Wednesday, August 31, 2016

யானையின் எடை எவ்வளவு..?

யானையின் எடை எவ்வளவு..?

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.
''யானையின் எடையை எப்படி அறிவது?'' என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ''நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்'' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.
அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.
எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.
எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

- வெ. இறையன்பு

No comments:

Post a Comment