எது அவமானம்?
நீ உன் சுயத்தில் மையங்கொண்டிருந்தால் உன்னை யாராலும் அவமானப்படுத்த இயலவே இயலாது.
அவமானம் என்பது நீ கொண்டிருக்கும் கருத்துக்களால், அபிப்பிராயங்களால், கொள்கைகளால், கோட்பாடுகளால், விளைவது. அதற்கும் உன் சுயத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை
உன்னுடைய கொள்கைகள் உன்னை எப்படி வந்தடைகின்றன என ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்.
உதாரணமாய் நீ சின்னக்கவுண்டர், நாயகன், நாட்டாமை, தேவர் மகன் போன்ற பல படங்களை சிறு வயதிலிருந்தே பார்த்திருக்கிறாய்.
இது போன்ற படங்களில் தந்தை கதாபாத்திரங்கள் தனக்கு நேர்ந்த அவமானங்களைத் தாங்க முடியாமல் உயிரை விட்டிருப்பார்கள். அல்லது தாங்கள் கொண்ட கொள்கைக்காய் உயிரை விட்டிருப்பார்கள்.
அப்படி உயிர்விடும் காட்சிகளின் பின்னனியில்......
"இடியேயானாலும் தாங்கிக் கொள்ளும் இதயம்.....சிறு பலி தாங்கக் கூடலையே....."
"தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே....."
"போற்றிப் பாடடி பொண்ணே.....தேவர் காலடிமண்ணே....."
போன்ற உருக்கமான பாடல்கள் ஒலிக்கும்.
இப்போது
ஊர் நாட்டாமைகள் அல்லது ஒரு பெரிய மனிதன் எப்படியிருக்க வேண்டும் என்ற இலக்கணம் உனை அறியாமலேயே உன் ஆழ்மனதில் பதிவாகிறது.
கவரிமான் மயிர் நீப்பின் உயிர் வாழாது என்பது போல ஒரு நல்லவனுக்கு பழிச்சொற்களோ, அவமானமோ நேர்ந்தால் அவன் உயிரையே விட்டு விடுவான். அவனுக்கு உயிரைவிட மானமும், கௌரவமும், கொண்ட கொள்கைககளும்தான் பெரிது என்பது இந்தக்காட்சிகளின் மூலம் உன் ஆழ்மனதில் (Sub Conscious) பதிவாகிவிடுகின்றன.
பின்னாளில் அதே போன்ற ஒரு சம்பவம் உன் வாழ்க்கையில் நிகழும்போது.....அதாவது உன்னை ஒருவர் பழிச்சொற்களால் தூற்றும்போது.....உன் ஆழ்மனதிலிருக்கும் பதிவுகள் உனையறியாமலேயே மேலேழுந்து வரத்தொடங்குகின்றன.
நீ இப்போது ஏற்கெனவே எழுதப்பட்ட ப்ரோக்கிராம்படி இயங்கும் ஒரு ரோபோவாக மாறிப்போகிறாய்.
அது போன்ற தருணங்களில் நீ உயிரை விடவில்லையாயினும் குறைந்தபட்சம் ஒரு மாரடைப்பாவது உனக்கு வந்துவிடுகிறது.
ஆனால், அது ஒரு மானஸ்தன் இது போன்ற தருணங்களில் இவ்வாறுதான் நடந்துகொள்ளவேண்டும் என உன் ஈகோவில் பதிவான ப்ரோக்கிராமினால் நீயாக வரவழைத்துக்கொண்ட மாரடைப்பாகும்.
இது போல ஒவ்வொரு விஷயத்திலும் நீ எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என உன் பெற்றோர்களால், நண்பர்களால், உறவினர்களால், சமுதாயத்தால், ஊடகங்களால் ப்ரோகிராம் செய்யப்படுகிறாய். அவைகளை உன் கருத்துக்களாக, கொள்கைகளாக, அபிப்பிராயங்களாக மாற்றிக்கொள்கிறாய். இவை எதுவுமே உண்மையல்ல. வெளியிலிருந்து திணிக்கப்பட்டவை.
குழந்தைகளைக் கூர்ந்து கவனித்தால் அவை சிலபல தருணங்களில் அவை தன் பெற்றோர்களைப் போலவே நடந்துகொள்வதைப் பார்க்கலாம். பெற்றோரின் மத, ஆன்மிகக் கொள்கைகள் குழந்தைகளின் கொள்கைககளாகி விடுகின்றன.
இன்னொரு உதாரணம்.
"குரு சாட்சாத் பரப்பிரம்மம்"
"குருவருள் இன்றி திருவருள் இல்லை"
"குரு துரோகம் பொல்லாத பாவத்தை கொணர்ந்து சேர்க்கும்"
என பல வாக்கியங்களை சிறு வயது முதலே கேட்டுவருகிறாய்.
ஸ்ரீ ராகவேந்திரா படத்தைப் பார்க்கிறாய். கையைச் சுடும் விளக்கின் சூட்டைத்தாங்கிக் கொண்டு தனது குருநாதர் படிப்பதற்கு வெளிச்சம் காண்பிக்கிறான் அந்தச் சிறுவன்.
ஏகலைவனின் குருபக்தி பற்றிய கதையைக் கேள்விப்படுகிறாய்.
இப்போது ஒரு சீடனுக்கான இலக்கணம் உன் ஆழ்மனதில் தயாராகிவிட்டது.
உன் குருவின் படத்தை எப்போதும் பாக்கெட்டில் சுமந்து திரிகிறாய்.
உன் குருவை யாராவது தவறாகப் பேசினால் அவரோடு சண்டையிடுவதன் மூலம் உன் குருபக்தியை நிரூபிக்கப் பார்க்கிறாய்.
உன் குருவைத்தாண்டி வேறோரு மகானின் சிந்தனையைப் படிக்க மறுக்கிறாய். அதனால் ஏதேனும் பாவம் சூழ்ந்துகொள்ளுமோ என பயப்படுகிறாய்.
குருவைப் பற்றிய இந்த இலக்கணமும் வெளியிலிருந்து உன் மீது திணிக்கப்பட்டது.
அவை உன்னுடையவை அல்ல. ஆனால் அந்தக்கருத்துக்களோடு உன்னை நீ அடையாளப்படுத்திக்கொள்கிறாய்.
வெளியிலிருந்து வரும் எதுவுமே புனிதமானதல்ல என ஓஷோ கூறுகிறார்.
உள்ளே நீ மலர்ந்ததன் விளைவாக உன் ஒழுக்கங்கள் வெளிப்படவேண்டும்.
அதாவது ஞானத்தினால் ஒழுக்கம் பிறக்கவேண்டும் என்கிறார் ஓஷோ. ஒழுக்கத்தினால் ஞானத்தை அடைய முடியாது.
ஒரு செடி அதன் மலரும் தன்மையினால் பூக்களை மலர்த்த வேண்டும்.
வெளியிலிருந்து உன் மீது திணிக்கப்பட்ட கருத்துக்களால் உன் ஒழுக்கம் அமைந்திருக்குமாயின் அது பூக்கவே பூக்காத ஒரு செடியில் இன்னொரு செடியில் பூத்த மலரைக் கொண்டுவந்து ஒட்ட வைத்ததற்கு ஒப்பாகும். மலருக்கான ஊட்டச்சத்துக்கள் செடியிலிருந்து கிடைக்கச் சாத்தியமேயில்லை.
ஞானம் என்ற அந்தச் செடிக்கும் ஒழுக்கம் என்ற அந்த மலருக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாததால் அந்த மலர் நிச்சயமாய் வெகு சீக்கிரம் வாடிவிடும்.
ஆக உன் கருத்துக்களே உன் எதிரி. ஆனால் கருத்துக்கள் உண்மையில்லை. ஆகையால் எந்தவிதமான கருத்துகளுக்குள்ளும் சிக்கிக்கொள்ளாதே. உன் குருவை ஒருவன் அமானப்படுத்தட்டுமே. அவனோடு சண்டையிடுவானேன்? அதனால் என்ன நடந்துவிடப்போகிறது?
அது அவன் கருத்து. அவ்வளவே. அவனுக்கும் ஒரு கருத்தினை வைத்திருக்க உரிமையுண்டல்லவா?
உன் கருத்துக்களோடு உனக்கு ஆழ்ந்த பிடிப்பு இருக்குமாயின் அதற்கு எதிரான கருத்துக்களை கொண்டவன் அனைவரும் உன் எதிரிகளாவர். நீ அவமானப்பட அல்லது படுத்த நேரிடும்.
கருத்துகளற்று, கொள்கை கோட்பாடுகளற்று எல்லையற்ற வானில் நீ பறந்து திரிவாயேயானால் உன்னை எவராலும் அவமானப்படுத்துதல் சாத்தியமன்று.
#ராகவேந்தர்.
No comments:
Post a Comment