கட்டிய, வெட்டிய
கட்டிய, வெட்டியவா. என்ன? தலைப்பு இது. கட்டிக்கோ, ஒட்டிக்கோ ராம்ராஜ் விளம்பரம் மாதிரி என்று நீங்கள் குழம்பலாம்.
பல சுவையான சரித்திர நிகழ்வுகளை உங்களுக்கு சொல்ல போகிறேன். அவற்றை தெரிந்து கொள்ள நீங்கள் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். அவ்வாறு பின்னோக்கி செல்ல நீங்கள் நேற்று, இன்று, நாளை படத்தில் வரும் டைம் மெஷின், 24 படத்தில் வரும் வாட்ச் போன்றவற்றை எல்லாம் பயன்படுத்த தேவையில்லை. நீண்ட, நெடிய இந்த பதிவை முழுமையாக வாட்ச் பண்ணி படித்தாலே போதும்.
சுமார் 1065 ஆண்டுகளுக்கு முன் சாளா என்னும் மாவீரர் புலியுடன் தனியாக ஆயுதங்கள் இன்றி மோதினார். அப்போது அதை வேடிக்கை பார்த்த மக்கள் ஹோய்சாளா, ஹோய்சாளா என்று கோஷம் இட்டார்கள். (ஹோய் என்றால் கன்னடத்தில் மோது; சாளா என்பது போரிட்டவரின் பெயர்.) இரண்டும் இணைந்து ஹோய்சாளா என்று மாறியது. புலியை வென்ற அந்த சாளாவுக்குப் பின் வந்தவர்கள் ஹோய்சாள வம்சம் என அழைக்கப்பட்டனர்.
கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்து 14-ஆம் நூற்றாண்டு வரை ஹோய்சாள வம்ச மன்னர்கள் அரசாண்டனர்.
950-ஆம் ஆண்டு ஆரக்கெள்ள என்பவரைத் தலைவனாகக் கொண்டு இவ்வம்சத்தின் வரலாறு தொடங்குகிறது.
அவருக்கு பின் வந்த நிரூபகமா தான் ஹோய்சாள சாம்ராஜ்யத்தின் முதல் மன்னர். நிரூபகமாக்கு பின் 2] வினயா தித்தா, 3] ஈரே யேங்கா 4] பல் லாலா, ஐந்தாவதாக வந்த விஷ்ணு வர்தணன் தான் ஹோய்சாள சாம்ராஜ்யத்தில் குறிப்பிடத்தக்க மன்னர் ஆவார். ஆம். சோழர்களில் எவ்வாறு ராஜேந்திர சோழனோ அதே போல் ஹோய்சாள சாம்ராஜ்யத்தில் விஷ்ணு வர்தணன்.
அன்று சைவ வெறியனாக இருந்த இரண்டாம் குலோத்துங்கனால் வைஷ்ணவர்கள் பல அவதிகளுக்கு உள்ளானார்கள். ராமானுஜ தாசனான ரங்கராஜ நம்பியை ரங்க ராஜர் சிலையோடு கட்டி கடலில் இரண்டாம் குலோத்துங்கன் வீசி எறிந்த கதை தசாவதாரம் படம் பார்த்த அனைவருக்குமே தெரியுமே. கிருமி கண்ட சோழன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழனின் கொடுமைகள் உச்சத்தை தொட. அதனால் ராமானுஜர் கர்நாடக தேசம் சென்றார். அதன்பின் ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான் ராமானுஜர் இருப்பிடத்தை சொல்ல மறுத்ததால். இரண்டாம் குலோத்தங்கன் கூரத்தாழ்வாரின் 2 கண்களையும் பிடுங்கினான்.
கிபி 840 இல் செத்து கிடந்த சோழ சாம்ராஜ்யத்திற்கு புத்துயிர் கொடுத்து புனர் நிர்மாணம் செய்தவர் விஜயாலய சோழன். அவர் காலத்தில் ஆரம்பித்து தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி குவித்தவர்கள் சோழர்கள்.
அத்தகைய சோழர்களே முதன்முறையாக நிலைகுலைந்தது எப்பொழுது என்றால். கிபி 1004 இல் கலியூரின் மீது படை எடுத்த பொழுது. ஆம் சோழர்களையே கலியூர் யுத்தம் கலங்க வைத்தது.
அன்று கர்நாடகத்தில் வலுவான பேரரசு இல்லை. கர்நாடகத்தை ஆண்டு கொண்டிருந்த மேற்கு சாளுக்கியர்கள் அப்பொழுது அங்கே முழுமையாக வீழ்ச்சி அடைந்து விட்டார்கள். கர்நாடக மக்கள் கைகளில் கிடைத்த சிறு, சிறு ஆயுதங்களை கொண்டு அன்று பாரத தேசத்தில் மிகப்பெரிய சக்ரவர்த்தியாக இருந்த ராஜ, ராஜ சோழனையே எதிர்த்தார்கள். மிக வீரமாக, மிக மூர்க்கமாக கங்கம்பாடி வீரர்கள் போரிட்டார்கள்.
அந்த கலியூர் யுத்தத்தில் ராஜ, ராஜ சோழன் அவர்களுக்கு வெற்றி கிடைத்தாலும் முழுமையான கர்நாடகத்தை அவரால் கைப்பற்ற முடியவில்லை. கர்நாடகத்தின் தெற்கு பகுதியை மட்டுமே ராஜ, ராஜ சோழனால் கைப்பற்ற முடிந்தது.
1004 இல் சோழர்கள் கைப்பற்றிய பகுதிகள் அனைத்தையும் 1117 இல் மீட்டு. அன்றைய சோழ மன்னரான விக்கிரம சோழனை தோற்கடித்த வீரர் தான் விஷ்ணு வர்தணன். இவர் சோழ சாம்ராஜ்யம் முழுவதையும் கைப்பற்ற நினைக்கவில்லை. சோழர்களிடம் இழந்த தனது மண்ணை மீட்க மட்டுமே இவர் போராடி அதில் வெற்றியும் பெற்றார்.
சரி. இந்தியாவில் பல பகுதிகள் இருக்கும் பொழுது ராமானுஜர் கர்நாடக தேசம் சென்றதன் காரணம் என்ன?
அன்று அணைத்து சாம்ராஜ்யங்களும் சோழர்களுக்கு அடி பணிந்தது. ஆனால் பாண்டிய சாம்ராஜ்யம் மட்டும் சோழர்களுக்கு அடி பணியாததால் பாண்டியர்கள் சோழர்களால் பல இன்னல்களுக்கு உள்ளாகினார்கள். பாண்டிய மன்னர்களுக்கு அன்றைய இலங்கை மன்னர்கள் அடைக்கலம் கொடுத்தார்கள் என்னும் ஒரே காரணத்திற்காக தான் சோழர்கள் இலங்கை மீது படை எடுத்தார்கள். இலங்கையை வெற்றி கொண்ட பின். இலங்கையில் உள்ள பல ஆயிரம் தமிழ், சிங்கள மக்களை கொத்தடிமைகளாக சோழர்கள் சிறை பிடித்தார்கள் என்பதை சோழர்களின் கல்வெட்டுக்களே மிக பெருமையாக சொல்கிறது.
ராமானுஜருக்கு எந்த சமஸ்தானத்தின் மன்னன் அன்று அடைக்கலம் கொடுத்திருந்தாலும் இரண்டாம் குலோத்துங்கன் அந்த மன்னன் மீது நிச்சயம் படை எடுத்து வருவான். ஆனால் குலோத்துங்கனே பார்த்து பயப்பட்ட ஒரு மன்னன் அன்று பிட்டி தேவன் என்கிற விஷ்ணு வர்தணன் மட்டுமே.
அதனால் தான் ராமானுஜர் கர்நாடக தேசம் சென்றார். பிட்டி தேவனும் ராமானுஜருக்கு அடைக்கலம் கொடுத்தார். பிட்டி தேவன் சமண மதத்திற்கு மாறிய மன்னர். மகேந்திர வர்மன், நெடுஞ்செழிய பாண்டியன் போன்ற மன்னர்கள் எவ்வாறு சமண மதம் மாறி மீண்டும் தாய் மதம் திரும்பினார்களோ அதே போல் இந்த பிட்டி தேவனும் தாய் மதம் திரும்பினார். அதற்கு காரணமாக இருந்தவர் ராமானுஜர்.
பிட்டி தேவனின் மகளான வசந்திகா ஒரு கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாள். அதனால் அவள் அனைவரிடமும் மிக மோசமாக நடந்து கொண்டாள். அவளை பேய் பிடித்தவள் என்றே அனைவரும் அழைத்தனர். ராமானுஜர் துளசிக்கு மிஞ்சிய மருந்து எதுவும் இல்லை என்று பிட்டி தேவனிடம் எடுத்து சொல்லி. ராமானுஜர் பெருமாளை வணங்கியவாறே அவர் துளசி மூலம் எதோ ஒரு வைத்தியம் செய்து. வசந்திகாவை பிடித்து இருந்த அந்த கொடுமையான மனநோய் என்னும் பேயை விரட்டினார். மேலும் காலம், காலமாக பெருமாள் கோவில்களில் செப்பு பாத்திரத்தில் துளசி நீர் கொடுக்கபடுவதன் காரணம் அதன் அறிவியல் மகத்துவம் பற்றி ராமானுஜர் பிட்டி தேவனிடம் எடுத்து சொன்னார்.
உண்மையிலேயே துளசி பல நோய்களை குணபடுத்தும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா. ஆம். ஒன்றல்ல, இரண்டல்ல. 448 நோய்களுக்கு ஒரே மருந்து துளசி என்று ஆயுர்வேதம் சொல்கிறது.
ஆயுர்வேதம் சொல்வது இருக்கட்டும். துளசியின் மகத்துவம் பற்றி வெள்ளையர்களின் ஆய்வுகள் சொல்வது என்ன? நாங்க வெள்ளைகார பய புள்ளைங்க சொல்வதை தான் உண்மை என்று நம்புவோம் என்று நீங்கள் சொன்னால்.
Tulsi Cures Cancer என்று கூகிளில் தேடுங்கள். ndtv முதலான பல வலைத்தளங்கள் துளசி மருத்துவத்தின் மகத்துவம் பற்றி அறிவியல் சான்றுகளோடு பதிவுகள் செய்து இருக்கிறார்கள்.
தனது மகள் வசந்திகாவின் நோயை ராமானுஜர் குணப்படுத்தியதால். பிட்டி தேவன் சமண மதத்தில் இருந்து வைணவத்திற்கு மாறினார்.
விஷ்ணு வர்தணன் வைஷ்ணவராக மாறிய பின். 100 இற்கும் மேற்பட்ட கோவில்களை கட்டினார். அதில் சிவன் கோவில்களும் பல அடக்கம். அந்த சிவன் கோவில்களில் குறிப்பிடதக்க ஒரு கோவில் ஹளபேடுவில் உள்ள சிவன் கோவில்.
சாத்துக்குடி கண்ணன் [ பெயர் மாற்றப்பட்டு உள்ளது ] என்கிற வைணவ பேச்சாளர் ஒருவர் சிவனை, பிற தெய்வங்களை பழிப்பது தான் வைஷ்ணவம் என்று கோமாளி தனங்கள் செய்து கொண்டு இருக்கிறாரே. அது போல் ராமானுஜர் செய்யவில்லை. சிவனோ, விஷ்ணுவோ. அல்லாவோ, ஏசுவோ ஏதேனும் ஒரு கடவுளின் மீது முழுமையான பக்தி செலுத்தி அந்த கடவுளை மட்டுமே வணங்குதல் தவறு இல்லை. ஆனால் பிற தெய்வங்களை மதங்களை பழிப்பதன் பெயர் பக்தி அல்ல. அது சுத்த பைத்தியகார தனம்.
யாராலும் வெல்ல முடியாத வலுவான பேரரசாக அன்று இருந்த சோழ பேரரசையே விஷ்ணு வர்தணன் வென்று. அந்த வெற்றியின் சின்னமாக கட்டப்பட்ட கோவில் தான் பேலூரில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவில்.
இந்த கோவில். விஷ்ணு வர்தணன் காலத்தில் முழுமையாக கட்டப்படவில்லை.
விஷ்ணு வர்தணன். அவரின் மகன் நரசிம்மன் அதன் பின் வந்த வீர பல்லாளன் காலத்தில் தான் இந்த கோவில் முழுமையாக கட்டப்பட்டது. இந்த கோவிலை முழுமையாக கட்டி முடிக்க எவ்ளவு? ஆண்டுகள் ஆனது தெரியுமா.
103 ஆண்டுகள்.
சென்ன கேசவ பெருமாள் கோவிலில் உள்ள சிற்ப்பங்கள் எவ்ளவு? தெரியுமா.
பத்தாயிரம் சிற்ப்பங்கள்.
அதில் கண்ணாடியோடு இருக்கும் தர்ப்பன சுந்தரி என்கிற சிற்ப்பம் மிக பிரபலமான சிற்ப்பம். பல விளம்பரங்களில் அந்த சிற்ப்பம் வந்துள்ளது. எனக்கு தெரிந்தவரை நட்சத்திர வடிவில் கோவில்கள் கட்டியவர்கள் ஹோய்சாளர்கள் மட்டுமே.
சென்ன கேசவ என்றால் அதன் அர்த்தம் என்ன? சென்னை என்னும் தமிழ் சொல்லிற்கு அழகு என்று ஒரு பொருள் உண்டு. சென்னை பாரிசில் உள்ள காளிகாம்பாளின் தமிழ் பெயர் என்ன? தெரியுமா. சென்னியம்மன்.
மும்பா தேவி காவல் தெய்வமாக இருக்கும் ஊர் மும்பை. காளி காவல் தெய்வமாக இருக்கும் ஊர் காளிகட் என்னும் கல்கத்தா. மங்களா தேவி காவல் தெய்வமாக உள்ள ஊர் மங்களூர். சென்னியம்மன் காவல் தெய்வமாக
உள்ள ஊர் சென்னை.
சென்னையில் வசிப்பவர்கள் யார், யார் எல்லாம் சென்னையின் காவல் தெய்வமான சென்னியம்மன் கோவிலுக்கு சென்று. பக்தியோடு தேவி காளியை வணங்குகிறார்களோ. அவர்கள் ஓகோவென்று இருப்பார்கள்.
காவல் தெய்வ வழிபாடு, குல தெய்வ வழிபாடு இரண்டுமே மிக முக்கியம்.
சென்னை என்கிற நகரம் உருவாக காரணமாக இருந்த சென்னியப்ப நாயக்கர் சென்னியம்மனின் அருளால் பிறந்தவர் தான்.
கன்னடத்திலும் சென்ன என்றால் அழகு. சென்ன கேசவ பெருமாள் என்றால். கன்னடத்தில் அழகான பெருமாள் என்று அர்த்தம்.
நான் 4 நாட்களுக்கு முன் தான் சென்னகேசவ பெருமாள் கோவிலை பார்த்தேன். முதன் முதலில் தாஜ் மகாலை பார்ப்பவனே மலைத்து போய் பார்ப்பான் என்றால். தாஜ் மகாலை விட பல நூறு மடங்கு அழகான நட்சத்திர வடிவில் உள்ள இந்த கோவிலை நான் முதன் முறையாக பார்த்த பொழுது அப்பொழுது நான் அடைந்த அந்த பேரானந்தத்தை சொல்ல வார்த்தையே இல்லை.
14 ம் நூற்றாண்டில் மாலிக்கா கப்பூர் என்கிற காட்டு மிராண்டி 10 லக்ஷம் வீரர்களோடு இந்தியா மீது படை எடுத்து வந்தான். அப்பொழுது சோழ, பாண்டிய என அணைத்து சாம்ராஜ்யங்களும் வீழ்ச்சி அடைந்து விட்டது. மாலிக் படை எடுத்து வந்த பொழுது அன்று ஹோய்சாள மன்னராக இருந்த ஹரிஹர ராயரின் வயது 75.
ஸ்ரீரங்கம் கோவிலில் மாலிக் கொள்ளை அடிக்க வந்த பொழுது. 10 லக்ஷம் வீரர்கள். மாலிக்கையும் சேர்த்து 10 லக்ஷத்தி 1 வீரர்களை. ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வெறும் 30 ஆயிரம் மக்கள் எதிர்த்து பல மணிநேரம் போரிட்டு அதில் 25 ஆயிரம் மக்கள் இறந்து போனார்கள். எஞ்சிய சிலர் தப்பித்து போனார்கள். உடல் உறுப்புகளை இழந்தார்கள். ஹரிஹர ராயர் மாலிக்கை எதிர்த்து போரிட்டு அவரும் வீர மரணம் அடைந்தார்.
அதன் பின் தொடர்ந்து பல அந்நியர்கள் நம்மை ஆண்டதன் விளைவு. சென்னகேசவ பெருமாள் கோவில், ஹளபேடு சிவன் கோவில் முதலானவைகள் கவனிப்பு, பூஜை இன்றி பாழாய் போனது. சில கோவில்கள் வெறும் ஷூட்டிங் ஸ்பார்ட் ஆனது.
பேலூரில் சென்னகேசவ பெருமாள் கோவில் என்று ஒரு கோவில் இருப்பதே சினிமா மூலம் தான் மக்களுக்கு தெரிந்தது. ஆம். 1980 இல் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆன தெலுங்கு படம் சங்கராபரணம். அதை சினிமா என்று சொல்ல முடியாது. அதை ஒரு கர்நாடக இசை காவியம் என்று சொல்லலாம். இந்த கோவிலில் ஷூட்டிங் எடுத்து அதன் மூலம் இப்படி ஒரு கோவில் இருப்பதை வெளி உலகிற்கு இந்த படத்தின் இயக்குனர் கே விஸ்வநாத் தெரியபடுத்தினார்.
இன்னொரு முக்கியமான தகவலையும் இங்கே குறிப்பிட்டு ஆக வேண்டும். விஷ்ணு வர்தணன் வைஷ்ணவத்தை, ராமானுஜரை மதித்த அளவு தமிழையும் மதித்தார். அவர் காலத்தில் தமிழ், கன்னட இரண்டு கல்வெட்டுக்களுமே இந்த கோவிலில் வைக்கப்பட்டது. இன்று உள்ள வட்டாள் நாகராஜ் போன்ற கன்னட மொழி வெறியர்களால் தமிழ் கல்வெட்டுக்கள் அழிக்கப்பட்டு விட்டது.
அன்று கூட மன்னர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் தான் போர் தொடுத்தார்கள். மொழி வெறியால் அல்ல. அன்று இல்லாத மொழி வெறி இன்று இந்தியாவின் பல பகுதிகளில் தலை தூக்கி ஆடுதல் காலத்தின் கோலம்.
இன்று நாம் இன்னொரு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையோ, இன்னொரு தஞ்சை பெரிய கோவிலையோ. இன்னொரு பேலூர் சென்ன கேசவ பெருமாள் கோவிலையோ நிச்சயம் கட்ட முடியாது. ஆனால் நமது முன்னோர்கள் கட்டிய கோவில்கள், முன்னோர்கள் வெட்டிய குளங்கள், ஏரிகளை நாம் நினைத்தால் பாதுகாக்கலாம்.
கட்டிய, வெட்டிய தலைப்பின் அர்த்தம் இப்பொழுது புரிகிறதா.
No comments:
Post a Comment