Thursday, May 19, 2016

இஸ்லாமியர்கள் முரசு கொட்டும் திருத்தணி.

இஸ்லாமியர்கள் முரசு கொட்டும் திருத்தணி. 

விரையிடங் கொளும் போதினுள் மிக்க பங்கயம் போல் 
திரையிடங்  கொளும் நதிகளிர் சிறந்த கங்கையைப் போல் 
தரையிடங் கொளும் பதிகளிர் காஞ்சி யந்தலம் போல் 
வரையிடங்களிர் சிறந்த[து] இத் தனிகை மால் வரையே.

என்று  கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்திலே சொல்கிறார். 

 இதன் பொருள். மலர்களிலே சிறந்தது தாமரை, நதிகளில் சிறந்தது கங்கை, நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகர். அதே போல் மலைகளில் இந்த திருத்தணி மலை மிக சிறந்தது என்று முருகபெருமான் வீற்று இருக்கும் எந்த மலைக்கும் கொடுக்காத சிறப்பை கச்சியப்ப சிவாச்சாரியார் இந்த தணிகை மலைக்கு கொடுக்கிறார். 

அதுசரி. நகரங்களில் சிறந்தது காஞ்சி என்று கச்சியப்ப சிவாச்சாரியார் சொல்கிறார் என்றால். அவர் தொண்டை நாட்டு காரர். காஞ்சிபுரம் அவரது சொந்த ஊர் என்று நாம் சற்று அலட்சியமாக அவர் சொல்வதை ஒதுக்கி விடலாம். ஆனால்?  காஷ்மீர கவி காளி தாசர் நகரேஷு காஞ்சி என்று காஞ்சியை போற்றுகிறார். 

ஏசு கிருஸ்து பிறப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே காஞ்சி புகழ்பெற்ற ஒரு நகராக. அதிலும் குறிப்பாக கல்விக்கு புகழ்பெற்ற ஒரு நகராக விளங்கியிருக்கிறது. 

2600 ஆண்டுகள் பழமையான பீகார் நாளந்தா பல்கலைகழகம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி கற்பித்த நாளந்தா பின்னர் அன்னியர் படை எடுப்பின் பொழுது அழிக்கப்பட்டது. கிட்டதிட்ட நாளந்தா போன்றே பல கல்லூரிகள், பல்கலை கழகங்கள் காஞ்சியிலும் நாளந்தா காலத்திலேயே இருந்து இருக்கிறது என்பது நமக்கு சில சங்க இலக்கிய பாடல்கள், நுல்கள் மூலம் தெரியவருகிறது. ஆனால் போதிய ஆதாரம்.இன்னும் நமக்கு கிடைக்கவில்லை. மேலும் நாளந்தாவில் அன்று பேராசிரியர்களாக இருந்த தர்ம பாலர் போன்ற  பலர் காஞ்சிபுரத்து காரர்கள்  தான். விஞ்ஞானி பாஸ்க்கராசார்யா காஞ்சிபுரத்து காரர் தான். 

 அன்று தெற்க்கே காஞ்சி, வடக்கே காசி, காஷ்மீரம் முதலான இடங்களில் பல பல்கலைகழகங்கள் இருந்து உள்ளது. அன்று வட நாட்டில் இருந்து பலர் காஞ்சிக்கு வந்து படித்து உள்ளார்கள். 

திருத்தணியின் சிறப்புகள் 

இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால்  பச்சரிசி மலையென்றும் தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால்   புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. 

365 நாட்களை குறிக்கும் விதமாக 365 படிகள். 

பெருமாள் கோவில் போல் சடாரி சார்த்தி துளசி தீர்த்தம் தரும் ஒரே முருகன் கோவில் இது தான். 

அருணகிரி நாதர் வள்ளிமலையை தரிசனம் செய்து விட்டு திருத்தணி வந்தார். இத்தனை ஆண்டுகள். நாம் தணிகை வேலணை தரிசனம் செய்யாமல் இருந்து விட்டோமே என்று வருந்துகிறார்.  66 திருப்புகழ் திருத்தணிக்காக பாடியிருக்கிறார். 

 அருணகிரி நாதரின் அதிக திருப்புகழ் பெற்ற முருகன் ஸ்தலங்களில் திருத்தணியும் ஒன்று. 

 சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி. முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி. 

பசுவின் உடல் முழுக்க பால் இருந்தாலும். அதன் மடியிலிருந்து  தான் நாம் பால் பெற முடியும். அதன் காதிலிருந்தோ, கொம்பிலிருந்தொ முடியாது. அதே போல். முருக பெருமானின் அருட் பேராற்றல் உலகம் முழுவதும். பல்வேறு இடங்களில், ஸ்தலங்களில் பரவியிருந்தாலும். ஒவ்வொரு ஷேத்ரதிற்கும் தனியாக ஒரு விசேஷம் உண்டு. அதை போல் தான் இந்த திருத்தணியும்.

  இங்கே முருக பெருமான் கோபம் தணிந்து மிகுந்த மகிழ்ச்சியோடு, குளிர்ச்சியோடு அமர்ந்து இருக்கிறார். இவரை நாம் வழிபட்டால். நமக்கும் அதே மகிழ்ச்சி, குளிர்ச்சி கிடைக்கும். இவரை தொடர்ந்து நாம் வழிபட, வழிபட. நமது மனதில் உள்ள தீய எண்ணங்களான காமம், மோகம் முதலியவை  நெருப்பில் இட்ட பஞ்சு போல் அழிந்து போகும்.

 மேலும் பழனி முருகன் நவ பாஷாணத்தால் ஆனவர் என்பது. முருக பக்தர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. திருத்தணி முருக பெருமானும் நவ பாஷாணத்தால் ஆனவர் தான். திருத்தணி முருகன் மார்பில் ஒரு குழி  உண்டு. அதில் சார்த்தப்படும் சந்தனம் எல்லா பிணிகளையும் போக்கவல்லது. 

 மேலும் தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்னும் வெள்ளை யானை. கற்ப்பக விருட்சம், காமதேனு போல் செல்வம் தரும் ஒன்று. அந்த யானைக்கு இந்த திருத்தணி மிக பிடித்து போக அது இங்கேயே தங்கி விட்டது. அதனால் இந்திரனின் செல்வம் குறைய ஆரம்பித்தது. பின்னர் முருக பெருமான் ஆணையிட. அது கிழக்கு பக்கம் தேவ லோகத்தை நோக்கி தனது இரண்டு பார்வைகளில்   ஒன்றை செலுத்தியது. அதனால் இந்திரனின் பிரச்சனையும்  தீர்ந்தது. இங்கே மயிலுக்கு பதில் யானை வாகனமாக இருக்க இது தான் காரணம். 

 சப்த ரிஷிகளும் இங்கே வழிபட்டு 7சுனைகளை இங்கே அமைத்து உள்ளார்கள்.  

 சங்க கால புலவர் நக்கீரரால் பாட்பெற்ற ஸ்தலம் திருத்தணி 

திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். திருத்தணிக்கு கழுக்குன்றம் என்றும் ஒரு பெயர் உண்டு. 

முருக பக்தர்களில் 20 ம் நுற்றாண்டில் முருகனை கண்ணால் கண்ட 2 மிகப்பெரிய மகான்கள் ஒருவர் பாம்பன் ஸ்வாமிகள், இன்னொருவர் வள்ளிமலை ஸ்வாமிகள். இருவரது வாழ்விலும் திருத்தணி முருகன் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். 

 சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்ஷிதர் பல பாடல்களை பாடியுள்ளார். அவரை முதலில் பாட வைத்தது இந்த திருத்தணி முருகன் தான். திருத்தணி முருகனை தரிசிக்க வந்தார் முத்துஸ்வாமி தீட்சிதர். அவர் படிக்கட்டுக்களில் ஏறிச் செல்லும்போது எதிர்ப்பட்ட முதியவர் ஒருவர், ‘முத்துஸ்வாமி!’ என்று அழைத்து தீட்சிதரின் வாயில் கற்கண்டு ஒன்றைப் போட்டாராம். அந்தக் கற்கண்டை சுவைத்ததும் பரவச நிலை அடைந்தார் தீட்ஷிதர். மறு கணமே ‘ஸ்ரீநாதாதி குரு குஹோ’ என்ற கீர்த்தனை பிறந்தது. முதியவராக வந்தது முருகப் பெருமானே என்றுணர்ந்த முத்துஸ்வாமி தீட்ஷிதர், திருத்தணி முருகன் மீது எட்டு கிருதிகளைப் பாடினார். அவையே, புகழ்பெற்ற ‘விபக்தி கீர்த்தனைகள்’ ஆகும்.

இங்கே 2 உற்சவர்கள். ஒரு உற்சவர் 1 முகம் 4 கரங்களோடு ருத்ராக்ஷ விமானத்தில் காட்சி தருகிறார். ஒரு லட்சம் ருத்ராக்ஷங்களால் ஆன விமானம் இந்த ருத்ராக்ஷ விமானம். இன்னொரு முருகன் ஆறு முகம் பன்னிரு கரங்களோடு காட்சி தருகிறார். மேலும் இங்கே வள்ளி, தேவானை இருவருக்குமே தனி, தனி சந்நிதி. 

 என்னை பொறுத்தவரை இந்த கோவிலில் மிகப்பெரிய ஹை லைட். ராமேஸ்வரம், சபரி மலை போல். இந்த கோவிலும் ஹிந்து, இஸ்லாம் ஒற்றுமைக்கு எடுத்து காட்டாக இருக்கும் ஸ்தலம். 

 இந்த பகுதியை 200 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட காதர் என்னும் நவாபிற்கு ஒரு பெரிய நோய் வந்தது. அவர் நவபாஷானத்தின் அறிவியல் மகத்துவம். அந்த நவபாஷாணத்தால் ஆன இந்த தணிகை முருகனின் அருள் மகத்துவம் இரண்டையும் கேள்விப்பட்டு. இந்த ஸ்தலத்து முருகனை வழிபட்டு. பக்தியோடு திருத்தணி முருகன் கோவில் சந்தனத்தை பூசி அதை உண்டதில். அவரின் நோய் நீங்கியது. அதன் பின்னர். இந்த கோவிலில் நாலாவது   பிரகாரமான ரத வீதியில் அந்த காதர் ஒரு சிவலிங்கம் அமைத்தார். பிரசன்ன காதரீஸ்வரராக சிவன் இன்று அருள் பாலித்து கொண்டு இருக்கின்றார். 

 இன்றும் ஸ்வாமி புறப்பாடின் பொழுது. நாலாவது பிரகாரத்தில் உள்ள நவாப் வாத்திய மண்டபத்தில் ஒரு இஸ்லாமியர் முரசு வாத்தியம் வாசிப்பார். 

 இந்திரனின் வாகனமான ஐராவதம் விரும்பி வந்து தங்கிய பதி இது. சூரனால் இந்திரன் இழந்த அனைத்து செல்வங்களையும் இந்திரன் பெற்ற பதி இது. இந்த திருத்தனிக்கு பரி பூரண பதி என்றும் ஒரு பெயர் உண்டு. அணைத்து செல்வங்களையும் பெற்ற ஊர் என்பதே இதன் பொருள். 

செல்வம் தரும் ஸ்தலங்களில் இந்த  திருத்தணியும் ஒன்று. நோய் நீக்கும் ஸ்தலங்களில் இந்த திருத்தணியும் ஒன்று, ஞானம் வழங்கும் ஸ்தலங்களில் இந்த திருத்தணியும் ஒன்று. 

தணிகை முருகனுக்கு வில்வ அர்ச்சனை செய்தல் மிக , மிக விசேசம். நாலே நாலு வில்வ இலைகளை 10 ரூபாய் க்கு இங்கே விற்கிறார்கள். அதனால் தணிகை முருகனை தரிசிக்க செல்பவர்கள் தேவையான அளவு வில்வ இலைகளை ஒரு பேப்பரில்  கட்டி கொண்டு செல்லுங்கள். [ பிளாஸ்டிக் கூடாது. 

நானிலம் போற்றும், நாலாயிரம் ஆண்டுகள் பழமையான மத நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்கும் தனித்துவமான திருத்தணி வேலணை, மகத்துவமான திருத்தணி வேலணை நாம் தொழுது எல்லா நலங்களும், வளங்களும் பெறுவோமாக. 

  திருதணிகை திருமுருகன் திருபாதங்கள் போற்றி

No comments:

Post a Comment