Tuesday, July 5, 2016

கோழி தத்துவம் !

கோழி தத்துவம் !

கிராமத்து ஆலமரம். ஊர்ப்பெருசுகள் பலரும் ஒன்றாகக் கூடி உள்ளூர் விவகாரங்களைப் பேசிக்கொண்டிருந்தனர்.

புதிதாக வந்து சேர்ந்தார் கோயில் கணக்காளர். அவர் முகத்தில் வருத்தக் களை!

“என்னாச்சு? பொண்ணுக்கு வரன் பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு டவுனுக்குப் போனியே! ஏதாச்சும் பிரச்னையா?” என்று கேட்டார் ஊர்ப் பெரியவர். எதைச் சொன்னாலும் சரியாகவே சொல்வார் என்பதால் ஊருக்குள் அவரது பேச்சுக்கு மவுசு அதிகம்.

“இல்லிங்க. எம் பொண்ணுக்குப் பொருத்தமான வரன் அமையல!” - வருத்தத்துடன் சொன்னார் கணக்கு.

“ஏன்யா நீயும் ரெண்டு வருஷமா மாப்பிள்ளை பார்க்குறே. இன்னுமா அமையல?!” என்றார்கள் உடனிருந்தவர்கள்.

மற்றவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு பெரியவர் பேசினார். நாலைந்து பக்கத்து ஊர்களின் பெயர்களைச் சொல்லி, “இங்கெல்லாம் போய்ப் பார்த்தியா?” என்றார்.

“இல்லை. அந்த ஊர்க்காரங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் சரிப்பட்டு வராதுங்குறது என் எண்ணம்” என பதில் சொன்னார் கணக்கு.

“உள்ளூர்ல எந்தப் பையனையும் பிடிக்கலையா? டவுன் மாப்பிள்ளைதான் வேணும்னு முடிவா?” என்றார் பெரியவர்.

“படிச்ச பொண்ணுல்ல. அதனால உள்ளூர் மாப்பிள்ளை சரிப்பட்டு வராதுங்குறது பொண்ணு நினனப்பு” என்றார் கணக்கு.

“ம்.. உன் பொண்ணுக்கு இன்னும் மாப்பிள்ளை கிடைக்காததுக்கு நீயும் உன் பொண்ணுமே காரணம்” என்ற பெரியவர், “அங்கே பார்” என தூரத்தில் எதையோ கை நீட்டிக் காட்டினார்.

அங்கே.. கோழி ஒன்று குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தது! கோழிக்கும் குப்பைக்கும் கணக்கப்பிள்ளைக்கும் முடிச்சுப் போட்டு தன் கருத்தைக் கூறினார் பெரியவர். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டனர். அது..?

?

?

?

?

?

?

?

“குப்பைதானே என குறைவாக எண்ணாமல் தன்னோட தேடலைச் செய்யுது கோழி. நம்பிக்கைதானே வாழ்க்கை. அந்த நம்பிக்கையே கோழிக்கு அது தேடும் தானியத்தைக் காட்டும். உனக்குத் தெரியுமா, எந்தக் குப்பையில் இருந்தும் தானியம் கண்டுபிடிக்கும் சாமர்த்தியம் கோழிக்கு உண்டு. ஆனா நீயும் உன் பொண்ணும் ‘இதெல்லாம் குப்பை’ன்னு உங்க முன்னாடி இருக்கும் பல வாய்ப்புகளை உதாசீனப்படுத்திடறீங்க!”

இந்த மாதிரி தான்க நாமும்! 

படித்ததில் பிடித்தது!

No comments:

Post a Comment