Sunday, November 1, 2015

தேர்ந்தெடுக்கும் திறன்

தேர்ந்தெடுக்கும் திறன்.

தெரு நாய் ஒன்றை சிறிது நேரம் ஊன்றி கவனித்தேன். அது உறங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்களே ஆபத்து நிறைந்தவைகளாகவே இருந்தன.

நடு ரோடு, காருக்கு அடியில், வீட்டு வாசல் போன்ற இடங்களையே அது தேர்ந்தெடுக்கிறது.

இது போன்ற இடங்களில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது இயலாது. ஒவ்வொரு சப்தத்திற்கும் தலை உயர்த்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.  நீண்ட நிம்மதியான தூக்கம் என்பது அந்த நாய்க்குக் கிடையாது.  

கேட்டைத் திறந்தால், காரை ஸ்டார்ட் செய்தால், ஏதாவது வண்டிகள் வந்தால், எல்லாவற்றிற்கும் மேலாக ஏதாவது வாண்டுகள் கல்லெடுத்து அடித்தால் என எப்போதும் ஏதாவது ஒரு ஆபத்து அதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனாலும் நாய் அதுபோன்ற இடங்களையே தேர்ந்தெடுக்கிறது.   இங்கு தெரு நாய்களைப் போன்ற பாவப்பட்ட ஜீவன்கள் வேறெதுவும் கிடையாது.

“நாய அடிக்கற மாதிரி அடிச்சுப்போட்டுடுவேன்” என்பது சொல் வழக்கு. இன்று தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டுச் சாகும் பிராணிகளில் நாய்தான் முதலிடத்தில் உள்ளது. அதை அடித்தால் கேட்பதற்கு யாருமே இல்லை.   

குடல் சிதறி, மூளை சிதறி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் நாயின் உடல் மேல் அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி, பனிரண்டாம் வகுப்பில் ஹெர்பேரியத்திற்காக செம்பருத்தி போன்ற சில பூக்களைப் பறித்து, நோட்டுப் புத்தகத்தில் வைத்து அழுத்தி தட்டையாக்கி விடுவதைப் போல, அந்த நாயின் உடல் தரையோடு தரையாக தட்டையாக்கப்பட்டு தார் ரோட்டில் ஒட்டிக் கிடக்கும் காட்சிகள் நாம் அன்றாடம் காண்பவை.

இதற்குக் காரணம் நாயிடம் தேர்வு செய்யும் திறன் இல்லாததே. எந்த இடத்தைத் தேர்வு செய்தால் யாருடைய தொந்தரவும் இன்றி நிம்மதியாக உறங்கலாம் என அதற்குத் தேர்ந்தெடுக்கத் தெரிவதில்லை.

நாம் மட்டும் என்ன, இளைத்தவர்களா?

மனிதர்களில் கூட பலருக்கு தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போவதால் அந்த நாயைப் போலவே நிம்மதியின்றி அலைகின்றனர்.

அந்தத் திறன் இல்லையானால் அது கிட்டத்தட்ட நாய் வாழ்க்கைதான்.   கடந்தகால அனுபவம், தற்கால சூழ்நிலை இவற்றைக் கொண்டு எதிர்கால விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதைக் கணித்து சரியானவற்றை தேர்ந்தெடுத்தால் அந்த நாயைப் போல துன்பப்பட வேண்டிய அவசியமில்லை.

இந்தத் திறன் இல்லாததால் மனிதன் செய்யும் தவறுகள் ஏராளம். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய தவறு செய்கிறான். பின்பு வாழ்க்கையையே போர்க்களமாய் மாற்றிக் கொள்கிறான்.  

காதலின் போது இது தெரிவதில்லை. ஒரு சாத்வீக குணம் கொண்டவன் ரஜோ குணப்பெண்ணை காதலித்து மணந்து கொள்கிறான். ஆண்-பெண் கவர்ச்சி மறைந்தவுடன் அங்கு உண்மை முகம் வெளிப்படத் தொடங்குகிறது.  வாழ்வு நரகமாகிறது.

ஒரு தொழில் துவங்கும்போது யாரோடு பார்ட்னர் சேரலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் பார்னர்ஷிப் தொழில் செய்து பின்னர் ஏமாந்துபோய் புலம்புகிறான்.

சிட்பண்ட்டில் யாரிடம் பணம் போடலாம் என்பதை தேர்ந்தெடுக்கத்தெரியாமல் யாரோ ஒருவரிடம் போட்டு ஏமாந்து போகிறான்.

சிட்பண்டில் யாரைச் சேர்க்க வேண்டும் எனத் தெரியாமல் பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடி விடும் நபர்களைச் சேர்த்து அவதிப்படுகிறான்.

10 ரூபாய் வட்டி தருகிறேன் எனச் சொல்பவனிடம் பணம் கொடுக்கலாமா வேண்டாமா என முடிவெடுக்கத் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாறுகிறான்.

ஒருவரிடம் எந்த அளவுக்குப் பழகலாம் எனத் தெரியாமல் அளவுக்கு அதிகமாகப் பழகி முடிவில் அது விரோதத்தில் முடிகிறது.

வீட்டுக்குள் யாரை அனுமதிக்கலாம் என்பதை தேர்ந்தெடுக்கத் தெரியாமல் கயவர்களை அனுமதித்து துன்பத்தில் சிக்கிக் கொள்கிறான்.

இதுபோல இன்னும் ஏராளமாய் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாய் எப்படி தூங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடத்தை தவறாகத் தேர்ந்தெடுக்கிறதோ, விளைவுகளை அறியாமல் தேர்ந்தெடுக்கிறதோ, அதே போல்தான் நாமும் விளைவுகளை அறியாமல் பல விஷயங்களை செய்துவிட்டு விழிக்கிறோம்.

தேர்ந்தெடுக்கும் திறனை குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்துக்கொள்ளவேண்டும். நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறன் இருந்தாலே தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.  

நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலானவை நாமே தேர்ந்தெடுத்துக்கொண்டவையே யொழிய இறைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.  

எந்த அளவுக்கு நம் மனதில் பேராசை, சினம், பொறாமை, கடும்பற்று, உயர்வு-தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்கள் அதிகமாக உள்ளனவோ, அந்த அளவுக்கு நம் தேர்ந்தெடுக்கும் திறன் குறைந்து போய் துன்பத்தில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.  

உதாரணமாய் மிகக் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது பேராசை.  இந்தப் பேராசை பத்து ரூபாய் வட்டி தருபவனை நிச்சயமாய் உங்களிடம் ஈர்க்கும்.  மனம் முழுக்க பேராசை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்போது தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போய்விடும். பின்பு தவறான ஆளைத் தேர்ந்தெடுத்து துன்பத்தில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.  பத்து ரூபாய் வட்டி தருகிறேன் என்பவனே தவறான ஆள்தானே...

ஆகவே நிதானத்தின் மூலம் நல்ல சிந்தனைத் திறனையும், நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறனையும் வளர்த்துக்கொண்டால், தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.  துன்பத்திற்கும் வாய்ப்பில்லை.

குழந்தைகளுக்கு இந்த நுட்பத்தை இப்போதிருந்தே கற்றுக்கொடுப்போம்.

No comments:

Post a Comment