Tuesday, August 19, 2014

பேச்சுவார்த்தையில் நீங்கள் திறமையானவரா?

பேச்சுவார்த்தையில் நீங்கள் திறமையானவரா?



எந்தப் பதவிக்குத் தேர்வு நடக்கிறதோ அந்தப் பதவிக்கான குணநலன்கள் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதி செய்துக்கொள்ள சைகோமெட்ரிக் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பேச்சுவார்த்தை அதிகாரி
உதாரணமாக,சில நிறுவனங்களில்​ பேச்சு வார்த்தை நடத்துவதற்கென்றே அதிகாரிகளை நியமிப்பார்கள். வெளி நிறுவனங்களிடம் பொருட்களை வாங்குகிறோம் அல்லது விற்கிறோம் என்றால் என்ன விலை நிர்ணயிக்கலாம் என்பதைப் பேச்சு வார்த்தையின்​மூலம் இவர்கள் தீர்மானிப்பார்கள். இதற்கென்று சில தனித் திறமைகள் தேவைப்படுகின்றன. அவை இருக்கும்போதுதான் பேச்சு வார்த்தைகள் நிறுவனத்துக்கு மிகச் சாதகமாக அமையும்.
பேச்சுவார்த்தைத் திறன்
“நெகோ​ஸியேஷன் ஸ்கில்ஸ்’’ எனப்படும்​ பேச்சு வார்த்தைத் திறன் ஒருவரிடம் இருக்கிறதா என அறிய கீழ்வருமாறு சில கேள்விகள் கேட்கப்படலாம்.
விற்பனை தொடர்பான பேச்சு வார்த்தையில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத விஷயங்களில் விட்டுக் கொடுப்பீர்களா?
இந்தக் கேள்விக்காக இதோ சில விடைகள். அவற்றிலிருந்து ஒன்றைத்​ தேர்ந்தெடுங்கள்.
அ) விட்டுக் கொடுப்பேன். முக்கியத்துவம் இல்லாத விஷயங்கள்தானே.
ஆ) மாட்டேன். என்னைப் பொருத்தவரை எல்லாமே முக்கிய விஷயங்கள்.
இ) விட்டுக் கொடுப்பது என்பது எதிராளியின் தரப்பில் மட்டும்தான் இருக்க வேண்டும்.
மேலோட்டமாகப் பார்த்தால், மூன்றாவது மற்றும் இரண்டாவது விடைகளைச் சொல்பவர்கள்தான் தங்கள் நிறுவனத்திற்கு நன்மை செய்பவர்கள் என்று எண்ணத் தோன்றும். ஆனால் இது உண்மையல்ல. பேச்சு வார்த்தை என்பதில் இரு தரப்புமே கொஞ்சம் விட்டுக் கொடுக்கும்படிதான் இருக்கும். முக்கியமில்லாத சின்ன விஷயங்களில் விட்டுக் கொடுத்து, முக்கிய விஷயங்களில் உறுதியாக இருந்து சாதித்துக் கொள்பவர்தான் உண்மையில் பேச்சுவார்த்தையில் புலி. சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் பிடிக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை நடக்கும்போது உங்கள் உடல் மொழி எப்படி இருக்கும்?
அ) வேறு எங்கோ பார்த்தபடி பேசுவேன்.
ஆ) எதிராளியின் கண்களை நேரடியாகப் பார்த்தபடி பேசுவேன்.
இ) நான் பேசும்போது எதிராளியின் கண்களைப் பார்ப்பேன். அவர் பேசும்போது நான் வேறெங்கோ பார்ப்பேன்.
பேச்சுவார்த்தைகளின் போது எதிராளியின் கண்களைப் பார்ப்பதுதான் நல்லது. மாறாக அவர் பேசுகையில் நீங்கள் வேறு எங்கோ பார்த்தால், அவர் கூறுவதை நீங்கள் காது கொடுத்துக் கேட்கவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு உண்டாகும். இது பேச்சுவார்த்தையில் உங்களுக்குப் பின்னடைவை உண்டாக்கலாம்.
அதுமட்டுமல்ல எதிராளியை நேரடியாகப் பார்க்கும்போது அவர் உண்மையாகப் பேசுகிறாரா, கள்ளத்தனமாகப் பேசுகிறாரா, மேலும் இறங்கி வருவாரா என்பதையெல்லாம் நம்மால் அனுமானிக்க முடியும்.
பொருளை விற்க இருக்கும் ஒருவர் கூடவே தனது சோகக் கதையையும் கூறுகிறார். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
அ) அவர் சொல்வது உண்மைதானா என்பதை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அதற்குப்​ பிறகு நான் முடிவெடுத்திருந்ததைவிட சற்றே அதிக விலைக்குப் பொருளை வாங்கிக் கொள்வேன்.
ஆ) மனம் பாகாய் உருகிவிடும். அதிகத் தொகை தரச் சம்மதிப்பேன்.
இ) அவரது சோகம் பற்றியெல்லாம் நான் அலட்டிக் கொள்ள மாட்டேன்.
கொஞ்சம் மனிதாபிமான மற்றதாகத் தோன்றலாம். என்றாலும் உங்களை வேலைக்கு வைத்துக்கொள்ள இருக்கும் நிறுவனங்கள் நீங்கள் மூன்றாவது பதிலைத் தேர்ந்தெடுத்திருந்தால்தான், திருப்தி அடையும். தனி மனிதராக நீங்கள் செயல்படுவது வேறு. நிறுவனத்தின் பிரதிநிதியாகச் செயல்படுவது வேறு. இரண்டுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு.


Yours Happily

Dr.Star Anand ram
www.v4all.org


No comments:

Post a Comment