ஓஷோ வாழ்க்க்கை
ஓஷோவின் வாழ்க்கைக் குறிப்பு
1931 – 1953 ஆரம்ப வருடங்கள்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ந் தேதி ஓஷோ பிறந்தார். துணிக்கடை வைத்திருந்த ஒரு ஜைனரின் பதினோரு குழந்தைகளில் ஓஷோதான் மூத்தவர். அவரைப் பற்றிய கதைகள், சிறுவயது முதலே அவர் சுதந்திரமானவராகவும், எதிர்க்கத் தயங்காதவராகவும் எல்லா சமூக, மத, தத்துவரீதியான நம்பிக்கைகளையும் எதிர்த்து கேள்வி கேட்பவராகவும் இருந்ததாக அவரை விவரிக்கின்றன. இளைஞனாக இருந்தபோது அவர் பல தியான முறைகளை சோதனை செய்து பார்த்தார். ஜபல்பூரில் உள்ள டி.என். ஜெயின் கல்லூரியில் தத்துவயியல் பயின்று கொண்டிருக்கையில் தனது இருபத்தி ஒன்றாவது வயதில் 1953 ஆம் வருடம் மார்ச் 21 ந் தேதி ஓஷோ ஞானமடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும். கௌதமபுத்தர், கபீர், இரமணர், மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.
1953 – 1956 கல்வி
1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.
1957 – 1968 பல்கலைகழக பேராசிரியர் மற்றும் பொதுமேடை சொற்பொழிவாளர்
1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார்.
1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.
ஆணித்தரமாகவும் அருமையாகவும் பேசக் கூடிய பேச்சாளரான ஓஷோ இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று ஏராளமானமுறை பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் சொற்பொழிவாற்றி வருகிறார். பொதுக் கூட்டத்திலேயே சம்பிராயமான மத தலைவர்களுக்கு சவால் விடுக்கிறார்.
1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் உள்ள பரந்த மைதானங்களில் 20,000 முதல் 50,000 பேர் வரை திரளும் கூட்டங்களிடையே அவர் உரையாற்றுகிறார். பத்து நாட்கள் தியான பயிற்சி கொண்ட முகாம்களை வருடத்திற்கு நான்கு முறை நடத்துகிறார். 1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார். எந்த கட்டுப்பாடும் அற்ற மூச்சு விடுதல் பயிற்சியும், உள் உணர்வுகளை வெளிக் கொட்டுதலும் பின் மௌனமும் அசையாதிருத்தலும் ஆகிய செய்முறைகளைக் கொண்ட தியானம் இது. இந்த தியானம் அப்போதிலிருந்து உலகம் முழுவதிலும் உள்ள டாக்டர்கள், ஆசிரியர்கள், தொழில்முறை பயிற்சியாளர்கள் மனோதத்துவ வல்லுனர்கள் என எல்லோராலும் இன்று வரை உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது.
1969 – 1974 பம்பாய் வருடங்கள்
1960 ன் பிற்பகுதியில் அவர் இந்தியில் பேசிய பேச்சுக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாயின.
1970 ஜூலையில் பம்பாய்க்கு வந்த அவர் 1974 வரை அங்கேயே வசித்தார். இந்த கால கட்டத்தில் பகவான் ஸ்ரீ ரஜனீஷ் என்று அழைக்கப்பட்ட அவர் ஆன்மீக சாதகர்களுக்கு தீட்சை அளித்து சிஷ்யர்களாக்கினார். தன்னை கண்டறிதலும் தியானமும் கொண்ட புது சந்நியாசம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பாதையில் இந்த உலகத்தையோ மற்ற எதையுமோ துறக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘துறவறம்’ என்பதைப் பற்றி ஓஷோ கூறுவது வழிவழியாக உள்ள கிழக்கத்திய முறைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவரைப் பொறுத்தவரை இந்த வெளி உலகை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய கடந்த காலத்தை, ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறை மேல் சுமத்தும் மனக்கட்டுத் திட்டங்களை, நம்பிக்கை அடிப்படையிலான அமைப்பு முறையைத்தான் துறக்க வேண்டுமெனச் சொல்கிறார்.
நாடு முழுவதிலிருந்து பேசுவதற்கு வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்வதை அவர் நிறுத்தி விடுகிறார். ஆனால் ராஜஸ்தானில் உள்ள மவுண்ட் அபு என்ற இடத்தில் தியான முகாம்களை தொடர்ந்து நடத்துகிறார். தனது சக்திகள் அனைத்தையும் தன்னைச் சுற்றி பெருகி கொண்டே வரும் தனது சன்னியாசிகளுக்காகவே அர்ப்பணிக்கிறார்.
இந்த சமயத்தில் வெளிநாட்டவர்களும் வருகின்றனர். புது சன்னியாசம் பெறுகின்றனர். அவர்களில் பலர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மனித வளர்ச்சியின் உயர் சாத்தியக்கூறு பற்றிய இயக்கத்தை சேர்ந்த முன்னிலை மனோ தத்துவவியலாளர்கள் ஆவர். அவர்கள் தங்களது அடுத்த கட்ட உள் வளர்ச்சி நிலைக்காக அவரை தேடி வருகின்றனர். கிழக்கின் ஞானமும் மேற்கின் அறிவியலும் இணைந்த இந்த கால மனிதனுக்கான புதிய, அசலான, தியானமுறை அனுபங்களை அவர்கள் ஓஷோவிடம் அடைகின்றனர்.
1974 – 1981 பூனா ஆசிரமம்
இந்த ஏழு வருடங்கள் ஓஷோ ஒவ்வொரு நாள் காலையிலும் 90 நிமிடங்கள் ஒரு மாதம் இந்தியிலும் அடுத்த மாதம் ஆங்கிலத்திலும் என ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் யோகா, ஜென், தாவோ, தந்திரா, சூபி என எல்லா ஆன்மீக பாதைகளின் உட்பொருளையும் எடுத்துக் காட்டி உரை நிகழ்த்துகிறார். கௌதமபுத்தர், ஜூஸஸ், லாவோட்ஸீ மற்றும் அனைத்து ஞானமடைந்த ஞானிகளை பற்றியும் எடுத்துரைக்கிறார். இந்த உரைகள் 300 புத்தகங்களாக தொகுக்கப்பட்டு 20 மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.
இந்த வருடங்களில் மாலையில் அன்பு, பொறாமை, தியானம், கோபம் போன்ற தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். ‘தரிசனம்’ எனப்படும் இந்த கேள்வி – பதில் 64 தொகுப்புகளாக உள்ளது. அவற்றில் 40 மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காலக் கட்டத்தில்தான் கிழக்கத்திய தியான முறைகளையும் மேற்கத்திய மனோதத்துவ முறைகளையும் உள்ளடக்கிய பல்வேறு குழு மற்றும் தனி அகச்சிகிச்சை முறைகள் ஓஷோவை சுற்றி எழுந்த கம்யூனில் உருப்பெற்றது. உலகின் பல்வேறு இடத்திலிருந்தும் மனோ தத்துவ நிபுணர்கள் வந்தனர். 1980 ல் ‘உலகின் மிக சிறந்த அருமையான வளர்ச்சி மற்றும் அக சிகிச்சை மையம்’ என்ற பெருமையை ஓஷோ கம்யூன் பெற்றது. ஒவ்வொரு வருடமும் 1,00,000 மக்கள் வந்து சென்றனர்.
1981 – ஓஷோவிற்கு முதுகுவலி மோசமானது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் தினமும் உரையாற்றி வந்த ஓஷோ 1981 மார்ச்சில் சொற்பொழிவிலிருந்து அமைதிநிலையை தானே மேற்கொள்கிறார். அவசரமாக அறுவை சிகிச்சை செய்யும் நிலை வரலாம் என்பதால், அவரது டாக்டர்களின் அறிவுரையின் பேரில் அமெரிக்கா பயணப்படுகிறார். இந்த வருடத்திலேயே அவரது அமெரிக்க சீடர்கள் 64,000 ஏக்கர் நிலம் அமெரிக்காவில் ஓரேகான் என்று அழைக்கப்படும் ஒரு மாநிலத்தில் வாங்கி அவரை அங்கு அழைக்கின்றனர். இப்படியாக அவர் அமெரிக்காவில் தங்கி இருக்க சம்மதித்து நிரந்தர குடியிருப்புக்கு ஒரு விண்ணப்பம் அவர் சார்பில் கொடுக்க அனுமதிக்கிறார்.
1981 – 1985 ரஜ்னீஷ்புரம்
தரிசு நிலமாக பாழடைந்துள்ள மத்திய ஓரேகானின் பகுதியிலிருந்து விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட, தன்னிறைவு பெற்ற, முன்மாதிரியான கம்யூன் ஒன்று எழுச்சி பெறுகிறது. அதிக உழைப்பு தேவைப்படுவதாலும், லாபமீட்டும் அளவு பயன்கொடுக்காது என்பதாலும் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பசுமையாக்கப்படுகின்றன. ரஜனீஷ்புரம் என்ற நகரம் உருப்பெறுகிறது. அதில் 5000 பேர் வசிக்க ஆரம்பிக்கின்றனர். கோடைகால கொண்டாட்டம் அங்கு நடத்தப்படுகிறது. அதில் உலகம் முழுவதிலும் இருந்து 15,000 பேர் பங்கேற்கின்றனர். வெகு விரைவிலேயே அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவில் ரஜனீஷ்புரம் மிகப் பெரிய அதே சமயம் மிகவும் சர்ச்சைக்கிடமான ஒரு ஆன்மீக்குடியிருப்பாக மலர்கிறது.
கம்யூனிற்க்கும் புதுநகருக்கும் அதன் வளர்ச்சியோடு கூடவே எதிர்ப்பும் வலுத்தது. சமூகத்திற்கு எதிரான புது எழுச்சிகளை கண்டு எரிச்சலுறுகின்ற தன்மை அமெரிக்க சமுதாயத்தில், ஜனாதிபதி ரீகனின் இந்த காலகட்டத்தில் எல்லா மட்டத்திலும் பரவி கிடந்தது. அதற்கு ஏற்றார்ப்போல உள்ளுர் மாநில மத்திய அமெரிக்க அரசியல்வாதிகள் ரஜனீஷ்புர மக்களுக்கு எதிராக அனல் கக்கும் பேச்சை வெளிப்படுத்தினர். அமெரிக்க குடியுரிமை சேவை மையம் (INS), அமெரிக்க உளவுத்துறை(FBI), அமெரிக்க கருவூலத்துறை, மது புகையிலை மற்றும் ஆயுத ஏஜென்ஸி(ATF) போன்ற பல பல ஏஜென்ஸிகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடி கோடியாய் செலவு செய்து, தேவையற்ற மற்றும் எந்த பயனும் அளிக்காத கம்யூன் பற்றிய ஆய்வுகளில், கம்யூனை தொந்தரவு செய்வது மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஈடுபட்டன. அதே போன்று மிகவும் பணச் செலவு செய்து கம்யூனுக்கு எதிரான பிரசாரம், ஓரேகான் மாநிலத்தில் நடத்தப்பட்டது.
1984 அக்டோபர் – ஓஷோ மூன்றரை வருட மௌனத்தை முடித்துக் கொண்டு தனது இருப்பிடத்திலேயே ஒரு சிறு குழுவினரிடம் பேச ஆரம்பிக்கிறார்.
1985 ஜீலை – ஜூலையிலிருந்து ஓஷோ தனது காலை சொற்பொழிவை ஆயிரக்கணக்கான சீடர்கள் கூடும் இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள தியான மண்டபத்தில் பேச ஆரம்பிக்கிறார்.
1985 செப் – அக் ஓரேகான் கம்யூன் அழிக்கப்படுகிறது.
1985 செப் 14ந் தேதி ஓஷோவின் அந்தரங்க காரியதரிசியும் மற்றும் கம்யூனின் பொறுப்பில் உள்ள சில அங்கத்தினர்களும் திடீரென கம்யூனை விட்டு வெளியேறுகின்றனர். அவர்கள் செய்த கொலை முயற்சி, டெலிபோன் உரையாடலை பதிவு செய்தல், விஷம் கொடுத்தல், தீ வைத்தல் போன்ற சட்ட விரோதமான பல செயல்கள் அம்பலமாயின. நடந்த குற்றங்களை கண்டுபிடிக்க ஓஷோ போலீஸ் துறையினரை அழைக்கிறார். ஆனால் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் இந்த புகாரை கம்யூனை அழித்துவிட கிடைத்த தங்கமான வாய்ப்பாக உபயோகப்படுத்திக் கொள்கின்றனர்.
அக்டோபர் 23 – அமெரிக்காவின் போர்ட்லேண்ட் மாநில தலைமை நீதிபதி ஓஷோ மற்றும் ஏழு பேர் குடியுரிமை சட்டத்தை ஏமாற்ற முயன்றதாக சிறிய குற்றங்களை ரகசியமாக சுமத்துகிறார்.
அக்டோபர் 28 – எந்தவித வாரண்ட்- டும் இல்லாமல் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரியும் உள்ளூர் போலீஸும் சேர்ந்து ஓஷோவையும் மற்றவர்களையும் துப்பாக்கி முனையில் நார்த் கரோலினாவில் உள்ள சார்லெட்டில் கைது செய்கின்றனர். மற்றவர்களை விடுதலை செய்துவிட்டு ஓஷோவை மட்டும் பனிரெண்டு நாட்களுக்கு ஜாமீன் கொடுக்காமல் பிடித்து வைத்திருக்கின்றனர். ஐந்து மணி நேரத்தில் ஓரேகான் வந்தடைந்து விடக்கூடிய பயணம் வந்துசேர நான்கு நாட்கள் பிடிக்கிறது. வழியில் ஓக்லஹோமா நகர சிறையில் ஓஷோ அவரது சொந்த பெயரில் இல்லாமல் டேவிட் வாஷிங்டன் என்ற பொய் பெயரில் வெளிஉலகத்திற்குத் தெரியாமல் வற்புறுத்தி அடைத்து வைக்கப்பட்டார். அவர் அந்த சிறையில் இருந்தபோதுதான் அவருக்கு ‘தாலியம்’ என்ற கொடுமையான விஷம் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதற்க்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.
நவம்பர் – ஓஷோவின் குடியுரிமை வழக்கிற்கு எதிராக பிரச்சாரங்களும் குரல்களும் கிளம்ப ஆரம்பிக்கின்றன. பாதுகாப்பற்ற ஓரேகானில் அவரது உயிரையும் மற்ற சந்நியாசிகளின் நிலையையும் கருத்தில் கொண்டு ஓஷோவின் வக்கீல்கள் அவர் மீது போடப் பட்ட 35 வழக்குகளில் இரண்டை “ஏற்கும் கோரிக்கை” என்ற பிரிவின் கீழ் ஒத்துக் கொள்கின்றனர். இந்த கோரிக்கையின் விதிகளின்படி பிரதிவாதி தனது குற்றமற்ற தன்மையை தொடர்ந்து வலியுறுத்தும் அதே சமயம் அரசு தரப்பில் அவரை குற்றவாளி என்று கருத இடமுண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறார். ஓஷோவும் அவரது வக்கீல்களும் ஓஷோவின் குற்றமற்ற தன்மையை கோர்ட்டில் தொடர்ந்து வலியுறுத்தவே செய்தனர். ஆனால் ஓஷோவுக்கு நான்கு லட்சம் டாலர்கள் அபராதமும் அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது.
ரஜனீஷ்புரத்தை அழிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று பலரும் கூறியது போலவே சார்லஸ் டர்னர் என்ற போர்ட்லேண்டின் அரசாங்க வக்கீல் பொது மேடையிலேயே அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.
1985 – 1986 உலக சுற்றுப் பயணம்
டிசம்பர் 1985 – ஓஷோவின் அந்தரங்க பணியாளர்களுக்கு விசா கொடுக்க மறுத்து இந்திய அரசாங்கம் அவரை தனிமைப்படுத்த முயற்சிக்கிறது.
1986 ஜன, பிப்ர – ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். அங்கு அவர் இருந்த இந்த இரண்டு மாதங்களும் தினமும் இருவேளையும் சொற்பொழிவாற்றுகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார்.
பிப்ர, மார்ச் – முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்க்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன.
இதைத் தொடர்ந்த இரண்டு வாரங்களில் அவர் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள 17 நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை.
மார்ச் – ஜூன் – மார்ச் 19ஆம் தேதி அவர் உருகுவே நாட்டிற்குச் செல்கிறார். மே 14ந் தேதி அந்த அரசாங்கம் ஓஷோ உருகுவேயின் நிரந்தர குடிமகனாக அங்கீகரிக்கப்படுவார் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்க்காக பத்திரிக்கையாளர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அந்த கூட்டத்திற்க்கு முந்தியதினம் இரவு வாஷிங்டன் வெள்ளை மாளிகையிலிருந்து டெலிபோன் மூலம் உருகுவே ஜனாதிபதி சன்குன் நெட்டியை அழைத்து ஓஷோவை உருகுவேயில் தங்க அனுமதித்தால் உருகுவே அமெரிக்காவிற்க்கு தர வேண்டிய 6 மில்லியன் டாலர் கடனை உடனடியாக அடைக்க வேண்டியிருக்கும் என்றும் மேற்கொண்டு கடன் எதுவும் தரப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டதாக ஜனாதிபதி சன்குன் நெட்டி பின்னர் ஒத்துக் கொள்கிறார். இதைத் தொடர்ந்து ஜீன் 18ந் தேதி ஓஷோவை உருகுவேயை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
ஜூன் – ஜூலை – இந்த மாதங்களில் அவர் முறையே ஜமைக்காவிலிருந்தும் போர்ச்சுக்கல்லில் இருந்தும் வெளியேற்றப் பட்டார். ஆக மொத்தத்தில் இதுவரை 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார்.
1987 – 1989 ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்
1987 ஜனவரி – அவர் பூனாவில் உள்ள ஆசிரமத்திற்கு திரும்ப வருகிறார். அது இப்போது ‘ரஜனீஷ்தாம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் ஓஷோவின் அன்பர்கள் என அறியப்பட்ட வெளிநாட்டவர் அனைவருக்கும் அனுமதி மறுப்பதை தொடர்ந்து செய்கிறது.
1988 ஜூலை – ஒவ்வொரு நாள் மாலை உரையின் இறுதியிலும் ஒரு தியானத்தை தானே முன்னின்று நடத்தத் துவங்குகிறார். இது இந்த 14 வருடங்களில் இதுவே முதல் முறை. மேலும் மிஸ்டிக் ரோஸ் (சூட்சம ரோஜா) என்ற புரட்சிகரமான ஒரு புதிய தியான யுக்தியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.
1989 ஜன – பிப்ர – அவர் பகவான் என்ற பெயரை விட்டுவிட்டு ரஜனீஷ் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொள்கிறார். அப்போது அவரது சீடர்கள் அவரை ஓஷோ என அழைக்க விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து அவரும் அதை ஏற்றுக் கொள்கிறார். வில்லியம் ஜேம்ஸின் வார்த்தையான ‘ஓஷியானிக்’ என்ற வார்த்தையிலிருந்து தான் ஓஷோ என்ற தன் பெயர் உருவானதாக விளக்குகிறார். ஓஷியானிக் என்றால் கடலில் கரைந்து விடும் அனுபவம், அப்போது அதை அனுபவிப்பவர் எங்கே ? அதற்குத்தான் நாம் ஓஷோ என்று கூறுகிறோம். ‘வானம் மலர் தூவி வாழ்த்தும் ஒரு ஆசீர்வதிக்கப்பட்டவர் ‘ என்ற அர்த்தத்தில் ‘ஓஷோ’ என்ற வார்த்தை கிழக்கு நாடுகளில் முற்காலத்தில் குறிக்கப் பட்டிருப்பதை பின்னர் ஓஷோ கண்டறிகிறார்.
1989 – மார்ச் – ஜூன் அவருக்கு கொடுக்கப்பட்ட விஷம் அவரது உடல்நிலையை மிகவும் பாதித்ததால் அதனுடைய பாதிப்புகளிலிருந்து மீள அவர் ஓய்வு எடுக்கிறார்.
1989 ஜூலை – அவரது உடல்நிலை சிறிது சீர்படுகிறது. ஓஷோ குருபூர்ணிமா கொண்டாட்டம் என்று பெயர் மாற்றப்பட்ட விழா நாட்களில் இருவேளையும் மௌன தரிசனம் தருகிறார்.
1989 ஆகஸ்ட் – மாலை வேளை தினமும் கௌதமபுத்தா மண்டபத்தில் தரிசனத்திற்கு வந்தமர்கிறார். அவர் மௌனமாக அமர்ந்திருக்க, இசை இசைக்கப்படுகிறது. “விவரிக்க இயலாத அதை உணர மட்டுமே வேண்டும். இது உள் நிலையை, தியான வெளியைப் பெறும் ஒரு மிகப் பெரிய அனுபவம்” என்று அவர் விளக்குகிறார். அவர் ‘ஓஷோ வெள்ளை உடை சகோதர சந்திப்பு’ எனக் கூறப்படும் விசேஷமான குழுவை ஏற்படுத்துகிறார். மாலை தரிசனத்திற்காக வரும் மக்கள் அனைவரும் வெள்ளை உடையில் வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். “இந்த சந்திப்பில் ஒரு அற்புதமான சக்தி சேகரமாகும், நாளுக்கு நாள் அவற்றின் திறன் மேலும் மேலும் பெருகும்.” என ஓஷோ கூறுகிறார்.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வார இறுதியில் மூன்றுநாள் தியானமுகாம் ஓஷோவால் வடிவமைக்கப்பட்ட தியான பயிற்சிகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. பங்கேற்பவர் அனைவரும் மெரூன் நிற அங்கி அணிந்துவர கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும் ஆசிரமத்தில் வேலை செய்யும் சந்நியாசிகள் அனைவரும் பகல் நேரத்தில் மெரூன் நிற அங்கியே அணியுமாறு ஓஷோ ஆலோசனை கூறுகிறார். அதனால் கம்யூன் பகல் நேரத்தில் மெரூன் நிற ஆடை அணிந்த மக்களாலும், மாலையில் வெள்ளை நிற ஆடை அணிந்த மக்களாலும் நிரம்பியிருக்கும் எனக் கூறுகிறார்.
1989 – செப் – ஓஷோ தனது ரஜனீஷ் என்ற பெயரை முற்றிலுமாக விட்டு விடுகிறார். அதன் மூலம் கடந்த காலத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டு விடுகிறார். அவர் ஓஷோ என்றே குறிப்பிடப் படுகிறார் அவரது ஆசிரமம் ‘ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனல்’ எனக் குறிப்பிடப் படுகிறது.
1990 ஓஷோ தனது உடலை விட்டு நீங்குகிறார்.
1990 ஜனவரி – ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஓஷோவின் உடல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் சீர் கெடுகிறது. ஜனவரி 18ந் தேதி மாலை கௌதம புத்தா மண்டபத்துக்கு வரமுடியாத அளவு அவர் மிகவும் பலவீனமடைகிறார்.
ஜனவரி 19 – அவரது நாடித்துடிப்பு தாறுமாறாகிறது. அவரது டாக்டர்கள் அவரிடம் இருதய சீரமைப்பு கருவி கொண்டுவருவதற்காக கேட்கும்போது ஓஷோ, “இல்லை, என்னைப் போக விடுங்கள், இயற்கை நேரத்தை நிர்ணயித்து விட்டது.” என்கிறார். அவர் மாலை 5 மணிக்கு உடலை விட்டு நீங்குகிறார். மாலை 7 மணிக்கு அவரது உடல் கௌதம புத்தா ஹாலுக்கு இறப்பு கொண்டாட்டத்திற்காக கொண்டு வரப் படுகிறது. பின் எரியூட்டுவதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப் படுகிறது. இரண்டு நாட்களுக்குப்பின் அவரது சாம்பல் ஓஷோ கம்யூன் இண்டர்நேஷனலுக்கு கொண்டு வரப் பட்டு சாங் டு ஸூ அரங்கத்திலுள்ள அவரது சமாதியில் வைக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்த நாட்களில் ஓஷோவின் மணமாக கம்யூனில் வீசும் அன்பும் தியானமும் கலந்த சூழ்நிலையை அனுபவிக்கவும் கொண்டாடவும் உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் பறந்து வந்த வண்ணம் உள்ளனர். அவர் தனது உடலை நீக்குமுன், “என்னை கடந்த காலத்தில் பேச வேண்டாம். என்னுடைய சுமையான இந்த உடலில் இருப்பதை விட இந்த உடலை விட்டபின் என்னுடைய இருப்பு பல மடங்கு மகத்தானதாக இருக்கும். எனது மக்களிடம் கூறுங்கள். அவர்கள் என்னை பலமடங்கு அதிகமாக உணரலாம். உடனடியாக என்னை அவர்கள் அறியலாம்.” என்று கூறுகிறார்.
எப்படி இந்த கம்யூன் தொடர்ந்து பெரிதாக வேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகிறார். இனி நான் உடலில் இல்லாமல் போய் விடுகையில் மேலும் பலர் வருவார்கள், மேலும் பலர் ஆர்வம் காட்டுவார்கள், அவரது கம்யூன் நமது கற்பனைக்கு எட்டாத வகையில் விரிவடையும் எனவும் கூறுகிறார். பிறகு கூறுகிறார், “நான் எனது கனவுகளை உங்களிடம் விட்டுச் செல்கிறேன்.”
1980 ல் உடலை விட்டு நீங்கியபின் என்ன நிகழும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ஓஷோ, “நான் என் மக்களிடம் கரைந்து விடுவேன். எப்படி கடலின் எந்த துளியை சுவைத்தாலும் அது ஒரே போல உப்பு சுவை கொண்டிருக்குமோ, அதே போல என் சந்நியாசிகள் எல்லோரிடமும் நீ ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவனின் சுவையை உணரலாம். நான் என் மக்கள் ஆனந்தமாகவும், பரவசமாகவும் வாழ தயார் செய்திருக்கிறேன், அதனால் நான் உடலில் இல்லாதது அவர்களிடம் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. அவர்கள் அதே போலவே வாழ்க்கையை வாழ்வார்கள். மேலும் எனது இறப்பு அவர்களிடம் மேலும் ஆழத்தை ஏற்படுத்தும்.” என்கிறார்.
1989 ல் இத்தாலியன் நாட்டு டிவி- யின் அதே போன்று கேள்விக்கு பதிலளித்த ஓஷோ, “நான் இயற்கையிடம் முழுமையாக நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். நான் கூறியதில் ஏதாவது உண்மை இருக்குமானால் அது அழியாமல் நிலைத்திருக்கும். என்னுடைய பணியில் ஆர்வமுள்ள மக்கள் எனது தீபத்தை தொடர்ந்து ஏந்தி செல்வர். ஆனால் எதையும் யார்மீதும் கத்தியின் மூலமாகவோ, ரொட்டியின் மூலமாகவோ, உணவைக் காட்டியோ திணிக்க மாட்டார்கள். நான் எனது மக்களுக்கு தொடர்ந்து ஒரு முன்னுதாரணமாக இருப்பேன், அப்படித்தான் எனது சந்நியாசிகளும் உணர்வார்கள். நான் அவர்கள் அவர்களாகவே வளர வேண்டும் என விரும்புகிறேன். உண்மையான அன்பு, அதன் அடிப்படையில் எந்த சர்ச், கோயில் போன்ற ஸ்தாபனங்களையும் உருவாக்க முடியாது, அதே போன்று விழிப்புணர்வு, அதை யாரும் உரிமை கொண்டாட முடியாது, அதே போன்று கொண்டாட்டம், மனமற்று அனுபவித்தல், குழந்தை போன்ற தூய்மையான கண்களோடு இருத்தல் போன்ற குணங்கள் கொண்டவர்களாய், எல்லா மக்களும் வேறு யாரோ ஒருவரின் படி அல்லாமல் தாங்களோ தங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கான வழி உள்ளே இருக்கிறது.”
No comments:
Post a Comment