கிராமத்துத் தொழில்கள் என்றாலே ஏதோ சிறிய முதலீட்டில் தொடங்கி ஓசையின்றி நடத்தப்படுபவைதான் என்கிற எண்ணம் நமக்குள் உருவாகிவிட்டது.
இது ஒரு தவறான கண்ணோட்டம். இன்று உலகறியத் தொழில் நடத்தி வரும் பல பிரபலமான தொழில் நிறுவனங்களின் உற்பத்திச் சாலைகள், தொழிற்சங்கங்கள் பலவும் இன்று கிராமப்புறங்களில்தான் அமைந்திருக்கின்றன.
நடந்தது என்ன?
பொருளாதார நுழைவுக்கு, இந்தியாவின் தாராளமய முகம் கிடைத்த பிறகு, இந்தியாவில் பிற நிறுவனங்களின் தேடல் கிராமப்புறங்களில் அமைந்தன. அரசிடம் இருந்து கிடைக்கின்ற ஆதாய சலுகைகளை முன்னிட்டுத்தான் பல நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை கிராமப்புறங்களில் தொடங்கின; கிராமப்புற வளர்ச்சியையோ,-ஊரகத் தொழில்களின் மேம்பாட்டைக் கருதித் தொடங்கப்படவில்லை என்பதே கசக்கும் உண்மை.
நகர்ப்புற விற்பனைப் பொருட்கள் கிராமச் சந்தைக்குள் நுழைகின்றனவே தவிர, கிராமம் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் நகர்ப்புற சந்தைகளில் நுழைவது என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நீடிக்கிறது.
காரணம் என்ன?
கிராமப்புற தொழில்கள் பெரும்பாலும் உணவு சார்ந்த சிறு தொழில்களாக இருந்ததே முக்கியமான காரணம். இப்பொருட்களுக்கான தேவை அதிகரித்தபோது, உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் கிராமத்தில் இருந்து நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. நவீன இயந்திரங்களின் உதவியுடன் உற்பத்தி பெருகியது. அதனையடுத்து அத்தயாரிப்புகள் நகரச் சந்தைகளில் கவனம் பெற்றன. தலையைச் சுற்றி மூக்கைத்தொடுவதுபோல அவை நகரங்களில் இருந்து புது வடிவில் கவர்ச்சிகரமாக கிராமப் புறங்களுக்கும் நுழைந்தன.
எந்த ஒரு வணிக மதிப்பையும் தேவைதான் தீர்மானிக்கிறது. வியாபாரக் கண்ணோட்டத்தில வாடிக்கையாளர்களைக் கவர சில கவர்ச்சிகரமான கலவைகள் சேர்க்கப்பட்டதில் இயல்பான கலாச்சாரத் தயாரிப்புகளில் இருந்து கிராமங்களும் மாறின.
சந்தைக் கலாச்சாரம்
நுகர்வோர் தர்மம் அல்லது தொழில் தர்மம் என்றெல்லாம் வழங்கப்பட்ட சொற்கள் மெல்ல மெல்ல மறையத்தொடங்கின. நுகர்வோர் சந்தை என்கிற வணிகக் கலாச்சாரம் உருவாகத் தொடங்கியது. ‘நல்லதை விற்பனை செய்’ என்பது கேலி செய்யப்பட்டது. ‘எது விற்கிறதோ, அதனை உற்பத்தி செய்’ என்கிற வணிகத்தந்திரம் மரியாதையை அடைந்தது.
இதெல்லாம் எல்லா நாடுகளிலும் நடைபெற்றதுதான். ஆனால் மற்ற நாடுகளில் நடப்பதற்கும் இந்தியாவில் நடப்பதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. இன்றும் 60% மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கிற நாடு இது. காவிரி நீருக்கு இன்றுவரை தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இழுபறி ஓடிக்கொண்டிருக்கிறது. விவசாயம் சார்ந்த துணைத்தொழில்கள், கிராமியத் தொழில்கள் இந்தியாவில் நசுங்குவது, தேசத்தின் இதயத்தைக் கசக்குவது போன்றது.
இப்போது நீங்கள் விளம்பரங்களில் காணுகின்ற ’கை மணம்’, ’பாரம்பரியம்’, ’அந்தப் பகுதி உணவு வகை’, ’செய்முறை’ என்று குறிப்பிடுவதெல்லாம் சந்தையைப் பிடிப்பதற்காகத்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கிராமியப்பொருட்கள் கார்ப்பரேட்கள் கைக்கு போவது ஒருபுறம் இருக்கட்டும். இன்று கிராமமே கார்ப்பரேட்கள் கைக்குப் போகிறது. இதனை வெகுநாட்களுக்கு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
அப்படியானால் என்ன செய்வது?
கிராமியத்தொழில்களுக்கு உயிர் கொடுப்பதுதான் ஒரே வழி. பகாசுர நிறுவனங்களுடன் ஒரு எளிய கிராமத்து மனிதன் போட்டிபோட்டு எப்படி ஜெயிப்பது என்று மலைக்க வேண்டியதில்லை. குழுவாகச் சேர்ந்து செய்யும் தொழில்களில் கூடுதல் பலம் காட்ட முடியும்.
gopal
இன்றைக்கும் ஆர்.எஸ். கிருஷ்ணா அண்ட் கோவின் ‘ஒரிஜினல் தென்னமரக்குடி எண்ணெ’யும் அஞ்சால் அலுப்பு மருந்தும் 1431 பயோரியா பல்பொடியும் கோபால் பல்பொடியும் நீலி பிருங்காதி, கேசவர்த்தினி கூந்தல் தைலமும் தங்கள் இடத்தை விட்டுக்கொடுக்காமல்தானே இருக்கின்றன!
கூடித்தொழில் செய்வது என்று முடிவானபின் அதற்கு ஒரு வடிவம் தேவைப்படுகிறது அல்லவா? அதுதான் சுய உதவிக் குழுக்கள் எனும் வடிவம். கடந்த 20 ஆண்டுகளில் இந்த வடிவம் உருவான பிறகு பல நல்ல கிராமியத் தொழில்கள் சார்ந்த உற்பத்தியும், நகர்புறம் சார்ந்த தேவைத் தொழில்கள் என இரண்டுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது.
சிந்திக்க வேண்டிய சிக்கல்கள்
பகுதி சார்ந்த அடையாளங்களை பிராண்டாகவே வைத்துக் கொண்டு (திருநெல்வேலி அல்வா, கும்பகோணம் பில்டர் காஃபி, ஆம்பூர் பிரியாணி முதலியவை எடுத்துக்காட்டுகள்) பிரபல நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் போது, அப்பகுதியில் உள்ள அதன் பாரம்பரிய மணமும் அறிந்தவர்கள், அத்தொழில் தொடங்கி ஏன் வெற்றி பெற இயலவில்லை?
காரணம், பயிற்சியின்மை, தொழில்நுட்பம் எளிதில் கிடைக்காமை, சந்தை எங்கு இருக்கிறது என்கிற தெளிவின்மை ஆகியவைதான்.
coaching
எளிய தொழில்களா? பயிற்சி வேண்டுமா? தேவைப்படும் பயிற்சியை எடுத்துக்கொள்ளுங்கள். சில பயிற்சிகளுக்கு குறுகிய காலப் பயிற்சி போதுமானது. எடுத்துக்காட்டாக, எழுதுபொருள் (ஸ்டேஷனரி) உற்பத்தியைப் பொறுத்தவரை அலுவலகக் கவர்கள் பைண்டிங் போன்ற பணிகளைப் புரிந்துகொள்ள ஒருநாள் பயிற்சி போதுமானது. கண் மை, வாஷிங் சோப், சாந்துப் பொட்டு, குல்கந்து போன்றவற்றுக்கு இரண்டு முதல் ஒருவார பயிற்சி தேவைப்படும்.
முதலீடும் வளர்ச்சியும்
மேற்கண்ட பயிற்சிகளைப் பெற்று முதலில் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் தொழிலை மேற்கொள்ள வேண்டும். பின்னர் அருகில் உள்ள நகரங்களில் கடை உரிமையாளர்களைச் சந்தித்து, ஆர்டர்களைப் பெற்று அதற்கேற்ப உற்பத்தியை விரிவாக்கலாம்.
மேலும் கிராமிய வளர்ச்சி சார்ந்த அரசின் திட்டங்கள், மகளிர் நலத்திட்ட வழிமுறைகள், மேம்பாட்டுத் திட்டங்கள், வங்கிகள் வழங்கும் சுயநிதிக் குழுக்கள் மூலமான எத்தனையோ திட்டங்கள் உண்டு. அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வெற்றிக்கான வழிகள்:
ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தொழில் நடத்த இடம் தேர்வு செய்வதில் இருந்த, தொழிலைப் பற்றிய அடிப்படை அறிவு, (முன் அனுபவம் கொஞ்சம் இருந்தாலும் போதும்) அவ11865302515_42b725cf53_bசியம் இருக்க வேண்டும். தெரிந்த விவரங்களின் தெளிவு ரொம்ப முக்கியம்.
அடுத்து மூலப்பொருள்கள் எளிதில் கிடைக்கக் கூடிய சூழ்நிலை, தட்டுப்பாடு இல்லாத மின்சார வசதி, தடையின்றி கிடைக்கும் இடம், அனுபவம் மிக்க நபர்கள், இப்படி அனைத்தையும் கவனத்தில் கொண்டு தொழிலை ஆரம்பிக்க வேண்டும்.
”எந்தத்தொழிலில் லாபம் வரும்?” என்று கேட்பவர்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தத் தொழிலுமே நட்டம் அடையக் கூடியது அல்ல. அதேபோல இந்தத்தொழிலில் லாபம் மட்டுமே உறுதி என்றும் எந்தத்தொழிலும் இல்லை.
மேலும், பெரிய முதலீட்டில்தான் பெரிய லாபத்தை அடைய முடியும் என்பதில்லை. சிறிய முதலீட்டில்கூட சீரான லாபத்தை எடுக்க முடியும்.
அதற்கு பெரிய உதாரணங்கள் பல நம்மிடம் உண்டு. ஊரகத் தொழில்களைச் சிறிய அளவில் தொடங்கி உலகப் புகழ் பெற்றவர்கள் தென்னிந்தியாவிலும் உண்டு, வட இந்தியாலும் உண்டு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களைப்பற்றிப் பேசுவோம்.
From- Munivu
No comments:
Post a Comment