Wednesday, February 17, 2016

சோர்வு வரும் போதெல்லாம் ஒருமுறை வாசித்தால் போதும். மறுபடியும் ஓட ஆரம்பிச்சிடலாம்

பல வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை... சோர்வு வரும் போதெல்லாம் ஒருமுறை வாசித்தால் போதும். மறுபடியும் ஓட ஆரம்பிச்சிடலாம்.- கே.ராஜாதிருவேங்கடம்
---------------------------------------------

அரைக்கால் டவுசரோடு ஓட்டலில் டேபிள் துடைத்துக் கொண்டிருக்கிறான் அந்தச் சிறுவன். 'இந்த மாதிரி ஒரு ஓட்டல் கட்டி நாமும் ஒரு நாளைக்கு முதலாளிஆகணும்...' -அந்தச் சிறுவனின் மனதுக்குள் தேக்கி வைத்திருந்த கனவு அது. அந்தக் கனவு எப்படிச் சாத்தியமாகும்..? அதெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. கனவு மட்டுமே லட்சியமாக இருந்தது.

சேலம் ஓட்டல் சரவணபவன் பிரைவேட் லிமிடெட் பிரமாண்டமான ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. பளீரென வெள்ளைச் சட்டை.. நெற்றியில் சந்தனப் பட்டை.. என வளைய வருகிறார் அதன் நிர்வாக இயக்குநர் வி.சி.எஸ்.சிவராமன். ஒரு காலத்தில் டேபிள் துடைத்துக்கொண்டு ஓட்டல் முதலாளியாக வேண்டும் என கனவு கண்ட அதே சிறுவன்தான் இந்தச் சிவராமன்.

ஜீரோவாக இருந்த சிறுவன் ஹீரோவானது எப்படி.?

''என் சொந்த ஊரு திருநெல்வேலி மாவட்டத்துல இருக்கிற வெங்கட்ராயபுரம்ங்குற குக்கிராமம். என் கூடப் பொறந்தவுங்க மூணு அக்கா, ஒரு தம்பி. எங்கம்மா கிராமத்துல நாலு எருமைகளை வச்சிருந்தாங்க. அதுல கறந்து பால், மோர், தயிர் எல்லாத்தையும் கூடையில வச்சு தலையில சுமந்துக்கிட்டு போய் வியாபாரம் பண்ணிட்டு வருவாங்க. எங்க வீட்டுல அஞ்சு டப்பா இருக்கும். அஞ்சு காசு ஒரு டப்பாவுல, பத்து காசு ஒரு டப்பாவுலனு பிரிச்சுப் போட்டு வைப்பாங்க. அந்த டப்பா எல்லோருக்கும் எட்டுற இடத்துலதான் இருக்கும். யாரு நினைச்சாலும் காசை எடுக்கலாம். ஆனா, எங்க எல்லோரையும் கூப்பிட்டுத்தான் காசைப் பிரிச்சு ஒவ்வொரு டப்பாவுலயா போடச் சொல்லுவாங்க. 'காசு வேணும்னா என்கிட்டச் சொல்லிட்டு எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோங்க. சொல்லாம எடுக்கக் கூடாது'னு அம்மா சொல்லிக் கொடுத்தது இன்னும் அப்படியே நெஞ்சுக்குள்ள இருக்கு. அதனால நாங்க யாரும் அம்மாகிட்ட கேட்காமல் அஞ்சு பைசா கூட எடுக்கமாட்டோம். வாழ்க்கையில அடுத்தவங்க காசுக்கு ஆசைப்படக் கூடாதுங்கறதை இன்னைக்கு வரைக்கும் கடைப்பிடிக்கிறேன்னா அந்த வயசுல எங்கம்மா சொல்லிக் கொடுத்த பாடம்தான்.

எங்கப்பா கோயம்புத்தூருல ஒரு இடத்துல வேலை பார்த்துட்டு இருந்தாரு. அதனால மொத்தக் குடும்பமும் கோயம்புத்தூருக்குப் போயிட்டோம். அப்போ எனக்கு 12 வயசு இருக்கும். கோயம்புத்தூர்ல இருக்குற புனித மைக்கேல் ஸ்கூல்ல என்னை ஏழாவது சேர்த்து விட்டாங்க. எனக்குப் படிப்பு அவ்வளவா வராது. ஆனா, ஒரு வேலை கொடுத்தா அதைக் குறையில்லாமல் செஞ்சு முடிப்பேன். நான் ஒன்பதாவது படிச்சுட்டு இருக்கும்போது அந்த ஸ்கூல்ல இருந்த வாத்தியாரு ஒருத்தரு என்னைக் கூப்பிட்டு, 'ஏன்டா சிவராமா உனக்குப் படிப்புதான் சரியா வரலையே... அப்புறம் எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு வந்து உட்கார்ந்து பெஞ்சை தேய்ச்சுக்கிட்டு இருக்கே.. போய் ஏதாவது உருப்படியா வேலை வெட்டிய கத்துக்கிட்டு பொழைக்கிற வழியைப் பாரு'னு சொன்னாரு. அதனால ஒன்பதாவது பரீட்சை எழுதிட்டு வந்ததோடு சரி... அதுக்குப் பிறகு நான் பள்ளிக்கூடத்துப் பக்கமே போகல. வீட்டுல எல்லோரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. நான் கேட்கவே இல்ல. நானே வேலை தேடுறேன்னு சொல்லிட்டு கோயம்புத்தூரைச் சுத்திச்சுத்தி வந்தேன்.

கோவை ஆரியபவன் ஓட்டல்ல டேபிள் துடைக்கிற வேலை இருக்குனு கேள்விப்பட்டு அங்கே போய்ச் சேர்ந்தேன். என்னோட உயர்வுக்கு அஸ்திவாரம் போட்டதே அந்த வேலைதான்.

எந்த வேலையைச் செஞ்சாலும் அதுல ஈடுபாடு இருக்கணும். அப்போதான் அந்த வேலை சுத்தமா இருக்கும்'னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவாரு. அதனால டேபிள் துடைக்கிற வேலையை இஷ்டப்பட்டு செஞ்சேன். என் வேலை அழகைப் பார்த்துட்டு ஓட்டல் முதலாளி செல்லபாண்டியன் என்னை சர்வராக்கிட்டாரு. ஒரு நாள் ஓட்டல்ல வசூல் ஆன பணத்தையெல்லாம் பீரோவுல வச்சு பூட்டிட்டு சாவியை என்கிட்டக் கொடுத்து, 'இதைப் பத்திரமா பார்த்துக்கோடா சிவராமா'னு சொல்லிட்டுப் போயிட்டாரு. நான் அந்தக் காலத்துலயே அஞ்சு பைசா எடுக்காதவன்... இன்னிக்கு ஆயிரம் ஆயிரமா இருந்தாலும் எங்கம்மா சொன்னதுதான் எனக்குள்ளே ஓடிக்கிட்டு இருந்தது. சாவியைப் பத்திரமா கையில் புடிச்சுக்கிட்டு படுத்திருந்தேன்... காலையில் வந்து பார்த்த எங்க முதலாளி ' நீ எப்படிப்பட்டவன்னு பார்க்கிறதுக்காகத்தான்டா உன்கிட்ட சாவியைக் கொடுத்துட்டுப் போனேன்'னு சொன்னாரு.

எங்க முதலாளி காலையில குளிச்சுட்டு நெத்தி நிறைய விபூதிப்பட்டையோட ஓட்டலுக்குள்ள நடந்து வர்ற அழகே தனி. ஓட்டல்ல இருக்கிற அத்தனை பேரும் அவரைப் பார்த்து வணக்கம் சொல்லுவாங்க. அதைப் பார்த்து பார்த்து நாமளும் ஒரு நாள் முதலாளி ஆகியே தீரணும்னு எனக்குள்ள ஒரு வெறி வந்துச்சு. சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் அடிக்கடி முதலாளி திட்டியதை அந்த வயசுல என்னால தாங்கிக்க முடியல. அதனால ஒரு நாள் திடீர்னு வேலையை விட்டு நின்னுட்டேன்.

ஓட்டல்ல வேலை செஞ்ச காலத்துல எனக்கு மாசச் சம்பளம் இருபத்தஞ்சு ரூபா. மூணு வேளையும் அங்கேயே சாப்பிட்டுக்குவோம். அதனால செலவு எதுவும் இருக்காது. வாங்குற சம்பளத்தை அப்படியே கொண்டுபோய் அம்மாகிட்ட கொடுத்துடுவேன். நான் கொடுத்த பணத்தை அம்மாவும் செலவு பண்ணாம, என் பேருல அப்படியே சீட்டு போட்டுக்கிட்டு வந்தாங்க. அப்போ எனக்கு எதுவும் புரியல. ஆனா ஒவ்வொரு மனுஷனுக்கும் சேமிப்புங்குறது எவ்வளவு தேவையான விஷயம்ங்கிறதை பிற்காலத்துலதான் நான் புரிஞ்சுக்கிட்டேன்

அதுக்கு மேல எனக்கு கோயம்புத்தூர்ல வேலை பார்க்கப் பிடிக்கல. அதனால ஏதாவது ஒரு ஊருக்குப் போகலாம்னு கிளம்பினேன். நான் சம்பாதிச்சுக் கொடுத்ததைச் சேர்த்து வெச்சதோடு எங்கப்பா கொஞ்சம் பணத்தைப் போட்டு மொத்தமா நாற்பதாயிரத்தை என் கையில கொடுத்து, 'இதை வச்சு எப்படியாவது பொழைச்சுக்கோ'னு சொல்லிட்டாங்க. அந்த நாற்பதாயிரம்தான் என்னோட சொத்து!

கிருஷ்ணகிரியில என்னோட சொந்தக்காரர் ஒருத்தர் ஓட்டல் ஆரம்பிக்கப் போறாருன்னு கேள்விப்பட்டு அங்கே போனேன். அவருகிட்ட இந்த நாற்பதாயிரத்தை கொடுத்து ஓட்டல்ல நானும் ஒரு பார்ட்னர் ஆயிட்டேன். அங்கேயே சர்வரா வேலைக்கும் சேர்ந்துட்டேன். ஒரே கையில நாலு பிளேட்டை அடுக்கிட்டுப் போய் சப்ளை பண்ணியதெல்லாம் இன்னும் அப்படியே பசுமையான நினைவுகளா இருக்கு.

சாப்பிட வர்ற கஸ்டமர்கிட்ட எப்படி நடந்துக் கணும், அவங்களை எப்படித் திருப்திப்படுத்தணும், நம்மளை நம்பி அவங்க இல்ல... அவங்களை நம்பித்தான் நாம இருக்கோம்ங்கிற விஷயங்களை எல்லாம் எனக்குப் புரிய வச்சது கிருஷ்ணகிரியில நானிருந்த 'கற்பகம் ஓட்டல்'தான். அஞ்சு வருஷம் அங்க வேலை பார்த்து நான் சேர்த்த காசு.. நான் கொடுத்த நாற்பதாயிரத்துல வந்த லாபம்னு அஞ்சு வருஷத்துல ஒன்றரை லட்ச ரூபாய் சேர்த்தேன். எத்தனை நாளைக்கு இப்படியே சர்வர் வேலை பார்த்துக்கிட்டே இருக்குறது..? கோயம்புத்தூர் முதலாளி மாதிரி நாம எப்போ ஆகுறதுன்னு மனசுக்குள்ள மறுபடியும் அலாரம் அடிக்க ஆரம்பிச்சுது. கற்பகம் ஓட்டல்ல இருந்த என்னோட பணத்தை வாங்கிட்டு எங்க.   போகலாம்னு யோசிச்ச போதுதான், 'சேலத்துல அபிராமினு ஒரு ஓட்டல் ஆரம்பிக்கப் போறாங்க. அதுல பார்ட்னரா சேர்ந்துக்கோ, நல்ல லாபம் வரும்'னு கிருஷ்ணகிரியில இருந்த நண்பர் ஒருத்தர் சொன்னாரு.

அப்போதான் முதல் முதலா சேலத்துக்கு வந்தேன். அபிராமி ஓட்டல்ல அஞ்சு பேருல நானும் ஒரு பங்குதாரராக சேர்ந்து ஓட்டலை ஆரம்பிச்சோம். அங்க நான் கேஷியரா வேலை பார்த்தேன். பிஸினஸ் நல்லாப் போயிட்டு இருந்தது. ஆனா, வேறுவிதமான சிக்கல்கள் வர ஆரம்பித்தன. பார்ட்னர்களின் போக்குப் பிடிக்கலை. கணக்கு வழக்கில்லாம பணத்தை எடுக்க ஆரம்பிச்சாங்க. 'இது உங்க பணம்... எடுக்கிறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா கணக்குச் சொல்லிட்டு எடுங்க'னு சொன்னேன். 'நாங்க அப்படித்தான் எடுப்போம். உனக்குப் பிடிக்கலைன்னா வெளியே போயிடு'னு சொல்லிட்டாங்க. நான் கொடுத்த பணத்துக்கு எந்த டாகுமென்ட்டும் எழுதி வாங்காததால, என்னால எதையும் கேட்க முடியல. வெறுங்கையோட வெளியில் வந்தேன்.... இந்த இடத்துலதான் இடைவேளை...'' என்று சொல்லிவிட்டுச் சிரிப்போடு காபி கொடுக்கிறார்.

காபி இடைவேளைக்குப் பிறகு கதையைத் தொடர்ந்தார்.

''ரஜினி நடிச்ச 'சிவாஜி' படத்துல வர்ற மாதிரி மொத்தத்தையும் இழந்துட்டு அழுதுக்கிட்டே பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல வந்து உட்கார்ந்திருந்தேன். வாழ்வா..? சாவா..?னு முடிவு பண்ணவேண்டிய கட்டம் அது. எதுக்கு சாகணும்..? வாழ்ந்துதான் பார்க்கலாமேனு முடிவு பண்ணினேன்.

பஸ்ஸூக்கு கூட காசு இல்லாம சேலம் முழுக்க நடந்தே சுத்துவேன். அப்போதான் பஸ் ஸ்டாண்ட்டுக்கு எதிரே தங்கும் விடுதி கட்டிட்டு இருந்த ரவிங்குற நண்பர் எனக்குக் கிடைச்சாரு. நல்ல நண்பர்கள் மட்டும் கிடைச்சுட்டா, வாழ்க்கையில எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதைச் சாதனையா மாத்திடலாம்னு எனக்குப் புரிய வச்சது ரவிதான்.

எங்க மாமா திருவேங்கடம் அப்போ துபாய்ல வேலை பார்த்துட்டு இருந்தாரு. என்னோட நெலமையைப் பத்திக் கேள்விப்பட்டு அந்த நேரத்துல ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாரு. ரவியோட விடுதியில ஒரு ரெஸ்ட்டாரன்ட் நடத்துறதுக்கு எனக்கு இடம் கொடுத்தாரு. அதோட பேங்க்ல லோனுக்கும் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாரு. அதை வச்சு எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டேன். நானே தொடங்க போற முதல் ஓட்டல். 1993-வது வருஷம்.. கிராமத்துல எங்க வீட்டுக்கு சரவணபவன்னு அப்பா பேரு வச்சிருந்தாரு. அந்தப் பேருலயே ஓட்டலை ஆரம்பிச்சேன்>

மொத்தமாவே அப்போ எட்டு பேருதான் வேலை செஞ்சோம். சாப்பிடுற எச்சில் தட்டையெல்லாமே நான்தான் கழுவுவேன். ஆளு இல்லைன்னா நானே சப்ளை பண்ணுவேன். என்னோட ஓட்டல்.. நான்தான் முதலாளினு ஆன பிறகு நான் எனக்குள்ள முடிவு பண்ணிய ஒரே விஷயம்.. தரத்திலும் சரி.. சுவையிலும் சரி.. எந்தச் சமயத்திலும் எதுக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கக் கூடாதுங்கிறதுதான். நான் இன்னைக்குக் கொடுக்குற இந்தத் தரம், சுவை, மணம் எல்லாமே எங்கம்மா கைப் பக்குவம்தான். ஆயிரம்தான் வந்தாலும் அம்மா கைப் பக்குவம் மாதிரி வருமா சொல்லுங்க!

எங்க கடையில எதைச் சமைச்சாலும் நான் சாப்பிட்டு டேஸ்ட் பார்க்காம லைனுக்குப் போகாது. இன்னைக்கும் விடிகாலை நாலு மணிக்கெல்லாம் கடைக்கு வந்துடுவேன். நான் வந்தாலும் வராட்டியும் வேலை நடக்கும். ஆனா நானே வந்து பார்த்தால்தான் எனக்கு ஒரு திருப்தி.

நல்ல பொருள் எங்கே கிடைச்சாலும்.. எந்த விலையாக இருந்தாலும் மக்கள் தேடி வருவாங்க. அதுக்குக் கொஞ்சம் தாமதமாகலாம். அந்தத் தாமதத்தைப் பொறுத்துக்கொண்டுதான் ஆகணும். நான் பொறுமையோடு காத்திருந்தேன்...

இன்னைக்கு நாலு ஓட்டல், பேக்கரினு வருஷத்துக்கு பல கோடி ரூபாய் டேர்ன் ஓவர் பண்றேன். ஓட்டல் தொழில்ல என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் பண்ணிட்டேன். அடுத்தகட்டமாக எங்க ஓட்டல்ல தயாரிக்கிற கார வகைகளை 'ஹன்ஸா சேவரிஸ்'ங்கற பேருல சிங்கப்பூருக்கு ஏற்றுமதி பண்றோம்.

எந்த ஒரு வெற்றிக்குப் பின்னாலும் முயற்சிகளும் தோல்விகளும் நிச்சயமா இருக்கும். இருந்தே ஆகணும்! முயற்சி இல்லாதவன் என்னைக்கும் ஜெயிக்க முடியாது. என்னோட எல்லா வெற்றிகளுக்கும் என்கிட்ட வேலை பார்க்கிறவங்கதான் அடிப்படையான காரணம். அவங்க இல்லைன்னா நான் இல்லை. என்கிட்ட வேலை பார்க்கிறவங்களுக்கு பி.எஃப்-ல ஆரம்பிச்சு... எஜுகேஷன் அலவன்ஸ் வரைக்கும் எல்லாமே கொடுக்கிறேன்.

இன்னும் எத்தனை ஓட்டல் திறந்தாலும் அது சேலத்தில் மட்டும்தான் திறப்பேன். ஏன்னா என்னை வாழ வச்ச ஊரு இது! இந்த ஊரை விட்டு நான் எங்கே போவேன் சொல்லுங்க..?

சேலத்துல ஒரு முதியோர் இல்லம் கட்டி அவங்களுக்கு காசு வாங்காம உட்கார வச்சு சோறு போடணும். அதான் என்னோட எதிர்கால கனவு. முதியோர் இல்லமே இருக்கக் கூடாதுங்குறதுதான் என்னோட எண்ணம். ஆதரவில்லாம இருக்கிற முதியோரைப் பராமரிக்கும் ஒரு இல்லமா எங்களோட சரவணபவன் இருக்கும்'' என்று நம்பிக்கையோடு சொல்லி முடித்தார்.

'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா.. தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா..'- ஓட்டல் ஸ்பீக்கரில் சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது ரஜினியின் பாட்டு.

No comments:

Post a Comment