Tuesday, September 20, 2016

நவ துவார வழிபாடுகள்

நவ துவார வழிபாடுகள்
  1. மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும். எனவே, ஒன்பது கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும் குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும் சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.

  2. திருவானைக் கோவில் போன்ற திருத்தலங்களில் மூல மூர்த்தியை நவசாளரங்கள் வழியாக தரிசனம் செய்து வழிபடுவதால் கண் திருஷ்டிகள் நம்மை எளிதில் தாக்காத வகையில் கவச சக்திகளைப் பெருக்கிக் கொள்ள முடியும். ஒன்பது சாளரங்களுக்கு மேல் உள்ள சிறுகமணி சிவத்தலம் போன்ற திருக்கோயில்களிலும் இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டு பயனடையலாம்.

  3. மனித உடலின் நவதுவாரங்களுக்கு அதிபதியாக விளங்கும் தெய்வங்களே விநாயகப் பெருமானும், ஆஞ்சநேய மூர்த்தியும் ஆவார்கள். உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார் அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம் வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.

  4. ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார் அல்லவா? அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் எம்பெருமானை லிங்க வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும் சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக் கோளாறுகள் நம்மை அண்டாது.

  5. பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள் அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண் திருஷ்டியை நீக்கும் தலங்களே. அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு, செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத் தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.   

  6. திருமண வைபவங்களில் நவ தானியங்களை மண் சட்டிகளில் வளர்த்து முளைப் பாலிகைகளை வழிபடும் நிகழ்ச்சி ஒன்று உண்டு. புது மணத் தம்பதிகள் மேல் விரவும் கண் திருஷ்டி தோஷங்களைக் களைவதற்காகவும், தம்பதிகள் நற்சந்ததிகளைப் பெற்று வாழவும் இந்த முளைப் பாலிகை வழிபாடு ஒரு முக்கிய திருமண வைபவமாக நிறைவேற்றப்படுகிறது.

  7. இயற்கையாகவே, முளைப் பாலிகை வழிபாடு திருஷ்டி தோஷங்களை நீக்கும் ஆதலால் மண் சட்டிகளில் முளைப் பாலிகைகளை வளர்த்து திருச்சி சமயபுரம் அருகே ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயத்திலும், கண்ணாயிரம், செந்தாமரைக் கண்ணன், கண்ணாத்தாள் போன்று கண் பெயருடைய இறைவன், இறைவிகள் அருளும் தலங்களில் சமர்ப்பித்து வழிபாடுகள் நிறைவேற்றுவதால் கண் திருஷ்டி தோஷங்கள் அண்டாது பாதுகாத்துக் கொள்ளலாம். இந்த முளைப் பாலிகைகளை கன்றுடன் கூடிய பசுக்களுக்கு வழங்குவதும் ஓர் அற்புத வழிபாடாகும்.

No comments:

Post a Comment