஆவல் வந்தது. அதனால் அரச சபை கூடிய தினத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

வீரத்தை வென்ற விவேகம்“‘அறிவில் சிறந்த அவையோரே, அன்பில் சிறந்த குடிமக்களே! நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரன் யாரெனத் தேடிக் கண்டுபிடியுங்கள். வரும் பெüர்ணமியன்று வழக்கம் போல அரச சபை கூடும்போது, அவரை அழைத்து வந்து நிரூபித்துக் காட்டலாம். நம் ராஜபிரதானிகள் தேர்ந்தெடுக்கும் அந்த மாவீரனுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கி “தலைசிறந்த துணிச்சல்காரன்’ என்ற பட்டமும் வழங்கப்படும். அந்த மாவீரனை அழைத்து வரும் நபருக்குப் பரிசாக ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும்” என்றார்.

பெüர்ணமி அன்று, மீண்டும் அவை கூடியது. நாட்டின் மாவீரனைக் காண மக்கள் கூட்டம் திரண்டு வந்திருந்தது. கட்டியங்கூறுவோன் வாழ்த்தொலி கூற அவைக்கு அரசர் வந்தார். அவை எழுந்து மரியாதை செலுத்தியது. அரசர் அமர்ந்ததும் அனைவரும் அமர்ந்தனர். அரசர் சொன்னார்-

“”உயர்ந்த குடிமக்களே, நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரன் யார் என்பதைக் காண ஆவலாக வந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. தீர்ப்பு சொல்ல ராஜபிரதானிகளும் தயாராக இருக்கின்றனர். அவர்களுக்கு என் நன்றி. அன்று நான் அறிவித்தபடி, அழைத்து வந்திருப்பீர்கள். ஒவ்வொருவராக, அவர்களுடைய மாவீரனை அழைத்து வாருங்கள்…” என்று ஆணையிட்டார்.

முதலில் ஒரு தனவந்தர் தனது அடியாளான ஒரு முரட்டு மனிதனை அழைத்து வந்தார். அரசனை வணங்கிவிட்டுச் சொன்னார்-

“”அரசே, நான் தேடிக் கண்டுபிடித்த நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரர் இவர்தான். இவரோடு மோத யாருக்கும் தைரியம் இருந்தால் வந்து மோதிப் பார்க்கலாம்…” என்று அவையில் சவால் விட்டார்.

சட்டை போடாத அந்த முரடர், தன் கை, மார்பு, கால் சதைகளை முறுக்கித் தன் உடல் திறத்தை வெளிப்படுத்தினார். அதைக் கண்ட மக்கள் கரகோஷம் எழுப்பினர். அவரை எதிர்க்க யாரும் முன்வரவில்லை. அதனால் அவருக்குத் தனி ஆசனம் கொடுக்கப்பட்டது. அவரும் அதில் அமர்ந்தார்.

அடுத்து ஒரு கவசம் அணிந்த சிப்பாய் தனியே வந்தான். அரசரை வணங்கிச் சொன்னான்-

“”மன்னர் மன்னா… நான்தான் தங்கள் காலாட்படையிலேயே தலைசிறந்த வீரன். பக்கத்து நாட்டோடு போர் மூண்டபோது என் வாள் பலபேரை வெட்டிச் சாய்த்தது. என் போர் திறமையைப் பாராட்டிய தளபதி, எனக்குப் பரிசாக அளித்த முத்துமாலை இதோ…” என்று எடுத்துக் காண்பித்து மேலும் சொன்னான், “”அந்தப் போரில் கத்தியும் ஈட்டியும் என்னைக் காயப்படுத்தின. இதோ பாருங்கள், அந்த வீரத் தழும்புகளை” என்று கூறித் தனது கவசத்தைக் கழற்றிக் காண்பித்தான். சில இடங்களில் அவன் கூறியபடி காயத் தழும்புகள் இருந்தன.
அரசர் கோபமாக எழுந்தார், “”நீயெல்லாம் மார்பில் வேல் தாக்கிய வீரனா? முதலாவதாக வந்தவன் போரிட சவால் விட்டானே, அப்போது நீ வந்து முன் நின்றாயா? அல்லது அது உன் காதில் விழவில்லையா? ரோஷமில்லாத உன்னை என் வீரனென்று கூறவே என் நா கூசுகிறது. உனக்குப் போய் முத்துமாலையைப் பரிசளித்த அந்த முட்டாள் தளபதியைத்தான் நான் நொந்து கொள்ள வேண்டும். பேராசை பிடித்தவனே… என் கண்முன்னால் நிற்காமல் ஓடிப் போய்விடு..” என்று கர்ஜித்தார்.

அரசரின் கோபத்துக்கு ஆளானால் தனக்குத் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் அந்த சிப்பாய் ஓடிப்போய்விட்டான்.
அடுத்த அழைப்புமணி ஒலித்தது. தளபதி ஒருவர் தன்னோடு ஒரு வீரனை அழைத்து வந்து சபையில் அறிமுகம் செய்தார்.

“”மக்களை ஆளும் சக்கரவர்த்தியே, இந்த வீரன் நமது கொரில்லாப் படையின் தலைவன். தன் உயிரை துச்சமாக மதித்து நம் நாட்டுக்கு சேவை செய்பவன். இவனுக்குத் தனது உயிர் பெரிதல்ல. ஆனால் நமது நாட்டைக் காக்க இவன் நமக்குத் தேவை. இவன் மனித வெடிகுண்டாக மாறினால், இதோ அமர்ந்திருக்கும் இந்த முரடனைப் போல எத்தனை பேர் வந்தாலும் அவர்களையும் அழித்துத் தானும் அழிந்து விடுவான். இப்படிப்பட்ட துணிச்சல் வேறு எவருக்கு வரும்? தன் உயிரைத் துச்சமாக மதிக்கும் இவனே நம் நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரன்… சக்கரவர்த்தி அவர்களே…” என்று வணக்கத்துடன் கூறினார். அவனுக்கும் தனி ஆசனம் கொடுக்கப்பட்டது. அடுத்த அழைப்புமணி ஒலித்தது.

சிறிது நேரம் யாருமே வரவில்லை.

“”இவ்விருவரைத் தவிர வேறு எவருமே இல்லையா? இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முன் வருபவர் வரலாம்…” என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அப்போது மந்திரி மதிவாணர் தன் கையில் ஓர் ஆட்டுக்குட்டியைப் பிடித்துக் கொண்டு அவைக்குள் நுழைந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும் விழித்தனர்.

மதிவாணரைப் பார்த்து அரசர் கேட்டார், “”என்ன மதிவாணரே… ஆட்டை மேய்க்க அவைக்கே வந்து வீட்டீர்? ஆடு மேய்க்க உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? இந்தப் போட்டியில் இப்படி நீர் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் உமது கெüரவமாவது மிஞ்சியிருக்கும்…” என்று நையைண்டி செய்தார். மதிவாணர் அடக்கமாகச் சொன்னார்-

“”அரசே, நமது நாட்டின் தலைசிறந்த துணிச்சல்காரர் இவர்தான் அரசே!” என்று ஆட்டைக் காட்டி அறிமுகம் செய்தார். அதைக் கேட்ட அரசரும் அவையோரும் கொல்லெனச் சிரித்தனர். கசமுசவென்று ஒரே பேச்சு சத்தம்… அரசர் அவையை அமைதிப்படுத்திவிட்டுச் சொன்னார்-

“”என்ன மதிவாணரே, நீர் மதியை இழந்துவிட்டீரா இல்லை உமது மதி கலங்கி விட்டதா? எப்பேர்ப்பட்ட வீரர்கள் எதிரே இருக்கும்போது ஒரு சாதாரண ஆட்டைக் கொண்டு வந்து இதுதான் தலைசிறந்து துணிச்சல்காரன் என்கிறீரே! உம்மைப் போய் நான் மந்திரியாக வைத்திருப்பதை நினைத்தால் எனக்குத்தான் அவமானமாக இருக்கிறது…”

“”அரசே, எதையும் பார்த்த மாத்திரத்தில் அவசரப்பட்டு தீர்ப்பு சொல்லக்கூடாது. அன்று பாண்டியன் நெடுஞ்செழியன் அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்கியதால்தான் மதுரை மாநகரமே எரியும்படி நேர்ந்தது. தீர்ப்பு வழங்குவதில் எப்போதுமே நிதானம் தேவை அரசே! இல்லையென்றால் நீதியே அநீதியாகிவிடும்” என்று சொல்லிவிட்டுக் கை தட்டினார் மதிவாணர்.

அப்போது பெரிய வீச்சரிவாளுடன் முகத்தில் முக்கால்வாசி மீசையுடன் வந்து நின்றான் ஒருவன். அவனது வீச்சரிவாளை மதிவாணர் வாங்கி, அமர்ந்திருந்த முரடனின் கழுத்தில் அந்த அரிவாளை வைத்தார். முரடன் திருதிருவென்று விழித்தான்.

“”உலக மகா துணிச்சல்காரரே, இதைக் கொண்டு உம்மை இப்போது நான் வெட்டப் போகிறேன்…” என்றார்.

அதற்கு அந்த முரடன், “”ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நிராயுதபாணியான என்னை வெட்டுவேன் என்கிறீரே? தைரியம் இருந்தால் அரிவாளைக் கீழே போட்டுவிட்டு என்னுடன் மோதிப் பாரும்.. உமது எலும்புகளை அப்பளமாக நொறுக்கிக் காட்டுகிறேன்…” என்றான்.

“”ராஜபிரதானிகளே, நீங்களே சொல்லுங்கள். பலமான உடம்பும் எவருக்கும் பயப்படாத குணமும் கொண்ட இவன், கேவலம் இந்த அரிவாளைக் கண்டு பயப்படுகிறானே? இவன் உண்மையிலேயே துணிச்சல்காரனா? தீர்ப்பு சொல்லுங்கள்… தனது உயிருக்குப் பயந்த எவனுமே நிச்சயம் துணிச்சல்காரனாக முடியாது…”

அரசரும் ராஜபிரதானிகளும் பதில் பேசமுடியாமல் போயிற்று.
“”அரசே, மிஞ்சி இருப்பவன் இந்த கொரில்லாக்காரன். தளபதி இவனைக் கூட்டி வந்திருப்பதை ஒற்றன் மூலம் கேள்விப்பட்ட நான், இவனது ஒரே மகனை ஆள் வைத்துக் கடத்திச் சென்றிருக்கிறேன். நான் போகாமல் இவன் மகனை மீட்க முடியாது. இன்னும் இரண்டு நாழிகைக்குள் நான் வராவிட்டால் அவனைத் தீர்த்துக்கட்டச் சொல்லியிருக்கிறேன். இவனுக்குத் தைரியமிருந்தால் என்னைக் கொல்லட்டும்… மகனை மீட்கட்டும் பார்க்கலாம்…” என்றார் மதிவாணர்.

கொரில்லா வீரன் மதிவாணரின் காலைத் தொட்டுக் கேட்டான்.

“”மதிவாணரே, நாங்கள் தவமாக இருந்து பெற்றெடுத்த பாலகன் அவன். வசதியில்லாத நான் அவனை வளமாக வாழவைக்க வேண்டும் என்பதற்காகத்தான், கொரில்லாப் படையிலேயே சேர்ந்தேன். நான் செத்தாலும் அவன் மட்டும் சாகக்கூடாது மதிவாணரே!” என்று மண்டியிட்டுக் கெஞ்சினான்.

“”அரசே, ராஜபிரதானிகளே… அந்த முரடன் தன் உயிருக்குப் பயந்தவன், இவனோ பாசத்தால் பலவீனமாகிப்போய்விட்டான். ஓடிய சிப்பாயோ பணத்தாசை பிடித்தவன். ஆனால் இதோ நிற்கும் ஆடு எதற்குமே அடிமையாகாது மன்னா… இதற்குப் பேராசையே கிடையாது ராஜபிரதானிகளே! அரசே, இதன் முன் உங்கள் கஜானாவையே கொட்டிப் பாருங்கள். அது தொட்டுக்கூடப் பார்க்காது. கொல்லபோகும் கசாப்புக் கடைக்காரனோடு தைரியமாக வந்துள்ளது. இவன் கொல்லத் துணிந்தாலும் எதிர்த்துப் போராடாது. அதனால் இதற்குத் தனது உயிரின் மீதும் ஆசையில்லை. இதன் குட்டியைப் பிரித்து, அதன் கண்முன்னே எந்தச் சித்திரவதையானாலும் செய்த பாருங்கள். சிறிதுகூடக் கண்ணீர் சிந்தாது. அதனால் இது பாசத்துக்கும் அடிமை கிடையாது. பொன், உயிர், பாசம் ஆகிய மூன்று ஆசைகளுமே இல்லாதவரே நிகரற்ற துணிச்சல்காரர். இந்த மூன்று ஆசைகளுமே இல்லாத இந்த ஆடே, உண்மையான துணிச்சல்காரன் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ராஜபிரதானிகளே, இப்போது நீங்கள் நன்றாக ஆராய்ந்து தீர்ப்பு சொல்லுங்கள்…” என்று கேட்டுக் கொண்டார் மந்திரி மதிவாணர்.
ராஜபிரதானிகளின் தீர்ப்பின்படி இரண்டாயிரம் பொற்காசுகள் மந்திரி மதிவாணருக்குக் கிடைத்தது. அதில் கசாப்புக் கடைக்காரனுக்கு இருநூறு பொற்காசுகள் கிடைத்தது. ஆட்டின் கழுத்தில் “உலகமகா துணிச்சல்காரன்’ பட்டம் தொங்கியது.

கொரில்லாக்காரனிடம் மந்திரி சொன்னார், “”உன் மகனை நான் கடத்தவில்லை. இந்தப் போட்டிக்காக அப்படிச் சொன்னேன். உன் மனத்தைப் புண்படுத்திய என்னை மன்னித்து விடு…” என்று கேட்டுக் கொண்டார்.

வீரத்தை விவேகம் வென்றுவிட்டதை உணர்ந்தார் மன்னர் மகேந்திரவர்மன்.

No comments:

Post a Comment