உயிராற்றலின் இயக்க அலைகள்
ஒருவர் ஒரு திருவிழாவுக்குப் போக வேண்டுமென்று எண்ணுகிறார். அந்த எண்ணத்தில் ஒரு ஊர், அங்கு போகும் செயல், அங்கு காண விழையும் காட்சிகள், அனைத்தும் அகக்காட்சியாகின்றன. இவ்வாறு புறமனத்தால் ஒரு எண்ணம் உருவாகும் போது அதற்கு வேண்டிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய எழுச்சிகள், உயிராற்றலின் இயக்க அலைகள் மூலம் ஏற்படுகின்றன. உயிராற்றலை மூளையின் சிற்றறைகளில் எத்தனை கோடி இணைந்து அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் இவையாக மாற்ற முடியுமோ அத்தனையும் இணைந்து இயங்கியே ஒரு எண்ணத்தில் அக்காட்சி உருவாகின்றது.இவ்வாறு மூலையில் ஏற்படும் பதிவுகளும் பிரதிபலிப்புகளும் 'நடுமனமாகும்'. மேலும் இந்தப் பதிவுகள் வித்தணுக்களில் தரப் (மரபுப்) பதிவாக (Heriditary quality) பதிவு பெறுகின்றது இதுவே 'அடிமனமாகும்'. இந்த இயக்கத்தின் தொடராக உடலின் உயிராற்றல் அதிர்வு அலை இயக்கம் வேறுபட்டு உடல் முழுவதும் உள்ள அணு அடுக்குகளில் பதிவுகள் உண்டாகின்றன. அது மட்டுமல்ல ஒருவர் ஓர் எண்ணம் எண்ணினால் அது பிரபஞ்ச சமஷ்டி உயிரோடு தொடர்பு கொண்டு எண்ணிறந்த மக்கள் மூளையிலும் பதிவாகின்றதோடு பிரபஞ்ச உயிரில் (universal soul) நிரந்தரப் பதிவாகவும் ஆகிவிடுகின்றது. இவ்வாறு ஓரு தடவை ஒருவர் எண்ணும் எண்ணத்தால் ஏற்படும் உடல், மூளை, தன்னுயிர், பிற உயிர், சமஷ்டி உயிர் பதிவுகள் திரும்பத் திரும்பப் பிரதிபலிப்பாகும் போது எண்ணம் தோன்றிய இடத்திலேயே அதிக ஆழமாகச் செயலாவது இயல்பு. சமுதாயத்தைப் பற்றியோ தனிப்பட்ட பிறரைப் பற்றியோ எண்ணும் எண்ணங்கள் உரியவரிடம் அதிக அழுத்தமாக திரும்பத் திரும்பப் பிரதிபலிக்கும்.பல தடவை திருவிழாவிற்குப் போக வேண்டுமென்ற எண்ணம் பிரதிபலிக்கும்போது எண்ணத்திற்குச் செயலாற்றவல்ல போதிய வலுவு ஏற்பட்டுவிடும். இந்த எண்ணத்தால் ஏற்பட்ட உயிராற்றல் விரைவு அதிர்வு அலைகள் உடல் கருவிகளையெல்லாம் ஊக்கி எண்ணத்தைச் செயலாற்றத் தயார் நிலையை ஏற்படுத்திவிடும். பிறகு திருவிழாவிற்குப் போய் பார்த்துக் களிக்கும் செயல் மலர்கின்றது. அதனால் இன்ப துன்ப அனுபவங்கள் பதிவாகின்றன. இவ்வாறு செயலாகப் பதித்த எண்ணமும் செயலும் தேவையாக, பழக்கமாக, சூழ்நிலைக் கவர்ச்சியாக மாறி, அடிக்கடி மனிதனைச் செயல்படுத்துகின்றன. இந்த விளக்கத்தைக் கொண்டு ஒரு எண்ணம் எவ்வாறு பதிவு, பிரதிபலிப்பு, செயலாற்றல், இன்ப துன்ப விளைவுகள் என்ற நான்காக மாற்றம் பெறுகிறது என்பதை நன்குணரலாம்.--வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment