Thursday, October 15, 2015

ஆழ்ந்த அன்பு.

தஷ்ரத் மான்ஜி (Dashrath Manjhi) என்பவரின் துணைவியார், ஃபால்குனி தேவி (Falguni Devi) அவர்கள், சரியான நேரத்தில், மருத்துவ உதவி பெறாததால், 1959ம் ஆண்டு மரணமடைந்தார். அவர்கள் வாழ்ந்த கிராமத்திற்கு அருகிலிருந்த மருத்துவமனையை அடைய ஒரு கிலோமீட்டர் தூரமே என்றாலும், நடுவே ஒரு குன்று வழிமறித்து நின்றதால், அவர்கள் அந்தக் குன்றைச் சுற்றி, ஏறத்தாழ 70 கி.மீட்டர் பயணம் செய்து மருத்துவமனையை அடையவேண்டியிருந்தது. அந்த நீண்ட பயணத்தை மேற்கொள்ள முடியாமல், ஃபால்குனி தேவி அவர்கள் இறந்தார்.
தன் மனைவியைப் பறிகொடுத்த தஷ்ரத் மான்ஜி அவர்கள், அடுத்த ஆண்டுமுதல் (1960), ஒவ்வொருநாளும், அந்த குன்றைத் தகர்க்கத் துவங்கினார். ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அவர் அந்தப் பணியைத் துவக்கியபோது, கிராமத்து மக்கள் அனைவரும் அவரை மதியிழந்தவர் என்று கேலி செய்தனர். மான்ஜி அவர்கள் மதியிழக்கவில்லை, மனமும் தளரவில்லை. 22 ஆண்டுகளுக்குப் பின், 1982ம் ஆண்டு, அவர் அந்தப் பணியை முடித்தபோது, குன்றின் சிகரத்திலிருந்து 25 அடி ஆழத்தில், 360 அடி நீளம், 30 அடி அகலம் கொண்ட ஒரு பாதையை மான்ஜி அவர்கள் தனியொருவராக உருவாக்கியிருந்தார். அவர் அமைத்தப் பாதையால், அடுத்த ஊருக்குச் செல்லும் தூரம், 70 கி.மீ.லிருந்து, 1 கி.மீ.ஆகக் குறைந்தது.
தன் சொந்த நலனையும், குடும்பத்தையும் மறந்து, மனம் தளரும்படி ஊர் மக்கள் சொன்ன கேலிப் பேச்சுக்களைப் புறந்தள்ளி, தஷ்ரத் மான்ஜி அவர்கள், 22 ஆண்டுகள், அதாவது, 8000த்திற்கும் அதிகமான நாட்கள், ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு அந்தக் குன்றைக் கரைத்ததற்குக் காரணம்... அவர் தன் மனைவியின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பு.

No comments:

Post a Comment