Wednesday, August 31, 2016

தோஷங்களை நீக்கும் மம்மியூர் கோயில்!

தோஷங்களை நீக்கும் மம்மியூர் கோயில்!

ஸ்ரீகிருஷ்ண பகவான் சொர்க்கத்திற்குச் சென்ற பின் துவாரகை கடலில் மூழ்கியது. அந்த நேரத்தில் மகா விஷ்ணுவின் விக்கிரகம் தண்ணீரில் மிதந்து வந்தது. 
குருவும், வாயுவும் சேர்ந்து விக்கிரகத்தை எடுத்துப் பிரதிஷ்டை செய்வதற்கு, வானில் சஞ்சரித்தபடி தகுந்த இடத்தைத் தேடிக் கொண்டிருந்தனர்.  வாசுதேவனும் ஸ்ரீ கிருஷ்ணனும் பூஜை செய்திருந்த அந்த விக்கிரகத்தின் தெய்வீக ஒளி ரிஷிகளுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.
குருவும், வாயுவும் கேரளக் கரைக்கு வந்த போது பரசுராமரைக் கண்டனர். அவர் காட்டிய வழிப்படி, மகாதேவன் பல யுகங்களாகத் தவம் செய்து வந்த ருத்ர தீர்த்தக் கரைக்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களைக் கண்டு மகிழ்ந்த பரமசிவன் அவர்களை வர வேற்று, தனக்கு அருகே அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்தார். அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட மகா விஷ்ணுவின் விக்கிரகமே மம்மியூரப்பன் ஆலயத்தில் மகாதேவனின் அருகே தனி ஆலயத்தில் உள்ளது.
காலப்போக்கில் இந்தத் தலம் மம்மியூர் எனவும், இங்குள்ள மகாதேவன் மம்மியூரப்பன் எனவும் அழைக்கப்படுகிறார்.
கலியுகம் தொடங்கும் முன்பே உள்ள திருக்கோவில் என்ற பெருமைக்குரிய ஆலயம் மம்மியூரப்பன் ஆலயம். சிவபெருமானும், மகா விஷ்ணுவும் ஒரே ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அதிசயம் இந்த ஆலயத்தில் தான் உள்ளது.
கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் ஆலயத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மம்மியூரில் அமைந்துள்ளது மம்மியூரப்பன் ஆலயம்.
எந்த ஆலயத்திலும் இல்லாத சிவபெருமானும், மகா விஷ்ணும் இந்த ஆலயத்தில் தனித்தனியாக எழுந்தருளியுள்ளனர். இருவருக் கும் ஒரே நேரத்தில்  பூஜைகள் நடைபெறுகின்றன. இரண்டு அர்ச்சகர்கள் தனித்தனியே இருவருக் கும் ஒரே நேரத்தில் பூஜைகளையும் ஆராதனைகளையும் நடத்தும் சம்பவம் இந்த ஓர் ஆலயத்தில் மட்டுமே நடக்கும் அதிசயம் எனலாம்.
ஆலயத்தின் முகப்பு மண்டபத்தைக் கடந்தவுடன் ஒரு பெரிய ஆலமரம் அதைத் தொடர்ந்து பெரிய மண்டபம் உள்ளது. அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன. அதைத் தொடர்ந்து மம்மியூரப்பனின் கருவறை உள்ளது.
ஆலயத்தின் வடபுறத்தில் பகவதியம்மன் சன்னதி அமைதியான சூழலில் அமைந்துள்ளது. அன்னை மேற்குத் திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள்.
குருவாயூரப்பனைத் தரிசிக்க வருபவர்கள் அந்த ஆலயத்திலிருந்து 1 1/2 கி.மீ. தொலைவில் உள்ள மம்மியூரப்பன் ஆலயத்திற்கு வந்து மகாதேவனையும், மகா விஷ்ணுவையும் தரிசனம் செய்தால் மட்டுமே அவர்களுடைய புண்ணிய பயணம் பூர்த்தியாகும் என்பது வழிவழியாக வரும் ஐதீகம்.
இந்த ஆலயத்தில் மகாதேவனுக்கும் உள்ள முக்கியத்துவம் மகா விஷ்ணுவுக்கும் தரப்படுகிறது.
காலை 4.45க்கு ஆலயம் திறந்தால் நிர் மால்ய தரிசனம், எண்ணெய் அபிஷேகம், மாலை சார்த்துதல், மலர் நைவேத்தியம், திருமதுர நைவேத்தியம் முதலியவற்றைச் செய்கின்றனர்.
அனைத்து தினங்களிலும் மகாதேவனுக்கும், மகா விஷ்ணுவிற்கும் ரிக்வேத தாரை, பாலாபிஷேகம், உஷ பூஜை முதலியன நடைபெற்று பகல் 12.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் மாலை 4.45 க்குக் கோவில் திறக்கப்படுகிறது.
பின் தீபாரதனை, உமா-மகேஸ்வர பூஜை, இரவு பூஜைக்குப் பிறகு, அன்ன நைவேத்தியம், பால் பாயசம், அப்பம் முதலியவற்றை எல்லா தெய்வங்களுக் கும் நைவேத்தியம் செய்து, இரவு 8.30 மணிக்கு ஆலயம் சாத்தப்படுகிறது.
இந்த ஆலயத்தில் ஆதி காலம் முதல் கோவிலின் ஆச்சார முறைப்படி வேத மந்திரம் சொல்லி, எல்லாச் சடங்குகளையும் விதிமுறைப்படி நடத்தி வருகின்றனர்.
1930 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தில் நடப்பட்ட ஆலமரம் ஒன்று இப்போது வளர்ந்து நெடிதுயர்ந்து, சுவாமி சன்னதியின் முன் ராட்சஸ உருவில் நிற்கிறது.
1961 ஆம் ஆண்டு ஒரு பெண் இந்த ஆலமரத் துக்கு உபநயனம் நடத்தி, வேத மந்திர விதிமுறைப்படி எல்லாச் சடங்குகளையும் செய்து வைத்தார். பின், ஆலமரத்தை ஒரு வரனாகப் பாவித்து, மணப் பெண்ணாக வேப்ப மரத்தை நட்டு வைத்து, வேத மந்திரங்கள் சொல்லி, வாத்தியங்கள் முழங்க, இரண்டுக் கும் திருமணம் நடத்தி வைத்தார்.
பத்து நாட்கள் நவராத்திரி விழா இந்த ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி மண்டபத்தில் வாணி தேவிக்கு விசேஷ பூஜையும், அனுமனுக்கு வடை மாலை சாத்துதலும், அஷ்டமி தினத்தில் பூஜைக்காக புத்தகங்கள் வைப்பதும், நவமி நாட்களில் லட்சார்ச்சனையும் இங்கு நடைபெறுகிறது.
விஜயதசமி நாளில் நாட்டின் பல திசைகளிலிருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு வந்து சேர்கின்றனர். அவர்களுக்குத் தலைமை அர்ச்சகர்கள் ஹரிஸ்ரீ எழுதப் பயிற்று விக்கும் சம்பிரதாயம் நம்மை வியக்க வைக்கும் நிகழ்ச்சி என்பதில் சந்தேகமே இல்லை.
இங்கு நடக்கும் பூஜைககல் கலந்து கொள்வதால் தாம்பத்தியத்தில் நிம்மதியும், புத்திர பாக்கியம் ஏற்படுவதுடன், அனைத்துத் தோஷங்களும் பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment