Tuesday, September 20, 2016

பயமும் அதை சமாளிக்கும் முறைகளும்

மனம், சுபாவத்தில் எதிர்மறையானவற்றை கெட்டியாக  பிடித்துக்கொள்ளும் என்று பார்த்தோம் அல்லவா, வாழ்வில் பூரணமடையும் முறைகளைப் பற்றியும் படித்தோம். அதில் முதலில் கூறியது நம்பிக்கையைப் பற்றி.

இதன் எதிரிகள், பயமும், சந்தேகமும். முதலில் பயத்தை அறிந்து அதை  களைந்தெரிந்து விடுவோம். பயமும் அதை சமாளிக்கும் முறைகளும் பயம் என்பது அன்பு தலைகீழாக நிற்பது போன்றது என்பதால் அன்பால் விளங்கக்கூடிய அனைத்தையும் பயமும் விளங்கச் செய்யும். 

தாயினிடமே ஒட்டிக்கொண்டிருக்கும் குழந்தையின் ஒட்டுதலை அன்பாகவும் புரிந்து கொள்ளலாம். அல்லது பயத்தினால் ஏற்பட்டது என்றும் சொல்லலாம். பயத்தின் பிரதான உள்ளுணர்ச்சியை தெய்வீக அன்பை அறிந்து கொள்வதன் மூலம் முழுதாக மாற்றிவிடலாம்.முழுதாக குழப்பம் நிறைந்த சூழலிலும் அல்லது முற்றிலும் ஒழுங்கு நிறைந்த சூழலிலுமே பயத்தை முற்றிலும் துறப்பது சாத்தியம். ஞானிகளுக்கும், முட்டாள்களுக்கும் பயம் என்பதே தெரியாது. இடைப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு தான் பயம் ஆழ்ந்து இருக்கும். உலகில் ஒழுங்கை காப்பாற்ற பயம் முக்கியம். அதுவே பிரதான உள்ளுணர்ச்சி.

*இறப்பின் மேல் உள்ள பயம் வாழ்க்கையை போற்ற உதவும். 
*தவறைப் பற்றிய பயம் சரியான நிலையை காக்கும். 
*நோயைப் பற்றிய பயம் சுகாதாரத்தை ஊக்குவிக்கும். 
*துக்கத்தைப் பற்றிய பயம் தங்களை நியாய மானவர்களாகச் செய்யும்.

குழந்தைக்கும் ஒரு சிறிய பயம் இருப்பதால் அது கவனமாக நடக்கிறது. ஒரு சிறிய பயம் எல்லாம் சரியாக நடக்கச் செய்ய தேவையாக இருக்கிறது. முற்றிலும் பயத்தைப் போக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் என்று யாரும் இல்லை (அ) நீங்கள் முக்கிய மானவருக்கும் உரியவர் என்பதை அறிந்து தியானம் செய்யுங்கள்.
எப்படி களைந்தெறிவது?

பயம் என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்ன? நம் உலகில் நடுக்கத்துடன் கூடிய தீவிரமான அதிர்வு, நிற்கும் தரை லேசாக இருப்பதை போன்றவைதான் இதற்கான அறிகுறி, ஒடுங்கிப் போவதை போன்ற உணர்ச்சி, எதையாவது பற்றிக் கொள்ள வேண்டும் என்ற போக்கு காணப்படும். எதுவும் நமக்கு உரித்தது அல்ல என்ற உணர்வு இருக்கும். ஒரே சூன்யமாய் தோன்றும். இந்த எல்லா உணர்வுகளுடன், தொப்புள் கொடிக்கும் நெஞ்சு அல்லது தொண்டைக்கும் நடுவே இவை ஒரு தீவிரமான அதிர்வை ஏற்படுத்தும், அதுவே பயம். 

இது எப்பொழுது உருவாகிறது? சிறு குழந்தைகளுக்கு பயம் என்பதே கிடையாது, வளரும் பொழுது அது உருப்பெறுகிறது. பயமும், ‘தான்’ என்ற எண்ணமும் நெருங்கிய தொடர்புடையவை. அகம்பாவம் வளரும் பொழுது பயமும் வரும். அகம்பாவம் என்றால் என்ன? 

அது ஒரு எல்லைக்கோடு; நம்மை பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிலிருந்தும் வேறுபடுத்திக் கொள்ளுவது. இந்தப் பரந்த எல்லைகளற்ற பிரபஞ்சத்தில் கற்பனை அறைகள் உண்டாக்கி அதில், நாம் வாழ்வதை போன்று உணருவதே, ‘நான்’ என்ற உணர்வு. விழித்திருக்கும் பொழுதும், கனவிலுமே பயம் வரும், தூக்கத்தில் பயம் இருக்காது. பயம் தீவிரமாகும் பொழுது உங்களால் தூங்கக் கூட முடியாது.  தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

இந்த தீவிர உணர்வை, ஒரு குறிப்பிட்ட நிகழ்வுடனோ, பொருளுடனோ இணைக்க முடியும். இங்கே தான் நாம் அதை நிரந்தரமாக்குகிறோம். நம் பயம் உயரத்தைக் கண்டு, என்று எண்ணும் பொழுது அந்த உணர்வை ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையுடன் நிலை நாட்டி விடுகிறோம். அந்த சூழ்நிலையை களைய முயன்றாலும், பயத்தை போக்க முடிவதில்லை. அதைப் பற்றிய தெளிந்த அறிவைக் கொண்டே அதை போக்க முடியும். 

அதை அறிந்த நிலையில் அல்லது அதை ஏற்றுக் கொண்டு, முழுதாக அனுபவிக்க தயாராகும் பொழுது, அந்த பயம் மாறி அன்பாக மாறுவதை காண்பீர்கள்! அன்பு, பயம், வெறுப்பு இவை வெவ்வேறு சக்திகள் கிடையாது, ஒரே சக்தியின் வெவ்வேறு வடிவங்கள். இதனால்தான் தீவிரமான பயம், காதல், அன்பு இவை எல்லாவற்றையும் உணரும் பொழுது; தொப்புள் கொடிக்கும் நெஞ்சுக்கும் இடையே அதிர்வுகள் ஏற்படுவதை உணரலாம்.

பயம் என்பது அன்பு தலைகீழாக தொங்குவது என்பதால், அன்பு இருக்கும் பொழுது பயம் இருக்காது, பயம் இருக்கும் பொழுது அன்பு இருக்காது, இரண்டும் ஒருசேர இருக்க முடியாது. இவை இரண்டும் மாறி மாறி வரக்கூடும்.

 ஆழ்ந்த அன்பு ஏற்படும் பொழுது, பயமோ வெறுப்போ அறவே இருக்காது. வெறுப்பு மிகுந்து காணப்படுபவர்கள் எதற்குமே அஞ்ச மாட்டார்கள்,  தீவிரவாதிகள் இருப்பதை போல. தீவிரவாதிகளிடம் இருப்பது தீவிரமான அன்பு  அதாவது உருமாறிய அன்பான வெறுப்பே மிகுந்து காணப்படும். ஆகவே, பயம் இருக்காது. குழந்தைகளிடம் பூரணமான அன்பு காணப்படுவதால் அவர்களுக்கும் பயம் கிடையாது.

உணவில் உப்பு இருக்கும் அளவில் பயமும் தேவையே. இயற்கையான பரிணாம வளர்ச்சியில் தானாகவே அது வரும். ஒருவர் தன்னை காத்துக் கொள்ளவும், கவனமாக நடக்கவும் இது உதவும். குழந்தைகளிடம் பயம் இல்லாததால்தான் அவர்கள் கவனமாக இருப்பதில்லை, நெடுஞ்சாலையில் ஓடக்கூட கவலைப்பட மாட்டார்கள். 

எது வேண்டுமென்றாலும் அவர்கள் செய்வார்கள். பயமறியாததால் பள்ளத்தாக்கில்கூட குதிப்பார்கள். அக்குழந்தைகளுக்காக தாய்மார்களே பயம் கொள்வார்கள். வயது வந்தவர்களில் உள்ள பயமே தன் உடலை காக்க உதவுகிறது. விடலை பருவத்தில் குறைவான பயமே இருக்கும். ஏனென்றால் அவர்கள் அனுபவம் குறைந்தவர்கள். ஆகவே  போதுமான அளவே இருக்கும்.

பயம் ஒரு திருப்பம் கொண்டு, நிபந்தனையற்ற அன்பாக மாற வேண்டும், அது சாத்தியமே! பயத்தின் மீது கவனம் செலுத்தாமல் அதை ஒழித்தோ அல்லது விழிப்புணர்வுடன் உரு
மாற்றியோ செய்ய முடியும். இதைச் செய்யாவிட்டால் இது புரைபோல நம் இயக்கத்தில் பரவி, நம் மலர்ச்சியைத் தடுக்கும்.நீங்கள் ஆனந்தமாக இருக்கும் பொழுது 
உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை கவனித்து இருக்கிறீர்களா? எதோ ஒன்று விரிவடைகிறது. நீங்கள் சோகமாக இருக்கும் நேரம் அதுவே சுருக்கமடையும், ஆனால், சுருங்கி விரியும் அந்த பிரக்ஞை மீது நாம் கவனம் செலுத்துவதே இல்லை. 

நம்மை சுதந்திரமாக உணர வைக்கும் ரகசியம் அதில்தான் புதைந்துள்ளது. சுருங்கி விரியும் மனது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை; எப்பொழுது அது சுதந்திரமாக உள்ளது; எப்பொழுது பயம் கொண்டுள்ளது; எப்பொழுது அன்பை உணருகிறது; எப்பொழுது வெறுப்பு ஏற்படுகிறது என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை.நம்மில் நடக்கும் இதை கவனிப்பதே தியானமாகும். மெல்ல நீங்கள் அதை கட்டுப்படுத்த முடியும். எப்படி உணர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வாறே உணருவீர்கள்! 

நீங்கள் உங்கள் உணர்ச்சிகளின் அடிமை என்று பல சமயங்களில் நினைத்து இருக்கிறீர்கள். நீங்கள் மோசமாக உணரும் பொழுது, ஏன் அப்படி உணருகிறீர்கள்? உங்களுக்கு அவ்வாறு உணராமல் இருக்கும் சக்தி உள்ளது என்றால், அதிலிருந்து வெளியே வர முடியும். அதற்கான மார்க்கமும் உங்களுக்கு தெரியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம் உணர்ச்சிகளை விட, நம் இருப்பின் கரு வலுவானது. அது நம் ஆதாரத்துடனும், நாம் இருக்கும் புலத்துடனும் மற்றும் எல்லையில்லா சக்தியுடன் தொடர்புடையது. நம்மை கருவில் வளர்த்து, குழந்தைப் பருவம் முதல் வளரச் செய்த நம் பிரக்ஞைக்கு அதை ஆற்றி குணப்படுத்தும் சக்தி உண்டு. 

நம் உடலை சரி செய்யத் தேவையான எல்லாமே அதனிடம் உள்ளது. ஆனாலும் நாம் தேவைப்படும் நேரங்களில் மூலிகைகள், வைட்டமின்கள், மருந்து மற்றும் உணவு அருந்த வேண்டும், அதுவும் உதவும். நமக்கு சக்தி தரக்கூடிய ஆதாரங்கள் நான்கு அவை, உணவு, உறக்கம், மூச்சு மற்றும் தியானம் இவைகளின் உதவியையும் நீங்கள் பெற்றுக் கொள்ள லாம். அதே சமயம் உங்கள் பிரக்ஞையே உங்களை குணப்படுத்தி ஆரோக்யமாக வைத்துள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நொடி கண்களை மூடிக்கொள்ளுங்கள். என்ன நடக்கிறது என்று யார் பார்க்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்? நீங்கள் கண்ணால் பார்க்கிறீர்கள், காதால் கேட்கிறீர்கள். கண்களுக்கும், காதுகளுக்குப் பின்னே இருக்கும் அந்த மனம் என்ன? அந்த ‘நான்’, அந்த ‘நீ’ என்ன? புலன்களுக்குப் பின் இருக்கும் அந்த மனதை எண்ணிப் பாருங்கள்.

நீங்கள் நாற்காலியில் அமர்ந்து இருக்கலாம். அதை அறிய உங்களுக்கு உதவி தேவையா? இல்லை. நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எப்படி? நீங்கள் தானாக உணருகிறீர்கள். இது போல உணர வைக்கும் அந்த மனதை உணருங்கள். இப்பொழுது கண்களை திறங்கள், மனம் கண்கள் மூலமாக பார்க்கிறது. 

அதே மனம் காதுகளின் மூலமாக கேட்கிறது. இப்பொழுது உங்கள் கவனத்தை ஆதாரத்திற்கு, அந்த ‘ஒரு உயிர்’ அந்த ‘ஒரு பொருள்’ நாம் எல்லா விவரங்களை அறிய உதவும் அந்த மனம், அந்த ‘நான்’, விவரங்களை பதியச் செய்து, ஒப்பிட்டுப் பார்த்து, தீர்ப்பை அளிக்கும் நினைவு இவற்றின் மேல் கொண்டு செல்லுங்கள். இது ஆரோக்கியத்தை அளிக்கும். ஸமஸ்கிருதத்தில் ஆரோக்கியத்தை ‘ஸ்வஸ்தா’ என்று கூறுவர் அதன் பொருள் ஆன்மாவுடன் ஒன்றி இருப்பவர் என்பதே.

No comments:

Post a Comment