Wednesday, February 24, 2016

மகிழ்ச்சி

அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...
...........................................

இன்றையநாள் தங்களுக்குஉற்சாகமும்,
உத்வேகமும் தரும் நாளாக அமையட்டும்..

இன்றைய சிந்தனை..
....................................

மற்றவர்களின் குறைகளை...
.................................................

அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் 
அப்படியொரு அலாதியான மகிழ்ச்சி ஒரு சிலருக்கு...

இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகி, நமது அறிவுப் பார்வையை குறுகலாக்கிவிடும்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள் விழுந்து விட்டார்.

குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, 

அந்தப் பக்கமாக அவரது அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.

பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற 
எந்த விஷயமும் தெரியாதுனு சொல்வாங்க.

அதுக்காகக் கண்ணு கூடவா தெரியாது..? 
என்று மானேஜர் மீதிருந்த தனது காழ்ப்பு உணர்ச்சியைக் 
கொட்டிவிட்டு, நடையைக் கட்டினார் அவர்.

அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார்.

என்ன சார்…இந்தப் பள்ளத்துக்கு முன்னால கொட்டையா 
சிவப்பு எழுத்தில் ‘ஜாக்கிரதை’னு பலகை வெச்சிருக்கே!
அதைப் பார்க்கலையா? ஹும்…

நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம் பார்த்து என்னத்தைப் 
பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே 
ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டு, இன்னொரு கையை சாக்கடைப் பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.

ஆனால்,

மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

அடுத்ததாக,

அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். 

கழிவுநீர்ப் பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதை பதைத்த அவர், தனது சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். 
இந்தா, என் தோள்மீது ஏறி, முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச் சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.

இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ ,

அல்லது பக்கத்து வீட்டுக்காரர் மாதிரியோ, 

அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் 

நம்மில் பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும்.

தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதவர் யாரோ, அவர்தான் உண்மையில் குறையே இல்லாத முழுமையான கணவன்.

என்ன சார் சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள்.

கட்டில், நாற்காலி, சோபா, தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து வைத்திருக்கிறாள்.

ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்பு, இரண்டு வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது.

இந்தக் குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர் கேட்கக்கூடும்.

தாராளமாகச் சொல்லுங்கள்.

ஆனால்,

அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால், இந்த விளையாட்டை உங்கள் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு… என்று வரிசையாகச் சொல்வேன்.

நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும்.

சரியா? என்று கேட்டுவிட்டு, ஒன்று இரண்டு, மூன்று… என எண்ணத் தொடங்குங்கள்.

ஆறு என்று சொல்லும்போதே, நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன்.

குழந்தையும் சட்டென்று கை தட்டிவிடும்.

இதிலிருந்து தெரிவது என்ன?

குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. 
நாம் செய்வதைத் தான் பின்பற்றுகின்றன.

குழந்தைகள் மட்டுமில்லை, பெரியவர்களும் இப்படித்தான்.

அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில் நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார்.

அடுத்த வீட்டுக்காரன் குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான்.

யாரிடமும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஒருவர் செய்யும் தவறுகளை, அவருக்கு உணர்த்தக்கூடாது என்று சொல்ல வரவில்லை.

ஆனால்,

அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.

இந்தக் கதையைக் பாருங்கள்..,

ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும், மூதேவிக்கும் 
சர்ச்சை உண்டாகி விட்டது.

தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள்.

நாரதரோ,

நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!

ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால், மூதேவிக்குக் கோபம் வந்து தன் வீட்டிலேயே தங்கி விடுவாள்.

மூதேவிதான் அழகு என்றால், ஸ்ரீதேவி கோபித்து
கொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த நாரதர்.

யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாக,

எங்கே… 

சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.

ஸ்ரீதேவியும், மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள்.

சட்டென நாரதர்,

“ஸ்ரீதேவி வரும்போது அழகு.

மூதேவி போகும் போது அழகு!” என்று சொல்ல…

இரு தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்ல, மூதேவியுமல்ல…

நாரதர்தான்!

எனவே,

ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி சொல்வதைவிட, 

முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் 

மிகச் சிறந்த புத்திமதி!

No comments:

Post a Comment