Monday, May 30, 2016

உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?

உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..?
காரணங்கள் என்ன.....கரை சேர்வது எப்படி..?
‘ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் அலறுகின்றன. 
உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட ஒபிஸிட்டிக்கான காரணங்கள், இதன் விளைவுகள், குறிப்பாக பிசிஓடி (Polycystic Ovary Disease) எனப்படும் நோய் முதல் குழந்தைப்பேறின்மை வரை பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், ஒபிஸிட்டிக்கான தீர்வுகள் என்று நிபுணர்களின் வழிகாட்டலை விரிவாகப் பார்ப்போம்!
பிழையாகிப் போன உணவுப் பழக்கம்!
இந்த விபரீத நோய் பற்றி பேசும் பெண்கள் சிறப்பு மருத்துவர் பிரேமலதா, ”ஒபிஸிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் (Modified Lifestyle). 
ஒவ்வொரு வேளை, ஒவ்வொரு வகை உணவிலும் பலவித நன்மைகள் அடங்கியபடி வகுத்து வைத்த நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்கள், இன்றைக்கு அடியோடு மாறிவிட்டன. 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துரித உணவு என்று சொல்லப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். 
இதனால் பர்கர், கோலா பானங்கள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.
தாண்டவமாடும் தைராய்டு!
வளரிளம் பருவத்தினர் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், தைராய்டு குறைபாடு. 
இது முழுக்க முழுக்க அயோடின் குறைபாட்டால் வரக்கூடியது. 
இது ஆண்களைவிட, பெண்களை 7 மடங்கு அதிகமாகத் தாக்குகிறது என்கிறது புள்ளி விவரம். 
உடல் சோர்வு, முறையற்ற மாதவிலக்கு, மலச்சிக்கல், மனஅழுத்தம் போன்றவை இதற்கான அறிகுறிகள். 
தவிர, எந்நேரமும் தூக்கம், கொஞ்சம் உணவு அருந்தினாலே உடல் எடை அதிகரிப்பது, சோர்வு, டென்ஷன், எரிச்சல், படபடப்பு போன்ற அறிகுறி இருப்பவர்கள் தைராய்டு சோதனை செய்துகொள்வது நல்லது. 
உலகம் முழுவதும் 200 மில்லியன் பேர் தைராய்டு காரணமாக தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 
அதனால், ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று தெரிந்தவுடனே டெஸ்ட் எடுத்துப் பார்ப்பது அவசியம். 
தைராய்டு பிரச்னை இல்லை என்றால், எடை குறைப்பதற்கான மற்ற முயற்சிகள், சிகிச்சைகளை தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் மேற்கொள்ளலாம். 
தவிர, மரபியல் ரீதியிலான பிரச்னைகளும் உடல் பருமனுக்குக் காரணமாகலாம்.

No comments:

Post a Comment