Showing posts with label employee counseling. Show all posts
Showing posts with label employee counseling. Show all posts

Friday, July 31, 2015

பூசைக்குரிய புனிதமான மலர்கள்



பூசைக்குரிய புனிதமான மலர்கள்

இறைவன் பூமியின் மீது படைத்துள்ள அத்தனை பொருட்களும் அவனுக்கு உரியவை. அதில் மலர்களும் அடங்கும். ஆயினும் எல்லா மலர்களும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைப்பது அரிது.
ஆகையால் கிடைக்கும் மலர்களையும், அதன் தன்மையையும், பயனையும் உணர்ந்து மனநிறைவோடு மனப்பூர்வமாகப் பயன்படுத்தி பூஜை செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
செந்தாமரை மலர் – செல்வம், தொழில் மேன்மை ஆத்ம பலம் தரும். வெண்தாமரை மலர், வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை இருவாட்சி போன்ற வெள்ளை மலர்கள் மனக் குறையைப் போக்கும். மனதில் தைரியம் சேர்க்கும்.
அரளிமலர் – பெண்களுக்கு மாங்கல்ய பிராப்தி உண்டாக்கும். கடன் ஏற்படாமல் தடுக்கும்.
சிவப்பு அரளி, செம்பருத்தி – பெண்களுக்கு, மனதை வாட்டும் கவலை அகற்றி குடும்ப ஒற்றுமையை உருவாக்கும்.
நீலசங்கு புஷ்பம், நீலாம்பரம் ஆகியவை அவப்பெயரைப் போக்கும். தரித்திரம் நீக்கும். மனஅமைதி தரும். சனிபகவான் அருளைப் பெறவும் வழிவகுக்கும்.
மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி கணவன், மனைவிக்குள் அன்பை பெருக்கும்.
பாரிஜாதம் – அல்லிப்பூ போன்ற சற்று மங்கலான வெள்ளை புஷ்பங்களையும் இறைவனுக்கு சார்த்தக் கூடாது.
விநாயகர் பெருமானுக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய மலர்கள் பூஜைக்கு உகந்தவை.
முருகப் பெருமானுக்கு முல்லை, சம்பங்கி, ரோஜா, செங்காந்தள் போன்றவை உகந்தவை. திருமாலுக்கு தாமரை, பவளமல்லி, துளசி, சாமந்தி, ஆகியவை உகந்தவையாகும்.
லட்சுமிக்குத் தாழம்பூ மிகவும் சிறந்தது.
பொதுவாக பூவிற்கும், பொட்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மலர்கள் இல்லாத மங்கல நிகழ்ச்சிகளே கிடையாது.
பூசைக்குரிய மலர்களைக் கொண்டு வழிபட்டால் பொருளும் பெருகும். புகழும் கூடும்.

Thursday, June 25, 2015

எந்த மனைவிக்கும் கணவன்களைப் பிடிப்பதே இல்லை என்பதுதான் உண்மை... பேசவே தெரியாது… அது பாட்டுக்குப் புலம்பிட்டு இருக்கும்…”

கங்கை அமரனின் பேட்டி ஒன்று ,
என் கண்களில் பட்டது இன்று ....
“நீங்கள் பல்கலை வித்தகராக இருக்கீங்க... இதில் உங்களின் எந்த முகம் உங்கள் மனைவிக்குப் பிடிக்கும்?” என்று கங்கை அமரனிடம் கேள்வி எழுப்பப்பட...
இதற்கு கங்கை அமரன் சொன்ன இடக்கு மடக்கான பதில்..:
“எந்த மனைவிக்கும் கணவன்களைப் பிடிப்பதே இல்லை என்பதுதான் உண்மை. ‘வீட்டிலேயே தங்க மாட்டார்… பேசவே தெரியாது… அது பாட்டுக்குப் புலம்பிட்டு இருக்கும்…’ இப்படித்தான் புருஷன் மேல் மனைவிகள் விமர்சனம் பண்றாங்க.
பத்து பேர் முன்னாடி ஒரு கணவன் கிட்டே ஒரு மனைவி நடந்துக்கிற விதத்துக்கும்,
எல்லோரும் போன பின்னாடி நடந்துக்கிற விதத்துக்கும் உண்மையிலேயே வித்தியாசம் இருக்கும்...
அவங்களுக்கு நாம ஈஸியா கிடைச்சிடுறோம்… அதனால் நம்ம பெருமை அவங்களுக்குப் பிடிபடுறதில்லை. நம்மைப் பார்க்க எத்தனையோ பேர் தவமிருப்பான். சந்தித்ததைப் பெருமையா நினைப்பான். ஆனால், அவங்களுக்கு ஆஃப்டரால் புருஷன்தான்...
என் அனுபவம் மட்டுமல்ல. (சில வி.ஐ.பி.களின் பெயரைக் குறிப்பிடுகிறார்). இவர்களின் அனுபவங்களும் இப்படித்தான். ”
# கங்கை அமரனின் இந்த பேட்டியைப் படிக்கும்போது , அவர் சொன்ன சில வி.ஐ.பி.க்களின் பெயர்களில் ரஜினியின் பெயரும் கட்டாயம் இருந்திருக்கும் என்று தோன்றியது..
ரஜினியை கே.பாலச்சந்தர் பேட்டி கண்ட , அந்த ஸ்பெஷல் விழா மேடையில்...
ரஜினி தனது குருநாதர் கே.பாலச்சந்தர் முன்னிலையில் உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருக்க ....அதை உணர்ந்த லதா ரஜினி கீழே இருந்தபடி , தன் முகத்தில் காட்டிய எக்ஸ்பிரஷன்..:
"ஐயய்யோ...இவர் இந்த மேடையில.., "உதைக்க வேணாம், தூக்கி போட்டு மிதிக்க வேணாம்" ..இப்படி எதுவும் பேசாம இருக்கணுமே..?"
# மறுபடியும் மனதில் நினைவுக்கு வருகிறது ,
கங்கை அமரனின் அந்த பேட்டி :
“எந்த மனைவிக்கும் கணவன்களைப் பிடிப்பதே இல்லை என்பதுதான் உண்மை...
பேசவே தெரியாது… அது பாட்டுக்குப் புலம்பிட்டு இருக்கும்…”
# கங்கை அமரன் சொன்னது உண்மைதானோ..?
www.v4all.org 

Thursday, June 4, 2015

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு…
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு…
“பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ…’ என்றார்.
குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, “இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு…’ என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள்.
தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது.
அதோடு, “இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ…’ என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.
அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். “குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்…’ என்று, அவர் விளக்கிய போது…
ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது. புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது… படிக்கும் நல்ல விஷயங்களை, தக்க தருணத்தில் நடைமுறைப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற உண்மை புரிந்தது…!