சுமை தீர்க்கும் வைத்தியநாத சுவாமி கோயில்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து வடமேற்கே ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது பாண்டூர் என்ற கிராமம். சகல விதமான வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இங்குதான் அமைந்துள்ளது. பசுமையான வயல்வெளிகள் சூழ இயற்கை சூழலில் அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம்.
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அருள்மிகு வைத்தியநாத சுவாமி. இறைவி அருள்மிகு பாலாம்பிகை என்பதாகும்.
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்து இடது புறம் பிள்ளையார் வலதுபுறம் துர்க்கை சன்னதிகள் உள்ளன.
அடுத்து மகாமண்டபமும் அர்த்த மண்டபமும் உள்ளன. தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன் கீழ்த்திசை நோக்கி லிங்கத் திருமேனியில் அருள் பாலிக்கிறார். மகாமண்டபத்தின் வடதிசையில் இறைவி அருள்மிகு பாலாம்பிகை தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.
இறைவனின் தேவ கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி உள்ளது. பிரகாரத்தில் மேற்கு திசையில் பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வானை திருமேனிகள் உள்ளன.
வடக்கு பிரகாரத்தில் தலவிருட்சமான வில்வமரம் உள்ளது. அதனடியில் சிறிய அளவிலான சிவலிங்கம், நாகர், நந்தி திருமேனிகள் உள்ளன. இங்கே, சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சண்டீஸ்வரர் சன்னதியும் இங்கு உள்ளது. கிழக்கு பிரகாரத்தில் சூரியன், பைரவர் சன்னதிகள் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தமான சூரிய புஷ்கரணி ஆலயத்தின் எதிரே உள்ளது.
நவராத்திரி, சிவராத்திரி மற்றும் விசேஷ நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. தினசரி காலை, சாயரட்சை, அர்த்த சாமம் என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன.
வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மூத்த ஆலயமாக இது கருதப்படுகிறது. சனிபகவானுக்கு இங்கு தனி சன்னதி உள்ளதால் நவக்கிரகங்கள் இங்கு இல்லை. சனிக்கிழமை மற்றும் கிரகப் பெயர்ச்சி நாட்களில் இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
சனிப் பார்வையால் துன்பப்படுவோர் இங்குள்ள சனி பகவானை வேண்டிக் கொண்டு பாதிப்பின் வேகம் குறைய, தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தி நிம்மதி பெறுகின்றனர். எள் சாத நிவேத்தியம் செய்து அனைவருக்கும் விநியோகம் செய்கின்றனர்.
சனிபெயர்ச்சிக் காலங்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை.
ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
அரிச்சந்திரன் இத்தலத்து இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்ததால் தனது கடன் தொல்லைகளிலிருந்து நீங்கப் பெற்றதாகக் தல வரலாறு கூறுகிறது.
எனவே, அதை நினைவுபடுத்தும் விதமாக சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை கடன் நிவர்த்தி பூஜை இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் நடத்தப்படுகிறது. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் பக்தர்கள் இந்தப் பூஜையில் கலந்துகொண்டு பலன் பெறுவதாக நம்புகிறார்கள்.
மேலும், அன்று முதல் மூன்று நாட்களுக்கு கோவிலுக்கு அருகே அரிச்சந்திரன் வரலாற்றை நாடகமாக அரங்கேற்றி அதைப் பார்த்து மக்கள் மகிழ்வது வழக்கமாக உள்ளது.
சகலவிதமான சரும நோய்களை நீக்க வல்லவர் இத்தலத்து இறைவன் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சூரிய புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி நீலோத்பவ மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்தால் ரோக நிவர்த்தி பெறலாம் என்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.
கார்கோடன் என்ற நாகத்தால் தீண்டப்பட்டு உருமாறிய நளமகாராஜன் இத்தலத்து இறைவனை வேண்டி தன் பழைய உருவைப் பெற்றதாக தல புராணம் கூறுகிறது. பொதுவாக நோய்களில் இருந்தும், கடன் பிரச்னைகளிலிருந்தும் மீட்டு நல்வழியை இத்தலத்து இறைவன் காட்டுவார் என பக்தர்கள் நம்புகின்றனர்.
மயிலாடுதுறையிலிருந்தும் காளியிலிருந்தும் இத்தலம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது. பொன்னூர் என்னும் கிராமத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment