லால் பகதூர் சாஸ்திரி
2 அக்டோபர் என்றால் எல்லாருக்கும் காந்தியை ஞாபகம் வரும். இன்னொரு மிகச்சிறந்த இந்தியத் தலைவருக்கும் இன்று தான் பிறந்த நாள். அவர் லால் பகதூர் சாஸ்திரி.
சாஸ்திரி படித்துப் பெற்ற பட்டம் - சாதி பெயர் இல்லை.
எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த உருவத்தில் சிறிய மனிதர்.
இளவயதில் கங்கையை கடந்து தான் படிக்கச் செல்ல வேண்டும். படகில் போக காசில்லாத நிலையில் நண்பர்களிடம் கடன் வாங்க மறுத்து, தினமும் நீந்தி மறுகரை போய் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கல்லூரிக் காலத்தில் விடுதலைப்போரில் பங்குகொண்டு சிறை சென்றபோது, இன்னமும் சிறையில் அடைக்கும் வயது வரவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.
திருமண வரதட்சணையாக கதராடை ஒன்று, ஒரு கை ராட்டை ஆகியன மட்டுமே
பெற்றுக்கொண்டார் .
விடுதலைப் போரில் ஈடுபட்டு அடிக்கடி சிறை செல்வது இவருக்கு வழக்கம்.
ஒரு முறை மகளுக்கு உடல்நலம் முடியவில்லை என்று பதினைந்து நாள் அனுமதி பெற்று வெளியே வந்தார்.
அந்த காலம் முடிவதற்குள்ளாகவே மகள் இறந்து போனார். இன்னம் சில நாட்கள் பாக்கி இருந்தும் , ஈமச்சடங்குகள் முடிந்த அடுத்த நொடி சிறைக்கு திரும்பிச் சென்ற மாபெரும் தலைவர் சாஸ்திரி.
இவர் அமைச்சரவையில் இருந்த காலத்தில்தான் பெண் நடத்துனர்கள் பதவியில் அமர்த்தப்பட்டார்கள். ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டி இவர் உள்துறை அமைச்சராக இருந்த பொழுது தான் உருவாக்கப்பட்டது. எளிமை,நேர்மைக்கு இலக்கணமாய் வாழ்ந்தார் அவர்.
வீட்டில் மனைவி மாதம் ஐந்து ருபாய் சேமிக்கிற அளவுக்கு கட்சி பணம் தருகிறது என அறிந்து, அந்த சம்பளத்தை குறைத்துக்கொண்டவர். அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த நாள் ,"இனிமேல் நம் வீட்டில், சமையலில் காய்கறிகளை ,பருப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்!" என்றார்.
இந்திய பாகிஸ்தான் போரின் பொழுது தீர்க்கமாக வழிநடத்தியவர் . இந்தியாவின் எளிய பிரதமர்களில் ஒருவர் . பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தை நடத்த நேரு இவரை அனுப்பி வைத்த பொழுது அணிந்து கொள்ள ஸ்வெட்டர் இல்லாமல் இரவோடு இரவாக நேருவின் ஸ்வெட்டரை இவர் அளவுக்கு தையல்காரர் தைத்துக் கொடுத்தார்.
அவர் இறந்த பொழுது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு எளிய மனிதன் சொன்னார், "எங்களை மாதிரி ஏழை எளியவர்களின் குரலை காது கொடுத்து கேட்டுக்கொண்டு இருந்த கடைசி தலைவனும் மறைந்து விட்டார்!" என்று .
சாஸ்திரி மாதிரி உன்னத ஆத்மாக்கள் அரிதாகத்தான் அரசியலில் தோன்றுகிறார்கள்! அவரையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.
No comments:
Post a Comment