படித்ததில் பிடித்த கதை:
மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர் ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு பயிற்சியளியுங்கள்!” என்று கட்டளையிட்டான்.
மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான் மன்னன்.
“அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது” என்றான்.
உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளியிட்டான்.
அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே” என்றனர்.
உடனே தனது அமைச்சரை அழைத்து “என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்” என்றான் கண்டிப்புடன்.
சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு என்னவோ போலிருந்தது.
“இதற்கு என்ன ஆயிற்று ஏன் பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும் விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்க்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா” என்று கட்டளையிட்டான்.
அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை பார்த்தான்.
அவனுக்கு ஒரே சந்தோஷம். “இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!” என்றான்.
அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
“எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?”
மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி சொன்னார்… “அது ரொம்ப சுலபமான காரியம் அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!” என்றார்.
இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும்.
நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை. ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில், மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச் சாதாரணமாக கழிந்துவிடுகிறது.
நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம். நாம் சாதிக்கப் பிறந்தவர்கள். செக்கு மாடுகள் அல்ல
No comments:
Post a Comment