☆☆☆☆ வெற்றி ☆☆☆☆☆
உங்களுடைய ஆசை என்ன? எதைத் தொட்டாலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பது தானே?
நீங்கள் வெற்றியை மட்டுமே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில் படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராளமான பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக் கொள்ளும்.
இலக்கின் மீது ஒரு கண்ணை பதித்துக் கொண்டால், அவன் பாதி குருடனாகிறான் என்கிறது ஜென் தத்துவம்.மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்?
அப்படி அரைகுறை கவனத்துடன் செயலாற்றாதீர்கள்.இந்த கணம் செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். எட்டிபிடிக்க வேண்டிய அவசியமில்லாமல், வெற்றி இலக்கை சுலபமாக தொட்டுவிட முடியும்.
புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் கவனமாக உழைக்க வேண்டுமே தவிர, கடுமையாக உழைக்கத் தேவையில்லை.இதை விளக்க ஜென்னில் ஒர் அழகான சம்பவம் உண்டு.
சான்ஸூ என்றொரு ஜென் குரு இருந்தார்.மிகச் சிறந்த வாள் வீரர். அவரிடம் புதிதாய் சேர்ந்திருந்தச் சீடன் ஒருவன் " இந்த நாட்டிலேயே முதன்மையான வாள் வீரனாக என்னை ஆக்க முடியுமா? " என்றான்.
அதற்கென்ன பத்து வருடங்களில் தயார் செய்து விடுகிறேன் என்றார் குரு.என்னது பத்து வருடங்களா? ஐந்தே வருடங்களில் சாதிக்க வேண்டும் குருவே மற்றவர்களை விட இரண்டு மடங்கு உழைக்கத் தயாராயிருக்கிறேன்.
" அப்படியானால் இருபது வருடங்களாகும் " என்றார் சான்ஸூ.
சீடன் திகைத்தான். போதாது என்றால் இன்னும் நான்கு மடங்கு கடுமையாக உழைக்கிறேன் என்றான்.
அப்படிச் செய்தால் நாற்பது வருடங்களாகுமே என்றார் குரு. ஆம்! உங்களை வருத்திக் கொள்ள வருத்திக் கொள்ள...நீங்கள் நினைத்ததை அடைவதற்கு அதிக காலமாகும். இதைத் தான் சான்ஸூ அந்த சீடனுக்கு புரிய வைத்தார்.
கடுமையாக உழைப்பவர்கள் சில சமயம் வெற்றி பெறலாம் ஆனால், அதன் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது.
உலகின் அற்புதமான கண்டுபிடிப்புகள், விஞ்ஞானிகள் ஓய்வாக இருந்த பொழுது தான் நிகழ்ந்திருக்கின்றன.
மரத்தடியில் சும்மா உட்கார்ந்திருந்தபோதுதான் ஆப்பிள் கீழே தரையில் விழுவதைக் கலனித்த நியூட்டன் புவிஈர்ப்பு பற்றிய விதியைக் கண்டு பிடித்தார்.
'பாத் டப்'பில் ஓய்வாகக் குளித்துக் கொண்டிருக்கும் போதுதான், மிதப்பது பற்றிய விதிகளைக் கண்டுணர்ந்த்தார் ஆர்க்மிடீஸ்.
கவனித்துப் பாருங்கள் விளையாட்டில்கூட வெற்றியை நினைத்து அதிகப் படபடப்புடன் விளையாடும் குழுதான் பெரும்பாலும் தோற்கிறது. விளையாட்டை அனுபவித்து ஆடுபவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.
வெற்றி...வெற்றி...என்று உங்களை நீங்களே வருத்திக்கொள்ளும் சந்தர்பங்களில் உடலளவிலும், மனதளவிலும் நீங்கள் பலவீனமாகிப் போவீர்கள்.
No comments:
Post a Comment