மே 15 : வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
தனி மனிதன் காப்பு:
--------------------------
.
"ஒவ்வொரு மனிதனும் பிறந்திருக்கின்றான், அவன் அறிவிலே முன்னேறிவர வேண்டியது தான் பிறவியினுடைய நோக்கம்; இது தான் இயற்கையினுடைய இயல்பு, அது கெடக் கூடாது. அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்கின்றபோது "தனி மனிதன் காப்பு" (Security) என்பது அங்கு தான் உண்டாகின்றது. உலகம் முழுவதிலும், மேல் நாட்டிலே கூடப் பல இடங்களில் என்னிடம் கேட்பதுண்டு, சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்று. "தனி மனிதனுடைய சுதந்திரத்தைப் பற்றி நீங்கள் கேட்கின்றீர்கள்;
.
சுதந்திரம் இருக்கின்றது அந்த சுதந்திரத்தைக் காப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கின்ற போது, கட்டுப்பாட்டினால் தான் சுதந்திரம் உண்டாகும். பிறர் சுதந்திரத்தை அழித்துவிடக் கூடாது என்ற ஒரு பேருணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் வந்து அவனுடைய செயல்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளும் போது தான் சுதந்திரம் எல்லோருக்கும் கிட்டுமே தவிர, சுதந்திரம் என்பது தானாக விரும்பும் காரியத்தை எல்லாம் தங்கு தடையின்றிச் செய்வதற்கு ஒரு வாய்ப்பு என்று வைத்துக் கொள்வது தவறான கருத்தாகும்", என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. ஆகவே சுதந்திரம் என்பது உண்மையாக எல்லோருக்கும் வேண்டுமானால், பிறருடைய சுதந்திரத்தை நாம் காக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ளக் கூடிய கட்டுப்பாடுகளில் தான் எல்லோருடைய சுதந்திரமும் காக்கப்படும்; ஒவ்வொரு தனி மனிதனுடைய பாதுகாப்பும் அமையும்."
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.
சிறந்த சூழ்நிலையும், சிந்தனையாளர் கடமையும்:-
"பிறந்து விட்டோம், வாழ்கின்றோம், அனுபவித்தோம்;
பெற்ற பலன் இன்பம் துன்பம் இரண்டேயாகும்.
இறந்துவிடப் போகின்றோம் என்றோ ஒரு நாள்.
இதற்குள்ளே அமைதிபெற உலக வாழ்வைத்
துறந்துவிட முடியாது. தொல்லை நீங்கிச்
சுகமாய் மனித இனம் வாழ்தற்கேற்ப
சிறந்தபடி சூழ்நிலைகள் அமைக்க வேண்டும்
சிந்தனையில் உயர்விலுள்லோர் கடமை ஈது".
.
பிறப்புரிமையும் சுதந்திரமும் :
"பிறப்புரிமை சுதந்திரம் இப்
பேறுகள் நம் உடல் உயிர் போல்
போற்றிடுவோம் காத்திடுவோம்
புரை யொழித்து வாழ்ந்திடுவோம்".
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
No comments:
Post a Comment