Sunday, May 22, 2016

கடவுள் இயல்

கடவுள் இயல்
1.உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?
இறைவன்.
2.இறைவனை எப்பெயர் கொண்டு சிறப்பாக அழைக்கின்றோம்?
சிவபெருமான்.
3.சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?
சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவ
ருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.
4.சிவபெருமான் எப்படிப் பட்டவர்?
என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; யார்க்கும் ஆட்படாதவர்.
5.சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?
சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல. ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர். அதனால் இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.
6.சிவபெருமானின் குணங்கள் யாவை?
சிவபெருமானின் குண விஷேசங்கள் எட்டுக்குணமென்று போற்றப்படும். அவை
முழுதும் தன்வயத்தனாதல் (பிறருக்கு ஆட்படாதவர்)
இயற்கை அறிவினனாதல் (உள்ளதை உள்ளவாறே அறிதல்)
முற்றறிவு உடைமை (எல்லாவற்றையும் அறியும் திறம்)
தூய உடம்பினன்
இயல்பாகவே மலமற்றவன்
வரம்பில்லாத ஆற்றல் உடையவன்
வரம்பில்லாத அருள் உடையவன்
வரம்பில்லாத இன்பம் உடையவன்
7.சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.
படைத்தலாவது யாது?
ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.
காத்தலாவது யாது?
தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.
அழித்தலாவது யாது?
தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக்குதல்.
மறைத்தலாவது யாது?
ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்தல்.
அருளலாவது யாது?
ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவதத்துவத்தை விளக்குதல்.
8.தனு கரண புவன போகம் என்றது என்ன?
தனு - உடம்பு, கரணம் - மன முதலிய கருவி, புவனம் - உடம்புக்கு ஆதாரமாகிய உலகம், போகம் - அனுபவிக்கப்படும் பொருள்.
9.சிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்கிறார்?
தமது சத்தியைக் கொண்டு செய்கிறார்.
>சத்தி என்னும் சொல்லுக்குப் பொருள் யாது?
வல்லமை
>சிவபெருமானின் சத்தி யாவர்?
உமாதேவியார்
>சிவபெருமான் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உமையோடு எழுந்தருளியுள்ள முதன்மைஇடம் யாது?
திருக்கயிலை மலை.
>சிவபெருமான் உயிர்களுக்கு எவ்வெவ்விடங்களில் நின்று அருள் புரிகின்றார்?
சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்தும், சைவாசாரியாரிடத்திலும், சிவனடியாரிடத்தி
லும் நின்று அருள் செய்வார்.
>சிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சமயத்திற்குப் பெயர் யாது?
சைவம்
>சைவத்தில் தலையாய நூல்கள் யாவை?
திருமறைகளும், ஆகமங்களும், திருமுறைகளும்.
>இவைகளில் விதிக்கப்பட்டன யாவை?
சிவ புண்ணியமும் சீவ (உயிர்) புண்ணியமுமாம்.
>சிவ புண்ணியம் யாது?
சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாம்.
>உயிர்ப் புண்ணியம் (சீவ நன்மை) யாது?
1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றன.
>புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
சிவ புண்ணியங்களைச் செய்தவர் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர்.
>பாவங்கள் ஆவன யாவை?
கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல், இன்னும் பல.
>>>>>>>>>>நாட்கடன் இயல்<<<<<<<<<<<
>நாள் தோறும் முறையாக எந்த நேரத்திலே உறக்கம் நீங்கி எழ வேண்டும்?
சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும். ( விடியல் 4.00 மணி )
>உறங்கி எழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும்.
>குளித்த பிறகு யாது செய்தல் வேண்டும்?
தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும்.
>>>>>>>>>>திருநீற்று இயல்<<<<<<<<<<<<<
>சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?
திருநீறு
>திருநீறாவது யாது?
பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.
>எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?
வெள்ளை நிறத் திருநீறு.
>திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?
பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.
>திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?
வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.
>திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?
நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவசிவ / நமசிவாய / சிவாயநம' என்று சொல்லி, வலக்கையின் நடு மூன்று விரலினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.
>திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
சிந்திய திருநீற்றினை உடனே எடுத்து விட்டு, மேலும் அந்த இடத்தில் துடைத்தெடுக்க வேண்டும்.
>திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?
கூடாது.
>திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?
தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் துளக்கிய உடனும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும், சூரியன் தோன்றி மறையும் போதும் திருநீறு அணிய வேண்டும்.
>ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?
விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.
>கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?
முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.
>திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?
இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல். (ஹோமம் செய்த நீற்றினை நெய்யில் குழைத்து அணிதல் ரக்ஷை எனப் பெயர் பெறும்.)
>திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?
ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.
>முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?
தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.
>முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?
இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.
>மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?
அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.
>மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?
ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.
>முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?
ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.
>சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?
பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.
>அவைக ளுண்டான வகை எப்படி?
பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.
>அதனை அணிவதனால் பயன் என்ன?
மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொண்ட விபூதியை பசுவின் சாணத்தினால் விளைக்க வேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.
>கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?
நோயற்ற நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையில் சத்தியோசாத மந்திரத்தால் எடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு, வாமதேவத்தாற் பஞ்சகவ்வியம் விட்டு, அகோரத்தால் பிசைந்து, தற்புருடத்தால் உருண்டையாக்கி சிவ மந்திர ஓமத்தால் உண்டான சிவாக்கினியில் சிவபெருமான் திருவடிகளை நினைந்து இட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும்.
>அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?
காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.
>உபகற்ப விபூதியாவது யாது?
இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.
>விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?
வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.
>எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?
புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்க
ு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.
>>>>உருத்திராக்க இயல்
>விபூதி தரித்துக்கொண்டாலே போதுமே, உருத்திராக்ஷமுந் தரித்துக்கொள்ள வேண்டிய தென்ன?
விபூதி உருத்திராக்ஷமும் சிவ சின்னமாகையால் அவ்விரண்டுமே தரிக்கவேண்டும். இதுவுமின்றி விபூதியானது சிலவேளை வியர்வை மழை முதலியவற்றால் மறைந்துபோனாலும் உருத்திராக்ஷமிருந்தால் தோஷமில்லை.
>உருத்திராக்ஷம் எவ்விடத்தில் எவ்வாறு உண்டாயது?
தேவர்கள் திரிபுரத்து அசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பம் செய்துகொண்ட பொழுது, திருக்கயிலை உடையாரின் மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரில் தோன்றிய மணியாம். இந்தக் காரணத்தினால் அதற்கு உருத்திராக்ஷம் என்கிற பெயருண்டாயது. (உருத்திரன் - சிவன், அக்ஷம் - நேத்திரம். ) அதற்குச் சிவ கண்மணியென்றும் பெயர். சிவபூசை செய்கிறவர்கள் கழுத்தில் உருத்திராக்ஷ மில்லாமல் பூசித்தால் அந்தப் பூசையைப் பரமசிவன் அங்கீகரித்துக் கொள்ளமாட்டார். ஆதலால் சிவபூசை செய்கிறவர்கள் உருத்திராக்ஷ கண்டிகை அவசியம் தரித்துக்கொள்ள வேண்டும்.
>எத்தனை உருத்திராக்ஷம் தரித்துக்கொள்ள வேண்டும்?
உச்சியி லொருமணி, காதொன்றுக்கு ஆறுமணியாக இரண்டு காதுக்கும் பன்னிரண்டு மணி, சிரசில் நாற்பது, கழுத்தில் முப்பத்திரண்டு, மார்பில் நூற்றெட்டு, புயத்தில் முப்பத்திரண்டு, கைகளில் இருபத்துநாலு, இவ்வாறு தரிக்க வேண்டும். மணிகள் ஒன்றை ஒன்று தொடக்கூடாது.
>உருத்திராக்ஷங்களி னிடைகளில் ஏதாவது மணிகள் கோக்கலாமா?
இடையிடை பவளம், ஸ்படிகமணி, பொன்மணி யிவைகளைக் கோத்து அணியவேண்டும். இவைகளுமின்றி வில்வப்பழ வோட்டையுஞ் சேர்க்கலாம். இவ்வாறு சேர்க்காமல் உருத்திராக்ஷங்களை மாத்திரம் கோத்துத் தரித்துக்கொண்டால் எத்தனை மணி சேர்த்தாலும் ஒருமணி யணிந்ததா லுண்டாகும் பலனே கிடைக்கும். இந்த உருத்திராக்ஷங்களில் ஒருமுகம், பதினொருமுகம், பதினான்கு முகமுள்ள மணிகளை வைத்துப் பூசித்தாலும் சிவார்ச்சனை செய்ததா லுண்டாகும் பலன் கிடைக்கும்.
>உருத்திராக்கம் அணிவதற்கு தகுதியானவர் யார்?
மதுபானமும், மாமிச உண்டியும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய் உள்ளவர்.
>குளிக்கும் காலத்தில் உருத்திராக்ஷசத்தை அணியக் கூடாதா?
அணியலாம், குளிக்கும் பொழுது உருத்திராட்ச மணியில் பட்டு வடியும் நீர் கங்கை நீருக்குச் சமமாகும்.
>உருத்திராட்சத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?
ஒருமுக மணி முதல் பதினாறு முக மணி வரையும் உண்டு.
>உருத்திராட்ச மணியை எப்படிக் கோத்துத் தரித்தல் வேண்டும்?
பொன்னிலாயினும், வெள்ளியிலாயினும், தாமிரத்தாலாயினும், முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோத்துத் தரித்தல் வேண்டும்.
>உருத்திராக்கம் தரிக்கத் தக்க இடங்கள் யாவை?
குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள், என்பவைகளாம்.
>இன்ன இன்ன இடங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் முறை உண்டோ?
ஆம். தலையிலே இருபத்தி இரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணியும், கழுத்திலே முப்பத்தி இரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும்.
>இந்த இடங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்கம் தரித்துக் கொள்ளலாமா?
காதுகளிலும், கண்டத்திலும் எப்போதும் தரித்துக் கொள்ளலாம், மற்றை இடங்களில் எனில், தூக்கத்திலும் மலசல மோசனத்திலும் அணிந்து கொள்ளலாகாது.
>உருத்திராக்கம் அணிவது எதற்கு அறிகுறி?
சிவபெருமானுடைய திருக்கண்ணில் தோன்றும் திருவருட் பேற்றிற்கு அறிகுறி.
 >>சைவ சமயிகள் முறையாக எண்ண வேண்டிய மூல மந்திரம் யாது?
திருஐந்தெழுத்து
>> திருவைந்தெழுத்தாவது யாது?
நமசிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரம் வேதத்தின் நடுவனதாகவும், நால்வர் பெருமக்களால் துதிக்கப்பட்டதாகவும் எல்லோரும் எப்போதும் எண்ணத்தக்கதாகவும் உய்தி தருவதாகவும் உள்ள திருவைந்தெழுத்த
ு மந்திரம் ஆகும். இது தூல பஞ்சாக்கரம் எனப்படும். சூக்குமம், காரணம் என்று சிறப்புப் பஞ்சாக்கரங்கள் உண்டு. குருநாதர் மூலம் திருவைந்தெழுத்து உள்ளிருத்தப் பெற்றவர்கள் அந்த திருவைந்தெழுத்த
ு மந்திரத்தை ஓதுவது சாலச் சிறந்தது.
>> திருவைந்தெழுத்தைக் எண்ணத் தகுதி உடையவர் யாவர்?
எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோரும் மனதில் அன்புடன் திருவைந்தெழுத்தை எண்ணி இருக்க வேண்டும். குறிப்பு: கீழ் வரும் விடைகள் மந்திர ஜபம் செய்யும் முறையைச் சொல்லுகின்றன. மற்றபடி எங்கும் எப்போதும் எல்லோரும் திருவைந்தெழுத்தை எண்ணி இருத்தலே சிறப்பு. துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் - சம்பந்தர்.
>> திருவைந்தெழுத்திலே எத்தனை உரு முறையாகக் கணிக்க வேண்டும்?
நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் முறையாகக் கணிக்க வேண்டும்.
>>எப்படி இருந்து கணிக்க வேண்டும்?
முழந்தாள் இரண்டையும் மடக்கிக் காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலப்புறங் காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்து கொண்டு அமைதியாகச் சீரான மூச்சுடன் கணிக்க வேண்டும்.
>>திருவைந்தெழுததைக் கணிக்கும் போது மனம் எவ்வாறு இருக்க வேண்டும்?
மனம் சிவபெருமானிடத்தில் அழுந்திக் கிடக்க வேண்டும்.
>>நிற்கும் போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், கிடக்கும் போதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் போதும் மனதை எதில் பதித்தல் வேண்டும்?
உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் மனதைப் பதித்தல் வேண்டும்.
>>மந்திர உபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?
குருவை வழிபட்டு அவருக்கு வருடந்தோறும் இயன்ற தட்சணை கொடுத்து கொண்டே செபித்தல் வேண்டும்.
>>திருவைந்தெழுத்தை முறையாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?
நூற்றெட்டு உருவாயினும், ஐம்பது உருவாயினும், இருபத்தைந்து உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.
>>கணித்தற்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?
செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும்.
( விரலிறை - கட்டைவிரல் ).
>> செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?
உருத்திராக்க மணி கொண்டு செய்வது உத்தமம்.
>>செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?
இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியும் கொள்ளத் தக்கதாகும். இல்வாழ்வான் நூற்றெட்டு மணி, ஐம்பத்து நான்கு மணிகளாலும் செபமாலை செய்து கொள்ளலாம்.
>>செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?
இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டு முக மணியும், பதின்மூன்று முக மணியும் செபமாலைக்கு ஆகாவாம். அன்றியும் எல்லா மணியும் ஒரே விதமாகிய முகங்களை உடையனவாகவே கொள்ளல் வேண்டும். பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை ஆகாது.
>>செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?
வெண்பட்டிலேனும், பருத்தியிலேனும் இருபத்து ஏழிழையினால் ஆக்கிய கயிற்றினாலேனும் கோத்தல் வேண்டும்.
>>செபமாலையை எப்படி செய்தல் வேண்டும்?
முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோத்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு மணி என்று பெயர்.
>>செபமாவது யாது?
தியானிக்கப்படும் பொருளை எதிர்முகமாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.
>> மந்திரம் என்பதற்கு பொருள் யாது?
நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே மந்திரம் என்னும் பெயர் நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவ சத்திக்குமே செல்லும். ஆயினும் வாக்கியத்துக்கும், வாசகத்துக்கும் செல்லும். எனவே மந்திரம், வாச்சிய மந்திரம், வாசக மந்திரம் என இரு திறப்படும் என்றபடியாயிற்று. ( மந் - நினைப்பவன்; திர - காப்பது ).
>>மானசமாவது யாது?
நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருந்தி மனசினாலே செபித்தலாம்.
>>உபாஞ்சுவாவது யாது?
தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்று பெயர்.
>>வாசகமாவது யாது?
அருகிலிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.
>>இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?
ஆம். வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசம் கோடி மடங்கு பலமும் தரும்.
>>எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும், மரப்பலகை, துணி, இரத்தினக் கம்பளம், மான்தோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்றதொன்றிலே முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையினுள்ள
ே வலப்புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு செபித்தல் வேண்டும்.
>>எப்படி இருந்து செபித்தல் ஆகாது?
சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டிக் கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கௌபீனம் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரம் தரியாதும், பேசிக்கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றை பார்த்துக் கொண்டும் செபிக்கலாகாது. செபம் செய்யும்போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் ஆகியவை ஆகாவாம்.
>>செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?
பிறர் கண்ணுக்கு புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகச் செபிக்கில் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனதிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயகமணி அடுத்த, முகம் மேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும், முத்தியின் பொருட்டு மேல் நோக்கித் தள்ளியும் செபித்து, பின்பு நாயகமணி கைபபட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும்போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படலாகாது.
>>திருவைந்தெழுத்து செபத்தால் பயன் என்ன?
திருவைந்தெழுத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின் விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தல் போல் ஆன்மாவிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி எப்போதும் இன்புற்றிருக்கும் ஞானானந்தத்தைப் பிரசாதித்து அருளுவார்.
 
Coutresy: Saiva samayam

No comments:

Post a Comment