Showing posts with label problem solving technique. Show all posts
Showing posts with label problem solving technique. Show all posts

Sunday, July 12, 2015

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள் !!!

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள் !!!

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் பலமுறை சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இநத் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். கண்ட கண்ட உணவுகளின் மீது ஆசைப்பட்டு அவற்றை வாங்கி நன்கு வயிறு நிறைய சாப்பிட்டு, பின் அது வெளிவராமல் அவஸ்தைப்படுவோம். ஏனெனில் அந்த உணவுகள் செரிமான மண்டலத்தில் எளிதில் செரிமானமாகாதது மற்றும் செரிமானத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள தினமும் போதிய உடற்பயிற்சிகளை செய்து வராததே காரணம் ஆகும். 

ஆகவே உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமெனில், கண்ட கண்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து, தினமும் ஒருசில யோகாக்களை செய்து வாருங்கள். ஆனால் பலரும் யோகா என்ன செய்யும் என்று அதனை செய்வதில்லை. இருப்பினும் மற்ற செயல்களை விட, உடல் ஆரோக்கியமாக இருக்க யோகா பெரிதும் உதவியாக இருக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதனை தவறாமல் செய்து வர வேண்டும். 

இங்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கவும், அந்த பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கவும் செய்ய வேண்டிய யோகா நிலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பவனமுக்தாசனம்

பவனமுக்தாசனம் (Pawanmuktasana) பவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்து,க் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும். இந்த ஆசனம் செய்து வருவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, சீரற்ற மாதவிடாய் சுழற்சி நீக்கி, இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஹலாசனம் (Halasana) 

இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் மேலே தூக்கி, கைகளால் உடலைப் பிடித்துக் கொண்டு, பின் மெதுவாக கால்களை தலைக்கு பின்புறம் உள்ள தரையை தொட வேண்டும். பின் கைகளை மெதுவாக தரையில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்க வேண்டும். இதேப்போன்று 3 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் செரிமானம், பசி, இரத்த ஓட்டம் மற்றும் மன நிலை போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.

திரிகோணாசனம் (Trikonasana) 

முதலில் நேராக நின்று கொண்டு, வலது காலை சற்று பக்கவாட்டில் தள்ளி வைத்து, பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டி, வலது கையால் வலது காலைத் தொட்டுக் கொண்டு, இடது கை மேல் நோக்கி நீட்டியிருக்க வேண்டும். இதேப்போன்று மற்றொரு காலிலும் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை என ஆறு முறை செய்ய வேண்டும்.

பாலாசனம் (Balasana) 


பாலாசனம் என்பது தரையில் உட்கார்ந்து கொண்டு, கால்களை பின்புறம் மடக்கி, கால்களின் மேல் அமர்ந்து, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு, நெற்றி தரையை தொடும் படி குனிய வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் மலச்சிக்கல் மட்டுமின்றி, மன அழுத்தம், சோர்வு, நீங்கி, இடுப்பு, தொடை போன்றவை வலிமையடையும். முக்கியமாக இதனை தொடர்ந்து செய்து வந்தால், முதுகு வலி இருந்தாலும் குணமாகிவிடும்.

சாவாசனம் (Savasana) 

ஆசனங்களிலேயே மிகவும் சிம்பிளானது என்றால் அது சாவாசனம் தான். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கைகளை உடலை ஒட்டியோ அல்லது பக்கவாட்டிலோ வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் 15-20 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மலச்சிக்கல் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் குணமாகும்.

Thursday, July 9, 2015

பிரம்ம தேஜோ பலம் பலம் - மும்மூர்த்திகளின்அருளையும் பெற


தானத்தில் சிறந்தது அன்னதானம். திதிகளில் சிறந்தது துவாதசி திதி. மாதங்களில் சிறந்தது மார்கழி. அதுபோல் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி  என்பார்கள். கிருஷ்ண பரமாத்மாவும் கீதையில், "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என்கிறார்.

கௌசிகன் எனும் மன்னன் தம் தவப்பயனால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்று எல்லாராலும் அழைக்கப்பட்டார். இவரே வரப்பிரசாதமான காயத்ரி மந்திரத்தை நமக்களித்தவர். பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற அஸ்திரத்திற்கு காயத்ரி மந்திரமே ஆதாரம். இதை "பிரம்ம தேஜோ பலம் பலம்' எனக் குறிப்பிடுகிறார் விஸ்வாமித்திரர். மகிமைவாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை காயத்ரி தேவி. 

ஒருமுறை பிரம்மன் புஷ்கரம் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் ஒரு யாகத்தைத் தொடங்கினார். அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி தேவி வராததால், நான்முகன் தனதுசக்தியால் ஸ்ரீகாயத்ரி தேவியை சிருஷ்டித்தார். காயத்ரியே சரஸ்வதியாக எழுந்தருளினாள். பிரம்மனும் தன் யாகத்தை முடித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த தேவி செம் பருத்திப்பூ போன்ற சிவந்த நிறம் கொண்டவள். செந்தாமரையில் எழுந்தரு ளும் அன்னையான இவள் ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கரங்களும் கொண்டு திகழ்கிறாள். 

காயத்ரி தேவி தன் பத்து கைகளில் வர ஹஸ்தம், அபய ஹஸ்தம், அங்குசம், சாட்டை (உட்புறமும் வெளிப்புறமும் உள்ள தீயசக்திகளை நீக்குவது)கபாலம் (சிவ தத்துவம்), கதை (விஷ்ணு தத்துவம்), சங்கு, சக்கரம், இரண்டு கைகளில் தாமரை ஏந்தியவள்; நான்கு வேதங்களையும் நான்கு திருப்பாதங்களாகக் கொண்டவள் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன. வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது.

காயத்ரி என்கிற பதம் காய்+ த்ரீ எனப் பிரிந்து பொருள் தரும். அதாவது "காய்' என்றால் கானத்திற்கு உரியது. பாடப்பெறுவது எனப் பொருள் கொள்ளலாம். காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி தியானித்தால் பெரும் பலன் உண்டு.

"த்ரீ' என்பது "த்ராயதே' என்று  விரிந்து "காப்பாற்று' எனப் பொருள்படும். அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள்.

கா+ ய+ ஆ+ த்ரீ எனும் நான்கு எழுத்துக்களின் சேர்க்கைதான் காயத்ரி. இதில் கா- என்பது நீர் தத்துவமாகிய கண்களுக்குப் புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது. இதற்கு அதிபதி பிரம்மன். ய- என்பது வாயு தத்துவமாகிய சூட்சுமத்தைக் குறிப்பது. இதற்கு அதிதேவதை விஷ்ணு. 

ஆ- என்பது காரணதேகம். இதன் அதிபதி ருத்ரர். த்ரீ- எனும் பதம் இம்மூவரும் சேர்ந்து நம்மைக் காப்பாற்றியருள்வர் என்பதைக் குறிக்கும். 

எனவே ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட மும்மூர்த்திகளின்அருளையும் பெறலாம்

"ஓம் பூர்புவஸ் ஸுவ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்.'

இதுவே காயத்ரி மந்திரம். "எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக' என்பதே இம்மந்திரத்தின் பொருளாகும். 

எல்லா தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் பிரார்த்தனை மற்றும் தியான சுலோகமாக உள்ளது. எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்ரியாகும். இதுதவிர மற்ற தெய்வங்களுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட காயத்ரி மந்திர சுலோகங்களும் உண்டு.



காயத்ரி மந்திர நியதிகளும் பலன்களும்


காயத்ரி மந்திரத்தைப் பொருள்புரிந்து குருமுகமாக உபதேசம் பெற்று ஜெபிக்க வேண்டும்.

இந்த மந்திரத்தை ஜெபம் செய்யும்போது காயத்ரி தேவியையும், சூரிய பகவானையும், ஸ்ரீமந் நாராயணனையும் தியானித்து பக்தி சிரத்தையோடு ஜெபம் செய்யவேண்டும். இதனால் மனோபலமும் வசீகர சக்தியும் கூடும். 

காயத்ரி மந்திரத்துக்கு ஆத்ம சுத்தி, சரீர சுத்தி மிக அவசியம். ஜெபம் செய்வதற்கான இடம், சுத்தமும் காற்றோட்டமும் வெளிச் சமும் உள்ள இடமாகத் திகழ்தல் வேண்டும்.

நதிக்கரைகள், திருக்குளங்கள், அமைதியான மலைப்பிரதேசங்கள், மகான் களின் அதிஷ்டானம், திவ்யதேசங்கள் போன்ற இடங்களில் அமர்ந்து தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

பசு மடத்தில் அமர்ந்து இம்மந்திரத்தை தியானித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும். அதுபோன்று கோவில் கும்பாபிஷேக காலத்தில் யாக சாலையில் அமர்ந்து ஜெபம் செய்தால் பலகோடி நன்மைகள் பெறலாம்.

மான்தோலில் அமர்ந்து இம்மந்திரத்தை தியானித்தால் மன அமைதியும் ஞானமும் பெருகும். துளசி, பவழ மாலை, பொன்மணி மாலை, ருத்ராட்ச மாலை ஆகியவற்றை ஜெபம் செய்ய எடுத்துக்கொள்ளலாம்.

சூரியோதயத்திற்கு முன்பிருந்து சூரியன் மறையும் காலம்வரை எப்போதும் இம்மந்திரத்தை ஜெபிக்கலாம். வைகறை யிலும், அந்தி வேளையிலும் செய்வது உத்தமம். இரவு வேளைகளில் மானசீகமாக ஜெபிக்கலாம்.

காலையில் கிழக்கு நோக்கியும், மாலையில் மேற்கு நோக்கியவாறும் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கலாம். எரிகின்ற தீபத்தைப் பார்த்தோ, அம்பாள் படத்தைப் பார்த்தவாறோ ஜெபித்தால் கூடுதல் பலனைப் பெறலாம். ஜெபம் செய்யும்போது இடையில் எழுந்து செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், மீண்டும் கை, கால்களைச் சுத்தம் செய்துவிட்டுஜெபத்தைத் தொடர்ந்து செய்யலாம்.

காயத்ரி மந்திரத்தின் அட்சரங்கள்


காயத்ரி மந்திரத்தில் 24 அட்சரங்கள் உள்ளன. அவையனைத்தும் 24 ரிஷிகள், 24 தேவதைகள், 24 பலன்களைக் குறிக்கும். 24 பாவங்களையும் நீக்கும். 24 அட்சரங்களை 3 வேதத்திற்குரியவாறு பிரித்துள்ளனர். 

காயத்ரி மந்திரம் பற்றி பலருக்கும் தெரிந்திருந்தாலும், அந்த மகத்தான மந்திரத்தின் பின்னணியில் உள்ள காயத்ரி தேவதை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். காயத்ரி மந்திரம் ரிக்வேதத் திலுள்ள ஆயிரக்கணக்கான மந்திரங்களில் ஒன்றுதான் என்றாலும், 24 எழுத்துக் களைக் கொண்ட காயத்ரி மந்திரம் வேத மந்திரங்களின் சாராம்சமாகக் கருதப் படுகிறது. தன்னை ஜெபிக்கின்றவர் களுக்குப் பாதுகாப்பளித்து ஓர் அரணாகத் திகழ்வதால் காயத்ரி மந்திரத்திற்கு அப் பெயர் ஏற்பட்டது.

சந்தஸ் அமைப்பிலுள்ள காயத்ரி மந்திரத்தையே வேத மாதாவாக நாம் போற்றுகிறோம். காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளுமே  காயத்ரி மந்திரத்தின் அதிதேவதையாகக் கருதப்படுகின்றனர். காயத்ரி தேவி காலை சந்தியாவந்தனத்தின்போது அதி தேவதையாகவும், ரிக்வேத ரூபிணியாகவும், மூன்று அக்னிகளில் கார்ஹபத்ய அக்னியாகவும் வணங்கப்படுகிறாள். நண்பகலில் யஜுர் வேத சொரூபிணியான சாவித்ரியாகவும்,  மாலை வேளையில் சரஸ்வதி தேவி, சாமவேதத்தின் தேவதையாக, ஆவஹணீய அக்னியாகப் போற்றப்படுகிறாள்.

ஐந்து தலைகளோடும், பத்து கைகளோடும் தாமரை அல்லது அன்ன வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கும் காயத்ரிதேவி பிரம்மாவின் மனைவி என்பதால், தன்னுடைய ஒரு முகத்தோடு, பிரம்மாவின் நான்கு முகங்களையும் கொண்டுள்ளதாக ஐதீகம். காயத்ரி தேவியின் ஐந்து முகங்களும் சிவபெருமான் நிகழ்த்துகின்ற சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதனம், அனுக்ரஹம் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) என்ற ஐந்து செயல்களை நினைவூட்டும் வகையில், சரஸ்வதி, லஷ்மி, பார்வதி, மஹேஸ்வரி, மனோன்மணி என்ற தேவதைகளின் ஐந்து முகங்களைக் குறிப் பிடுவதாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களோடு தேவி சித்தரிக்கப்படுகிறாள்.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் தேவியான சரஸ்வதி, காக்கும் கடவுளான  ஸ்ரீமகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி, அழிக்கும் கடவுளான சிவபெருமானின் தேவியான பார்வதி ஆகிய மூவரும் ஓருருவமாக- காயத்ரி தேவியாக விளங்கி நமக்கு ஞானத்தையும் வைராக்கியத்தையும் அருளுகிறார்கள். ஐந்து தேவதைகளைக் குறிக்கின்ற வகையில் சிவப்பு, முத்து நிறம், மஞ்சள், நீலம், வெண்மை ஆகிய நிறங்களில் காயத்ரி தேவியின் ஐந்து முகங்கள் பிரகாசிக்கின்றன. காயத்ரி தேவியின் இருபுறங்களிலும் மகாலட்சுமியும் சரஸ்வதியும் அமர்ந்திருப்பதுபோலக் காட்டப்படுவதுண்டு.

வால்மீகி முனிவர், காயத்ரி மந்திரத்திலுள்ள 24 எழுத்துகளில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஆயிரம் ஸ்லோகமாக 24,000 ஸ்லோகங்களைக் கொண்டு தனது இராமாயணத்தை இயற்றியுள் ளார். 12 ஸ்காந்தங்கள், 318 அத்தியாயங்கள், 18,000 சுலோகங்களையும் கொண்ட மிகச்சிறந்த புராணம் ஸ்ரீதேவி பாகவதம். வியாச முனிவரால் தனது புதல்வர் சுகருக்கு உபதேசிக்கப்பட்டு, சனகாதி முனிவர்களுக்கு சூதரால் கூறப்பட்ட பெருமையுடைய இந்த தேவி பாகவதத்தில் 12-ஆவது ஸ்காந்தத்தில் 51 மற்றும் 52-ஆவது அத்தியாயங்களாக அமைந்திருப்பவைதான் காயத்ரி மஹாத்மியமும், காயத்ரி ஸஹஸ்ர நாமமும். நாரத முனிவருக்கு நாராயண ரிஷியால் இவை உபதேசிக்கப்பட்டன. காயத்ரி மஹாத்மியத்தில் 24 சுலோகங்களைக் கொண்ட காயத்ரி  ஸ்தோத்திரம் அடங்கியுள்ளது. காயத்ரீ தேவி விஷ்ணுலோகத்தில் ஸ்ரீமஹாலட்சுமியாக வும், பிரம்ம லோகத்தில் காயத்ரியாகவும், ருத்ர லோகத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் விளங்குவதாக இது குறிப்பிடுகிறது.

காயத்ரி மந்திரத்தை இடைவிடாது நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜெபம் செய்து அலைபாய்கின்ற மனத்தை ஒருமுகப்படுத்தி சாதனை படைத்தவர்கள் பலர். அறிவுக்கூர்மை பெறவும், ஞாபக சக்தி வளரவும், அச்ச உணர்வு அகலவும், எதிலும் வெற்றி பெறவும், விவேகம் ஏற்படவும் கைகண்ட மருந்தாக காயத்ரி மந்திரம் பயன்படுகிறது.

"காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திர மில்லை; தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை; காசியைவிட புண்ணிய தீர்த்தமில்லை; ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமில்லை' என்கிறது ஒரு சுலோகம்.

ஒவ்வோர் ஆண்டும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரி ஜெபம் வரும். அன்றைய தினம் 1,008 முறை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டுமென்பது மரபு.

அன்றாடம் சந்தியாவந்தனத்தின் போதெல் லாம் முடிந்த அளவுக்கு காயத்ரி ஜெபம் செய்வது விசேஷமானதாகும்.

Friday, June 27, 2014

சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...

சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள ...



கௌதம புத்தர் மாபெரும் விஷயங்களைச் சொல்லும் விதம் மிகவும் எளிமையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். ஒரு சமயம் சீடர்களிடம் உரையாற்ற வரும் போது கையில் ஒரு துணியுடன் வந்தார். அவர்கள் முன் பேச அமர்ந்தவர் பேச்சைத் துவங்காமல் கையில் கொண்டு வந்திருந்த அந்த்த் துணியில் முடிச்சுகளைப் போட ஆரம்பித்தார். மற்ற சீடர்கள் அவர் பேசக் காத்திருக்கையில் சாரிபுத்தன் என்கிற சீடன் மட்டும் அவர் செய்கையும் அவர் உரையின் ஒரு அங்கமே என்பதை உணர்ந்திருந்தான். அவன் உன்னிப்பாக அவர் செயலைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
விதவிதமாக சில முடிச்சுகளைப் போட்டு விட்டு தலை நிமிர்ந்த புத்தர் கேட்டார். “இந்த முடிச்சுகளை விரைவில் அவிழ்க்க என்ன செய்ய வேண்டும்?
மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருக்க உடனடியாக சாரிபுத்தன் சொன்னான். “குருவே! முடிச்சுகள் எப்படி போடப்பட்டுள்ளன என்பதை அறியாத வரை அவற்றை விரைவில் அவிழ்க்க வழியில்லை. முடிச்சு போடப்பட்ட முறையை அறிந்திருந்தால் மட்டுமே அதை விரைவில் அவிழ்க்க முடியும்” .
புத்தர் சொன்னார். “சரியாகச் சொன்னாய் சாரி புத்தா. நினைவோடு போடப்படும் முடிச்சுகளை அவிழ்ப்பது எளிது. நினைவின்றி போடும் முடிச்சுகள் சிக்கலானவை. அவை சில சமயங்களில் அவிழ்க்க முடியாமலும் போகலாம். நம் வாழ்க்கையிலும் அப்படித்தான். விழிப்புணர்வு இல்லாமல் நம் வாழ்வில் ஏற்படுத்திக் கொள்ளும் சிக்கல்களில் இருந்து தான் மீள வழி தெரியாமல் திண்டாடுகிறோம்
துணியில் போட்ட முடிச்சுகள் போட்ட விதத்திலேயே பிரிக்க சுலபமானவை. கவனத்துடன் போட்டிருந்தால் பொறுமையுடன் பிரிக்கலாம். இல்லாவிட்டால் பிரிக்க நாம் செய்யும் உத்திகளும் கூடுதல் முடிச்சுகளாகி விடும். கடைசியில் துணியையே கிழிக்காமல் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் போகும் நிலை கூட ஏற்படலாம்.
வாழ்க்கையிலும் அப்படித்தான். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்கிற விழிப்புணர்வோடு செய்தால் தவறுகள் அதிகம் நிகழ வாய்ப்பே இல்லை. அப்படித் தவறுகள் நிகழ்ந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை விரைவிலேயே சரிப்படுத்திக் கொள்ள முடிபவையாகவே இருக்கும். 
ஆனால் விழிப்புணர்வில்லாமால் நம் வாழ்வில் செய்து கொள்ளும்   சிக்கல்கள் ஆபத்தானவை. அந்தந்த நேர உந்துதல்களில் நாமாகவே ஏற்படுத்திக் கொள்பவை. உணர்ச்சிகளின் பிரவாகத்தில் தன்னிலை இழந்து என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் செய்து கொள்பவை. இந்த சிக்கல்களில் இருந்து மீள செய்யும் முயற்சிகள் பல சமயங்களில் சிக்கல்களை அதிகப்படுத்தி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி விடும். பல சமயங்களில் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தாமல் சிக்கல்களில் இருந்து விடுபட முடியாது.
துணியின் முடிச்சுகள் அவிழ்க்க முடிந்த பின் துணி பழைய நிலைமைக்கே வரலாம். வாழ்க்கையின் சிக்கல்கள் அப்படி அல்ல. பல சமயங்களில் சிக்கல்கள் தீரும் போது வாழ்க்கை முன்பு போல திரும்பி மாற வாய்ப்பு இல்லை. எல்லாமே தலைகீழாக மாறிப் போகும் அபாயம் கூட உண்டு. மேலும் சிக்கல்கள் அனைத்தும் நாமே தான் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான சிக்கல்களில் நம் பங்கு கண்டிப்பாக ஓரளவாவது இருக்கக் கூடும் என்றாலும், சில சமயங்களில் மற்றவர்களாலும் சிக்கல்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட்டு விடலாம்.
நம் செயல்களால் ஆனாலும் சரி, மற்றவர்கள் செயல்களால் ஆனாலும் சரி, விழிப்புணர்வோடு வாழ்க்கையை நடத்துபவன் வரும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு கொள்ள முடியும். அதனால் கவனமாகவும், வேகமாகவும், ஆரம்ப நிலையிலேயே, அவ்வப்போதே அவற்றைத் தவிர்க்கவோ, சரி செய்து கொள்ளவோ முடியும். விழிப்புணர்வு இல்லாத போதோ அவை பூதாகரமாகும் வரை கவனிக்கப்படுவதில்லை. பின் அதன் விளைவுகளில் சிக்கித் திண்டாட வேண்டி வரும். சில சிக்கல்கள் தீர்க்க முடியாமல் போகலாம், தீர்க்க முடிந்தாலும் மீதமுள்ள வாழ்க்கை, நாம் ரசிக்க முடியாததாக மாறியும் போகலாம்.
எனவே விழிப்புணர்வோடு இருங்கள். என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். என்ன நடக்கிறது என்பதிலும் கவனமாக இருங்கள். கண்டிப்பாக நீங்கள் 90 சதவீத சிக்கல்களை விழுப்புணர்வோடு இருப்பதால் மட்டும் தவிர்த்து விட முடியும்.

urs - www.v4all.org