🌺சுவாமி விவேகானந்தர் உபதேசித்த வேலைமுறை....🌺
சுவாமி விவேகானந்தர் உபதேசித்த வேலைமுறை....
சுவாமி விவேகானந்தர் உலகிற்கு ஆன்மீக போதனை செய்ததோடு நின்றுவிடவில்லை. தரித்ர தேவோ பவ,மூர்க்க தேவோ பவ, துக்கி தேவோ பவ என்று போதித்தார்.
முழுக்க முழுக்க எல்லா உலகியல் பந்தங்களையும் துறந்தவரே சன்னியாசி.ஆனால், சுவாமிஜியோ நாட்டினையும் அதன் மக்களையும் உயிரினும் மேலாக நேசித்தார்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி மடிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு ஆன்மீக ஞானம் கொடுப்பதைவிட உணவளிப்பதே முக்கியம் என்று முழங்கினார். பேசியது போதும். செயலாற்றுங்கள் என்பதே அவரின் அறைகூவல்.
எப்படிச் செயலாற்றவேண்டும் எனத்திட்டமிட்டு அதற்கு ஒரு வடிவமும் கொடுத்து இந்த நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். அவர் உபதேசித்த வேலைமுறை இதுதான்: அமைப்பு ரீதியாக வேலை செய்யுங்கள்.
அமெரிக்காவில் நடந்த சர்வ மத மாநாட்டில் கலந்து கொள்ள சிக்காகோ சென்றடைந்த அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி நீங்கள் எந்த ஸ்தாபனத்தின் சார்பில் வந்துள்ளீர்கள் என்பதுதான்.
உலகக் கண்காட்சியில், விஞ்ஞானமும், தொழில் நுட்ப அறிவும் ஏற்படுத்தியிருந்த கண்டுபிடிப்புகள் , விந்தைகள் அவருக்கு பிரமிப்பை ஏற்படுத்தின. உலக வாழ்வில் அவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த செழிப்பை நம் நாட்டு மக்களின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து மனம் வருந்தினார்.
1893,செப்டம்பர் 11 அன்று சிக்காகோவில் உரையாற்றி உலகையே வென்றாரே அது அவரது வாழ்வில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. காலியாக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில், தெரு ஓரங்களில், பிச்சைக்காரனைப் போல் தங்கியிருந்த அவருக்காக சிக்காகோ நகரிலிருந்த தனவந்தர்களின், பிரபலங்களின் வீடுகள் வரவேற்புக் கம்பளங்கள் விரித்தன.
மாநாட்டு அமைப்பாளர்களின் ஏற்பாட்டின்படி, ஜான் பி லயன் தம்பதியினரின் வீட்டில் சுவாமி விவேகானந்தர் தங்கினார். அந்த வீட்டில்தான் வரலாற்றுப் பிரசித்திபெற்ற கீழ் கண்ட உரையாடல் நிகழ்ந்தது.
சுவாமி: என்னுடைய வாழ்க்கையில் இந்த அமெரிக்காவில்தான் மிகப் பெரிய சபலத்திற்கு ஆளாகிவிட்டேன்.
ஸ்ரீமதி லயன்: அப்படிச் சபலிக்கச் செய்தவள் யாரோ?
சுவாமி: அவள் இலலை. அது. உங்கள் ஸ்தாபனங்கள்தான் என்னை சபல மடையச்செய்துவிட்டன..
சுவாமிஜி தன்னுடைய சீடர் பிரம்மானந்தருக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்: (ஞான தீபம் பாகம் 11, பக்கம் 157,கடிதம் 537)
நம்மிடம் ஒரு பெரிய குறை இருக்கிறது. நம்மால் நிரந்தர இயக்கம் ஒன்றை நிறுவ முடியாது.ஏனெனில் நாம் நமது அதிகாரத்தை பிறருடன் பகிர்ந்துகொள்ள ஒருபோதும் விரும்புவதில்லை.நாம் இறந்தபிறகு என்ன நேரிடும் என்பதைப் பற்றியும் ஒருபோதும் சிந்திப்பதில்லை. மனிதனை பணிக்காக தயார் செய்யவேண்டும். யார் இறந்தாலும் யார் இருந்தாலும் இயங்கிச் செல்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
விவேகானந்தர் தன்னுடைய செயல் திட்டத்தை வகுக்க ஆதாரமாக இருந்தது அவருடைய வெளி நாட்டு (குறிப்பாக அமெரிக்க) அனுபவங்கள்தான்.
மனிதனை உருவாக்க வேண்டும். அவர்களை ஒருங்கிணைத்து அமைப்பு ரீதியாக தேச வேலையைச் செய்ய வைக்கவேண்டும்.அதன் மூலம் நாட்டை உயர்த்த வேண்டும் என்பதை அவர் தனது வாழ்க்கைப் பணியாக ஏற்றுக்கொண்டார். ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க வேண்டும் என்பது அவரின் கனவாக ஆனது. அந்தக் கனவுதான் ராமகிருஷ்ண சங்கம் என்ற நனவாக மலர்ந்தது..
1897, மே மாதம் 1ந்தேதி ஸ்ரீ.ராமகிருஷ்ண சங்கம் துவக்கப்பட்டது,.சங்கத்தின் முதல் உறுப்பினர்கள் கூட்டம், 1897, மே மாதம் 9ந்தேதி அன்று நடந்தது.. சுவாமிஜி பூத உடலை நீத்தது, 1902, ஜூலை 4 அன்று. இடைப்பட்ட அந்த 5 வருடகாலத்தில் தன்னுடைய முழு சக்தியையும் சங்கத்தை வலுவாக்கும் பணிக்கே அர்ப்பணமாக்கினார். அளவுக்கு அதிகமாக உழைத்ததால் கடும் நோய்க்கு ஆளான போதும் தொடந்து வேலை செய்தார். அகண்டானந்தருக்கு எழுதிய கடிதத்தில், சுவாமிஜி குறிப்பிடுகிறார்: நான் இறக்கும் போதும் கவலைப்படாதே. என் அஸ்திகளே அற்புதங்களைச் செய்யும். பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நாம் பரவிவிடவேண்டும்.இதற்கும் குறைவாகச் செய்தோமானால், அது சுத்த மோசம்.(ஞான தீபம் பாகம் 11, பக்கம் 91,கடிதம் 479). இன்று ராமகிருஷ்ணா மிஷண் 176 கிளைகளோடு உலகெங்கிலும் பரந்து விரிந்து மாபெரும் விருட்சமாக வளர்ந்திருப்பது, ஐந்து வருடங்களில் சுவாமிஜி வேருக்குப் பாய்ச்சிய நீரால்தான்.அவர் இட்ட உரத்தால்தான்.
ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க, வலுவாக்க, வழிநடத்தத் தேவையான அனைத்துக் குணங்களும், திறமைகளும்,தலைமைப் பண்புகளும்,தொலைநோக்குப் பார்வையும் அவரிடம் அபரிமிதமாக இருந்தன.
சுவாமி விவேகானந்தரின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்ள ஒரே ஒரு உதாரணம் போதும். யுனெஸ்கோ அமைப்பின் டைரக்டர் ஜெனரலாக இருந்த ஃபெடரிகோ மேயர் 1993ல் நிகழ்த்திய உரையில் அதைப்பற்றி குறிப்பிடுகிறார்.“யுனெஸ்கோ ஆரம்பிக்கப்பட்டது 1945ல். மிஷண் ஆரம்பிக்கப் பட்டதோ 1897ல். யுனெஸ்கோவின் அடிப்படைச் சட்ட திட்டம், பிரமிப்பூட்டும் வகையில் மிஷனோடு ஒத்திருக்கின்றது: இரண்டின் நோக்கம்,செயல்பாடு மற்றும் அவைகளின் அனைத்து முயற்சிகளும் மனித மேம்பாட்டிற்காகவே. இரண்டும், உலகில் ஜனநாயகம் மற்றும் அமைதியை நிலை நாட்டுவதற்காக, சமூகங்களிடையே சகிப்புத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதை முதல் செயல் திட்டமாகக் கொண்டுள்ளன. இரண்டுமே, உலக ஒற்றுமைக்குப் பாடுபடும் அதே வேளையில், வேறுபட்ட பல சமூகங்களும், கலாச்சாரங்களும் உலகில் இருப்பதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்கின்றன,”
மத்திய இந்தியாவை 1897 ம் ஆண்டு கடும் பஞ்சம் வாட்டிக்கொண்டிருந்தது. அப்போது, மடத்தில் சுவாமிஜியைப் பார்க்க ஒருவர் பசு பாதுகாப்பு சங்கத்திலிருந்து வந்திருந்தார். அவர் தமது சங்கத்துக்கு நன்கொடை கேட்டு வந்திருந்தார். சுவாமிஜி அவரிடம் உங்கள் சங்கம் பஞ்சத்தில் செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறதா என்று கேட்டார். அவர், நாங்கள் எதுவும் செய்யவிலை.அவர்கள் அனுபவிப்பது கர்மபலனால்தானே என்று பதிலளித்தார். சுவாமியின் கண்கள் கோபத்தால் ஜொலித்தன. சொந்தச் சகோதரர்கள் பட்டினியில் செத்துக்கொண்டிருக்கும்போது பறவைக்கும் விலங்குக்கும் உணவைத் தரும் சங்கங்களிடம் எனக்கு அனுதாபம் கிடையாது. பசுமாதாவும் தன்னுடைய கர்மபலனினால்தானே கசாப்புக் கடையில் மாட்டிகொண்டிருக்கிறாள் என்று சாடித்தீர்த்துவிட்டார்.எவ்வளவு பரிதாபம்?கர்மநியதிக் கொள்கை எவ்வளவு கேவலமாகப் பயன்படுத்தப் படுகிறது? வேதனையில் துடித்துப் போய்விட்டார். .(ஞான தீபம் பாகம் 6, பக்கம் 10). மக்கள் மத்தியில் சேவைப் பணிகளை மேற்கொள்வதற்கே ராமகிருஷ்ணா மிஷனை சுவாமிஜி ஆரம்பித்தார்.
மேலைநாட்டினரிடமிருந்த அபாரமான தன்னம்பிக்கையும், ரஜோ குணமும், வெளிக்கருத்துக்களை ஏற்றுக்கொள்கிற பரந்த மனமும், ஏற்றுக்கொண்ட கருத்தை வாழ்நாள் முழுதும் கடைபிடிக்கின்ற பிடிவாதகுணமும், இணந்து வேலைசெய்கின்ற குணமும்,தலைமைப் பண்புகளும் அவரை வெகுவாக ஈர்த்தன. அதற்கு நேர்மாறாக நம் மக்களைப் பீடித்திருந்த அவநம்பிக்கை, தமோகுணம்,சுய மறதி, பெரும் சுயநலம்,பொறாமை,மூடந்ம்பிக்கைகள்,வேதாந்தத்தினைப் பற்றிய அரைகுறை ஞானம், அயல்நாட்டுமீதான மோகம், காலத்திற்குப் பொருந்தாத பழக்கங்களை கட்டிகொண்டு சாஸ்திரத்தின் பெயரால் சொந்த சகோதரர்களை நிந்திக்கிற,கொடுமைப்படுத்துகிற அரக்க குணம் ஆகியவற்றைக் கண்டு ஆவேசம் கொண்டார்.நமது நாடு வேதாந்தத்தை மேலை நாட்டிற்கு கற்பித்துக் கொடுத்து, அவர்களின் மதிப்பைப் பெற்று அவர்களின் குருவாக இருக்க வேண்டும். பெளதீக விஷயங்களில் நாம் அவர்களை ஆசிரியராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது நாம் இருவருமே பயனடைவோம் என்பது அவரின் உறுதியான கருத்து.
சங்கத்தைப் பற்றிய எல்லா விஷயங்களிலுமே இந்த கருத்தின் அடிப்படையிலேயே அவர் முடிவெடுத்தார். மக்களுக்கு கல்வியும், ஆன்மீக ஞானமும் கொடுப்பது மற்றும் நரசேவை ஆகியவை மிஷனின் செயல்திட்டமாக இருந்ததற்கு இதுவே காரணம்.
ஸ்ரீராமகிருஷ்ணர் கோவிலைக் கட்டுவதற்காக ஒரு வரைபடம் தயாரித்து வைத்திருந்தார், சுவாமிஜி. கோவிலின் கதவில் சிங்கமும் ஆடும் ஒன்றின் உடம்பை ஒன்று நக்கிக் கொண்டிருப்பது போன்ற சித்திரத்தை வரையத் திட்டமிட்டிருந்தார். பேராற்றலும்,மென்மையும் அன்பினால் இணைந்திருப்பதைக் குறிப்பதே அதன் நோக்கம்..(ஞான தீபம் பாகம் 6, பக்கம் 213).அதாவது, கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்த ஒரு உலகம்.
சுவாமிஜி ஒரு அற்புதமான பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவர், ஒரு தேர்ந்த ஓவியருங்கூட.
பெரும் அறிஞர்களால் கலை நயத்திற்காகவும்,அதன் கருத்திற்காகவும் பாராட்டப்படுகின்ற ராமகிருஷ்ணா மிஷனின் சின்nனம் சுவாமிஜி அவர்களால் வரையப்பட்டதே. மிஷன் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் அவர் தனிப்பட்ட கவனம் கொடுத்தார். ஓவியரும், ஜூப்லி கலைக் கழகத்தை உருவாக்கியவருமான திரு. ரநாத பிரசாத் தாஸ் குப்தா அவர்களோடு உரையாடும்போது சின்னத்தின் பொருளை அவரே விளக்குகிறார்: “அலைவீசும் தண்ணீர் கர்மத்தையும்,தாமரை பக்தியையும்,உதய சூரியன் ஞானத்தையும்,சுற்றிகொண்டிருக்கும் பாம்பு யோகத்தையும் எழுப்பப்பட்ட குண்டலினி ஆற்றலையும் அன்னம் பரமாத்மாவையும் குறிக்கிறது. அதாவது, கர்மம்,பக்தி,ஞானம்,யோகம் ஆகிய நான்கின் இணைப்பால் பரமாத்மாவின் காட்சியைப் பெறலாம்.” கலை என்பது ஒரு கருத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வளவு அழகோடு இருந்தாலும் கூட, ஒரு கருத்தை வெளிப்படுத்தவிலையென்றால், அது கலையே அல்ல என்பது சுவாமிஜியின் வாக்கு. .(ஞான தீபம் பாகம் 6, பக்கம் 213).
சுவாமிஜிக்கு செயல் திட்டம் பற்றியும், செயல் புரிவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பற்றியும், நிர்வாகம் பற்றியும் மிகத் தெளிவான கற்பனை இருந்தது. குருபாயிக்களுக்கு 27-04-1896ல் எழுதிய மிக நீண்ட கடிதத்தில் இதைப்பற்றி விவரமாக எழுதுகிறார். .(ஞான தீபம் பாகம் 10, பக்கம் 332,கடிதம் 366).எந்தெந்த நிர்வாகப்பொறுப்புகள் இருக்க வேண்டும் என்பதிலிருந்து, குடிநீர் ஏற்பாடு, சாப்பிடும் இடத்தின் வசதி என எல்லா விஷயங்களையும் அவர் அந்தக் கடிதத்தில் விவாதிக்கிறார். நான் சொல்லுபவற்றை அப்படியே கடைப்பிடியுங்கள் என்று அவர் கூறவில்லை. நான் எழுதியுள்ளவற்றை எல்லோரும் படியுங்கள்; யோசனை செய்யுங்கள்; விவாதம் செய்யுங்கள். சரியென்று தோன்றினால் எனக்கு எழுதுங்கள் என்றே கூறுகிறார்.
அவர் மீண்டும் மீண்டும் சொல்லுகிற விஷயங்கள் இவைதான்: சேர்ந்து வேலை செய்தல், அப்பழுக்கற்ற தூய்மை, விதிமுறைகளுக்குட்பட்ட கட்டுப்பாடான திட்டமிட்ட வாழ்க்கை.கீழ்படிந்து நடப்பதுதான் முதற்கடமை என்று தெளிவாகச் சொல்லுகிறார்.சிறு செடிகளுக்கு வேலி அமைப்பது போல, பக்குவமடையாத நிலையில் நியதிகள் கண்டிப்பாகத் தேவையென்பது சுவாமிஜியின் கருத்து.பத்து பேர் சேர்ந்து பத்து நாள் வாழ முடியாவிட்டால் உலகத்தில் எப்படி அன்பை நிறுவமுடியும் என்பது சுவாமிஜியின் கேள்வி.
இன்று நாம் சொல்லுகிற Organisation Structure பற்றி அப்போதே திட்டமிட்டிருந்தார். அமைப்பிற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் இருக்க வேண்டும் என வகுத்திருந்தார். பொறுப்பாளர்களை வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என தெளிவான நியதியை விதித்திருந்தார். ஒருவர் பொறுப்பில் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கக்கூடாது.முதல் வருடத்திற்கு மட்டும் சுவாமி பிரம்மானந்தர் தலைவராகவும் நிர்மலானந்தர் பொருளாளராகவும் செயலாளராகவும் இருக்கட்டும் என குறிப்பிடுகிறார்.
எப்படித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் தெளிவாகத் திட்டமிட்டிருந்தார். ஒருவர் இந்த ஆண்டு இவர் தலைவராக இருக்கலாம் என முன்மொழிய வேண்டும். மற்றவர்கள் அந்த யோசனையை சரி அல்லது கூடாது என்று காகிதத்தில் எழுதி குடத்தில் இடவேண்டும். யாருக்கு வாக்குகள் அதிகமாக இருக்கிறதோ அவர் தலைவர் ஆவார்.
சுவாமிஜி நிதி நிர்வாகத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் பிரமிக்க வைக்கிறது. அது இன்றைக்கும் நமக்கு ஒரு பாடமாக இருக்கக்கூடியது. சுவாமிஜி 12-10-1897ல் சுவாமி பிரம்மானந்தருக்கு எழுதிய கடிதத்தில் சிறு சிறு விஷயங்கள் என நாம் எண்ணுகின்றவற்றை அதிக முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி எழுதுகிறார்..( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 115,கடிதம் 498 ).
1. பணம் வசூலித்து அனுப்புபவர்களுக்கு மடத்திலிருந்தே ரசீது அனுப்ப வேண்டும். ( அதாவது ரசீது புத்தகத்தை மடத்தில்தான் வைத்திருக்க வேண்டும். பிறரிடம் கொடுத்து வைத்திருக்கக்கூடாது.)
2. ரசீதிற்கு நகல் இருக்க வேண்டும்.( அதாவது கூப்பன் முறைகளை அவர் ஏற்றுக்கொள்ளவிலை.)
3. ரசீதிற்கான நகலை மடத்தில் வைத்திருக்க வேண்டும். ரசீதை பணம் அனுப்பியவருக்கு அனுப்ப வேண்டும்.
4. ஒரு பதிவேட்டில் நன்கொடையாளர்களின் பெயரையும் முகவரியையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
5. வசூலாகின்ற பணத்தின் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
6. யாருக்கேனும் பணம் கொடுத்தால் அவர்களிடமிருந்து முழு கணக்கையும் பெற்றுக் கொள்ளவேண்டும்.
7. இந்தக் கணக்கு பின்னால் பிரசுரிக்கப்பட வேண்டும்.
8. நான் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என ஏசப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்தக் குறிப்புகள் நவீன தணிக்கை விதிமுறைகளோடு ( Audit Principles)அப்படியே ஒத்துப் போகின்றன. அமைப்பினர் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகளையும் ( Internal Controls ) தெளிவாக வரையறுக்கின்றது.
சுவாமிஜி உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டவரல்ல. சொல்லப் போனால் அவருடைய குருநாதரைப் போலவே அவருக்கும் பணத்தைக் கண்டால் ஒவ்வாமையே. பரிவிராஜகராக நாட்டைச் சுற்றிவரும்போதுகூட பணம் வைத்துக்கொண்டதில்லை. யாரிடமும் பணம் கேட்டதில்லை. பசியோடு இருந்தபோதுகூட பிறரிடம் உணவு கேட்க கூச்சப்பட்டவர். யாராவது டிக்கெட் எடுத்துக் கொடுக்காவிட்டால் நடந்தே பயணம் செய்துவந்தார். ஏன்? வறுமையில் வாடிய தன் குடும்பத்தாருக்கு ஒரு வழி காட்டு தாயே என காளிமாதாவிடம் கேட்கவே வெட்கப்பட்டார். 1898 நவம்பர் 22ந்தேதி மற்றும் டிசம்பர் 1ந்தேதி அவர் கேத்ரி மகாராஜாவுக்கு எழுதிய கடிதங்களைப் .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 171,கடிதம் 550 ) படித்தால் கண்ணீர் வந்துவிடும். மிகவும் வெட்கப்பட்டு எழுதுகிறார். இது உங்கள் பார்வைக்கு மட்டுமே என்று கூட எழுதுகிறார். நான் உங்களுக்கு அதிக காலம் துன்பம் கொடுக்க மாட்டேன். ஏனென்றால் நான் இன்னும் சில வருடங்களே உயிர் வாழ்வேன் என்ற பீடிகையோடு அவர் எழுதியுள்ள அந்தக் கடிதங்களை பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அனைவரும், அமைப்புகளை நிர்வகிக்கிற அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
இப்படிப் பட்ட சுவாமிஜி பின்னாளில் பணம் திரட்டுவதற்காகவே உலகெங்கும் பயணம் செய்திருக்கிறார் என்பதை நம்பக் கூட முடியாது. சொற்பொழிவுகளுக்கு பணம் வாங்கியிருக்கிறார். சில சமயங்களில் தன்னுடைய சீடர்களிடம் “கறாராக” வசூல் செய்திருக்கிறார்.அவர் எழுதிய பல கடிதங்களில் பணம் திரட்டும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி எழுதுகிறார். சில கடிதங்களில் என்னால் இன்னும் பணம் திரட்டமுடியவில்லையே என்ற ஏக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார். அமைப்பிற்கென்று பணம் கேட்கவேண்டி வரும்போது அவர் தயவு தாட்சண்யமே பட்டதில்லை. வெட்கப்பட்டதில்லை.
ஆனால் ஒரு விஷயத்தில் – அதாவது அமைப்பு வேறு தான் வேறு என்பதில் - அவர் தெளிவாக இருந்தார். பணிக்காக திரட்டிய பணத்திலிருந்து ஒரு காசைக்கூட அவர் தனக்காகவோ தன் குடும்பத்திற்காகவோ செலவு செய்ததில்லை. .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 196,கடிதம் 573 ) அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காக கேத்ரி மகாராஜா மாதாமாதம் பணம் அனுப்பிவந்தார். அமைப்பும் அதை நடத்துபவரும் வேறு வேறு என்பதும் ( concept of Separate Entity ) நவீன நிர்வாக இயலின் அடிப்படைக் கோட்பாடே.
அதனால், பணத்திற்கான செலவு கணக்குகளை சரியாக வைத்திருக்கவேண்டும் என்பதில் அவர் குறிப்பாக இருந்ததில் வியப்பேதும் இல்லை.எல்லா செலவுகளுக்கும் நிர்வாகக் குழுவின் அனுமதியைப் பெறவேண்டும்.அவர்களுடைய கையெழுத்தையும் பெறவேண்டும்.இல்லாவிட்டால் உன்பெயரும் கெட்டுப்போய்விடும் என தனது சீடருக்கு விவரமாக அறிவுரை கூறுகிறார். அவ்வப்போதே செலவுகளுக்கான கணக்கை எழுதி வைத்துவிடவேண்டும் என நியதியை வகுத்திருந்தார். ஆரம்பத்தில் இதை சோம்பேரித்தனத்தினால் செய்யாமல் இருப்பவர்கள் நாளடைவில் ஏமாற்றுப்பேர்வழிகளாக மாறிவிடுவர் என்பது அவரின் கணிப்பு. .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 201, கடிதம் 575 ).
பணத்தை வங்கியில் போட்டு வைக்க வேண்டும் அதுவும் இரண்டு பேரின் பெயரில் கூட்டுக்கணக்கில் போட்டு வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார். இந்த விதிமுறையானது, இன்றைக்கு , தணிக்கை விதிமுறைகளின் கீழ் நிதி நிர்வாக மேலாண்மையை மதிப்பீடு செய்யும்போது கண்டிப்பாக நடைமுறையிலிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
2008ல் வெளிவந்த சத்யம் ஊழல் நமக்கெல்லாம் ஞாபகத்திலிருக்கும். அதன் தலைவர் கம்பெனிக்கு வந்த பணத்தை நிலங்களில் முதலீடு செய்து அப்போது நிகழ்ந்த பொருளாதாரச் சரிவின் காரணமாக பெருத்த நஷ்டத்தினைச் சந்தித்து சிக்கலில் மாட்டிக்கொண்டார். விசாரணையில், தான் பேலன்ஸ் ஷீட்டை மாற்றி பணத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டு சிறைக்குச் சென்றார். இந்த ஊழலின் சாரமே, ஒன்றிற்கென்று பெறப்பட்ட பணத்தை விதிக்கு முரணாக இன்னொன்றிற்குச் செலவளித்ததுதான். இதற்காகத்தானோ என்னவோ சுவாமிஜி மிகத் தெளிவாக நியதியை வகுத்திருந்தார். அவர், சுவாமி பிரம்மானந்தருக்கு எழுதிய கடிதத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்: “ பஞ்ச நிவாரண நிதியில் எஞ்சியுள்ளதை ஒரு நிரந்தரப் பணிக்கென வைத்துவிடு. வேறு எதற்கும் அதைச் செலவு செய்யாதே.ப`ஞ்ச நிவாரணப் பணிக்கான எல்லா கணக்குகளையும் சரிசெய்த பின்னர் இவ்வாறு எழுதி வை: ‘எஞ்சியது இவ்வளவு,இது .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 123, கடிதம் 508 ).இன்னொரு நற்பணிக்காக.’“ அவருடைய தீர்க்க தரிசனத்தையும் முன்ஜாக்கிரதையையும் போற்றாமலிருக்க முடியவில்லை.
அவருடைய கடிதங்களைப்படித்துப் பார்த்தாலே போதும். ஒரு வரவு செலவு கணக்கை எப்படிப் பதிவு செய்வது என்று ஒரு குறிப்பேடையே ( Accounts Manual )தயார் செய்துவிடலாம். மனிதர்களை எப்படி உருவாக்குவது / கையாள்வதுஎன்பது பற்றியும் ( Personal Manual ) ஒரு குறிப்பேடு தயார் செய்துவிடலாம்.
பல பிரபல நிர்வாக வல்லுனர்கள் விவேகானந்தரின் நிர்வாகத் திறமையை, வழிநடத்தும் திறமையை, தொலைநோக்குப் பார்வையை, தலைமைப் பண்பை வியந்து பாராட்டியுள்ளார்கள். மெக்கின்சே அன்ட் கம்பெனியின் நிர்வாக இயக்குனரான இருந்த திரு. ரஜத் குப்தாவினுடைய அலுவலக அறையினை விவேகானந்தரின் படம் அலங்கரித்துக்கொண்டிருந்தது.நோபல் பரிசு பெற்ற ரொமைன் ரோலன்ட் விவேகானந்தரை கதாநாயகன் ( HERO ) என்றே அழைத்தார்.
விவேகானந்தர் வாழ்ந்தது வெறும் 39 வருடங்களாக இருக்கலாம். ஆனால் அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள்,அவை ஏற்படுத்தும் தாக்கம், நம்மை இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தும் சக்தி வாய்ந்தவை.
சுவாமிஜி, உலகுதழுவிய பார்வையோடு கிழக்கிற்கும் மேற்கிற்கும் ஒரு பாலமாக இருந்தார். வேத காலக் கருத்துக்களை நவீன காலத்திற்குப் பொருந்தும் வகையில் எடுத்துரைத்தார்.
இந்தக் கலியுகத்தில்,ஒன்றிணைந்த சக்தி ஒன்றே வெற்றி தரும் என்ற பொருள் பொதிந்த “சங்க சக்தி கலே யுகே” என்ற வேத வாக்கிற்கு அமைப்பு ரீதியாக வேலை செய்யுங்கள் என்று அர்த்தம் சொல்லி அதற்கு முதன்முதலில் செயல் வடிவம் கொடுத்தவர் அவர்.
சுவாமி விவேகானந்தரை ஒரு செயல் முறை வேதாந்தி என்றழைப்பது முற்றிலும் பொருத்தமானதே.
🌷 தொகுப்பு🌷
🌺 மல்லூர் சித்தர்🌺
No comments:
Post a Comment