Thursday, May 19, 2016

சோகங்கள் தீர்க்கும் சோளிங்கர்!*

*சோகங்கள் தீர்க்கும் சோளிங்கர்!*
*நரசிம்ம ஜயந்தி ஸ்பெஷல்!* 
 
 புராண காலத்தில், திருக்கடிகை, சோளசிம்மபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் இப்போது, சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அற்புதமான திருத்தலம் இது! மூலவர் யோக நரசிம்மர். உற்ஸவர் ஸ்ரீ பக்தவத்சலம், தாயாரின் திருநாமம் ஸ்ரீ அமிர்தவள்ளி. 

  பெருமாளின் 108 திருப்பதிகளில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற சோளிங்கர் திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலைமீது மூலவரும், அதன் அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கிறார்கள். 

  பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந் நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமனுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோர் இங்கு வந்து நரசிம்மரை தரிசனம் செய்திருக்கிறார்கள். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது! பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம். இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகாசனத் திருக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார்கள்! 

   இத்தலத்தில் உள்ள ஸ்ரீ நரசிம்மரை வணங்கினால் புத்தி சுவாதீனம், பில்லி சூன்யம், ஏவல், தீராத வியாதி முதலான  பிரச்னைகள் தீரும். குழந்தையின்மை, திருமணத்தடை ஆகிய கஷ்டங்கள் தீரும். வியாபார நஷ்டம் விலகும். லாபம் பெருகும்! 

   புதிதாக, நிலம் வாங்க வேண்டும் என நினைப்பவர்களும்  வீடு கட்ட ஆசைப்படுபவர்களும் கோயில் மலைப்பாதைக்கு அருகில் வழிநெடுக கற்களை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கோபுரம் போல் கட்டி, வேண்டிக் கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை! 

    இங்கே உள்ள நரசிம்ம குளத்தில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம் முதலான சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு தானம், தர்மம் செய்வது கயையில் செய்வதற்கு சமமானது என்கிறார்கள் பட்டாச்சார்யர்கள். 

  மன நோய் உள்ளவர்கள், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து நீராடி மலை மீது உள்ள  நரசிம்மரையும் அருகில் உள்ள ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள். வளமும் நலமும் கிடைப்பது உறுதி! 

 கல்கண்டு படைத்தல், வெல்லம் படைத்தல், வாழைப் பழம் தருதல், நரசிம்மருக்கும் தாயாருக்கும் வேஷ்டி புடவை சார்த்துதல், தயிர்சாதம் செய்து பிரசாதம் படைத்தல், என வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைத்து இனிதே வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள்!
 
  வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் (அபிஷேகம்) நடைபெறும். அந்த நாளில், திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்வதும் விசேஷம்!   
 
    சோளிங்கருக்கு வந்து, முதலில் நரசிம்மரைத் தரிசித்து விட்டு பின் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். இத்தலத்தில் ஒரு கடிகை எனப்படும் 24 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். 

  மூலவர் யோக நரசிம்மர் கிழக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளார். சுவாமி சாளக்ராம மாலை அணிந்துள்ளார். தாயார் அமிர்தவல்லி வேண்டும் வரம் தரும் வள்ளலாக அருள்பாலிக்கிறார். ஊரின் மையப்பகுதியில் உற்சவருக்கென தனிக்கோயில் அமைந்திருப்பது இங்கு மட்டும் தான். இங்கு தான் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இங்கிருந்து மலைக்கோயில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.

  ஸ்ரீமன் நாரயணன் எடுத்த அவதாரங்களிலேயே ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண்கூடாக வெளிப்படுத்திய அவதாரம் மட்டுமில்லாமல், சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க தன்னை அண்டியவருக்காக உதவிய அவதாரமும் கூட! அத்தகைய அவதாரமான இறைவன் யோக நரசிம்மராக திருக்காட்சி தரும் திருத்தலம் இது! 

  நாளை ஸ்ரீநரசிம்ம ஜயந்தித் திருநாள். இந்த நாளில் சோளிங்கர் யோக நரசிம்மரை வணங்குவோம். நம் சோகங்களையெல்லாம் தீர்த்தருள்வார் நரசிங்கப்பெருமாள்!

No comments:

Post a Comment