Wednesday, November 4, 2015

குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு

குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு 

குலதெய்வம் – குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர்.  தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.  குலதெய்வ அருள் இல்லாமல் நமது வாழ்க்கையில் ஒரு நொடி கூட வாழ இயலாது.  எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம். 

குலதெய்வம் என்பது நமது குலத்தில் அதாவது பரம்பரை பரம்பரையாக வழிபாடு செய்து வரும் தெய்வம் ஆகும்.  இத்தகைய தெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும்.  மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.  குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.  ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது.  சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.  எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்க முடியும்.

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள்.  அவ்வாறு செய்வது தவறில்லை.  குலதெய்வ வழிபாடு செய்யும் பலர் வேறொரு தெய்வத்தையோ அல்லது தெய்வங்களையோ வழிபாடு செய்வார்கள்.  அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது.  அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும்.  இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான்.  மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார்.  மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள்.  மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு.  அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.  அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.  எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன.  குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.  யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாது.  அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பது பழமொழி.  ஆம் யார் தம்மை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களோ அவர்களிடம் தான் குழந்தைகளும் தெய்வங்களும் சென்று சேர்ந்து விடும்.  தங்களுக்கு வசதியான நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்கிறார்கள்.  இது மிகவும் தவறு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன.  குலம் தெரியாமல் கூட இருக்கலாம்.  ஆனால் குலதெய்வம் தெரியாமல் ஒருவர் இருக்கக்கூடாது.  குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.  எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள்.  அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை.  குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

ஆனால் தற்காலத்தில் இத்தகைய கூட்டு வழிபாடு குறைந்து போய் விட்டது.  மக்களும் அவரவர் சொந்த பந்தங்கள் மற்றும் பூர்வீக வசிப்பிடத்தினை விட்டு புலம் பெயர்ந்து போய்விட்டார்கள்.  பலர் தங்களின் செல்வ செழிப்பில் குலதெய்வத்தினை மறந்து விட்டார்கள்.  விளைவு வாழ்க்கையில் கண்டங்கள் மற்றும் கஷ்டங்கள்.  அது மட்டுமல்லாமல் குலமே தழைக்காமல் போனதும் உண்டு.

எனவே குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வது நன்று.  உதாரணமாக நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு செய்திருப்பார்கள்.  ஆனால் நாமோ வெள்ளிக்கிழமை செய்யாமல் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அந்த நாளில் வழிபாட்டினை மாற்றி வைத்துக்கொள்வது மிகவும் தவறு.

குலதெய்வ வழிபாடு புதிதாக செய்ய தொடங்குபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது.  ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும்.  அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும்.  காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.  இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.

குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்.  அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.

மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும்.  இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் போது 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக உடலுறவு கூடாது.  இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறிய வைப்பார்.  யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம்  அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.

மேற்கண்ட வழிபாட்டினை அசைவ உணவை நிரந்தரமாக நிறுத்திய பின்பே செய்து வரவும்.  அசைவத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும்.  அசைவ உணவு, மது பழக்கம், முறையற்ற உறவு இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் குலதேவதாய நமஹ

ஓம் குலதேவதாயை நமஹ

No comments:

Post a Comment