Monday, May 30, 2016

தன்னை மறவா தன்மை

“ஞாபகம் வருதே .. ஞாபகம் வருதே” 

ஏதோ ஒரு சேனலில் , சேரன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார் .

அந்த “ஆட்டோகிராப்” பாடல் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, இயக்குனர் சேரன் எப்போதோ ஒருமுறை , ஏதோ  ஒரு  பத்திரிகை  பேட்டியில் சொன்னது ஞாபகம் வந்தது ..!

# இயக்குனர் ஆனபின் முதன்முதலாக கார் வாங்குகிறார் சேரன் ...புதிய காரில் குடும்பத்தோடு வடபழனி முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்கிறார்...
டிரைவர் காரை ஓட்ட , 
அருகில் சேரன் அமர்ந்திருக்கிறார் !

சென்னை ரோடுகளில் கார் ஓட்ட , 
வித்தைகள் பல தெரிந்திருக்க வேண்டும்..! 
அப்படி கற்றுக்  கொண்ட  வித்தைகள் அத்தனையும் காட்டி , காரை  டிரைவர் வடபழனி சாலைகளில் வளைத்து நெளித்து ஓட்டிக்   கொண்டிருக்கிறார் !
கொஞ்ச நேரத்தில் ,  குறுகலான ஒரு ரோட்டில் திரும்பிய கார்  , 
நெரிசல்களுக்கிடையே புகுந்து தவழ்ந்து செல்கிறது ...!
 
திடீரென  சாலையின் ஓரமாக செல்ல வேண்டிய ஒரு சைக்கிள்காரர், திணறலோடு சைக்கிளை ஓட்டி , தடுமாறி குறுக்கே வந்து விழ  , கடுப்பான டிரைவர் கத்துகிறார் ..

“டேய் கஸ்மாலம் ..பாத்துப் போக மாட்டியா..?” 

அமைதியாக அமர்ந்திருந்த சேரன் , இப்போது டிரைவரை திரும்பிப் பார்த்து சொல்கிறார் .. “வேண்டாம் அண்ணே...சைக்கிள்ல போறவரை திட்டாதீங்க..!”

டிரைவருக்கு ஒன்றும் புரியவில்லை...! 

சைக்கிளில் போனவர் சேரனுக்கு தெரிந்தவராக இருப்பாரோ..?
ஒருவேளை சொந்தக்காரராக இருக்கலாமோ..?

கியரை மாற்றிக் கொண்டே கேட்டு விட்டார் டிரைவர் . 
“ஏன் ஸார் ...! சைக்கிள்ல போனவரை நான்  திட்டினதுக்கு நீங்க  ஏன்  இவ்வளவு  FEEL பண்ணறீங்க..?”

அமைதியாக தன் தாடையை தடவிக் கொண்டே சேரன் சொன்னது இதுதான் : “ஏன்னா கொஞ்ச காலம் முன்னால  இதே ரோட்டில , நானும் இப்படி சைக்கிளில் போய்க்கிட்டிருந்தவன்தான்..!”

# சேரனின் படங்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை விட , 
அவரது இந்த “தன்னை மறவா தன்மை” எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்..!

சேரன் சைக்கிளை விட்டு இறங்கி விட... வேறு சேனலை மாற்றினேன் ..!

சன்ஃலைபில் ஒரு பழைய பாடல் ஓடிக் கொண்டிருந்தது..

“தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே”

ஆம் !

# தன்னைத் தான் நேசிப்பது மனித  மனம் !
தன்னைப்  போல பிறரையும் நேசிப்பது 
 தெய்வீக  குணம் ..!.

No comments:

Post a Comment