நேர மேலாண்மை (Time Management)
தொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரம்:
மிகவும் பிசியாக இருக்கும் ஒரு அப்பா, தன் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு இரவில் வெகு நேரம் கழித்து வீடு திரும்பும்போது, தன் குழந்தை பொம்மை கேட்டது நினைவுக்கு வர, பூட்டியிருக்கும் கடையைத் திறந்து பொம்மை வாங்கி வருவார். தன் குழந்தை தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்ற அப்படிச் செய்வதாக அந்த விளம்பரம் சொன்னாலும், நாம் எல்லோருமே இப்படித்தான் பல வேலைகளை ஒரே நேரத்தில் முடிக்க முடியாமல் தவிக்கிறோம்.
“நேற்று என் மனைவிக்கு ரொம்பக் கோவம். அவளை வெளியில் அழைத்துப் போய் நீண்ட நாளாகி விட்டது. அலுவலகத்திலேயே இருந்து விடுங்கள் என்று பயங்கர சண்டை……!”
“ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதவில்லை; எத்தனை நேரம் செய்தாலும் வேலை வளர்ந்து கொண்டே இருக்கிறது; எப்படி முடிக்கப் போகிறேன்?”
“குழந்தை பாவம், ரொம்ப நாளாய் 3D சினிமா பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள்……எப்போது அழைத்து போகப் போகிறேனோ, தெரியவில்லை…..”
“வயதான அம்மாவை மருத்துவப் பரிசோதனைக்கு கூட்டிப் போக நேரமில்லை…..”
இப்படியெல்லாம் அங்கலாய்த்துக் கொள்ளுபவரா நீங்கள்? உங்களுக்காகவே இந்தக் கதை: கதையின் பெயர்:“The Mayonnaise Jar”
ஒரு கல்லூரி. தத்துவ வகுப்பு ஆரம்பமானது. பேராசிரியர் வகுப்பிற்குள் நுழையும் போதே தன் கைகளில் சில பொருட்களைக் கொண்டு வந்தார்.
மாணவர்களிடம் எதுவும் பேசாமல் முதலில் தான் கொண்டு வந்த பொருட்களிலிருந்து ஒரு பெரிய மயோனைஸ் ஜாடியை எடுத்து மேசைமேல் வைத்தார். தன்னிடமிருந்த கோல்ப் (golf) பந்துகளை ஜாடி நிரம்பும்வரை போட்டார். மாணவர்களை கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?”
“ஆம்” என்றனர் மாணவர்கள்.
அடுத்ததாக கூழாங்கற்கள் நிறைந்த ஒரு பெட்டியை திறந்து அவைகளை கோல்ப் பந்துகள் நிறைந்த ஜாடியில் கொட்டினார். ஜாடியை சற்றுக் குலுக்கினார். கூழாங்கற்கள் கோல்ப் பந்துகளின் நடுவில் இருந்த இடைவெளியில் போய் உட்கார்ந்து கொண்டன.
பேராசிரியர் மறுபடியும் கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா?” மாணவர்கள் “ஆம்” என்று தலை அசைத்தனர்.
பேராசிரியர் இப்போது ஒரு பெட்டி நிறைய மணலை எடுத்து ஜாடியினுள் கொட்டினார். ஜாடி முழுவதும் மணல் நிரம்பியது.
தனது கேள்வியை அவர் திரும்பக் கேட்க மாணவர்களும் ஒட்டுமொத்தமாக “ஆம்” என்றனர்.
பேராசிரியர் மேசையின் கீழிருந்து 2 கோப்பை காப்பியை எடுத்து ஜாடியில் ஊற்றினார். காப்பி மணலுடன் கலந்தது. மாணவர்கள் சிரித்தனர்.
பேராசிரியர் கூறினார்: “இந்த ஜாடி உங்கள் வாழ்க்கையைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். கோல்ப் பந்துகள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பொருட்களான குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், நண்பர்கள், பிடித்தமான பொழுதுபோக்குகள் இவற்றைக் குறிக்கின்றன. வாழ்க்கையில் நீங்கள் எதை இழந்தாலும் இவை உங்களுடன் இருப்பவை. இவைதான் உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்க உதவுபவை..”
சிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்:
“கூழாங்கற்கள் உங்கள் வேலை, சொந்த வீடு, கார் போன்றவை. மணல் மற்ற சின்னச்சின்ன விஷயங்கள்”
“சிறிது யோசியுங்கள்: முதலில் ஜாடியினுள் மணலைப் போட்டிருந்தால் என்னவாயிருக்கும்? கூழாங்கற்களுக்கோ, கோல்ப் பந்துகளுக்கோ இடம் இருந்திருக்காது. நம் வாழ்க்கையும் அதேபோல் தான். உங்களிடம் இருக்கும் நேரம் முழுவதையும் சின்னச்சின்ன விஷயங்களில் செலவிட்டால், பெரிய விஷயங்களுக்கு நேரம் இருக்காது.”
“………அதனால் முக்கியமான விஷயங்களுக்கு முதலில் நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்; ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.”
“உங்கள் துணைவி/துணைவரை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். வீட்டைச் சுத்தம் செய்யவும், சின்னச்சின்ன வேலைகள் செய்யவும் கட்டாயம் நேரம் இருக்கும். முதலில் முக்கியமானவற்றிற்கு நேரம் செலவிடுங்கள். எது முக்கியம், எதை முதலில் செய்வது என்று முடிவு செய்யுங்கள். மற்றவை மணலை போன்றவை.”
மாணவர்கள் அவர் கூறியதை மனதில் வாங்கிக் கொண்டு சிந்தனை வயப் பட்டிருந்த போது ஒரு மாணவி கையைத் தூக்கினாள். “ஒரு கேள்வி..” எழுந்து நின்று கேட்டாள்: “காப்பி எதைக் குறிக்கிறது?”
பேராசிரியர் புன்னகையுடன் கூறினார்: “யாரும் கேட்கவில்லையே என்று நினைத்தேன். நீ கேட்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது….”
“உங்கள் வாழ்க்கை எத்தனைதான் வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தாலும், சற்று நேரத்தை சரியாக செலவழித்தால், ஒரு நண்பருடன் ஒரு கோப்பை காப்பி குடிக்க கட்டாயம் நேரம் இருக்கும் என்பதைத்தான் காப்பி காட்டுகிறது”
கதை நன்றாக இருக்கிறது ஆனால் எப்படி நேரத்தை திட்டமிடுவது என்கிறீர்களா? நேர மேலாண்மை வல்லுனர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.
முதலில் ஒரு ‘To-do list’ அதாவது ஒரு நாளில் பண்ண வேண்டிய வேலைகளின் பட்டியல் தயார் செய்ய வேண்டும். அவற்றை 4 விதமாக பிரித்துக் கொள்ளுங்கள்.
அவசரம் – முக்கியம்
அவசரம் – முக்கியமில்லை
அவசரமில்லை – முக்கியம்
அவசரமில்லை – முக்கியமில்லை
நாம் எவ்வளவுதான் திட்டம் போட்டாலும், நாம் எதிர் பார்க்காத வேறு வேலைகள் வரலாம். அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அதை செய்யும் நேரத்தில், நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஒரு சில வேலைகள் தாமதமாகலாம். அவைகளைச் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்.
முதலில் கடினம் என்று தோன்றினாலும் சிறிது கட்டுப் பாட்டுடன் முயற்சித்தால் நேர மேலாண்மையை எளிதாக செய்யலாம்...🌺🌺🌺🌺
No comments:
Post a Comment